Sunday, June 21, 2009

என்னைப் பற்றி மாலன்…


’அம்ருதா’ என்கிற இலக்கிய இணையப் பத்திரிக்கையில்
திரு. மாலன் அவர்கள் பத்திரிக்கையாளர்கள் பற்றி தன்னுடைய பார்வையில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில், நான் அவருக்கு அறிமுகமான நாளில் ஆரம்பித்து என் பத்திரிக்கை உலக வாழ்க்கையை ஒரு ஃப்ளாஷ்பேக்காக அவர் விவரித்திருப்பது என்னை சந்தோஷம் கொள்ளச் செய்தது. நன்றி: திரு.மாலன் அவர்களுக்கு.

அவரது கட்டுரை இதோ உங்களுக்காக...

அறியப்படாத ராட்சசர்கள்!
-மாலன்

அது ஒரு வித்தியாசமான விழா. அரசியல் கூட்டங்கள் போல், ஒரு முச்சந்தியில், சாலை மீது நான்கடி உயரத்துக்கு, நறுக்கப்பட்ட சவுக்குக் கம்பாங்கள் மேல் பலகைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட மேடை. மேடையின் மூன்று புறங்களும் திறந்து கிடக்க முதுகுப்புறம் மாத்திரம் தென்னை ஓலையால் மூடப்பட்டிருந்தது, மேடை மீதிருந்த கூரையைத் தாங்கிப் பிடித்த கம்பங்கள் மீது ஒலிப்பெருக்கிகள் கட்டப்பட்டிருந்தன. பாலகுமாரனின் முதல் நாவலுக்காக கோவையில் நடத்தப்பட்ட விழா. மேடையில் சில பேச்சாளர்களோடு நானும் அமர்ந்திருந்தேன்.

மளமளவென்று வீதி நிறைந்து கொண்டிருந்தது. அன்றைக்கே பாலா வெகுஜன வாசகர்களின் அபிமானம் பெற்ற நட்சத்திரம்தான். தமிழக மேடைகளில் முக்கியமான அல்லது பிரபல பேச்சாளர் கடைசியில் பேசுவது வழக்கம். நான் அன்று பிரபல பேச்சாளன் இல்லை. ஆரம்பத்திலேயே என் முறை வந்தது. பேசிவிட்டு வந்து அமர்ந்து கூட்டத்தையும் பேசுபவர்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
மேடைக்குப் பின்புறமிருந்து ‘’சார்.. சார்..’’ என்று ஒரு குரல் கேட்டது. ரகசியமான அடங்கிய குரல்தான் என்றாலும், மேடையில் அமர்ந்திருந்தவர்களின் கவனத்தைத் திருப்புமளவு உரத்துத்தான் இருந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். மேடைக்குப் பின்னிருந்த ஓலைகளை நெகிழ்த்திக் கொண்டு ஒரு இளைஞரின் முகம் தெரிந்தது. நான் நெருங்கிச் சென்று
‘’ என்ன?’’ என்றேன், தணிந்த குரலில். கூட்டத்தில் முன்னேறி வரும்போது கசங்கிவிடக்கூடாது எனக் கவனமாகத் தன் சட்டைக்குள் பொதிந்து எடுத்து வந்திருந்த ஒரு பொட்டலத்தை நீட்டினார். புத்தகம் போலொன்று ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்தது. ‘’என்ன? ‘’ என்றேன் நான் மறுபடியும். அவர், ‘’ பாருங்க’’ என்றார் சுருக்கமாக. எங்கள் உரையாடல் மேடையில் இருந்தவர்களின் கவனத்தைத் திசை திருப்புவதாக இருந்திருக்க வேண்டும். மேடையில் அமர்ந்திருந்த சாவி திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் புத்தகத்தை வாங்கிக் கொண்டு என் நாற்காலிக்கு வந்து பிரித்தேன். கையெழுத்துப் பத்திரிக்கை!

