Tuesday, November 10, 2009

ஒரு நெகிழ்வான இசை நிகழ்ச்சி!

ஒரு கிராமத்தின் தாய்க்கு இரண்டு ஆண்பிள்ளைகள். இருவருக்குமே படிப்பில் ஆர்வம் இல்லை! மூத்தவனுக்கு கதை கவிதை, பத்திரிகைகளில் ஈடுபாடு. இளையவனுக்கோ கால்பந்தாட்டத்தில் கவனம். பள்ளி நாட்களின்போது நடந்தவொரு போட்டியில் அவனது கால் எலும்பு முறிந்துபோக, இரண்டுமாதம் ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருக்கவேண்டிய நிலை. அவனைப் பார்க்கவந்த ஒரு நண்பன், வழியில் யதேச்சையாக வாங்கிய ஒரு புல்லாங்குழலை அவனது கையில் கொடுத்துவிட்டு ‘’ஆஸ்பத்திரியில் போரடித்துப் போயிருப்பாய்; சும்மா இதை ஊதிக் கொண்டு இரு’’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். அப்போதுதான் அவனுக்கும் அந்தப் புல்லாங்குழல் மீது எதோ ஒரு ஆர்வம் பிறந்திருக்கிறது.

அடுத்த நாளிலிருந்து அதை வாசித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறான். முதலில் காற்றுதான் வந்திருக்கிறது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சினிமா பாடல்களை வாசிக்க, அதன் துளைகளுக்குள் இருந்த ரகசியம் வெகுசீக்கிரத்திலேயே பிடிபட்டிருக்கிறது. ஆஸ்பத்திரியிலேயே அந்த புல்லாங்குழலை விட்டுவிட்டு வராமல் கையோடு எடுத்துவந்திருக்கிறான் அந்த இளையவன். நண்பர்கள் முன்னிலையில் சினிமாப் பாடல்களை வாசித்துக் காட்டி, அதன் மூலம் அவனுக்குக் கிடைத்த பாராட்டுதல்கள் அவனைக் கொண்டுபோய் நிறுத்திய இடம் கோயம்புத்தூரில் இயங்கிக் கொண்டிருந்த சேரன் இன்னிகைக் குழுவின் மேடையில். அங்கிருந்து திண்டுக்கல் அங்கிங்கு இசைக்குழு... அந்த காலகட்டத்தில் இசையை முறைப்படி கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறான்.

அவனது இசை ஆர்வம் மேலும் மேலும் அதிகரிக்க அடுத்து சென்னை பயணம். கே.ஜே.ஜேசுதாஸின் இசைக் கச்சேரிகளில் வாசிக்கிற அளவுக்கு அவனது இசைப்புலமையை வளர்த்துக் கொண்டிருந்திருக்கிறான். அங்கிருந்து சினிமா பாடல்களுக்கு வாசிக்க வேண்டும் என்கிற கனவை நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள், தேவாவின் சகோதரர்களான சபேஷ்-முரளி. தேவாவின் அனைத்துப் பாடல்களிலும் நீங்கள் இந்த இளையவனின் புல்லாங்குழல் இசையைக் கேட்டிருக்கலாம். வெறும் புல்லாங்குழலிலே பல வருடங்கள் புழங்கிய அவனுக்கு மேற்கத்திய இசைக் கருவியான சாக்ஸஃபோனை வாசிக்க வேண்டும் என்கிற காதலால் அதையும் வாங்கி கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறான். இப்போது பிரபல இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜிடம் அந்த இனிய கருவியை வாசித்துக் கொண்டிருப்பதும் இவனே.

இவனுக்குள் மிக நீண்ட நாட்களால் ஒரு ஆசை. இசைக் கடல் மெல்லிசை மன்னரின் சூப்பர்ஹிட் பாடல்களை அந்த சாக்ஸஃபோன் கருவியில் வாசிக்க வேண்டும் என்பதுதான். அவனது ஆசையைக் கேள்விப்பட்டு கைகொடுக்க முன்வந்தார் ஒரு தொழிலதிபர். அவரது பெயர் தேவய்யா.

