Tuesday, December 23, 2008

பாலுமகேந்திரா பாராட்டிய கதை!

அன்பு நண்பர் கல்யாண் அவர்களுக்கு...

தாங்கள் ஆனந்த விகடனில் எழுதிய ‘அப்பாவுக்கு ஒரு
இ-மெயில் ‘ என்ற சிறுகதை படித்தேன். அந்தக்கதை என்னுள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வெளிவர பல நாட்களாயிற்று. அற்புதமான படைப்பு.

உள்ளடக்கத்தை உன்னதப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட உருவம்... அதன் இயல்புத் தன்மை... அதன் கம்பீரமான எளிமை... கதையாக்கத்தில் கையாளப்பட்டிருக்கும் உத்தி... இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து, ஓர் உன்னதமான கலைப்படைப்பைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. அப்பாவைப் பற்றிய ஆழமான உணர்வுகளை எந்தப் பிரயத்தனமுமின்றி வெகுஇயல்பாக வெளிப்படுத்த உங்களால் முடிந்திருக்கிறது.

இது ஒரு யுனிவர்சல் தீம் என்பதால் இந்தக் கதை பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படலாம்.

வாழ்த்துக்களுடன்,
பாலுமகேந்திரா

சிறுகதை: அப்பாவுக்கு ஒரு இ-மெயில் - கல்யாண்குமார்
(ஆனந்தவிகடனில் முத்திரைக்கதையாக ரூ5,000 பரிசுபெற்ற எனது சிறுகதை)

அப்பாவிடமிருந்து வாரம் தவறாமல் ஒரு தபால் கார்டு வந்துவிடும். விஷேசமான செய்திகள் ஏதுமில்லையென்றாலும் பொதுவான் நலம் விசாரிபும், ‘இப்போது உன் வேலை விஷயம் எப்படியிருக்கிறது? புதிதாக கதை எதுவும் எழுதினாயா? என்று ஒரு நல்ல நண்பனைப் போல அக்கறையான விசாரிப்புகளும் இருக்கும். அவர் மரணம்கூட என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. ஆனால் அவரிடமிருந்து இனிமேல் கடிதங்கள் வரவே வராது என்பதுதான் அவரின் இழப்பைவிடக் கொடுமையானதாக இருந்தது.

யாரிடமிருந்து கடிதம் வந்தாலும் உடனே அதற்குப் பதில் எழுதி அடுத்த தெருவிலிருக்கும் தபால் ஆபீஸுக்குப் போய் தானே தன் கையால் போஸ்ட் செய்வதில்தான் அவருக்குத் திருப்தி. அதுவும் நான் கடிதம் எழுதிவிட்டால் உடனுக்குடன் பதில் வந்துவிடும். சமயத்தில் சொல்ல வேண்டிய விஷயம் சற்றுப் பெரிதாக இருந்தால்கூட இன்லேண்ட் லெட்டரிலோ அல்லது ஒரு பேப்பரில் எழுதி, கவரில் வைத்தோ அனுப்ப மாட்டார். இரண்டு கார்டுகள் சேர்ந்தாற்போல் வரும். அதில் ஒரு கார்டில் 1 என்றும் அடுத்ததில் 2 இரண்டு என்றும் எண்ணிட்டு வட்டமடித்திருப்பார் – சிவப்பு மையால்.

எப்போதுமே அப்பாவிடம் நிறைய கார்டுகள் இருக்கும். நான் எட்டாவது படிக்கிறபோதே என்னைவிட்டு சில கடிதங்களை எழுதச் சொல்வார். அவர் சொல்லச் சொல்ல நான் எழுத வேண்டும். விஷயமிருக்கிறதோ இல்லையோ, ‘உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு அப்பப்ப ஒரு நாலுவரி எழுதிப் போடறதுல என்னாகிடபோவுது’ என்பார். நான்கூட ஒருநாள் அவரைக் கிண்டலடித்திருக்கிறேன்...’’இப்படி அடிக்கடி கடிதம் எழுதறதால, என்ன பெருசா எழுதியிருக்கப் போறார்னு படிக்காமலே குப்பைக் கூடையிலே போட்டுடப் போறாங்க..’’ என்று!

‘’ அப்படி என்மேல மதிப்பு மரியாதை இல்லாத பயலுகளுக்கெல்லாம் நான் லெட்டர் போட்டதேயில்லை..’’ என்பார்.

