Friday, June 22, 2012

இந்திய சினிமாவுக்கு வயசு நூறு.

இது குறித்து இந்தியாவில் சினிமாவின் பயணம் குறித்து, ஏழாவது மனிதன் படத்தின் இயக்குனரும் தற்போது பிரசாத் திரைப்படக் கல்லூரியின் முதல்வருமான ஹரிஹரன் அவர்கள் புதிய தலைமுறைக்காக எனக்கு அளித்த பேட்டி இது. அவரது வெளிப்படையான துணிச்சலான பல கருத்துக்களுக்காக இதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.








அரசாங்கத்திற்கு சினிமா மீது காழ்ப்புணர்ச்சி


-கே.ஹரிஹரன்


ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் சினிமா வருவதற்கு முன்னரே கார், விமானம், வானுயர்ந்த கட்டிடங்கள், டிராஃபிக் ஜாம், மின்சார விளக்குகளால் ஜொலிக்கும் நகரங்கள், ஆட்டோமேடிக் எலிவேட்டர்ஸ், ஏன் கொக்கோகோலா கூட அங்கே வந்தாயிற்று. ஆனால் இந்தியாவிற்குள் சினிமா வரும்போது மின்சாரமே கிடையாது. பங்களாக்கள், கார்கள், விமானம் போன்ற அதிநவீன கண்டுபிடிப்புகள் எல்லாவற்றையும் சினிமாதான் முதன்முதலில் நம் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. புதுமை என்கிற விஷயத்தையே சினிமா மூலம்தான் நாம் அறிந்து கொண்டோம். அதன்பிறகுதான் அதில் காட்டப்பட்ட அனைத்தையும் ஒவ்வொன்றாக நேரில் பார்த்தோம்.


இந்தியாவைப் பொருத்தவரை ஸ்கூல், காலேஜ், யுனிவர்சிட்டி போன்றவைகள் சொல்லித்தர முடியாத பல விஷயங்களை அவைகளுக்கு முன்பாகவே சினிமாதான் நமக்குக் கற்றுக் கொடுத்தது. அப்போது இங்கே ஒரு கிராமத்தில் இருப்பவனுக்கு பியானோ, சாக்ஸபோன் போன்ற இசைக்கருவிகளைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் படங்களில் ராஜ்கபூரும், சிவாஜி கணேசனும் அதை அருமையாக வாசிப்பார்கள். இப்படியெல்லாம் வாத்திய கருவிகள் இருக்கின்றன என்பதை அப்போதே சினிமாதான் சொல்லி பிரமிப்பூட்டியது. முதலாளித்துவத்தை இங்கே சினிமாதான் முதன் முதலில் அறிமுகப்படுத்தியது. பலவிதமான பொருட்களின் நுகர்வுமயத்தையும் அதுதான் நமக்கு உணர்த்தியது. உணவு, உடை, பாடல் என்று பல துறைகளிலும் புதுப்புது விஷயங்களை சினிமாதான் இந்தியாவிற்கே காட்சிப்படுத்தியது.


இருபதாம் நூற்றாண்டின் கவிதை என்பது சினிமா பாடல்கள்தானே? வேறு எது இங்கே கவிதை என்று அறியப்பட்டது? பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்படாத கவிதைகளை சினிமாவில் நாம் கேட்டோம். பாடங்களில் புராணங்களை படித்து மனப்பாடம் செய்ய முடியாத பல விஷயங்களை இந்தச் சினிமாதான் மிகச் சுலபமாக நம் மனதில் பதிய வைத்தது. புராணங்களைத் தாண்டி சரித்திரம் மற்றும் சமூகப் படங்களின் தயாரிப்பில் இந்திய சினிமா பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய பல சாதனைகளைப் படைத்திருக்கிறது.
அதே புராணங்களில் இருந்த நல்ல கருத்துகள் எல்லாமே திரும்ப எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் சொல்லப்பட்டன. முருகர், ராமர் போன்ற பாத்திரங்கள் அவர்களின் சமூகப் படங்களிலும் பிரதிபலித்தன. மகாபாரதப் பின்னணி, ரஜினி நடித்த தளபதி வரை நீண்டது. திரும்பத் திரும்ப இந்த மனிதர்களுக்கு நல்லொழுக்கத்தையும் தீயவர்களின் முடிவையும் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன இந்திய சினிமாக்கள். ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு அரசு ஆற்ற வேண்டிய அத்தனை கடமைகளையும் சினிமா ஆற்றி வந்திருக்கிறது. தனியொரு மனிதனுக்கு லட்சியம், கொள்கை எல்லாம் வேண்டும் என்பதை இங்கே சினிமாதான் முதன்முதலாக அறிவுறுத்தியது. அரசியல், பொருளாதாராம், கல்வி என் பல முக்கிய நடப்புகள் குறித்த விமர்சனங்களை சினிமாதான் முதன் முதலாக துணிச்சலாக இங்கே வெளிப்படுத்தியது. வேறு எந்த கலை சார்ந்த துறையினரும் அதில் முழுமையாகப் பங்கெடுக்கவே இல்லை. சமுதாயத்தில் நடக்கும் பல தவறுகளை சினிமாக்கள் சுட்டிக் காட்டின. அது இந்திய சினிமாவிற்கு கிடைத்த வெற்றி.


