Thursday, August 16, 2012

மரங்களே என் மகன்கள்....

சத்தியமங்கலம் என்றதும் உங்களுக்குச் சட்டென நினைவுக்கு வருவது சந்தன மரக் கடத்தல் புகழ் வீரப்பனாகத்தான் இருக்கும். இனிமேல் அந்த பிம்பத்தைத் தயவுசெய்து அழித்துவிடுங்கள். இனி சத்தியமங்கலம் என்றதும் யாருக்கும் நினைவுக்கு வரப்போவது, இந்த அய்யாசாமியாகத்தான் இருக்கும். உலகம் முழுக்க அந்த ஊருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தைத் துடைக்கிற காரியமொன்றை, இந்த மனுஷர் சத்தமில்லாமல் செய்திருக்கிறார் என்பதுதான், ‘மரங்களின் மகாத்மா’ விருதைப் பெற்றிருக்கும் இந்த அய்யாசாமியின் சாதனை!

சத்தியமங்கலத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வேட்டுவன்புதூர் கிராமம். மொத்தம் 250 வீடுகள். அதன் மக்கள் தொகையோ ஆயிரம் மட்டுமே. ஆனால், அதில் ‘ஆயிரத்தில் ஒருவரான’ அய்யாசாமிக்கு வயது 76. ஆனாலும் மனதளவில் இளைஞராகவே இருக்கிறார்.

அப்படி என்ன இவர் பெரிதாகச் சாதித்து விட்டார்?

அவர் சாதனையைப் பார்ப்பதற்கு முன்னால் அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பைப் பார்த்து விடுவோமா?

தன் ஐம்பத்தோரு வயது வரையிலும் அய்யாசாமிக்கு, ‘பள்ளிக்கூடம்’ என்கிற ஒற்றை வார்த்தையைக்கூட எழுதவோ படிக்கவோ தெரியாது. பார்த்து வந்த தொழில் ஆடுமேய்ப்பதுதான். ஒருகாலத்தில் சொந்தமாக நாற்பது ஆடுகள் அவரிடம் இருந்தன. பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த அவரது மகளின் திருமணச் செலவுகளுக்காக அவை அனைத்தையுமே விற்க வேண்டிய சூழ்நிலை. இப்போது அய்யாசாமி ஒரு விவசாயக்கூலி. பகலில் சூரியனும் இரவில் மண்ணெண்ணை விளக்கும் மட்டுமே, வெளிச்சம் தரும் ஒரே ஒரு சின்னக் குடிசை வீடுதான் இப்போதைக்கு மிச்சம். மிகச் சமீபத்தில்தான், மழைத்தொல்லை காரணமாக, சுமார் 100 ஓடுகளைக் கொண்ட ஓட்டுவீடாக அது உருமாறியிருக்கிறது. கூடவே அவரது துணைவியான 65 வயது கருப்பாத்தா.
பத்துவரிப் பாராவில் முடிந்து போகிறது அய்யாசாமியின் பயோடேட்டா. ஆனால் அவரது சக்திமிக்க சாதனை, நாளைய சரித்திரத்தில் இடம்பெறப் போவது உறுதி. அதற்கு முன்னே, அவரது ஃப்ளாஷ்பேக் சம்பவம் ஒன்றை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்ப்போமா?
அது 1984ம் வருடம்.

அப்போது அய்யாசாமிக்கு ஐம்பத்தோரு வயது. படிக்கத் தெரியாது என்றாலும், டீக்கடைக்குப் போய் அன்றைய நாளிதழை அடுத்தவர்களைவிட்டு வாசிக்க வைத்து, நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்திருக்கிறார். ‘ஆடுமேய்க்கிற ஆள்தானே’ என்று அந்தப் ‘பெருசை’ யாரும் அலட்சியம் செய்யாமல், அந்த ஊர் இளைஞர்கள் அவருக்குச் செய்திகளை வாசித்துக் காட்டியது மட்டுமில்லாமல், மெல்ல மெல்ல அவருக்குப் படிக்கவும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நாளடைவில், பேப்பரில் வரும் செய்திகளை எழுத்துக் கூட்டிப் படித்துப் புரிந்து கொள்கிற அளவுக்குத் தேறிவிட்டார்.
இரவு நேரங்களில் பக்கத்து வீட்டு நெசவுத் தொழிலாளியான ரங்கசாமியின் ரேடியோவில், கோவை வானொலி ஒலிபரப்புகிற செய்தி மற்றும் நிகழ்ச்சிகளைக் கேட்பது வாடிக்கை. செய்தி கேட்காமல் தூங்கப் போனதே இல்லை. அப்படியொருநாள் அவர் கேட்ட நிகழ்ச்சிதான், அவர் மனதில் ஒரு உறுதிமொழியை ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறது.

