Wednesday, May 28, 2008

யாழ் சுதாகர் - ஒரு அறிமுகம்


நீங்கள் சென்னையில் இருப்பவரா? இரவு நேரங்களில் பழைய பாடல்களை விரும்பி கேட்பவரா? சூரியன் பண்பலையில் இரவு பதினொரு மணி முதல் நள்ளிரவு மூன்று மணி வரை அதிமதுர பாடல்களை தொகுத்து வழங்குகிறார் இந்த யாழ் சுதாகர். இலங்கை வானொலியின் அன்பு அறிவிப்பாளர்களின் குரலை நமக்கு நினைவூட்டி விடுவதோடு பாடல்களின் ராகம், அதனைப் பற்றிய சில சுவராஸ்யமான தகவல்களோடு அவரது இனிய குரலில் பழைய பாடல்களை கேட்பதற்கு மிகவும் சுகமாக இருக்கிறது... அவரது குரலுக்கு அடிமையான ஆயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். ஒரு நாள் கேட்டுப்பாருங்கள் ஆயிரத்தில் ஒருவனாக நீங்களும் ஆகி விடலாம்.

Sunday, May 18, 2008

இன்றைய கவிதை


கோலமா அழகு?
நீர் தெளித்து
வாசலில்
நீயிட்ட கோலத்தைவிட,
வீட்டுக்குள்
நுழையுமுன்
போட்டு முடித்த
கோலத்தை
திரும்பி நின்று
ஒருநொடி நீ விரும்பி
ரசித்த கோலமே
அழகிலும்
அழகடி!

Thursday, May 8, 2008

காற்றலையில் பவனிவரும் கணினித் தமிழ்

முத்தமிழோடு நான்காவதாகச் சேர்ந்திருக்கிறது நமது கணினித் தமிழ். எனது தந்தையார் அரசு அதிகாரியாக இருந்தவர். எனது பள்ளியின் விடுமுறை நாட்களில் அவரது அலுவலகத்திற்குப் போவது வழக்கம். அங்கே ஒரு மூலையில் தமிழ் டைப்ரைட்டரில் வேகமாக அடித்துக் கொண்டிருக்கும் அந்த நடுத்தர வயதுக்காரரைப் பார்கிறபோது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். 247 எழுத்துக்களையும் இந்த சின்ன டைப்ரைட்டரில் எப்படி புகுத்தினார்கள்? எவ்வளவு நாட்கள் அதற்குப் பிடித்திருக்கும்? இதை எத்தனை நாள் இவர் கற்றுக் கொண்டிருப்பார் என்றெல்லாம் எனக்குள் கேள்விகள் எழும். பின்னர் கணினி வந்தபோதும் அதில் தமிழ் சாஃப்ட்வேர்களை நிறுவி, தமிழுக்குப் பெருமை சேர்ந்தனர் கணினி வல்லுனர்கள். ஆங்கில எழுத்துக்களை அடித்தால் திரையில் தமிழ் எழுத்துக்கள் தோன்றியபோது தமிழின் இன்னொரு வளர்ச்சி நம் கண்முன்னே விரிந்தது. இந்தக் கண்டுபிடிப்புக்கான முகம்தெரியாத தமிழ்க் கலைஞர்களுக்கு நாம் மானசீகமாக நன்றி சொல்லியே ஆக வேண்டும்!

