Sunday, July 26, 2009

நன்றி தோழிகளே... நண்பர்களே...

தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட புரட்சிதான் இந்த இணையம் என்று சொல்ல வேண்டும். ஒரு புதிய கண்டுபிடிப்பை எந்தெந்த வழிகளில் பயன்படுத்த வேண்டும் என்பதில் தமிழர்களுக்கு இருக்கிற ஆர்வமும் ஈடுபாடும் மற்ற மொழி பேசுபவர்களிடம் குறைவுதான் என்பதே என் கருத்து.

கணினி, மின்னஞ்சல், தமிழ் சாப்ட்வேரைத் தொடர்ந்து பிறந்த குழந்தைகள்தான் இணைய தளங்களும், இணையப் பக்கங்களும், வலைப்பூக்களும்! இந்த இனிய குழந்தைகளைப் பயன்படுத்தி தமிழ் நெஞ்சங்கள் தங்களின் கருத்துப் பரிமாற்றங்களை மிகச் சிறப்பாகவே செய்து வருகிறார்கள்.

நான் வலைப்பக்கத்திற்கு அறிமுகமான போது அதன் வீரியம் பற்றி அதிகம் அறியாதிருந்தேன். இங்கே சில நண்பர்களைப் பற்றியும் சில தோழிகள் பற்றியும் நான் நன்றியோடு சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

மதுமிதா....

வலைப்பக்கத்தைப் பற்றியும், அதன் வட்டத்தைப் பற்றியும், அதன் பயன்பாடுகளைப் பற்றியும், அதன் வடிவமைப்பு பற்றியும் எனக்கு மிகப் பொறுமையாக செல்போன் வாயிலாகவே கற்றுத் தந்தவர் தோழி கவிதாயினி மதுமிதா. வலைப்பூக்களின் பதிவர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் இவர். அன்பு, மென்மையான அணுகுமுறை, எழுத்தில் ஒரு நேர்மை இவைகளை இன்றைக்கும் கடைபிடிப்பவர்.

தமிழச்சி....

அதன்பிறகு இதே வலைப்பக்கத்தின் மூலமாக தமிழச்சியுடன் ஏற்பட்டது சினேகம். ஆரம்பத்தில் எங்களுக்குள்ளும் ஏகப்பட்ட சண்டைகள்!! ஆனால் இனிய சினேகிதி. துணிச்சலான, அதே நேரம் அறிவு பூர்வமான அவரது எழுத்துக்கள் என்னை பெரிதும் கவர்ந்தன. ஈரோட்டில் பிறந்த ஈவேரா பெரியாருக்கு, ஐரோப்பாவில் இன்றைக்கும் ஒரு இயக்கத்தையே நடத்தி வரும் பெண்மணி. தமிழ்நாட்டில்கூட இல்லாத அளவுக்கு பெரியாருக்காக ஒரு வலைத்தளத்தையே உருவாக்கி அவரது படைப்புகளை தினமும், தானே அதில் பதிவு செய்வதை ஒரு கடமையாகவே செய்து வருபவர். எனக்கு இவர் அறிமுகமாவதற்கு முன்னர், இணையத்தில் பலவிதமான சர்ச்சைகளுக்கு ஆளாவர் என்றாலும் அவரது புரட்சிகரமான செயல்களுக்காக நான் அவருக்கு என் வணக்கத்தைச் செலுத்திக் கொள்கிறேன். இணையத்தில் ஏற்படும் சில குழப்பங்களுக்குத் தீர்வு சொல்லும் ஒரு நல்ல தோழியாக இன்றும் இருக்கிறார். அவரது நட்பு என்றும் தொடரும்.

சிவகுமார்...

பிரபல டிராக்டர் கம்பெனியான tafe வின் சென்னை ரீஜெனல் மானேஜர் இவர். பழகுவதற்கு இனிய நண்பர். இவரும் எனக்கு இணையத்தின் மூலமாகவே நண்பர் ஆனவர். ஆனால் இப்போது எனது குடும்ப நண்பர். ஏற்கனவே இருபது வருடம் பழகியது போல் எங்களின் நட்பு இன்றைக்கும் இனிதே தொடர்கிறது.

ஏ.ஆர்.கே.ராஜராஜா...

இவரும் இணையத்தில் பிரபலமானவர்தான். தமிழ்ராஜா என்கிற பெயரில் உலா வருபவர். உற்சாகத்தின் ஊற்றாக செயல்படுபவர். இளவட்டம் என்கிற படத்தின் இயக்குனர். தமிழில் டப்பிங் செய்யப்பட்ட சுமார் 200 தெலுங்குப் படங்களுக்கு தமிழின் வசனகர்த்தா. இவரோடு பேசிக் கொண்டிருந்தால் ஊமைகூட பாடகன் ஆகிவிடுவான் என்பது எனது கணிப்பு.

வெங்கட் தாயுமானவன்...

என்னுடைய ‘அப்பாவுக்கு ஒரு இமெயில்’ சிறுகதையை இணையத்தில் படித்துவிட்டு அறிமுகமான உதவி இயக்குனர். ஆனால் அவருக்கு கேன்ஸர் இருப்பதையே போகிற போக்கில் என்னோடு பகிர்ந்து கொண்டவர். பதறிப் போன நான் அவரைப் பற்றிய தகவல்களை செல்போன் மூலமாகவே சேகரித்து அதை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டேன். அதன் பிறகு அது ஆனந்த விகடனிலும் வெளியானது. நம்பிக்கையான இளைஞர். அவரது வெற்றிக்காக பிரார்த்தனைகளுடன் காத்திருக்கிறேன்...

நர்சிம்....

இதே வெங்கட் தாயுமானவனின் சோகக்கதையைப் படித்துவிட்டு அவரது சிகிச்சைக்கான முழுச் செலவையும் தானும், தான் பதவி வகிக்கிற ஒரு பன்னாட்டு நிறுவனமும் ஏற்றுக் கொள்ளும் என்று உடனே அறிவித்த அன்பு நண்பர். இவரையும் நான் இதுவரை சந்திக்கவேயில்லை. ஆனால் ஓடோடி வந்து உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிற அவரது நல்ல மனசுக்காகவே அவரை எனது இனிய நண்பராக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இணையத்தின் மூலமாக இப்படி நூறு நர்சிம்கள் நம் அனைவருக்கும் நண்பர்களாக அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம்.

என். கணேசன்....