நிஜம்தான். அப்பா இறந்தபோதுதான் அதை நான் உணர்ந்தேன். அவரின் மரணம் பற்றி துக்கம் விசாரிக்க ஒரு மாதம் கழித்து வந்தவர்கள்கூட அவர் போடும் கடிதங்கள் பற்றி சிலாகித்துப் பேசி ‘’ இனி யார் எங்களையெல்லாம் அக்கறையாய் விசாரித்து லெட்டர் போடப்போறாங்க..?’’ என்று ஆத்மார்த்தமாக வருத்தப்பட்டுக் கொண்டது என்னை மிகவும் சங்கடப்படுத்தியது. அன்றைக்கு அப்பாவிடம் அப்படிக் கிண்டலாக பேசியிருக்கக் கூடாதோ என்று தோன்றியது. அவர் எழுதிய கடிதங்களைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பதாக சிலர் சொன்னபோதுதான் அதுவரை உள்ளுக்குள்ளேயே அழுது கொண்டு இருந்த அம்மாகூட பெருங்குரலெடுத்து அழுது தீர்த்தாள்.

சென்னைக்கு வந்தபுதிதில் ஒரு இலக்கியப் பத்திரிக்கையில் நூற்றைம்பது ரூபாய் சம்பளத்தில் வேலையில் இருந்தபோது அப்பா எழுதிய கார்டுகள் மட்டும் சுமார் முன்னூறைத் தொடும். ‘உன்னுடைய கதை வந்த ‘கணையாழி’ புத்தகம் இங்கே பஸ் ஸ்டாண்ட் கடையிலேகூட கிடைக்கவில்லை. முடிந்தால் தபாலில் அனுப்பி வை. புக்போஸ்டில் அனுப்பினால் போதும். அதிகம் சிரமம் எடுத்துக் கொள்ளாதே’ என்கிற அவரது கடித வரிகள் இன்னும் மனசிலிருக்கின்றன.

பள்ளி நாட்கள் முடிந்து கதை கவிதை என்கிற பெயரில் ஒரு குயர் நோட்டுகளைத் தீர்த்துக் கொண்டிருந்த நாட்கள். பக்கத்துவீட்டு ஜெயாதான் கவிதையின் மையநாயகி. கடைசிவரை அவள் என்னைக் கண்டுகொள்ளவேயில்லை என்பது தனியொரு சோகக்கதை! அதைவிடக் கொடுமை என்னவென்றால், என்மீது ஒரு மரியாதை ஏற்படவும் என் தனித்துவத்தைக் காட்டவும் ஒருநாள் ‘கண்ணதாசன் கவிதைகள்’ புத்தகத்தை அவளிடம் படிக்கக் கொடுத்தேன். படித்துவிட்டு அதில் சில காதல் கவிதைகளில் நான் அடிக்கோடிட்டு இருப்பதைப் புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக எனக்குப் பதில் கொடுப்பாள் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா? புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தவள், ‘’படிக்க எதாவது கதைப்புத்தகம் கொடுப்பீங்கன்னு பாத்தா, எதோ செய்யுள் புத்தகத்தைக் கொடுத்திருக்கீங்களே?’’ என்றாள்.

இதுவே ஒரு ஆரம்பக்கட்ட கவிஞனுக்கு மரண அடியாக இருந்தது. என் ப்ரிய நாயகி இப்படி ஒரு ஞான சூன்யமாக இருப்பாள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அந்த சோகத்திலேயே பல கவிதைகளை எழுதிக் குவித்தேன். கவிதைகளைத் தொடர்ந்து சிறுகதைகள். எப்படியோ ஒரு எழுத்தாளன் உருவாகிவிட்ட தீர்மானத்தோடு அந்த சோகத்திலும் ஒருவித திமிர் சேர்ந்து, சக நண்பர்களிடம் அவர்களுக்குப் புரியாத சில உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரபல எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லி அசர வைத்தேன். அவர்கள் என்னைப் பிரமிப்போடு பார்ப்பதில் உள்ளூர ஒரு சந்தோஷம். ஒருவித மமதை கலந்து ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்த நாட்கள் அவை. கையெழுத்துப் பத்திரிக்கையும், தினசரி பேப்பர்களின் ஞாயிறு பதிப்புகளில் அவ்வப்போது வெளிவரும் கவிதைகளும் கொஞ்சம் தெம்பூட்டிக் கொண்டிருந்தன.