''கம்யூட்டரில் தமிழா?'' என்று ஆங்கிலம் கற்றுத் தேர்ந்தவர்களே அதிர்ந்துதான் போனார்கள். தமிழ்ப்பட இயக்குனர் திரு.கே.எஸ்.ரவிகுமாரிடம் பேசிக் கொண்டிருந்தபோது கம்யூட்டர் மீது எல்லோருக்கும் இருக்கும் பிரமிப்பு அவரைவிட்டு அகலாமல் இருந்ததை உணர முடிந்தது. அவரை நான் சந்தித்தபோது திரைக்கதை வசனம் உட்பட முழுப்படத்தின் எழுத்து வேலைகளையும் இதில் செய்தால் வேலை சுலபமாக முடியும் என்பதை எடுத்துச் சொன்ன போது ஆரம்பத்தில் அவர் அதை நம்பவில்லை. பின்னர் நானே அவருக்கு தமிழ் எழுத்துக்களை அவரது கம்ப்யூட்டரில் பதிவு செய்து ஒருசில வேலைகளை கணினித் தமிழில் அடித்துக் கொடுத்தபோது வியந்து போனார். இவ்வளவு சுலபமாக இருக்கும் என்று எனக்கு இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டதே வருத்தப்பட்டுக் கொண்டார். கம்ப்யூட்டர் என்பது நாம் பதிவு செய்யும் விஷயங்களை நினைவில் வைத்திருக்கும் சாதாரண டைப்ரைட்டர்தான் என்பதை அவருக்கு விளக்கி சொன்னேன். இதுவரை ஆங்கிலத்தை மட்டுமே ஞாபகத்தில் வைத்திருக்கும் இது, இனி தமிழையும் சேமித்து வைக்கும் என்று எடுத்துச் சொன்னேன்.


இப்போதெல்லாம் அவர் திரைக்கதை வசனம் என்றில்லை, தன் உலக நாயக ஹீரோ வெளிநாட்டில் இருந்தால் அவரோடு கணினித் தமிழில்தான் உரையாடுகிறார். அவரது உதவியாளர்கள் அனைவரையும் கம்யூட்டர் அறிவை வளர்த்துக் கொள்ளச் சொன்னதோடு அனைத்து திட்டமிடல்களையும் தமிழுக்கு மாற்றி அமைத்திருக்கிறார். அவரது சமீபத்திய படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளின் சப் டைட்டிலில் ஆங்கிலத்தில் அமைந்திருக்கும் வசனங்களுக்கு தமிழில் வார்த்தைகள் அமைக்கும் பணியை அவரது அலுவலக கணினியிலேயே வெகுசுலபமாக சீக்கிரமாகவே அமைத்துக் கொண்டார். (முன்பெல்லாம் இதற்கு நீண்ட நாட்கள் பிடிக்கும்)

தமிழில் கணினித் தமிழை அதிகமாக பயன்படுத்தியவர் எழுத்தாளர் அமரர் சுஜாதாதான் எனலாம். அவரால் இத்தனை படைப்புகளை வெற்றிகரமாக அமைத்திட இந்த கணினித் தமிழும் ஒரு காரணம் என்று நான் அடித்துச் சொல்வேன். ஒரு பேடையும் பேப்பரையும் வைத்துக் கொண்டு இவ்வளவு காலங்கள் இத்தனை அரிய விஷயங்களை அவரால் கொடுதிருக்கவே முடியாது.

திரு.கமல்ஹாசன் கூட அவரது கணினியில் தமிழ்வழிச் செயல்களில்தான் தன் படத்திற்காக ஸ்கிரிப்டை அமைக்கிறார். அதற்கென ஒரு உதவியாளரை நியமித்திருக்கிறார். சில நேரங்களில் அவரேகூட அதிவேகமாக கணினித் தமிழில் தன் கவிதைகளையும் காட்சிகளுக்கான வடிவமைப்பையும் வசனத்தையும் தமிழில் உள்ளிடுகிறார். அவரோடு தசாவதாரத்தின் திரைக்கதை பணிகளில் ஈடுபட்டது ஒரு சுவராஸ்யமான அனுபவம். ஹாலிவுட்டில் உபயோகப்படுத்தும் மூவி மேஜிக் என்கிற ஸ்கிரிப்ட் ரைட்டரோடு தமிழை அவர் இணைசேர்த்திருக்கும் விதமே அலாதியானது. படத்தின் வெளியீட்டிற்குப் பின்னர் தசாவதாரம் திரைக்கதை வசனம் புத்தக வடிவில் வெளிவரும்போது நீங்களும் அதன் தனித்தன்மையை உணரலாம். திரு. கிரேஸி மோகனும் கணினித் தமிழ் உபயோகிப்பாளர்தான். இயக்குனர் ஷங்கருக்கும் எழுத்தாளர் சுஜாதாவுக்கும் நேரடியான உரையாடல்களைவிடவும் கணினித் தமிழ் பரிமாற்றங்களே அதிகம் என்பது நான் அறிந்த ஒன்று.