“நமது நாட்டில் நீர்வளம் மிகவும் குறைந்து கொண்டே போகிறது. மழை பொய்த்துப் போக ஆரம்பித்திருக்கிறது. இனிமேல் விவசாயம் என்பதும், பயிர் அறுவடை என்பதும் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. பூமி, நாளுக்கு நாள் சூடாகிக் கொண்டே போவதால், மரங்கள் அதிகமான அளவில் தேவைப்படுகின்றன. அவைகளால்தான் நமக்கு மழை பெய்யும் வாய்ப்பு அதிகம். ஆகவே நாம் அனைவரும் ஒரு இந்தியராக நமது நாட்டை எதிர்காலத்தில் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே ஆளுக்கு ஒரு மரமாவது வளர்ப்பதை நம் கடமைகளில் ஒன்று என்பதை உறுதிமொழியாக ஏற்றுக் கொள்வோம்” என்பதே அந்த நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்ட உரை. (சுமார் 25 வருடங்களுக்குமுன், அந்த வானொலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவரின் பெயர் முருகானந்தம் என்பதைக்கூட அய்யாசாமி இந்த வயதிலும் நினைவுகூர்கிறார்!)

அந்த நிமிடமே தன் மனதிற்குள் மரம் வளர்க்கும் உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட அய்யாசாமி, அடுத்த நாள் காலையில் செய்த முதல் விஷயம், கிராமத்தைச் சுற்றியிருக்கும் வேப்பமரங்களின் கீழ் சிதறிக் கிடக்கும் அதன் விதைகளையும் சேகரித்து, ஊருக்கு ஒதுக்குப்புறமான - இவர் ஆடுமேய்க்கும் இடமான - காட்டோடையில் ஆரம்பித்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் மாதேஸ்வரன் மலை அடிவாரம் வரை, இருமருங்கிலும் தக்க இடைவெளிவிட்டு விதைத்திருக்கிறார். நாளடைவில், அந்தப் புறம்போக்கு நிலத்தில் இவர் விதைத்தவைகளில் செடியாக வளர்ந்து நின்றவைகளின் எண்ணிக்கை மட்டும் மூவாயிரத்தைத் தொட்டிருக்கிறது!

அவைகளுக்குப் பொறுமையாக முள்வேலியிட்டு ஆடு, மாடுகள் மேய்ந்து விடாதபடி மிகக் கவனமாகப் பாதுகாத்து வளர்த்திருக்கிறார் அய்யாசாமி. தான் வளர்க்கும் ஆடுகளின் எச்சங்களையே சேகரித்து, அந்தச் செடிகளுக்கு உரமாகவும் இட்டு வந்திருக்கிறார். கண்முன்னே அவைகள் மளமளவென்று வளர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த அய்யாசாமிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. சில வருடங்களில் அந்தச் செடிகள் மரங்களாக மாறியிருக்கின்றன. தனக்கு ஒரு ஆண்குழந்தை இல்லையே என்கிற வருத்தம் நீண்ட நாள் அய்யாசாமியின் மனதை உறுத்திக் கொண்டேயிருந்திருக்கிறது. ஒருகட்டத்தில் அதைப் பற்றி கவலை கொள்ளாமல், தான் விதையிட்டு உரமிட்டு வளர்த்த மரங்களையே தனது மகன்களாகப் பாவித்து, மேலும் கவனமாக அவைகளைப் பராமரித்திருக்கிறார்.
இன்று அத்தனை மரங்களும் ஓங்கி உயர்ந்து வளர்ந்து, அந்த வேட்டுவன் புதூரையே ஒரு பசுஞ்சோலையாக மாற்றி அமைத்திருக்கும் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கின்றன அந்த மரங்கள்.

“இந்த உலகத்துல ஒரு அப்பனுக்கு ஆம்பளப் புள்ளைங்க ஒண்ணுலேர்ந்து பத்துப் பேரு இருப்பாங்க, இல்லீங்களா தம்பீ? ஆனா மூவாயிரம் ஆம்புளப் புள்ளைங்க எனக்குச் சொந்த மகன்களா, எங்கண்ணு முன்னாடி கம்பீரமா வளர்ந்து நிக்கிறானுங்க.... இதவிட எனக்கு வேற சொத்து சொகம் எதுவும் வேணாஞ்சாமி..... இது ஒண்ணே எனக்குப் போதுங்கண்ணு... “ என்று கோவைத் தமிழில் பேசி நம்மை நெகிழ வைக்கிறார் அய்யாசாமி!
உண்மைதான். இந்த அப்பாவி அய்யாசாமியின் இன்றைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அவர் குடியிருக்கும் ஓட்டு வீடு; ஈரோடு ஜூனியர் சேம்பியன் என்ற அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றில் எம்.எஸ்.உதயமூர்த்தியால் வழங்கப்பட்ட ‘மரங்களின் மகாத்மா’ என்கிற பட்டத்தோடு கூடிய ஒரு ஷீல்டு; ஈரோடு சித்தார்த்தா மெட்ரிக் பள்ளியிலிருந்து கொடுத்த கண்ணாடி பிரேமிட்ட ஒரு வாழ்த்து மடல். இவரது செய்தி ஆர்வத்திற்குப் பரிசாக, குழந்தைசாமி என்கிற உள்ளூர் நண்பரால் வழங்கப்பட்ட ஒரு சிறிய டிரான்சிஸ்டர். கூடவே சில நிகழ்ச்சிகளில் அவருக்குப் போர்த்தப்பட்ட எட்டு சால்வைகள். அந்தச் சால்வைகளைப் பற்றி, அய்யாசாமி மிகவும் விட்டேத்தியாகச் சொல்கிறார்,
“அந்தப் பட்டுத் துணிங்கதான் எனக்கும் எம்பொஞ்சாதிக்கும் குளிர்காலத்தில போத்திக்க ஒபயோகமா இருக்குதுங்க தம்பி...”