நான் கையெழுத்துப் பத்திரிக்கையில் துவங்கியவன். எனவே எனக்கு அதன் மீது இயல்பான ஓர் ஈர்ப்பு உண்டு. ஊற்றுப் பேனா கொண்டு கறுப்பு மசியில் குண்டு குண்டாக எழுதப்பட்ட பக்கங்கள். ( அன்று நுண்முனைப் பேனாக்கள் அறிமுகமாகியிருக்கவில்லை.) அக்கறையும் கவனமும் செலுத்தித் தயாரிக்கப்பட்ட இதழ்.

அதிலிருந்த படைப்புகள் அப்படி அற்புதமானவை அல்ல. ஆனால் அவை அநேகமாக ஆரம்ப நிலை எழுத்துக்கள். ஆனால் அந்த இதழில் ஒரு இதழியல் பார்வை இருந்தது. (Journalistic sence). அதன் பின்னிருந்த உழைப்பு என்னைத் தொட்டது. அந்த இளைஞர், கூட்டம் நடந்த நகரைச் சேர்ந்தவர் இல்லை. அதிலிருந்து 100-150 கி.மீ தள்ளியிருந்த ஒரு சிற்றூரிலிருந்து இதற்காகவே வந்திருந்தார். கிராமப்புற நடுத்தர வர்க்கக் குடும்பம் என்பது அவரது பணிவிலும் உடுப்பிலும் தெரிந்தது.

நெகிழ்த்திய அந்த ஓலைக்குப் பின்னிருந்த அந்த இளைஞர், இதழைப் புரட்டும் என் முக பாவங்களைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். கையெழுத்துப் பத்திரிக்கைகள் நூலகப் புத்தங்களைப் போல, எவ்வளவு நன்றாக இருந்தாலும் நாம் உரிமை கொண்டாட முடியாது. திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். க்டைசியில் சில தாள்களை வெள்ளையாக விட்டுவிடுவது கையெழுத்துப் பத்திரிக்கைகளின் இலக்கணம். வாசிப்பவர்கள் கருத்துக்களை எழுத அந்த இடம். வலைப்பதிவர்களின் வார்த்தையில் சொல்வதானால் அது பின்னூட்டப் பெட்டி. அன்று அந்த இதழை முழுதும் படிக்கவில்லை என்றாலும் முடிந்தவரை படித்தேன். என் கருத்துக்களைச் சுருக்கமாக எழுதி, காத்துக் கொண்டிருந்த இளைஞரிடம் கொடுத்தேன்.

எழுத்தின் மீதிருந்த தாகமும் பத்திரிக்கையாளனாக ஆகிவிட வேண்டும் என்ற ஆவலும் அந்த இளைஞரின் பின்னிருந்து உந்திக் கொண்டிருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர் பின்னால் விரும்பியபடியே ஒரு பத்திரிக்கையாளராக மலர்ந்தார். ‘திசைகள்’ குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். ’திசைகள்’ நின்று போனபோது ’ஜூனியர் விகட’னில் ஒரு தொடர் எழுதினார். ’கணையாழி’ இதழ்களை நான் சில காலம் எடிட் செய்து வந்தேன். அப்போதும் அதற்குப் பங்களித்தார். நான் இந்தியா டுடேவில் பொறுப்பேற்றபோதும் அதில் இணைந்து கொண்டார். கு.ப.ரா., தி.ஜானகிராமனில் ஆரம்பித்து நேற்றைக்கு எழுத வந்த ஹைகூ கவிஞன் வரை எல்லோரையும் வாசித்தவர். சிறைவாசிகளிலிருந்து அரசியல் முதலைகள் வரை பலரின் வாழ்க்கையை வரிவரியாக அறிந்தவர். காத்திரமாக எழுதக்கூடியவரும்தான்.

ஆனால், அந்த விஸ்வாமித்திரரின் தவத்தை சினிமா என்ற மேனகை கலைத்தது. பத்திரிக்கை என்ற மோகினியைப் பாதியிலேயே கைவிட்டுவிட்டு அவர் சினிமா என்ற மாய வலைக்குள் மாட்டிக் கொண்டார். கனவுகளோடு வந்தவரை காகித உலகத்தின் கடுமையான யதார்த்தங்கள் வேறு திசைக்கு விரட்டி அடித்தன.