ஆனால் துரதிருஷ்டவசமாக, இந்த வெற்றிதான் இந்திய அரசாங்கத்திற்கு சினிமா மீது ஒருவித காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியும் விட்டது. சினிமா என்றாலே மத்திய அரசு வெறுப்பதற்கு சினிமா மீதான அவர்களின் தவறான பார்வைதான் காரணம். எல்.வி.பிரசாத், ஏவி மெய்யப்ப செட்டியார், எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டி போன்றவர்கள் எந்தவிதமான படிப்பறிவும் இல்லாமல் சுலபமாக பணம் சம்பாதித்துவிட்டு சினிமாவில் நம்மையே விமர்சிக்கிறார்களே என்று ஆரம்பித்த அர்த்தமில்லாத கோபம், இந்த அரசாங்கத்திற்கு இருந்து கொண்டே இருக்கிறது. அது இன்றுவரை தொடர்கிறது. 1953லேயே ராஜ்ய சபா மெம்பராக இருந்த மிஸஸ் முன்ஸி என்பவர் சினிமாத்துறை ஒரு அபத்தக் குப்பையாக இருக்கிறது; ஆபாசமாக இருக்கிறது; இதைவிட மட்டமான மீடியம் கிடையாது, எனவே அதை உடனே தடை செய்ய வேண்டும் என்று சபையில் குரல் கொடுக்கிறார். அதே வருடத்தில் கேஸ்கர் என்ற ஆல் இண்டியா ரேடியோ தலைவராக இருந்தவர், சினிமா பாடல்களை ரேடியோவில் ஒலிபரப்பாவதை மூன்று வருடங்களுக்கு தடையே செய்திருக்கிறார்.


ஆனாலும் இத்தனை தடைகளையும் தாண்டி, இந்தியா ஒரு சிறந்த ஜனநாயக நாடாக இருப்பதற்கு சினிமா தன் முழு பங்களிப்பையும் செய்து வந்திருக்கிறது. இளைஞர்கள் மூலம் பல எதிர்ப்புகுரல்களை பதிவு செய்ய அது தூண்டுகோலாக இருந்திருக்கிறது. பல அரசியல் தலைவர்களை இந்த சினிமா உருவாக்கிறது


இத்தனை சிறப்புகளைக் கொண்ட இந்திய சினிமாவிற்கு சென்சார் என்கிற விஷயம்தான் மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கிறது. சினிமாவிற்குப் பின்னர் பிரபலமாகி இருக்கின்ற தினசரிகளுக்கு, வார மாத இதழ்களுக்கு, டிவி சேனல்களுக்கு, இண்டர் நெட்டுக்கு இங்கே சென்சார் கிடையாது. ஆனால் சினிமாவிற்கு மட்டும் சென்சார் என்பது ஒரு சாபக்கேடுதான். சினிமாவில் சொல்லப்படாத, சொல்ல முடியாத பல விஷயங்களை இன்றைக்கு மற்ற மீடியாக்களில் இன்று நாம் பார்க்கத்தான் செய்கிறோம். பிரிட்டிஷ்காரன் ஆண்டபோது சென்சார் இருந்ததில் நியாயம் இருக்கிறது. இந்த சுதந்திர நாட்டில் சினிமாவிற்கு மட்டும் எதற்கு சென்சார்?