அய்யா கணேசன் அவர்களை எனது நண்பர் என்று விளித்துக் கொள்ளக் கூடாது. மிகப்பெரியவர் அவர். பொள்ளாச்சியில் பிறந்து வளர்ந்த இவர், இன்றைக்கு அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆய்வு மையத்தில் உயர் பதவி வகிப்பவர். என் இணைய எழுத்துக்களைப் படித்துவிட்டு என்னை உற்சாகப்படுத்தியவர்.. தமிழ்மணம் வலைத்தளத்தின் மிக முக்கிய பொறுப்பாளரும் ஆவார். அவருக்கு எனது நன்றிகள்.

இப்படி இணையம் என்கிற ஒரு தொடர்பு சாதனத்தின் மூலமாக பல நூறு உள்ளங்களின் அன்பை, நட்பை, ஆசீர்வாதத்தை நான் பெற்றிருப்பதில் மிகவும் மகிழ்கிறேன். இது மென்மேலும் வளரும் வளரும் வளரும் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

வாழ்க நட்பு, வளர்க அன்பு. சரியா?
----

Friday, July 24, 2009

கடவுளின் செல்போன் அழைப்பு!


அதிகாலை நேரம்
அரைத் தூக்கத்தில்
சிணுங்கியது செல்போன்...

பேசுவது யாரெனப்
பார்க்க விருப்பமின்றி
எடுத்துக் காதில் வைத்தேன்.

’’ஹலோ, யாரு?’’ என்றேன்

எதிர்முனையில் ஒரு புதுக்குரல்!

’‘கடவுள் பேசுகிறேன்’’
என்று பதில் வந்த்து.

’’என்னது, கடவுளா?’’

’’ஆமாம், கடவுள்தான் பேசுகிறேன்”

குழப்பத்தோடு
எண்களைப் பார்த்தேன்
0000000000
என்று அனைத்தும் பூஜ்யமாக
பத்து இலக்கங்கள்!
இது எந்த செல்போன்
நிறுவனத்தின் எண்கள்?

தூக்கம் கலைந்தது...

’’சரி இப்ப உங்களுக்கு
என்ன வேண்டும்?’’

’’ எனக்கு எதுவும் வேண்டாம்.
அவசரமாக ஒரு
நல்ல சேதியைச் சொல்லவே
உன்னை அழைத்தேன்’’

’’சொல்லுங்கள்’’

’’நீ மறுபடி பிறக்கப் போகிறாய்’’

’’என்னது?’’

எனக்குள் மேலும் குழப்பம்.

’’மறுபடி பிறக்க வேண்டுமெனில் நான்
மரணித்திருக்க வேண்டுமே?’’

‘’அதைச் சொல்லவே இந்த அழைப்பு!’’

‘’என்னது?’’

‘’ நீ இறந்து விட்டாய்’’

’’இல்லையே, உங்களோடு
பேசிக்கொண்டுதானே இருக்கிறேன்?’’

‘’இனி என்னோடு மட்டும்தான் நீ
பேசிக் கொண்டிருக்கப் போகிறாய்’’

அடக்கடவுளே,
இது என்ன கொடுமை?

’’எப்போது நான் இறந்தேன்?’’

’’சில நொடிகளுக்கு முன்னால்தான்’’

’’எழுபது வயதுவரை ஆயுள் என்று
என் ஜாகதம் கணிக்கப்பட்டிருந்ததே?
இப்போது நாற்பதுதானே ஆகிறது?’’

’’ அது என்னால் கணிக்கப்படவில்லையே!’’

’’அதுசரி, ஒருபாவமும் செய்யாமல்
எப்படி நிகழ்ந்தது என் மரணம்?
பாவத்தின் சம்பளம்தானே மரணம்?’’

’’அந்த வாசகத்தையும் நான் எழுதவில்லையே!’’

‘’சரி நான் மறுபடி
எங்கே, எப்போது, யாராய்
பிறக்கப் போகிறேன்?’’

’’அதுவும் இன்னும்
முடிவு செய்யப்படவில்லை.’’

’’ பிறகு?’’

‘’காத்திருப்போர் பட்டியலில்
உன் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது’’

’’அதுவரை நான் என்ன செய்வது?’’

‘’என்னோடு பேசிக் கொண்டிரு’’

’’உங்களுக்கு அவ்வளவு நேரமிருக்கிறதா?’’

‘’ நேரமிருக்கும்போது பேசுகிறேன்’’

’’எனக்குப் பேசவேண்டுமென தோன்றினால்?’’

’’ஒரு மிஸ்டு கால் கொடு,
நான் அழைப்பேன்.
இப்போது விடைபெறுகிறேன்’’

இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அதிகாலைக் குளிரிலும்
வியர்த்துக் கொட்டியது எனக்கு.

தூக்கம் முற்றிலும் கலைய
என் அறையை சுற்றுமுற்றும் பார்க்கிறேன்.

அது கனவும் இல்லை;
கடவுள் சொன்னது போல நான்
சாகவும் இல்லை.

பிறகு எங்கிருந்து அந்த அழைப்பு?
பேசியது யார்?

திரும்ப அதே 0000000000
எண்ணுக்கு நானே
ரீ டயல் செய்தேன்!

’ப்ளீஸ் செக் த நம்பர்’
என்று பதில் வருமென
எதிர்பார்த்தேன்.

ஆனால் -

’பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனைப் புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்’
என்ற பாடல்
காலர் ட்யூனாகக் கேட்டது!
--------------------

Thursday, July 23, 2009

காணாமல் போன வானொலியும் கண்டெடுத்த கவிக்குயிலும்!