இப்படி, ஒரு அறைக்குள் மட்டுமே வித்தைகள் என்றில்லை. இன்று நமது கணினித் தமிழ் ஆகாயக் காற்றலையில் அழகாக பவனி வருகிறது. இமெயிலில் தமிழ்; வலைத்தளங்களில் தமிழ்; வலைபூக்களில் தமிழ் என்று அதன் வீச்சு நீண்டு கொண்டே போகிறது. ஆங்கிலம் தெரிந்தால்தான் கணினியைத் தொடமுடியும் என்கிற அச்சுறுத்தலை இந்தக் கணினித் தமிழ் உடைத்தெறிந்திருக்கிறது. உலமெல்லாம் வாழும் தமிழ் இதயங்களை இந்த கணினித் தமிழ் இனணத்து வைத்து அழகு பார்க்கிறது. முகம் அறியாத எத்தனையோ தமிழ் நண்பர்களை இதுதான் நமக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறது.

வலைப்பக்கங்களில் ஆண்களும் பெண்களும் சரிசமமாக தங்கள் எண்ணங்களை தமிழ் வழியாக பதிவு செய்வதைப் பார்க்கும்போது மெல்லத் தமிழ் இனி வாழும் என்று சொல்வதைவிட 'வேகமெடுத்து தமிழ் இனி வெல்லும்' என்றே சொல்லத் தோன்றுகிறது. மீடியாவின் ஒரு பகுதியாகவே ஆகிப் போயின வலைப்பக்கங்கள். தமிழிலேயே உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ளும் வசதி; தகவல்களை சக தமிழர்களோடு பகிர்ந்து கொள்ளுதல்; யார் வேண்டுமானாலும் தங்களுக்கென அழகு தமிழில் வலைப்பூக்களை வடிவமைத்துக் கொள்ளும் எளிமையான தொழில் நுட்பம் - இப்படி தமிழர்களுக்கு எல்லாமுமாகச் சேர்ந்து கிடைத்திருப்பது ஒரு வரப்பிரசாதமே.

கிடைத்த இந்த நல்வாய்ப்பினை அனைத்துத் தமிழர்களும் பயன்பெறும் வகையில் - நல்லனவற்றை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் வகையில் - இந்த கணினித் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்பது எனது விருப்பம். வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமே இதனை பயன்படுத்திவிட்டு தூக்கிக்கடாசிவிடக்கூடாது. அல்லது ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ள ஒரு ஆயுதமாக இதைப் பயன்படுத்துதலையும் தவிர்த்திடல் வேண்டும். வலைப்பக்கங்களில் சாதி மத மோதல்களுக்கு கணினித்தமிழ் உபயோகப்படுத்தப்பட்டு வருவதை நாம் அடிக்கடி கவனிக்க முடிகிறது. இது அன்பான உள்ளங்களை இணைத்திடும் பாலமாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர அடிதடிக்கு வித்திடும் ஆணிவேராக இருக்கக் கூடாது என்பதில் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்று கூடி உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆயிரமாயிரம் மைல்களுக்கப்பால் இருக்கிற தமிழர்கள் பரஸ்பரம் சந்தித்துக் கொள்கிற வாய்ப்பை இது ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதிக செலவு செய்து பேசிக் கொண்டிருந்த தொலைபேசிச் சிக்கல்களை இந்தக் கணினித் தமிழ் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. இ-மெயில்கள் இப்போது உருமாறி, ஒருவருக்கொருவர் தூதுவிட்டுக் கொள்ளும் மயில்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. நியூஜெர்ஸியில் வசிக்கும் துளசி கோபாலும் சென்னையில் வசிக்கும் இந்த கல்யாண்குமாரும் மெயில்களை மயில்கள் என்றுதான் அழைக்கிறோம். இந்த அழகு மயில் உலகம் முழுக்க சிறகு விரித்துப் பறக்கட்டும்.