அதே போல இன்னொரு கருத்தையும் இங்கே நான் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். சமீபத்தில் நான் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே பலதரப்பட்ட டெக்னாலஜி படிப்புகளும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. 1953ல் ஆரம்பிக்கப்பட்ட அங்கே, சினிமா பற்றிய படிப்பு மட்டும் இன்னும் துவங்கப்படாமலே இருக்கிறது. சிறப்பான ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங் போன்றவற்றை அங்கே சொல்லித் தரலாமே? சினிமா டெக்னிக்கை மட்டும் ஏன் அங்கே ஒதுக்க வேண்டும்?.
இன்னும் சொல்லப் போனால் இந்த சினிமா கல்வியை இங்கே பள்ளிகளிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். அங்கே செய்யுள், விளையாட்டு, ஓவியம் கற்றுத் தரப்படுகிறது. ஏன் சினிமா மொழியை கற்றுத்தர கூடாது? குளோசப், லாங் ஷாட், ஒரு கதையை எப்படி சொல்ல வேண்டும் என்கிற ஸ்டோரி போர்டு வழிமுறைகளை அங்கிருந்தே ஆரம்பிக்கலாமே? மாணவர்களிடத்தில் இதற்கு உற்சாகமான வரவேற்பு நிச்சயம் இருக்கும். காரணம் அவர்களின் பள்ளி வாழ்க்கையின் பாதி நாட்கள் சினிமாவில்தான் கழிகிறது. அதைப் பற்றிய தொழில் நுட்பத்தை அவன் ஏன் கற்றுக் கொள்ளக்கூடாது?


ஒரு அரசியல்வாதி சினிமாவில் ஹீரோக்கள் சிகரெட் பிடிப்பதால்தான் இளைஞர்கள் சிகரெட் பிடிக்கிறார்கள் என்று முட்டாள்தனமாக அறிவித்தார். உண்மையாலுமே இளைஞர்கள் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் சிகரெட்டை தடை செய்யுங்கள். அந்த அதிகாரம் இல்லாதபோது சினிமாவைக் காரணம் காட்டி தப்பித்துக் கொள்ளாதீர்கள்.
இத்தனை குறைகளை வைத்துக் கொண்டு இந்திய சினிமா நூற்றாண்டைக் கொண்டாடுவதால் யாருக்கு என்ன லாபம்? சினிமா கலைஞர்களின் புகழ்பாடி அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துதான் இந்த நூற்றாண்டின் நோக்கமா? மக்கள் இந்த சினிமாவை ஏற்கனவே கொண்டாடிக் கொண்டாடி மகிழ்ந்து போனார்கள். அதை எங்கேயே எடுத்துச் சென்று விட்டார்கள். எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு கிடைக்காத வரவேற்பா? அவர்களுக்குக் கிடைக்காத பாராட்டா? கேரளாவில் பிரேம் நஸீர் 38 வருடங்களில் 610 படங்களில் நடித்திருக்கிறார். வருடத்திற்குச் சராசரியாக 12 படங்கள். அதாவது மாதம் ஒரு படம் என்கிற விகிதத்தில் அவரது படம் வந்து கொண்டே இருந்திருக்கிறது. பிரேம் நஸீர் என்பவரது ஒரே முகத்தை 38 வருடங்களாக மூன்று தலைமுறையினர் சலிக்காமல் பார்த்திருக்கிறார்கள் என்றால் அவரது திறமை என்ன சொல்வது? இப்படி வடக்கே பலரும் இந்திய சினிமாவிற்கு எத்தனையோ சாதனைகளைச் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
இதுமாதிரி மிகச் சிறந்த எத்தனையோ கலைஞர்களை இந்த அரசாங்கம் கண்டு கொள்ளாமல் கெளரவிக்காமல் இருந்திருக்கிறது. ஆனால் கிரிக்கெட் என்ற பெயரில் சூதாட்டத்தில் பங்குபெறும், தனியார் பொருட்களை விற்பனை செய்ய, தன்னைத்தானே அந்த நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் விற்றுக் கொள்ளும், சச்சின் டெண்டுல்கருக்கு ராஜ்ய சபா எம்.பி. சீட் கொடுத்து பாரத ரத்னா விருதையும் கொடுக்கக் தயாராக இருக்கிறது, இந்த அரசாங்கம். அந்த வகையில் சினிமா கலைஞர்கள் என்ற முறையில் ரஜினியையும் கமலையும் நான் மனதார பாராட்டுகிறேன். எந்தவொரு பொருட்களுக்கும் இதுவரைக்கும் விளம்பரம் செய்ய அவர்கள் ஒப்புக் கொள்ளவே இல்லை. ‘நாங்கள் இந்த இடத்தில் இருப்பதற்கு காரணம் ஆடியன்ஸ் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை; பொருட்களுக்காக அதனை வீணடிக்க விரும்பவில்லை’ என்கிற அவர்களின் கொள்கையைப் பாராட்டியே தீர வேண்டும்.