’’இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபன ஆசிய சேவையின் தமிழ் நிகழ்ச்சிகளை வழங்குவது எஸ்.பி. மயில்வாகனன்’’ என்று காதோரம் ஒலித்த அந்த தேன்மதுர தமிழோசைக் குரலை ஒரு காலத்தில் தீவிரமாகக் கேட்டு ரசித்தவன். பாடல்களைவிட அதைத் தொகுத்து வழங்கும் அறிவிப்பாளர்களின் குரல் மீது எனக்கு தீராத காதலே இருந்தது.
முகம் தெரியாத அந்த அன்பு அறிவிப்பாளர்களில் கே.எஸ்.ராஜா, ராஜேஸ்வரி சண்முகம், பி.எச்.அப்துல் ஹமீது, ராஜகுரு சேனாதிபதி கனகரத்னம் என்று இன்றைக்கும் பலரது மனங்களில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் அந்த குரலுக்குச் சொந்தக்காரர்கள் பற்றிய விபரங்களும் காலமாற்றத்தில் காணாமலே போய்விட்டது! இவர்களில் ஆறுதலாக இன்று நம்முன்னே வளைய வருபவர் பி.எச்.அப்துல்ஹமீது ஒருவர் மட்டும்தான்.
எனக்கும் என் மூத்த சகோதரிக்கும்தான் இவர்களின் குரல்களைக் கேட்பதில் மிகப்பெரும் போட்டியே நடக்கும். எங்கிருந்தோ பேசும் அவர்களின் அன்பான குரலையும் பாடல்களையும் காற்றலை மூலம் வீட்டுக்குள் இழுத்து வரும் எங்கள் வீட்டில் இருந்த அந்த கறுப்பு நிற பிலிப்ஸ் வானொலிப் பெட்டியும் இப்போது எங்கே போனது என்றே தெரியவில்லை.
அதன் பிறகு கைக்கு அடக்கமான டிரான்சிஸ்டர்கள் அறிமுகமான போது எனக்கே எனக்காக ஒரு குட்டிப்பெட்டியை வாங்கித் தரும்படி என் அப்பாவிடம் கேட்ட போது ’சும்மா இருடா, படிப்பு கெடும்’ என்று அப்போது வாங்கித் தர மறுத்துவிட்டார். பெருத்த ஏமாற்றம்.
என் வகுப்புத் தோழனான பக்கத்துத் தெரு மணிகண்டனின் அப்பா, அவனுக்கு ஒரு அழகான டிரான்சிஸ்டரை வாங்கிக் கொடுத்திருந்தார். அதைப் பார்க்கப் பார்க்க பொறாமையாக இருக்கும். அதை கையில் வைத்துக் கொண்டு பாடல்களை கேட்டு ரசிக்க வேண்டும் என்கிற தீராத ஆசையில் மணிகண்டனின் அப்பாவிடமே ஒரு பொய்யைச் சொன்னேன்.
‘’ இதே மாதிரி எனக்கும் ஒரு டிரான்சிஸ்டர் வாங்கித் தர எங்கப்பா சரின்னு சொல்லிட்டாரு. இத ஒரு பத்து நிமிஷம் எங்கப்பாகிட்ட காட்டிட்டு வந்துடவா? ‘’
அவரும் ‘பத்திரமா எடுத்துட்டுப் போயிட்டு கொண்டு வரணும்’ என்ற கண்டிஷனோடு என் கையில் அந்த பாட்டுக்குருவியை என்னிடம் கொடுத்தார். அப்போது மணிகண்டன் வீட்டில் இல்லை.
அப்பாதான் வாங்கித்தர மாட்டேன் என்கிறார், கிடைத்த இந்த ஓசி டிரான்சிஸ்டரில் ஆசைதீர, நடந்து கொண்டும்; படுத்துக் கொண்டும் பாடல்களை ரசிக்க வேண்டும் என்கிற தாகத்தோடு வேகவேகமாக வீட்டுக்கு நடக்கிறேன். அக்கா பார்த்துவிட்டால் என் ஆசை நிறைவேறாமல் போய்விடும். அதனால் அந்த குட்டிப் பெட்டியை மிகச் சாமர்த்தியமாக ஒளித்து மறைத்து வீட்டின் பின்பக்க வழியாக உள்ளே நுழைந்து மொட்டை மாடிக்கு வந்து விட்டேன்.
அங்கே தாத்தா இரவு நேரத்தில் படுத்துறங்கும் பாயில் ஹாயாக படுத்துக் கொண்டு அந்த அழகான டிரான்சிஸ்டரை மார்போடு அணைத்தபடி பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன். இலங்கை வானொலியின் அந்த அன்பு அறிவிப்பாளர்களில் யாரோ ஒருவர் மிக நெருக்கமாக என்னோடு பேசிப்பேசி பாடல்களை வழங்கிக் கொண்டிருக்கிறார். நேரம் போவது தெரியாமல் அந்த இன்ப அனுபவத்தில் கண்களை மூடி திளைத்துக் கொண்டிருக்கிறேன்.
தடாரென என் பக்கத்தில் எதோ சத்தம் கேட்டு கண்ணைத் திறந்தால், மிக அருகில் இரண்டு கால்கள்.
அப்பா!
மிகவும் பாசமாகவும் அன்பாகவும் இருக்கும் என் அப்பா சில நேரங்களில் கோபம்கொண்டு என்னை கம்பெடுத்து அடிக்கவும் செய்திருக்கிறார். இப்போது அந்தக் கம்பு அவர் கையில்!
தொடையில், இடுப்பில் என அடுத்தடுத்து அடி! அடுத்த சில நொடிகளில் அந்த டிரான்சிஸ்டர் அவர் கையில்.
இன்னொரு கையோடு என்னைப் பிடித்தபடி மொட்டை மாடியிலிருந்து இறங்கி கீழே ஹாலுக்கு வருகிறார். அங்கே மணிகண்டன் கோபத்தோடு நின்று கொண்டிருக்கிறான். அவன் இல்லாத நேரம் பார்த்து அவன் அப்பாவிடம் பொய் சொல்லி அவனின் டிரான்சிஸ்டரை இரவல் வாங்கி வந்த விஷயத்தை என் அப்பாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டிருக்கிறான் என்பது அடுத்து நடந்த சம்பாஷணைகளில் எனக்குப் புரிந்த்து.
அவனிடம் அதை நீட்டியதும் அவன் பறந்து போனான். ’இப்படி அடுத்தவங்ககிட்ட இரவல் வாங்கிட்டுவந்து பாட்டுக் கேட்கணுமா? உனக்கே அசிங்கமா தெரியலை?’ என்று அம்மாவின் பாட்டு வேறு!
ஆனால் விழுந்த அடிகளுக்கு ஆறுதலாக அப்பா அடுத்த நாளே என்னைக் கடைக்குக் கூட்டிப்போய், மணிகண்டனின் டிரான்சிஸ்டரைவிட மிக அழகான ஒன்றை எனக்கே எனக்காக வாங்கிக் கொடுத்தார். அக்காவுக்கு அந்த பழைய பிலிப்ஸ் ரேடியோ முழு உரிமையாகிப் போனது. அவ்வப்போது என்னிடம் ‘ஓசி’ வாங்கி டிரான்சிஸ்டரிலும் பாட்டுக் கேட்பாள்.
இப்படி பல விழுப்புண்களை தாங்கிய சரித்திரம் கொண்டது எனது இசை ஆர்வம்!
பாடல்கள் மீது எனக்கு ஒரு ஆர்வத்தையும் ஈர்ப்பையும் ஏற்படுத்திய அந்த இலங்கைத் தமிழ் வானொலி காணாமலே போய்விட்டது. ஆனால் இவையனைத்திற்கும் ஆறுதல் பரிசாக அவ்வபோது சூரியன் எப்.எம்மில், நடுநிசி நேரங்களில் பழைய பாடல்களை ஒலிபரப்பி பரவசப்படுத்துபவர் யாழ்சுதாகர். அவரது கம்பீரமான குரலும், பாடல்களுக்கு அவர் கொடுக்கிற கவிதை அறிமுகமும், அந்தப் பாடல் எந்த ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது என்கிற விபரங்களும் மனசுக்கு இதமான ஒன்று! அவரது வலைப்பக்கத்தில் இலங்கை வானொலி பற்றியும் பல்வேறு பாடல்கள் சம்பந்தமான அரிய பல தகவல்களும் நிறைந்து கிடக்கிறது. இசைப்ரியர்களுக்கு அது ஒரு வரப்ரசாதம்தான்.
அதே போல ஒரு நாள் இணைய வானொலிகள் பற்றி அறிய, வலையை வீசிக் கொண்டிருந்ததில் ஜெர்மனியிலிருந்து ஒரு கவிக்குயிலின் குரல் என் காதுகளை குளிர வைத்தது. அதே இலங்கைத் தமிழ், பாடல்களை வழங்குவதற்குமுன் அவரது குட்டிக் குட்டிக் கவிதைகள் என அந்தக்குரல், என்னை இலங்கை தமிழ் வானொலியைக் கேட்டு ரசித்த பால்ய நாட்களுக்கே கொண்டுபோய் நிறுத்தியது. தினமும் கேட்டு ரசிக்க ஆரம்பித்தேன். இப்போதெல்லாம் எனது கணினியில் அந்தக் கவிதைக்குயிலின் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது...காணாமல் போன இலங்கைத் தமிழ் வானொலியின் வாரிசாக இந்தக் கவிதைக்குயிலை நான் கண்டெடுத்ததாகவே கருதுகிறேன்.
'யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' என்பதற்கேற்ப யாழ்சுதாகரின் வலைப்பக்கத்தின் இணைப்பையும், ஜெர்மனியிலிருந்து இயங்குகிற கவிதைக்குயில் திருமதி.ராகிணி அவர்களின் வலைப்பக்க இணைப்புகளையும் இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் கொள்கிறது என் இசைமனது....
கேட்டு ரசித்து கிறங்க, என் அன்பான அட்வான்ஸ் வாழ்த்துகள் நண்பர்களே!
-----------

