Tuesday, July 21, 2009

பெரியாரைச் சந்தித்தேன்!


எனது பள்ளி நாட்களில் ஒருநாள். வகுப்பு ஆசிரியர் மாணவர்களிடையே ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ‘இன்று நமது ஊருக்கு விஜயம் செய்திருக்கும் திரு.ஈ.வெ.ராமசாமி பெரியார் அவர்களை மாணவர்கள் அனைவரும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்று மாலை இரண்டு மணிக்கு பள்ளி மாணவர்கள் அனைவரும் வரிசையாக ஒழுங்கு காத்து அவர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அவரைப் பார்த்துவிட்டு அங்கிருந்து அனைவரும் அவரவர் வீட்டுக்குச் செல்லலாம்’ என்பதே அந்த அறிவிப்பு.

மாணவர்களிடையே ஒரு சந்தோஷ சலசலப்பு. அது பெரியாரை பார்க்கப் போவதால் அல்ல! மதியம் சீக்கிரமே வீட்டுக்குப் போகப் போகிறோமே என்கிற இன்ப அதிர்ச்சி! ஆறாம் வகுப்பு மாணவர்களான எங்களுக்கு அப்போது பெரியார் பற்றியெல்லாம் எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அவரைச் சந்திக்கிறவரை யார் இந்த பெரியார் என்கிற கேள்வி எனக்குள் சஸ்பென்ஸாகவே இருந்தது.

சுமார் முன்னூறு மாணவர்கள் வரிசையாக கிளம்பினோம். ஊர் ஜனங்கள் எல்லோரும் எங்களின் இந்த திடீர் அணிவகுப்பைப் பார்த்து அவர்களுக்குள் ‘எங்க போறாங்க இந்தப் பசங்க?’ என்று கேட்டுக் கொண்டார்கள். ஒருசிலர் எங்களிடமே கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். எங்களின் மூலமாக அன்றைக்கு பெரியார் நமது ஊருக்கு வந்திருக்கிறார் என்கிற விபரம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமானது.

ஒரு ரைஸ்மில் உரிமையாளருக்குச் சொந்தமான பங்களா ஒன்றில் பெரியார் தங்க வைக்கப்பட்டிருந்தார். வரிசையாக, அமைதியாக செல்லும் மாணவர்கள் அவருக்கு வணக்கம் சொல்ல, அவர் பதில் வணக்கம் சொல்லி சிரித்த முகத்தோடு ஒருசில மாணவர்களிடம் பேச்சுக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

எனக்கு அவரைப் பார்த்ததும் என் செல்லமுத்து தாத்தா நினைவுக்கு வந்தார். வெள்ளைத்தாடியும் அருகில் கைத்தடியுமாக அச்சு அசலாக அப்படியே என் தாத்தாவைப் பார்ப்பதுபோலவே உணர்ந்தேன். என்னை குழந்தை முதலே தன் தோளில் தூக்கிவைத்துக் கொண்டாடிய செல்லமுத்து தாத்தா சில மாதங்களுக்கு முன்புதான் இறந்திருந்தார். அவரது நினைவுகள் என்னை சில நிமிடங்கள் தடுமாற வைத்தன.

எல்லா மாணவர்களும் பெரியாரை நோக்கி இருகரம் கூப்பி வணக்கம் சொல்லிவிட்டு நகர எனக்கு மட்டும் அவரை ஒருதடவையாவது தொட்டுப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை வந்தது. அவரை நெருங்கும்போது சட்டென எனது வலது கையை கைகுலுக்கும் தோரணையில் நீட்டினேன். பெரியாரும் அதை ரசித்தபடியே எனது கைகளைப் பற்றிக் கொண்டு,

‘’உங்க பேரு என்ன தம்பி?’’ என்றார்.

நான் சொன்னேன்.

‘’நல்லா படிக்கணும்’’ என்று என் கன்னத்தைத் தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

பன்னிரெண்டு வயது சிறுவனான என்னைப் பார்த்து மரியாதையோடு ‘உங்க’ பேரு என்ன தம்பி என்று அவர் கேட்டது எனக்கு அப்போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. என் வாழ்க்கையில் என்னை முதன்முதலாக இப்படி ’உங்க’ சேர்த்து அழைத்த மாமனிதர் பெரியார். அந்த மாதம் முழுதும் பலரிடமும் இந்தச் சம்பவத்தை நான் சொல்லிச்சொல்லி மாய்ந்து போனேன்.