இந்திய சினிமாவிற்கு இருக்கும் நடைமுறை சிக்கல்களை தீர்ப்பதற்கான ஒரு நேரமாகவே இந்த நூற்றாண்டை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான குரலை இங்கே நான் பதிவு செய்து விட்டேன். அது நிச்சயம் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கையும் இந்திய சினிமா எனக்குக் கொடுத்திருக்கிறது.
. சந்திப்பு: கல்யாண் குமார்






Saturday, June 16, 2012

காந்திக்கு மரியாதை

காந்தி – இந்தப் பெயரைக் கேட்டதும் பலருக்கும் தோன்றுவதெல்லாம் அவர் நமது தேசத்தந்தை; நம் நாட்டின் சுதந்திரத்திற்காக அஹிம்சை வழியில் போராடியவர்; அக்டோபர் இரண்டு அவர் பிறந்த நாள். அன்றைக்கு அனைவருக்கும் விடுமுறை கிடைக்கும் என்பது மட்டும்தான். ஆனால் அந்த மகானைப் பற்றிய பலரும் அறியாத செய்திகளோடு 120 நாடுகளுக்கும் மேலாக அவருக்கு கெளரவம் செய்யுமுகமாக வெளியிடப்பட்ட தபால் தலைகளின் சேகரிப்பையும் தனியொரு மனிதனாகச் செய்திருக்கும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ராஜேஷ் குறித்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் புதிய தலைமுறை இதழில்நான் எழுதியிருந்தேன். மத்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், இன்றும் அதே காந்தி பற்றிய சிந்தனைகளோடு, பள்ளிக் குழந்தைகளிடையே காந்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ராஜேஷ் தன் நண்பர்களுடன் இணைந்து ’காந்தி வேர்ல்டு பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளையைத் துவக்கி காந்தி குறித்த கண்காட்சிகளை தமிழகம் முழுக்க நடத்த திட்டமிட்டிருக்கிறார். சென்ற வாரம் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காந்தி குறித்தான கண்காட்சியைத் துவக்கி வைத்ததோடு, ராஜேஷையும் அவரது அறக்கட்டளையையும் மனம்விட்டு வாழ்த்திப் பேசியிருக்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ.அப்துல்கலாம். பள்ளிக்குழந்தைகளுகாக துவக்கப்பட்ட இந்த காந்தி குறித்தான கண்காட்சியைப் பற்றி கேள்விப்பட்டு குமரி அனந்தன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோர் திடீர் விசிட் அடித்து கண்காட்சியை பார்வையிட்டு வாழ்த்திச் சென்றிருக்கிறார்கள். அதன் நிறைவு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எனது அன்பான வேண்டுகோளை ஏற்று, அதில் பங்கேற்றுச் சிறப்பித்த நடிகர், சமூக சிந்தனையாளர் நண்பர் விவேக் அவர்களுக்கு என் இனிய நன்றிகளை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ராஜேஷ் அவர்களின் இந்த அறக்கட்டளை மென்மேலும் வளர்ந்து காந்தியின் புகழை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு உலகம் முழுக்க கொண்டு செல்லும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவரோடு இணைந்து செயலாற்றும் அந்த அறக்கட்டளையின் டிரஸ்ட்டி திரு. ஜி.ஷ்யாம் சுந்தர் அவர்களுக்கும் ராஜேஷின் துணைவியாரும் அதன் மானேஜிங் டிரஸ்ட்டியுமான திருமதி. ஆர்.விஜயலஷ்மி மற்றும் ராஜேஷிற்கு உதவிபுரியும் நண்பர்கள், தன்னார்வ தொண்டர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் சொல்லிக் கொள்கிறேன். நீங்களும் வாழ்த்தலாமே? ராஜேஷ் தொடர்பு எண்: 9444019030 / www.gandhiworld.in