Tuesday, July 21, 2009

பெரியாரைச் சந்தித்தேன்!


எனது பள்ளி நாட்களில் ஒருநாள். வகுப்பு ஆசிரியர் மாணவர்களிடையே ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ‘இன்று நமது ஊருக்கு விஜயம் செய்திருக்கும் திரு.ஈ.வெ.ராமசாமி பெரியார் அவர்களை மாணவர்கள் அனைவரும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்று மாலை இரண்டு மணிக்கு பள்ளி மாணவர்கள் அனைவரும் வரிசையாக ஒழுங்கு காத்து அவர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அவரைப் பார்த்துவிட்டு அங்கிருந்து அனைவரும் அவரவர் வீட்டுக்குச் செல்லலாம்’ என்பதே அந்த அறிவிப்பு.

மாணவர்களிடையே ஒரு சந்தோஷ சலசலப்பு. அது பெரியாரை பார்க்கப் போவதால் அல்ல! மதியம் சீக்கிரமே வீட்டுக்குப் போகப் போகிறோமே என்கிற இன்ப அதிர்ச்சி! ஆறாம் வகுப்பு மாணவர்களான எங்களுக்கு அப்போது பெரியார் பற்றியெல்லாம் எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அவரைச் சந்திக்கிறவரை யார் இந்த பெரியார் என்கிற கேள்வி எனக்குள் சஸ்பென்ஸாகவே இருந்தது.

சுமார் முன்னூறு மாணவர்கள் வரிசையாக கிளம்பினோம். ஊர் ஜனங்கள் எல்லோரும் எங்களின் இந்த திடீர் அணிவகுப்பைப் பார்த்து அவர்களுக்குள் ‘எங்க போறாங்க இந்தப் பசங்க?’ என்று கேட்டுக் கொண்டார்கள். ஒருசிலர் எங்களிடமே கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். எங்களின் மூலமாக அன்றைக்கு பெரியார் நமது ஊருக்கு வந்திருக்கிறார் என்கிற விபரம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமானது.

ஒரு ரைஸ்மில் உரிமையாளருக்குச் சொந்தமான பங்களா ஒன்றில் பெரியார் தங்க வைக்கப்பட்டிருந்தார். வரிசையாக, அமைதியாக செல்லும் மாணவர்கள் அவருக்கு வணக்கம் சொல்ல, அவர் பதில் வணக்கம் சொல்லி சிரித்த முகத்தோடு ஒருசில மாணவர்களிடம் பேச்சுக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

எனக்கு அவரைப் பார்த்ததும் என் செல்லமுத்து தாத்தா நினைவுக்கு வந்தார். வெள்ளைத்தாடியும் அருகில் கைத்தடியுமாக அச்சு அசலாக அப்படியே என் தாத்தாவைப் பார்ப்பதுபோலவே உணர்ந்தேன். என்னை குழந்தை முதலே தன் தோளில் தூக்கிவைத்துக் கொண்டாடிய செல்லமுத்து தாத்தா சில மாதங்களுக்கு முன்புதான் இறந்திருந்தார். அவரது நினைவுகள் என்னை சில நிமிடங்கள் தடுமாற வைத்தன.

எல்லா மாணவர்களும் பெரியாரை நோக்கி இருகரம் கூப்பி வணக்கம் சொல்லிவிட்டு நகர எனக்கு மட்டும் அவரை ஒருதடவையாவது தொட்டுப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை வந்தது. அவரை நெருங்கும்போது சட்டென எனது வலது கையை கைகுலுக்கும் தோரணையில் நீட்டினேன். பெரியாரும் அதை ரசித்தபடியே எனது கைகளைப் பற்றிக் கொண்டு,

‘’உங்க பேரு என்ன தம்பி?’’ என்றார்.