அவரையும் அவரைப் போன்ற எண்ணற்ற இளைஞர்களையும் பத்திரிக்கை உலகம் பறிகொடுத்ததற்கு நம் ஊடகங்களில் அன்றிருந்த இயக்கவியலும் ஒரு காரணம் என்பது என் அபிப்பிராயம். அரசு, பத்திரிக்கைத் தொழிலாளர்களுக்கு அறிவித்திருந்த சம்பள விகிதங்கள் அன்று தமிழ்ப்பத்திரிகைகளில் அமல்படுத்தப்பட்டிருக்கவில்லை. ( இன்று நிலைமை மாறியிருக்கிறது. இளைஞர்கள் பலர் இதழியல் துறைக்கு – அதிலும்- தொலைக்காட்சிகளுக்கு வந்திருக்கிறார்கள்) அதனால் பத்திரிக்கையில் வேலை செய்தால் ஒருவன் தன் பெயரை அச்சிலே பார்க்கலாமே தவிர கையிலே காசைப் பார்க்க முடியாது. நாளிதழ் துணை ஆசிரியனுக்கு பெயரைப் பார்க்கிற பாக்கியம்கூடக் கிடைக்காது. ஒன்றிரண்டு பெரும் பத்திரிக்கைகளைத் தவிர மற்றவை இலக்கியப் பத்திரிகையானாலும் சரி, உயிர்தரிக்கவே போராடிக் கொண்டிருந்தன. அவை அளித்த சொற்பத் தொகையில் ஒருவன் சென்னையில் ஜீவித்திருப்பதே அதிசயம்தான். அதிலும் குடும்பத்தோடு வாழ அவன் பற்றாக்குறை பட்ஜெட்டை நிர்வகிக்கத் தெரிந்த பொருளாதார மேதையாக இருந்திருக்க வேண்டும். பத்திரிக்கைகாரனை வாங்கிவிடலாம் என்ற மதர்ப்பைப் பணப்பைகளுக்குத் தருவது அவனது பற்றாக்குறைப் பொருளாதாரம்தான்.

ஆனால், பொருளாதார நிர்பந்தங்கள் மட்டுமே அந்த இளைஞரைக் கோடம்பாக்கம் பக்கம் அனுப்பி வைத்தன எனச் சொல்வது அத்தனை சரியல்ல. அடி நிலையில் இருக்கும் ஒரு பத்திரிகையாளனுக்கு அன்று பத்திரிகைகளுக்குள்ளும் வாசகர் மத்தியிலும் பெரிய அளவில் அங்கீகாரங்கள் கிடைத்து விடவில்லை. அவர்களது அறிவும் திறமையும் அந்த அச்சுப் பரப்பிற்கு அவசியம் தேவைப்பட்டன. ஆனல் அந்த அறிவின் விலாசங்கள் அறியப்பட்டதேயில்லை.

நாளிதழ் ஆசிரியனாக இருந்தபோது நான் கவனித்திருக்கிறேன். டெலிபிரிண்டர்கள் துடித்துத் துப்பும் செய்திகளை உடனுக்குடன் மொழிபெயர்த்து பத்தி பிரித்துத் தலைப்பிட்டு, அச்சுக்கனுப்பிப் பத்திரிக்கையில் ஏற்ற வேண்டும். எந்தப் பத்திரிக்கை ஆசிரியனாலும் நிறுத்தி வைக்க முடியாத எந்திரங்கள் கடிகாரமும் அச்சியந்திரமும். எனவே உதவி ஆசிரியர்கள் சட்டையில் தீப்பிடித்தது போல உள்ளூர ஒரு பரபரப்பில் இயங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஆசிரியர் சாவி, பலசரக்குக் கடைக்காரருக்குப் பைத்தியம் பிடித்தது போல எனக் கெடு நாளின் ( பத்திரிக்கைக்காரர்கள் பாஷையில் சொன்னால் ‘இஷ்யூ’ முடிகிற நாள்) பரபரப்பைச் சொல்வார். அத்தனை பரபரப்பிலும் நிதானம் தவறாத ஓர் உயிரினம் ’துணை ஆசிரியர்கள்’ என அழைக்கப்படும் சப்-எடிட்டர்கள்.