அதே மெல்லிசை மன்னரின் முன்னிலையில் பிரபல இயக்குனர் கே.எஸ். ரவிகுமார் அந்த இசை நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க கடந்த ஆறாம் தேதி இரவு சுமார் மூன்று மணி நேரம் காமராஜர் அரங்கமே இசை மழையில் நனைந்தது. பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான சுதாங்கன், இயக்குனர் ஆதவன், இளவட்டம் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.கே.ராஜராஜா, பாடலாசிரியர் காமகோடியன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசிய இந்த இசை நிகழ்வு, மிக விரைவிலேயே பிரபல சேனல் ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளது. அதோடு இந்த இசை நிகழ்ச்சி, டிவிடியாகவும் ஆடியோ சிடியாகவும் விற்பனைக்கு வரவிருக்கிறது.

இதிலே மிக ஒரு குழந்தையின் மனதோடு, குதூகலமாகக் கலந்து கொண்ட மெல்லிசை மன்னருக்கு இந்த இசை நிகழ்ச்சியை வடிவமைத்து தயாரித்த தேவய்யா, ஒரு வைர மோதிரத்தை மேடையிலேயே அனைவரது முன்னிலையிலும் தன் www.megagigashows.com நிறுவனத்தின் சார்பில் பரிசளித்த காட்சி அருமை!

அதுசரி, இதில் ஆரம்பத்தில் சொன்ன கதை, கவிதை, பத்திரிகைகளில் ஆர்வம் கொண்டிருந்த மூத்தவன் என்ன ஆனான்? இளையவனுக்கு முன்னரே சென்னைக்கு வந்து, அவனது ஆர்வத்தால் சில பத்திரிகைகளில் பணிபுரிந்திருக்கிறான். இந்தியா டுடே தமிழ்ப்பதிப்பில் இணையாசிரியராக பணியாற்றிய அவன் பின்னர் கே.எஸ்.ரவிகுமாரின் தசாவதாரம் உட்பட பல படங்களுக்கு திரைக்கதை உதவியாளனாக பணியாற்றி வருகிறான். பத்திரிகையிலும் அவனுக்கு ஆர்வம் என்பதால் தற்போது வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கும் ’புதிய தலைமுறை’ இளைஞர் வார இதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றுகிறான்.

சென்னையில் கலை, சினிமா, இசை, பத்திரிகை என, இன்று பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சகோதரர்களுக்கு, தங்களைப் பெற்றெடுத்து வளர்த்த அன்னையை கெளரவப்படுத்த வேண்டும் என்பது நீண்ட நாளைய ஆசை. அதற்கு இந்த இசை மேடை ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித்தர, 83 வயதான அந்தத் தாயை ( திருமதி ஷண்முகம் அம்மாள் முத்திருளாண்டி) மேடைக்கு வரவழைத்து எம்.எஸ்.வி, கே.எஸ்.ரவிகுமார் முன்னிலையில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி கெளரவப்படுத்தி இருக்கிறார்கள், இந்தச் சகோதரர்கள்!

ஒரே மேடையில் தன் இரு மகன்களும் சேர்ந்து தன்னைச் சிறப்பித்த காட்சியைக் கண்டு அந்த அன்னையின் மனம் கொண்ட மகிழ்ச்சியை நீங்கள் இங்கே இருக்கும் புகைப்படங்களில் பார்க்கலாம்.

எல்லாம் சரி. யார் இந்த அபூர்வ சகோதரர்கள்?

இந்த உண்மைக்கதையில் மூத்தவன் யாரோ....?

சாட்சாத் இதே கல்யாண்குமாராகிய நான்தான்!

இளையவன்...?

என் உடன்பிறந்த சகோதரன், இசைக்கலைஞன் நாதன்.!

எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை தங்களின் அன்னையை கெளரவப்படுத்தும் அரிய சந்தர்ப்பம்.

எங்களுக்கு அமைந்தது அந்த அன்னையின் ஆசியால்தான்!

ஆகவே என்றும் அன்னையை மதிப்போம்....அவர்தம் காலடியைத் துதிப்போம்! சரியா?
---------------------------