இந்த அரிய கண்டுபிடிப்பில் கணினித் தமிழ் இன்னும் புதுப்புது வளர்ச்சிகளையும் பலவிதமான வடிவங்களையும் பெறும் என்பதில் துளியும் ஐயமில்லை. கணினித் தமிழ் என்று ஒரு புள்ளி வைத்தாயிற்று; இது முற்றுப்புள்ளியில்லை. கோலத்திற்கான முதல் புள்ளி. இனி அழகாய் கோலமிடுதல் அவரவர் கைகளில்!
----------------------------------

Friday, May 2, 2008

இரண்டு மனம் வேண்டும் – டி.எம்.எஸ்ஸின் திகில் அனுபவம்

ரு பத்திரிக்கையாளனாக பலபேரை பேட்டி எடுத்திருக்கிறேன். ஆனால் என் அபிமான பாடகர் டி.எம்.எஸைப் பார்த்து பேட்டியெடுக்க வேண்டும் என்கிற கனவு நீண்ட நாள் தள்ளிக் கொண்டே போனது. மதுரையிலிருந்து என் மைத்துனர் முருகபூபதி வந்திருந்தார். அவர் என்னிடம் ‘’ சென்னையில் என்னை எங்கும் கூட்டிப் போக வேண்டாம்; எதுவும் வாங்கித்தர வேண்டாம். டி. எம். எஸ் அவர்களை சந்திக்க வேண்டும்’’ என்பதுதான் அவரது மனப்பூர்வமான வேண்டுகோளாக இருந்தது. காரணம் அவரும் ஒரு மேடைப்பாடகர். மதுரையில் ஒரு இசைக்குழு நடத்தி வருகிறவர். அதில் டி.எம்.எஸ் குரலில் பாடுகிறவரும் அவரே!

அவருக்காக இல்லையென்றாலும் நானும் அந்த தேன்மதுரக்குரலுக்குச் சொந்தக்காரரை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் அவருடன் தொலைபேசியில் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். அப்போது நான் ஒரு பிரபல பத்திரிக்கையில் உதவி ஆசிரியன்.

பேட்டிக்காக நாள் குறிக்கப்பட்டது. நாங்கள் அவர் வீட்டுக்குப் போனது ஒரு ஞாயிறு காலை. பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். போனில் பேசிய விபரத்தைக் கூறியதும் வரவேற்றார். பத்திரிக்கையாளர் என்பதையெல்லாம் தாண்டி நானும் எனது மைத்துனரும் அவரது ‘தீவிரமான ரசிகர்கள்’ என்று சுய அறிமுகம் முடிந்தது. ( அவர் எத்தனை லட்சம் ரசிகர்களைப் பார்த்திருப்பார்?)

பத்து மணிக்கு பேச்சு சுகமாக ஆரம்பித்தது. அவரது பாடல்களை அசைபோட ஆரம்பித்தார். பலவிதமான ஃப்ளாஷ்பேக்குகள். மதிய உணவை மறந்தோம். அவரது மனைவி அவரை அடிக்கடி சாப்பிட அழைத்தார். இதோ வருகிறேன் என்பதே அவரது பதிலாக இருந்தது. அவரும் சாப்பிடவில்லை; நாங்களும் சாப்பிடவில்லை. நாங்கள் அவரிடமிருந்து விடைபெறும்போது மாலை நான்கு மணி! அந்த அளவுக்கு அவரது பாடல்களைப் பற்றிய எங்களது பேச்சு மிகவும் இனிமையாக நீண்டு கொண்டே போனது.

இசையோடு அவருகேற்ப்பட்ட சுகானுபவம்; அவர் திரைக்கு அறிமுகமானது; அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள்; ஆரம்பத்தில் எதிர்கொண்ட அவமானங்கள்; வெற்றிகளின் பின்னணி; பாடல் பதிவில் நிகழ்ந்த சுவாரஸ்யங்கள்; எதிர்பார்த்துக் கிடைக்காத அங்கீகாரங்கள் என்று மனம்விட்டு குரல்விட்டு அனைத்தையும் பேசித்தீர்த்தார் அந்த மகா கலைஞன்.

பேட்டியில் எதைச் சேர்ப்பது, எதை விடுவது எனக்குக் குழப்பம் ஏற்பட்டதென்னவோ உண்மை. ஆனால் அந்த ஆறுமணி நேர உரையாடலில் நான் அப்போது சொல்லிய விஷயங்கள் கொஞ்சமே. விடுபட்டு என்னிடம் தங்கிப் போன விஷயங்கள் ஏராளம். அதில் ஒரே ஒரு விஷயத்தை இங்கே தருகிறேன்.