நான் சொன்னேன்.

‘’நல்லா படிக்கணும்’’ என்று என் கன்னத்தைத் தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

பன்னிரெண்டு வயது சிறுவனான என்னைப் பார்த்து மரியாதையோடு ‘உங்க’ பேரு என்ன தம்பி என்று அவர் கேட்டது எனக்கு அப்போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. என் வாழ்க்கையில் என்னை முதன்முதலாக இப்படி ’உங்க’ சேர்த்து அழைத்த மாமனிதர் பெரியார். அந்த மாதம் முழுதும் பலரிடமும் இந்தச் சம்பவத்தை நான் சொல்லிச்சொல்லி மாய்ந்து போனேன்.

அதன்பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக செல்லமுத்து தாத்தா மாதிரியே இருந்த பெரியாரின் மதிப்பும் மரியாதையும் எனக்குத் தெரியவந்தது. பள்ளிப் படிப்பு முடிந்து பல்வேறு வகையான நூல்களைப் படிக்கிற போது பெரியாரின் எழுத்துக்களுக்கு முக்கியத்துவம் தந்து படிக்க ஆரம்பித்தேன். அவர் மீது எனக்கிருந்த மரியாதை மென்மேலும் கூடிப்போயிற்று.
அவரது தீவிரமான தொண்டனாக செயல்படாவிட்டாலும் முடிந்தவரை அவரது கருத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்புக் கொடுப்பனாகவே இருந்து வந்திருக்கிறேன்.

பல்வேறு காலகட்டங்களில் தனது கருத்துக்களை துணிச்சலாகவும் புதுமையாகவும் சொல்லி வந்த அந்த பெரியார் என்கிற வடிவம் ஆழமாக என மனதில் பதிந்து போயிருக்கிறது. அவரது மரணத்திற்குப் பின்னால் அவரைப் போல கருத்துக்களைச் சொல்ல யார் இருக்கிறார்கள் என்கிற கேள்வி எனக்குள் இன்றைக்கும் இருக்கிற ஒன்று.

இன்றைய இளைய சமுதாயத்திற்கு பெரியார் என்கிற பெயரே ஓல்டு ஃபேஷன் நேம் என்று ஆகிவிட்ட நிலையில் –
இன்னொரு பெரியார் நமக்குக் கிடைப்பாரா என்கிற கேள்விக்கு விடை கிடைக்குமா என்ன?

சல்லிக்காசு பெறாத நான் சாவதற்குள், இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு விடை கிடைக்குமா?
---------------------------------------

Monday, July 20, 2009

பாடமாக்க வேண்டிய ஒரு நூல்!


திருமண விழாக்களுக்குப் போனாலோ, நண்பர்களின் பிறந்தநாள் என்றாலோ புத்தகங்களை அன்பளிப்பாக அளிப்பதையே நான் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். இனி என் வாழ்நாளில் இந்த ஒரே ஒரு புத்தகத்தை மட்டுமே அடுத்தவர்களுக்கு வழங்குவதென்று முடிவு செய்து விட்டேன்.

அந்த சுயசரித புத்தகத்தின் பெயர் ‘நான் வித்யா’ – எழுதியவர் ‘லிவிங் ஸ்மைல்’ வித்யா. கிழக்குப் பதிப்பகம் இதை வெளியிட்டிருகிறது. இன்றைக்கு அந்தப் பெண்ணுக்கு வயது இருபத்தியேழு. இந்த மிகக் குறைந்த வயதில் தன்னுடைய வாழ்க்கைச் சரித நூலை இதற்கு முன்னால் இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயேகூட யாருமே எழுதியிருக்க வாய்ப்பில்லை.

அந்தப் புத்தகம் வெளிவந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் சமீபத்தில்தான் அதைப் படிப்பதற்கு எனக்கு வாய்ப்பு அமைந்தது. உலுக்கி எடுத்துவிட்டது அவரது வாழ்க்கை...

ஒரு நாவலைப் போல அவரது சிறுவயதில் துவங்கும் காட்சிகள் மெல்ல மெல்ல விரிகின்றன. ஐந்து பெண் பிள்ளைகளுக்குப் பிறகு பிறந்த ஆண் குழந்தை அவர். அப்போது அவர் பெயர் சரவணன். அன்பான அம்மா, கண்டிப்பான அப்பா, பாசமான சகோதரிகள், படிப்பின் மீது அவருக்கு இருந்த ஆர்வம்...அவருக்குள் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்த பெண்மையின் அழகியல் உணர்வுகள், அதை உரிமையோடும் ஆசையோடும் தக்க வைத்துக் கொள்ள அவர் சந்தித்த அவமானங்கள், தன் மீது திணிக்கப்பட்டிருக்கும் ஆண் என்கிற அடையாளத்தை அகற்றுவதற்காக அவர் பட்ட இன்னல்கள், அதில் கிடைத்த வெற்றி, சந்தோஷம் அனைத்தையும் தாண்டி அந்த மூன்றாம்பால் இனத்தின் மீது இவருக்கு இருக்கும் சமூக அக்கறை.....

இத்தனை போராட்டங்களுக்குமிடையில் அவருக்கு அமைந்த நண்பர்கள் வட்டம் அன்பால் மட்டுமே பின்னப்பட்டிருப்பது அவருக்கு அமைந்த அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது உள்மன உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவருக்கு உதவிய நூற்றுக்கணககான உள்ளங்களை வித்யா இந்த நூலில் அழகாக அறிமுகம் செய்திருக்கிறார். கதையில் வரும் பாத்திரங்களைப் போல இந்த நிஜமாந்தர்கள் நெஞ்சில் இடம்பிடித்து விடுகிறார்கள்.