அதன்பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக செல்லமுத்து தாத்தா மாதிரியே இருந்த பெரியாரின் மதிப்பும் மரியாதையும் எனக்குத் தெரியவந்தது. பள்ளிப் படிப்பு முடிந்து பல்வேறு வகையான நூல்களைப் படிக்கிற போது பெரியாரின் எழுத்துக்களுக்கு முக்கியத்துவம் தந்து படிக்க ஆரம்பித்தேன். அவர் மீது எனக்கிருந்த மரியாதை மென்மேலும் கூடிப்போயிற்று.
அவரது தீவிரமான தொண்டனாக செயல்படாவிட்டாலும் முடிந்தவரை அவரது கருத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்புக் கொடுப்பனாகவே இருந்து வந்திருக்கிறேன்.

பல்வேறு காலகட்டங்களில் தனது கருத்துக்களை துணிச்சலாகவும் புதுமையாகவும் சொல்லி வந்த அந்த பெரியார் என்கிற வடிவம் ஆழமாக என மனதில் பதிந்து போயிருக்கிறது. அவரது மரணத்திற்குப் பின்னால் அவரைப் போல கருத்துக்களைச் சொல்ல யார் இருக்கிறார்கள் என்கிற கேள்வி எனக்குள் இன்றைக்கும் இருக்கிற ஒன்று.

இன்றைய இளைய சமுதாயத்திற்கு பெரியார் என்கிற பெயரே ஓல்டு ஃபேஷன் நேம் என்று ஆகிவிட்ட நிலையில் –
இன்னொரு பெரியார் நமக்குக் கிடைப்பாரா என்கிற கேள்விக்கு விடை கிடைக்குமா என்ன?

சல்லிக்காசு பெறாத நான் சாவதற்குள், இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு விடை கிடைக்குமா?
---------------------------------------

13 comments:

முகவைத்தமிழன் said...

பெரியர் பெயரில் பெரியாரை பற்றி பேச வந்தவர்கள் அணைவரும் ஆரிய சதியால் இணையத்தில் அடித்து கொண்டு நாறியதுதான் மிச்சம். இறுதியில் அணைவருமான சேர்ந்து ஒருவரை காவல்துறை வரை இழுத்து சென்றார்கள். அதன் பிறகு இணையத்தில் பெரியாரிசம் செத்துவிட்டது போல் தோன்றுகிறது. இருந்தபோதிலும் சிலர் இன்னும் எழுதிக் கொண்டுள்ளார்கள்.

பெரியாரின் கருத்துக்களும், தத்துவங்களும் அருமையானவை. பெண்னுரிமை, சமத்துவம், ஜாதி ஒழிப்பு என பல்வேறு களப்பரிமானங்கள் அவரது. விடாது கருப்பு, தமிழச்சி, தமிழ் ஓவியா என பலர்...இதில் பலர் காணாமல் போய்விட்டாலும் தமிழ் ஓவியா போன்ற சிலரின் பதிவுகள் இன்னும் உள்ளன.

பெரியாரின் கொள்கைகளையம் பார்ப்பன எதிர்ப்பையும் போட்டு குழப்பியதாலும் ஆரிய சதியாலும் அடிபட்டு போயின பெரியார் திராவிட கொள்கைகள.

ஆரிய சக்திகளின் சதிக்கு அடிமைப்பட்டுப்போன சில பதிவர்களின் தோல்வியை பெரியார் மற்றும் திராவிட கொள்கைகளுக்கும், தோழர்களுக்கும் ஏற்ப்பட்ட தோல்வியாக ஆரிய சக்திகள் கொக்கரித்தாலும் சாவே இல்லாத ஃபீனிக்ஸ் பறவைகளாக இன்னும் சிலர் களம் மாறி யுத்தம் செய்து கொண்டுதான் உள்ளார்கள்.

முகவைத்தமிழன்

மதிபாலா said...

பெரியார்...

அதே மில்லியன் டாலர் பெருமானமுள்ள கேள்விகளுடன் நானும்...

:((((

தமிழ் ஓவியா said...

வருக வருக

பகுத்தறிவுச் செய்திகளைத் தருக.

நன்றி.

----தொடர்வோம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)-

rapp said...

super:):):)

நா. கணேசன் said...