அவரிடமிருந்து விடைபெறும்போது ஒரு கேள்வி கேட்டேன்.

‘’உங்களது ரசிகர்களில் வித்தியாசமான ரசிகர் என்று யாராது உங்கள் மனதில் இருக்கிறாரா?’’

கொஞ்ச நேரம் யோசித்தவர் ஒரு சுவையான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

‘’ நீங்கள் இருவரும் உள்ளே வந்ததும் ‘தீவிர ரசிகர்கள்’ என்று அறிமுகபடுத்திக் கொண்டீர்களே, உங்களைவிட உண்மையிலேயே தீவிர ரசிகர்களைப் பற்றி இங்கே சொல்ல வேண்டும்’’ என்று ஆரம்பித்தார்.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு கச்சேரிக்காக அவரை அழைத்திருக்கிறார்கள். தூத்துக்குடி அருகே ஒரு சிறிய ஊர். ரயில் வசதி, தங்குமிடம், உணவு, அங்கிருந்து திரும்ப ரயில் டிக்கெட் என்று பலவிதத்திலும் அவர்களின் திட்டமிடல் இவருக்குப் பிடித்துப் போகவே அந்தக் கச்சேரிக்கு ஒத்துக் கொண்டிருக்கிறார். அதே போல சகல மரியாதைகளுடனும் அவரை அழைத்துப் போயிருக்கிறார்கள். ரசிகர்களாகிய அவர்களின் அணுகுமுறை இவரை மிகவும் கவர்ந்திருக்கிறது. சந்தோஷமாக இவரும் போய் நிகழ்ச்சி நடந்த இடத்தில் தனது குரலால அந்த ஊர் மக்களையே கட்டிப் போட்டிருக்கிறார்.

கச்சேரி முடிந்து தூத்துக்குடி போய் ரயிலேற வேண்டும். இன்னும் ஒன்றரை மணி நேரம்தான் இருக்கிறது. நேரத்தை நினைவு படுத்தியதும் மேடையிலிருந்து பிரியாவிடை பெறுகிறார் டி.எம்.எஸ்.

காரில் ஏறுகிறார். பயணம் தூத்துக்குடியை நோக்கி. திடீரென கார் மெயின் ரோட்டிலிருந்து ஒரு வேறு ஒரு பாதைக்கு மாறுகிறது.
இவருக்கு சந்தேகம் வந்து ‘’எங்கே போகிறீர்கள்?’’ என்று கேட்டிருக்கிறார்.

ஆனால் வந்த பதில் இவரை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

‘’ ஒரு பத்து நிமிஷம்தான். சின்னதா ஒரு பார்ட்டி. எல்லாரும் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருக்காங்க.’’

‘’பார்ட்டியா? என்னப்பா சொல்றீங்க?’’

‘’ஆமா சார். எல்லாரும் உங்க ரசிகர்கள்தான். பார்ட்டி முடிஞ்சு உங்களை கரெக்டா ரயிலேந்திடுவோம்’’

கார் ஒரு இருட்டுப் பாதையில் பயணிக்கிறது.

‘ஆகா, தப்பான ஆட்களிடம் மாட்டிக் கொண்டோம்’ என்று டி.எம்.எஸ்ஸின் மனதில் கவலைக் குரல் ஒலிக்கிறது.

பத்து நிமிஷத்தில் ஒரு காட்டு பங்களாவின் முன் கார் நிற்கிறது.

ஆனால் அந்த பங்களா சீரியல் பல்புகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றுமே புரியாமல் காரிலிருந்து இறக்கிவிடபடுகிறார் டி.எம்.எஸ்.

கிட்டத்தட்ட ஒரு கடத்தல் போல அந்த பங்களாவுக்குள் கொண்டு செல்லப்படுகிறார்.