’’ இந்தச் செய்தியை வாசகர்கள் புரிந்து கொள்ள எளிதாக இது தொடர்புடைய முன்னர் வந்த செய்தியை சுருக்கு ’ஒரு ரீகால்’ சேர்த்துக் கொள்ளுங்கள்’’ என்று நான் சொல்லும் யோசனைகளை மறுப்பின்றி ஏற்றுக் கொண்டு அச்சுக்குப் போகும் அவசரத்திலும் நினைவிலிருந்த செய்தியை தவறில்லாமல் பெயர்த்தெழுதிய கெட்டிக்காரர்கள் உண்டு. ஆனால், சராசரித் தமிழ் வாசகனுக்கு ஒரு மூன்றாந்தர எழுத்தாளனின் பெயர் தெரிந்திருக்கும் அளவிற்கு, இந்த ஞானவான்களின் நிழல்கூட தெரியாது. ஒரு தொலைக்காட்சித் தொடர் துணை நடிகையின் முகம் தெரிந்த அளவிற்குக் கூட இந்த ஜாம்பவான்களின் பெயர் தெரியாது. கவனம் பெறவும் வழியில்லை; காசும் அதிகமில்லை என்றால், ஏன் இதில் இவர்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என நீங்கள் கேட்பது எளிது.

பலமாடிக் கட்டிடங்கள் எழும்பிக் கொண்டிருக்கும் ஒரு பரபரப்பான வீதியில் பக்கத்து மர நிழலில் அமர்ந்து செருப்புத் தைக்கும் உழைப்பாளியை நீங்கள் என்றைக்காவது பார்த்திருக்கலாம். அவனுக்கு செருப்பு ரிப்பேர் செய்கிற வேலையில் அதிகம் போனால் ஒரு நாளைக்கு 50 ரூபாய் கிடைக்கலாம். ஆனால், அந்தக் கட்டிட வேலையில் தட்டுத் தூக்கப்போனால் அதைவிட இருமடங்கு கிடைக்கும். அது அவனுக்கும் தெரியும். ஆனாலும் அந்த வேலைக்குப் போக மாட்டான். ஏனெனில், அவன் மனம் செருப்புத் தைக்கும் கலையிலேயே விழுந்து கிடக்கிறது.

இது ஒரு வகையான மன முதிர்ச்சி. என்னைக் கேட்டால் பத்திரிகையாளன் என்பவன் எழுத்தாளனை விட பரிணாம வளர்ச்சியில் பல படிகள் மேலானவன். பல எழுத்தாளர்களுக்கு முகம் உண்டு. ஆனால் பல பத்திரிக்கையாளர்களுக்கு முகம் கிடையாது. ஆனால் கூர்த்த பார்வை உண்டு.

மலரை விடக் கனி முதிர்ந்தது. ஆனால், தலையில் வைத்துக் கொண்டாடப் பெண்கள் மலருக்குத்தானே மாலையிடுகிறார்கள். பசு இனம், பறவைகளைவிடப் பரிணாம வளர்ச்சியில் மேலானவை. ஆனால் ‘பாழாய்ப் போனதை‘ பசுவிற்கும், பழங்களை பறவைகளுக்கும் பரிமாறுகிற உலகம் நம்முடையது. மாணிக்கக்கல் இல்லாமல் வாழ்நாள் முழுதும் கழித்துவிட முடியும். ஆனால் உப்புக் கல் இல்லாமல் ஒருவேளைச் சோறு இறங்காது. ஆனல் மாணிக்கக் கல்லுக்குத்தான் மகுடத்தில் இடம்.

நாளைக்கு நாளிதழைப் பிரிக்கும் போதேனும் இந்த முகமறியாத நண்பர்களை அரைநொடிப் பொழுதேனும் நினைத்துப் பாருங்கள். அப்போது அந்த வரிகளுக்கு அர்த்தம் கிடைக்கும்!
----