பால் வியாபாரியான இளங்கோவில் ஆரம்பிக்கிறது அந்த அன்பு மனிதர்களின் பட்டியல். செந்தில், வெங்கடேஷ், கார்த்தி, ஜான், விஜி, ராமர், முருகன், நாடகக்கலைஞர் முருகபூபதி, செல்வம், ரேவதி, ரத்னவேல், பாபு, சிநேகா, கடலை விற்கும் சுரேஷ், கரகாட்ட ஷாலினி, பூஜா, ஆயிஷா என்று தொடங்கி மதுரை கோபி, கண்ணன், மலைச்சாமி, ராஜன், அமுதன், விஜயா ஆண்ட்டி, அசோக், ஆனந்த்குமார், உதயகுமார், தேம்பாவணி, ராமர்பாண்டி, மஞ்சுமதி, சுரேஷ்குமார், முத்துராம், பழனி, கமலபாக்கியம், முத்தமிழ்ச்செல்வி, நேரு, சிவராஜ், பாலபாரதி, செழியன், இலங்கை நந்தினி, சுயம் அறக்ட்டளையின் முத்துராமன் – உமா என்று இவர் சந்தித்த அந்த நல்லமனசுக்காரர்களின் பட்டியல் நீள்கிறது. வித்யாவிற்கு மனதார உதவிகளை செய்த இந்த இதயங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

வித்யா, தன்னை ஒரு பெண்ணாக அறிவித்துக் கொள்ள அரசாங்கத்தோடு நிகழ்த்திய போராட்ட அனுபவங்கள் கொடுமையானவை. விலங்குகளுக்காக ஒரு தனி வாரியத்தையே அமைத்து அவைகள் திரைப்படங்களில் கொடுமைப் படுத்தபடுகின்றனவா என்பதை அறிய ஒரு குழுவை அமைத்திருக்கிறது அரசு. சம்பந்தப்பட்ட திரைபபட கலைஞர்களுக்கும் பல சிரமங்களைத் தருகிற அரசு அதிகாரிகள், வித்யா போன்ற திருநங்கைகளும் தங்களைப் போலவே ஆறு அறிவு கொண்ட மனித உயிர்கள்தான் என்பதை எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறார்கள்?

வித்யாவின் இந்த நூலை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் என்பதோடு மட்டும் எனது விருப்பம் நின்றுவிடவில்லை. அது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாக வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். திருநங்கைகளின் மன உளைச்சல், அவர்கள் சந்திக்கிற அவலங்கள், அவமானங்களை அனைவரும் கல்வி மூலமாகவே அறிந்து கொண்டால் அவர்கள் மீது இந்த சமூகத்தில் இருக்கும் பார்வை சற்று விரிவடையும் என்பது எனது எண்ணம். அவர்களை கேலியாகவும் கிண்டலாகவும் மட்டுமே பார்க்கிற இந்த சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வு வரவேண்டுமானால் இந்தப் புத்தகத்த, பாடமாக அரசு அறிவிக்க வேண்டும்.

திருநங்கைகளின் வாழ்வியல் பின்னணியை வித்யா இதில் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார். பிச்சை எடுப்பது, பாலியல் தொழில் செய்வது தவிர அவர்களுக்கு எதுவுமே தெரியாது என்கிற நிகழ்வை மாற்றி அமைத்திருக்கிற வித்யாவின் மன உறுதி பாராட்டத்தக்கது. எம்.ஏ. மொழியியலில் முதுகலைப் பட்டம் பெற்று, இன்று தனக்கென ஒரு விருப்பமான இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் இந்த வித்யா,

‘’சொர்க்கம் வேண்டும் என்று நான் கேட்கவில்லை. நரகம் வேண்டாமே என்றுதான் மன்றாடுகிறேன், எனக்காகவும் என்னைப் போன்ற பிற திரு நங்கைகளுக்காகவும்.‘‘ என்று இந்த நூலை முடித்திருக்கிறார்.

வித்யாவின் எதிர்பார்ப்பு நிறைவேறுகிற காலம் வெகுதூரத்தில் இல்லை. வாழ்த்துகள் வித்யா!
-------------------

Sunday, July 19, 2009

முதல் வணக்கம்.....


வலைத்தளங்களின் தனக்கென ஒரு தனிச்சிறப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ’தமிழ்மணம்’ நிர்வாகத்திலிருந்து ’ஒரு வாரத்திற்கு நட்சத்திரமாக இருக்க முடியுமா?’ என்று கேட்டு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. நான் அடிக்கடி பதிவுகளை இடுபவனும் அல்ல; பரபரப்பான செய்திகளை இடுபவனும் அல்ல! திரைத்துறையில் பணிபுரிவதால் நேரம் அமையும் போது எனது எண்ணங்களை பதிய வைக்கிறேன். அப்படியிருந்தும் தமிழ் மணத்தின் அழைப்பை என் எழுத்துக்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாகத்தான் கருதுகிறேன். அந்த அழைப்பிற்கு எனது முதல் வணக்கம்...

சில மாதங்களுக்கு முன் எனது வலைப்பக்கத்தில் ‘காற்றில் பவனிவரும் கணினித் தமிழ்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். (http://kalyanje.blogspot.com/2008_05_01_archive.html ) அதைப் படித்துவிட்டு திருமிகு நா. கணேசன் அய்யா அவர்கள் பாராட்டி ஒரு பதில் எழுதியிருந்தார்கள். அதே கட்டுரையை பின்னர் அமெரிக்காவில் தமிழர் அமைப்பை நடத்தும் ‘feTNA’ ஆண்டு மலரில் பிரசுரித்து என்னை கெளரவப்படுத்திருந்தனர்.
அந்தக் கட்டுரையை பாராட்டியதோடு நில்லாமல் எனக்கு, தமிழ்மணத்தின் நட்சத்திர பதிவராக அழைப்பு வர காரணமாகவும் இருந்திருப்பவர் திருமிகு நா. கணேசன் அய்யா அவர்கள்தான் என்பதை பின்னர் அறிந்து கொண்டேன். அவருக்கும் எனது அன்பான வணக்கம்.
இதோ அவர்களின் அன்பான அழைப்பை ஏற்று உங்கள் முன்னால் நிற்கிறேன். இனி எனது எண்ணங்களை இந்த ஒரு வார காலம் இனிதாய் பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கிறேன். இதில் சில நண்பர்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் எனக்கு சந்தோஷம்! ’நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்தான்’ என்கிற புதுமொழிப்படி அவர்களை நீங்களும் உங்களின் நண்பர்களாக ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்....
பதிவுகளில் சந்திப்போம்!

Tuesday, July 7, 2009

நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு நிஜக்கதை!

‘‘ தொடர்பு எல்லைக்கப்பால்...! ’’

வெங்கட் தாயுமானவன், சொந்த ஊரான காவேரிப்பட்டணத்திலிருந்து சென்னைப்பட்டிணத்திற்கு சினிமா கனவுகளோடு ஓடிவந்து, கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஓடிப்போய் விட்டன. உதவி இயக்குனராக சில வருடங்கள், அதில் வேலை இல்லாதபோது பகுதி நேர பத்திரிக்கையாளராக சில வருடங்கள், தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக சில மாதங்கள் என தன் கனவுகளுக்குத் தீனி போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்!