உள்ளே ஒரு பெரிய ஹால். ஒரு வட்ட மேசை. சுமார் இருபது பேர் அதனைச் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். அனைவருக்கு முன்பாலும் மதுக் கோப்பைகள் தயாராக இருக்கின்றன. எதோ நடக்கப் போகிறது என்கிற அச்சம் டி.எம்.எஸை ஆட்டிப் படைக்கிறது. கையில் கழுத்தில் கிடக்கும் நகைகள் போனால் போகட்டும். உயிருக்கு உத்திரவாதம் யார் தருவார் என்கிற கேள்வி அவர் முன் இப்போது.

வட்ட மேசையில் முன்பாக அவர் நிறுத்தப்படுகிறார். ஏற்கனவே அங்கு மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

அந்த வட்டமேசை ஆசாமிகளில் ஒருவர் எழுகிறார். தன் கையில் இருக்கும் மைக்கில் பேசுகிறார்.

‘’ அய்யா நீங்கள் பயப்படுகிற மாதிரி நாங்கள் மோசமான ஆட்கள் இல்லை. எல்லோரும் உங்களின் தீவிரமான ரசிகர்கள். இந்த ஊர் கச்சேரிக்கு உங்களை ஏற்பாடு செய்து அழைத்து வந்தது நாங்கள்தான். கச்சேரியை திருப்தியாக முடித்துக் கொடுத்துவிட்டீர்கள். ஆனால் உங்களின் ரசிகர்களாகிய எங்களுக்காக இந்த பார்ட்டியில் நீங்கள் கலந்து கொண்டு ஒரு சில பாடல்களை மட்டும் பாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்’’

இப்படி ஒரு வித்தியாசமான ரசிகர்களா?

கிட்டத்தட்ட ஒரு கடத்தலுக்குப் பின்னணியில் இப்படி ஒரு இசைப் ப்ரியர்களா?

டி.எம்.எஸ்ஸுக்கோ ஒருபுறம் ஆச்சர்யம். ஒருபுறம் நிம்மதி. ஆனாலும் அவர் மது அருந்துவதில்லை என்பதால் அவரை கட்டாயப்படுத்தாமல் அவரது குரலை மட்டும் சிலமணித்துணிகள் ரசித்திருக்கிறார்கள் அந்த தீவிர ரசிகர்கள்.

நேயர் விருப்பத்தினை அறிந்து கொண்ட அவர்களுக்காக ஒரே ஒரு பாடலைப் பாடி அந்த பார்ட்டியை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

மதுவோடு, மனதோடும் சம்பந்தப்பட்ட அந்தப் பாடலைக் கேட்டதும் துள்ளி குதித்திருக்கிறார்கள் அந்த ‘தீவிர ரசிகர்கள்’.
சென்னைக்கு போகிற ரயிலின் நேரம் கருதி அவர் அங்கு பாடிய அந்த ஒரே ஒரு பாடல் என்ன தெரியுமா?

‘இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்டேன்...
நினைத்து வாழ ஒன்று
மறந்து வாழ வேண்டும்....’


பெரும் ஆரவாரத்திற்கிடையே அவருக்கு அந்த தீவிர ரசிகர்கள் விடை கொடுத்திருக்கிறார்கள்.

‘’அவர்களிடமிருந்து தப்பித்து ஒருவழியாக தூத்துக்குடி வந்து ரயிலில் உட்கார்ந்த பிறகுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது...’’ என்று அந்த நாட்களை அழகாக பகிர்ந்து கொண்டார்.

உண்மையிலேயே அவர்கள்தான் ‘தீவிர ரசிகர்கள்’ இல்லையா?

Thursday, May 1, 2008

மே தினக் கவிதைகள்


'குழந்தைத் தொழிலாளர்களை
இங்கு வேலைக்கு அமர்த்துவதில்லை'
- எழுதிவைத்த போர்டை
எடுத்து வைத்தான்
எட்டு வயது சிறுவன்!

-----------

மனிதர்களோடு மனிதர்கள்
எடுத்துக் கொண்ட புகைப்படங்களை
சக மனிதர்களிடம் காட்டி
சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள்
மனிதர்கள்!

-----------

ஆளில்லா ரயில்பெட்டி
குருட்டுப் பிச்சைக்காரனின்
கை ஏந்தல்!
------------

தினந்தோறும்
தெருவோரம்
கயிற்றில் நடக்கும் சிறுமியின்
லட்சியம்தான்
என்னவாக இருக்கும்?
--------------