பெரியார் பற்றி விரிவாக கோவை அய்யாமுத்து, எனது நினைவுகள் (வானதி பதிப்பகம், 1973, 962 பக்.) என்ற புத்தகத்தைப் படிக்கலாம். குடியரசு பத்திரிகை தொடங்கும்போது பெரியாருக்குப் பணம் அளித்தவர் கோவை அய்யாமுத்து. அய்யாமுத்து காந்தியடிகள் செய்த தவறைச் சுட்டிக் காட்ட, காந்தி மன்னிப்புக் கடிதம் எழுதினார். தமிழ்நாட்டில் தட்டெழுதி ‘எனது நினைவுகள்’ புத்தகத்தை வலையில் ஏற்ற ஆசை. பார்ப்போம். உங்கள் பதிவைப் பார்த்தபின் அய்யாமுத்து தாத்தா பெரியாரைப் பற்றிப் பேச, குழந்தைப் பருவத்தில் கேட்டவை நினைவுக்கு வருகின்றன. சாதிப் பிரச்சினைகள் பற்றி மேயோ என்ற ஆங்கிலமாது புத்தகம் எழுதி இந்தியாவின் குறைகளைக் காட்ட, காந்தி அதை மறுக்க, அய்யாமுத்து “மேயோ கூற்று மெய்யோ பொய்யோ” என்று புத்தகம் எழுதி இந்தியா சமூகநலனில் எவ்வாறு மேம்பட வேண்டும் என்று விளக்கினார்.

தாயுமானவன் வெங்கட் பற்றி ஒரு பதிவெழுதி அவருக்கு உதவி செய்யுங்கள் என்று அவரது போன், முகவரி எல்லாம் தந்து தமிழ்மண அன்பர்களுக்கு அறிவிக்கலாமே.

விண்மீனாகத் திகழ வாழ்த்து!

நா. கணேசன்

t.s.muthu said...

periyaar ennum maamethai varavaal than tamilnaadu ivvavu munnetram. antha maaperum thalaivarukku naam endrum nandriyudaiyavarha iruppom.


by t.s.muthu
tirupur

t.s.muthu said...

periyaar ennum maamethai varavaal than tamilnaadu ivvavu munnetram. antha maaperum thalaivarukku naam endrum nandriyudaiyavarha iruppom.


by t.s.muthu
tirupur

Thamizhan said...

உள்ளதை அவர் உணர்ந்த படி சொன்ன ஒரே தலைவர் பெரியார்.யாருக்காகவும் தன் கொள்கைகளை விட்டுக் கொடுக்காத பெரியார் நான் சொல்வதை சொல்லிவிட்டேன்,உங்கள் அறிவுக்கு ஏற்ற படி நடந்து கொள்ளுங்கள் என்று சொன்னார்.
அவர் போல் குழந்தைகட்கும்,பெண்களுக்கும் மரியாதை கொடுத்த தலைவர் யாரும் இல்லை.யார் சொல்வதையும் கேட்டுப் பொறுமையாகப் பதில் சொன்னவர்.
இன்னொரு பெரியார் வரமாட்டார்.நாம் ஒவ்வொருவருந்தான் நம்மால் முடிந்த்வரை அவரது கொள்கைகளைப் பரப்ப வேண்டும்.இதில் வெட்கமோ,ஏமாற்றமோ,சுய நலமோ இன்றி செயல் பட வேண்டும்.

தமிழ் ஓவியா said...

//பெரியாரின் கருத்துக்களும், தத்துவங்களும் அருமையானவை. பெண்னுரிமை, சமத்துவம், ஜாதி ஒழிப்பு என பல்வேறு களப்பரிமானங்கள் அவரது. விடாது கருப்பு, தமிழச்சி, தமிழ் ஓவியா என பலர்...இதில் பலர் காணாமல் போய்விட்டாலும் தமிழ் ஓவியா போன்ற சிலரின் பதிவுகள் இன்னும் உள்ளன.//

நன்றி முகவைத்தமிழன்

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

இது போன்ற வாய்ப்பு வாய்க்காமல்.. தாமதமாக பிறந்த வருத்தம் எனக்குள் இன்னும் இருக்கிறது.. :(

பதிவுக்கு நன்றி!

PRINCENRSAMA said...

அய்யாவைச் சந்தித்த பெருமையோடு நின்று விடாமல், இக்கொள்கைகள் பரவ வேண்டும் என்ற ஆவலோடும் இருக்கிற உங்களைப் போன்றவர்கள் உங்கள் துறையிலும் உங்க்ளால் முடிந்தவரை இந்தக் கருத்துகளை எடுத்துச் செல்ல வேண்டும். தங்களின் ஆர்வம் கண்டு மகிழ்ச்சி... இளைஞர்கள் இன்னும் இந்த உணர்வுகளோடு நிறைய இருக்கிறார்கள். பெரியாரியல் நிச்சயம் வெல்லும்.

சண் சிவா said...

வரலாற்றை தொட்டுப் பார்த்திருக்கிறீர்கள்,எம் காலம் அதுவாக இல்லையே என வருந்துகிறேன்...