கதை, கவிதைகளையும் இவர் விட்டு வைக்கவில்லை. இணையத்தில் வரும் யூத் விகடனில் இவரது கவிதைகளை அடிக்கடி பார்க்க முடியும். ‘நினைப்பதெல்லாம் நடந்து விடும்’ என்ற தலைப்பில் சுயமுன்னேற்ற சிந்தனைகளைக் கொண்டு அறிவாலயம் வெளியிட்ட ஒரு நூலுக்கு ஆசிரியரும், இந்த தாயுமானவன்தான்!

அதுமட்டுமல்ல, சினிமாவில் இயக்குனராக ஜெயிக்க வேண்டும் என்கிற கனவு, இதோ இன்னும் சில நாட்களில் பலித்துவிடும் என்ற நம்பிக்கையோடு, தன் முதல் படத்திற்கான திரைக்கதை, வசனம் எழுதும் பணியில், தன் வீட்டிலேயே பரபரப்பாக இருக்கிறார் என்பது சந்தோஷமான விஷயம்! அவருக்கு உதவியாக கூடவே அவரது மனைவியும், ப்ளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்குப் போகத் தயாராக இருக்கிற அவரது மகனும்!

ஆனால் இவரைப் பற்றிய ஒரு அதிர்ச்சித் தகவல் காத்திருக்கிறது.

ஆம்; இப்போது நாற்பத்தி மூன்று வயதாகும் இந்த வெங்கட் தாயுமானவனுக்கு மருத்துவர்கள் நிர்ணயித்திருக்கிற ஆயுள் நீட்டிப்பு, இன்னும் ஆறுமாச காலம் மட்டுமே!

‘’ ஆமாங்க. ஆறு மாசத்துக்குகப்பறம் என்னோட செல்போனில ரிங்க் டோனோ, என் குரலோ பதிலாகக் கிடைக்காது. அதுக்குப் பதிலா, நான் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக யாரோ முகம் தெரியாத ஒரு பெண்ணின் குரல் மட்டுமே கேட்கும். அந்த வாசகங்களுக்கு உண்மையான அர்த்தக்காரனாக நான் ஆகியிருப்பேன்’’ என்கிறார் எந்தவித மரண பயமும் இல்லாமல் சிரித்தபடியே!

கேட்கிற நமக்குத்தான் மனசு கனத்துப் போகிறது.

அப்படி என்னதான் ஆனது இந்த தாயுமானவனுக்கு?

இரண்டு வருடங்களுக்குமுன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவரின் வலது காதுக்கு அருகில் லேசாக வலி ஏற்பட்டிருக்கிறது. அதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு அடுத்த நாள் வேலையில் மும்முரமாய் இருந்திருக்கிறார். இரவு, வலியின் தன்மை கூடியிருக்கிறது. மறுநாள் காலை, எதோ காது சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருக்கலாம் என்று அதற்கான ஒரு சிறப்பு மருத்துவரை அணுகியிருக்கிறார். அவரும் பரிசோதித்துவிட்டு வலி நிவாரணிகளைக் கொடுத்திருக்கிறார்.

வருவதும் போவதுமாக அந்த வலி இருக்க, மூன்று மாதங்கள் கழித்து ஒருநாள் குளிக்கும்போது பார்த்தால் வலித்த இடத்தில் சின்னதாய், லேசான ஒரு கட்டி!

குடும்ப மருத்துவர் மூலம் சில பரிசோதனைகள். அவரது சந்தேகத்தின் பேரில் மேலும் சில பரிசோதனைகள் என படிப்படியாக பரிசோதனைகளில், அதன் இறுதி முடிவு சொன்னது இதுதான்:

அந்தக் கட்டி சாதாரண கட்டி இல்லை. உமிழ் நீர் சுரப்பியில் தோன்றி இருக்கும் புற்று நோய்கட்டி! பரோடிட் கான்ஸர் ( Parotid Cancer ) என்பது அதன் மருத்துவப் பெயர்!

ஏற்கனவே சாதாரணமான கட்டிக்கென எடுத்துக் கொண்ட சிகிச்சைகள் நிறுத்தப்பட்டு இப்போது அடுத்த சிகிச்சை ஆரம்பமானது, அடையார் கேன்ஸர் இன்ஸ்டிடியூட்டில்! மறுபடியும் அங்கே புற்று நோய்க்கான பலவித பரிசோதனைகள்...

‘’புற்று நோய் என்கிற அந்த வார்த்தையைக் கேட்டதும் நான் உடைந்து போனது என்னவோ நிஜம்தான். ஆனாலும் அதை ஆபரேஷன் மூலம் அகற்றி விடலாம் என்ற மருத்துவர்களின் நம்பிக்கை வார்த்தைகள் ஆறுதலைத் தந்தன.’’ என்கிறார் தாயுமானவன்.

ஆனால் அந்த ஆறுதலும் சில மாதங்களுக்குத்தான் செல்லுபடியாகி இருக்கிறது. அந்தக் கட்டி, ஆபரேஷனுக்கு ஏற்றதாக இல்லாமல் கல் போல மிகவும் கெட்டியாக இருப்பதால், அதை அறுவை சிகிச்சைக்கென இலகுவாக்க ரேடியேஷன் தெரபி நாற்பது நாட்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

வாரத்தில் ஐந்து நாட்கள் என எட்டு வாரம் அந்த சிகிச்சை தொடர்ந்திருக்கிறது. அதன் பின்னர் ஒன்றரை மாத இடைவெளிவிட்டு வரச் சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் சொன்ன அந்த ஒன்றரை மாதம் கடந்து பார்த்த பின்னரும், கட்டி அதே நிலையில்தான் கல்லாய் இருந்திருக்கிறது! இன்னும் கூடுதலாய் இரண்டு மாதங்கள் பொறுத்திருக்கச் சொல்லி அனுப்பி இருக்கிறார்கள். அப்போதும் அது அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.

மீண்டும் சீரியஸான பரிசோதனைகள். முடிவில் இதை ஆபரேஷன் செய்தால் உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிடும். அதனால் அப்படியே விட்டு விடுங்கள் என்று சொல்லி வெங்கட் தாயுமானவனுக்கான ஃபைலை மூடி அனுப்பிவிட்டிருக்கிறார்கள்.