காந்தியின் நினைவாக தன் வாழ்நாளில் சட்டையே அணியாத அய்யாசாமியின் ஒரே வருத்தம் என்ன தெரியுமா? இரண்டு வருடங்களுக்கு முன் அவர் வெளியூர் போயிருந்தபோது, சில சமூக விரோதிகள், அவர் மகன்களாக கருதி வளர்த்த சில மரங்களை இரவோடு இரவாக, வேரோடு வெட்டி எடுத்துச் சென்றதுதான். ஊருக்குத் திரும்பிய அவர் துடித்துப் போய் ஈரோடு கலெக்டரிடம் ஓடோடிப் போய் புகார் மனு அளித்திருக்கிறார். ஆனால் அதற்கு எந்தவித நடவடிக்கையும் இதுவரை இல்லையென ஆதங்கப்படும் அய்யாசாமி, அந்த புகார் மனுவிற்கான ரசீதைப் பத்திரமாக வைத்திருந்து நம்மிடமும் ஆதங்கமாகக் காட்டுகிறார். ஆனாலும் தனக்குத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவராக,
“ஆயிரம் சந்தன மரங்களை வெட்டிச் சாய்ச்ச வீரப்பனைதான் இந்தப் பேப்பர்காரங்க மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதுனாங்க, டி.வி. பொட்டிக்காரங்களும் கதை கதையா சொல்லிப் படமா எடுத்துக் காட்டுனாங்க. இதுல நம்ம சொல்றது எப்படிங்க சாமி எடுபடும்?”

ஒரு பசுமைப் புரட்சியையே நிகழ்த்தியிருக்கும் அய்யாசாமியின் இந்த ஆதங்கமிக்கக் கேள்வியில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.. அவரது மனைவியிடமும் பக்கத்து வீட்டுக்காரரிடமும் இவர் தன் கடைசி ஆசையாக, ‘நான் இறந்துவிட்டால் சுடுகாட்டில் புதைத்துவிடக் கூடாது. என் மூவாயிரம் மகன்களுக்கு நடுவே ஒரு இடத்தில் குழிதோண்டித்தான் புதைக்க வேண்டும்’ என்பதுதானாம்.

சமீபகாலமாக, அய்யாசாமியை வறுமை வலுவிழந்தவராக ஆக்கிக் கொண்டிருக்கிறது. மாதாமாதம் வந்து கொண்டிருந்த முதியோர் உதவித்தொகையான நானூறு ரூபாய்கூட, கடந்த ஐந்து மாதங்களாக வரவில்லையாம். அதற்கு மணியகாரரிடமும், தாசில்தாரிடமும் தினசரி நடந்து கொண்டிருப்பதாக வேதனையோடு சொல்லும் அய்யாசாமி, அந்தக் கஷ்ட ஜீவனத்திலும் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னர், கோவை வானொலி மூலம், தான் எடுத்துக் கொண்ட உறுதிமொழி வாசகங்களை இன்னமும் நினைவில் வைத்துக் கொண்டு, நம் அனைவரிடமும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார்:

“எதோ என்னால முடிஞ்சது, எப்படியோ கஷ்டப்பட்டு மூவாயிரம் மரங்கள தனி ஆளா வளர்த்துட்டேன். ஆனா நீங்க எல்லாரும், இந்த நாட்டுல எதாவது ஒரு இடத்துலயாவது ஒரே ஒரு மரம் வளர்ப்போம்னு உறுதிமொழி எடுத்துக்குவீங்களா?”

அய்யாசாமியின் இந்த ‘ஒரே ஒரு’ கேள்விக்கு நம்மில் எத்தனை பேரிடம் ‘ஆம்’ என்கிற பதில் இருக்கிறது?