குழம்பிய நிலையில் அதே ஆஸ்பத்திரியில் வேறு சில மருத்துவர்களை அணுகியபோது மிகவும் சிக்கலான இடத்தில் கட்டி இருப்பதால் ஆபரேஷன் தவிர்க்கப்பட்டிருக்கும் காரணத்தைச் சொல்லி இருக்கிறார்கள். அப்படியே விட்டால் என்னவாகும்?

‘வெடித்து வெளியே வரும்’ – என்பது பதிலாக வந்திருக்கிறது. மிகவும் கலங்கி நின்ற நிலையில், ஒரு தனியார் மருத்துவமனையின் பெயரைச் சொல்லி அங்கே போகச் சொல்லியிருக்கிறார்கள்.

சில நண்பர்கள் உதவியோடு அங்கேயும் போயிருக்கிறார் இவர்.

அவர்களோ இவரை பரிசோதித்துவிட்டு ‘இன்னும் ஒரு வாரத்திற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்; இல்லையேல் உயிருக்கு ஆபத்து‘ என்று அறிவித்திருக்கிறார்கள்!

எதை நம்புவது?

மேலும் குழப்பத்திற்கிடையே முகச்சீரமைப்பு நிபுணர் ஒருவரை சந்தித்து ஆலோசித்தபோதுதான் அவர் உண்மையான நிலவரத்தைத் தெளிவாக விளக்கி இருக்கிறார்.

காதுக்கு அருகே வளர்ந்த அந்த புற்று நோய்க்கட்டி, கழுத்து வழியாக மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்பினை பின்னிப் பிணைந்து உள்ளது. அறுவை சிகிச்சையின் போது அந்த நரம்பு தொந்தரவு செய்யப்பட்டால், அது மூளையை பெருமளவில் பாதித்து ரத்தப்போக்கை அதிகரித்து அனைத்து உறுப்புகளையும் செயல் இழக்கச் செய்து விடும். பிறகு மரணத்திற்கான வாய்ப்பு மிக மிக அதிகம் என்பதால் அறுவை சிகிச்சை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதுதான் அவரது அந்த விளக்கம்.

சரி இதற்கான சிசிக்கைதான் என்ன?

மருத்துவர்களின் அறிவுரைப்படி வலி தெரியாமல் இருப்பதற்கு மருந்து மாத்திரைகளும், அந்த கட்டி என்கிற குட்டி பிசாசுவின் மூலம் நோயின் தன்மை உடம்பின் மற்ற இடங்களுக்குப் பரவாமல் இருப்பதற்கு சில மாத்திரைகளும் எழுதித் தரப்பட்டிருக்கிறது. ஆனாலும், கூடவே உயிருக்கு உத்திரவாதம் இன்னும் ஆறு மாசம்தான் என்பது இன்றைய நிலை!

உயிரைத் தக்கவைத்துக் கொள்ள, ஆங்கில மருந்துகளோடு மாற்றுமுறை சிகிச்சைகளையும் பார்த்திருக்கிறார் வெங்கட் தாயுமானவன். இப்படி அனைத்து மருந்து மாத்திரைகளோடு சத்தான உணவுகளையும் சாப்பிடும் வகையில் அவரின் ஒருநாள் செலவுக்கு மட்டுமே சுமார் எழுநூறு ரூபாய் தேவைப்பட்டிருக்கிறது! அதற்கு நிதி நிலைமை கைகொடுக்காததால்,

‘’எல்லா மருந்து மாத்திரைகளையும் தூக்கிப் போட்டுட்டு, வலியை அனுபவிச்சுட வேண்டியதுதான்னு முடிவு பண்ணிட்டேன். இருக்கவே இருக்கார் கடவுள்! அவருகிட்ட பொறுப்பை ஒப்படைச்சுட்டேன். ஆனா அதுக்காக சோர்ந்து போய் ஒரு நோயாளியா மூலைல முடங்கிக் கிடக்காம, என்னோட சினிமா கதைல கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன்.... ரெண்டு வருஷமா சிகிச்சைக்கும் மருந்துக்கும் நடுவுல அலைஞ்சதுல, அப்படி இப்படின்னு இப்பதான் ஒரு ப்ரொடியூஸர் கதையை ஓக்கே பண்ணியிருக்காரு. கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து மூணு மாசமா கதையை மெருகேத்துனதுல வலி பெருசா தெரியலை....’’

என்று சொல்லிமுடித்த தாயுமானவன் ஒரு சின்ன இடைவெளிவிட்டு, மெலிதாய் ஒரு பெருமூச்சோடு மேலும் பேசுகிறார்...

‘’ஆனா இப்ப கொஞ்ச நாளா, முகத்தின் வலது பக்கத்தை அசைக்கறது சிரமமா இருக்கு. எதோ ஒரு தடை இடைஞ்சலா இருக்கு. வலது கண்ணை மூட முடியாத நிலையும் சமீபமா ஏற்பட்டிருக்கு...’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் தாயுமானவனின் காது அருகே இருந்த அந்த அழிச்சாட்டியமான கட்டி, இப்போது உடைந்து புண்ணான நிலையில் இருக்கிறது!

அடுத்து எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்கிற அந்த ரகசியக் கோட்டைக் கடந்து, தாயுமானவன் தனது லட்சியக் கனவின் வெற்றி முகடைத் தொட வேண்டும் என்பதுதான் நமது பிரார்த்தனையாய் இருக்கிறது! கூடவே உங்களது பிரார்த்தனைகளும் மருத்துவக் கூற்றுகளை புறந்தள்ளி, அவரின் ஆயுளை நீட்டிக்கச் செய்யும் பாலமாக அமையட்டும்!

பிரார்த்தனைகளுக்கு இணையான வலிமை வேறு எதற்கும் இல்லை. அவைகள் ஒருபோதும் வீணாவதுமில்லை என்கிற நம்பிக்கை, நம்மில் பலருக்கும் இருக்கிறதுதானே?
- கல்யாண்குமார்

-இந்தப் பதிவை நான் எழுதிவிட்டு அவரது ஆயுள் நீட்டிப்புக்காக உங்களின் ஒருவனாகப் பிரார்த்தனை செய்தேன். ஆனால் அத்தனை பேரின் பிரார்த்தனைகளையும் புறந்தள்ளிய காலம், அந்த அன்பு இளைஞனை அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே காலனின் கையில் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்ததுதான் வேதனையான ஒன்று!

ஆனால் அந்த வெங்கட் தாயுமானவனின் நம்பிக்கையான வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன...

--------------------------------------------------------------------------