கல்லூரிப் போக விருப்பம் இல்லை என்று சொன்னதும் அப்பா எந்த அதிர்ச்சியும் காட்டவில்லை. ‘’பிறகு?’’ என்றார். சென்னைக்குப் போய் எதாவது பத்திரிக்கை ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்து நிறைய கதை கட்டுரையெல்லாம் எழுதணும் என்று நான் சொன்னதும் எதிர்ப்பு சொல்லாமல் ஆமோதித்தார். அம்மாதான் பலத்த எதிர்ப்பைக் காட்டினாள். ‘’ஆசைப்படறான். போயிட்டுதான் வரட்டுமே, என்ன ஆகிடப்போகுது? நாளைக்கு உன் புள்ள ஒரு எழுத்தாளனா, பத்திரிக்கை ஆசிரியனா வந்து பிரபலமான உனக்குத்தானே பெருமை?’’என்று அம்மாவை சரிக்கட்டினார். ரயிலுக்கும் ரூம் எடுத்துத் தங்கவும், இரண்டு மாத செலவுக்கும் என்று ஒரு கணிசமான பணமும் அனுப்பிய அப்பா வேறு யாருக்குமே அமைந்திருக்க மாட்டார்கள்.

தினசரிகளில் வெளிவந்திருந்த ஒரு சில கவிதைகள்தான் அப்போதைக்கு எனக்கு சகலவிதமான சர்டிபிகேட்டுகள்! அங்கேயிங்கே அல்லாடி கடைசியில் நடையாய் நடந்த காரணத்துக்காக ‘கணையாழி’ என்ற ஒரு சிறுபத்திரிக்கையில் பரிதாபப்பட்டு எனக்கு வேலை போட்டுக் கொடுத்தார்கள். வந்திருக்கிற கதைகளையெல்லாம் படித்து அதன் கதைச்சுருக்கத்தை ஒரு சின்ன பேப்பரில் எழுதி அதை டெல்லியில் எதோ ஒரு ஆங்கிலப்பத்திரிக்கையில் பெரிய பொறுப்பிலிருந்த கணையாழியின் ஆசிரியருக்கு தபாலில் அனுப்ப வேண்டும். அவர் அதிலிருந்து சில கதைகளை அந்த மாத இதழுக்குத் தேர்வு செய்து அனுப்பி வைப்பார். மொத்த வேலையும் ஒரு வாரத்தில் முடிந்து விடும். ஒருசில நேரங்களில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறைதான் புத்தகம் வெளிவரும்!

ஒருமுறை டெல்லியிலிருந்து வந்திருந்த ஆசிரியரிடம் நான் எழுதிய ஒரு சிறுகதையைத் தயங்கியபடியே நீட்டினேன். வாங்கியவர் உடனே படித்துப் பார்த்துவிட்டு ‘’ நல்லாதானிருக்கு, இந்தமாத சிறுகதைகள்ல சேத்துக்கப்பா...’’ என்று கொடுத்துவிட்டுப் போய்விட்டார். எனக்கு ஜென்ம சாபல்யம் கிடைத்துவிட்டதாக உணர்ந்தேன். உடனே அப்பாவுக்குத்தான் அந்தச் சந்தோஷத்தைத் தெரிவித்தேன். பிறகு கதை வந்த கணையாழி அங்கே கிடைக்கவில்லை என்பதால் அவர் கேட்டிருந்தபடி தபாலில் அனுப்பி வைத்தேன். படித்துவிட்டு அவர் கருத்தையும் அடுத்த கார்டில் தெரிவித்திருந்தார். அதோடு பின்குறிப்பாக ‘உன் கதையை அம்மாவுக்கும் படித்துக் காண்பித்தேன். அவளுக்கும் பிடித்திருந்தது’ என்று எழுதியிருந்தார். அந்தக் காட்சியை நான் மனசில் கொண்டுவந்து பார்த்தேன். சுகமாக இருந்தது.

பத்துவருடப் போராட்டத்திற்குப் பிறகு பிரபல வாரப் பத்திரிக்கை ஒன்றில் சினிமா பகுதி ஆசிரியராக உயர்ந்த நிலை. நல்ல சம்பளம். கல்யாணம், குழந்தைகள், ஆபீஸ் பிஸி என்று ஓடிக் கொண்டிருந்தேன். பத்திரிக்கையில் சினிமா பொறுப்பு என்பதால் எல்லா திரை நட்சத்திரங்கள், இயக்குனர்களின் நேரடித் தொடர்பும் நல்ல மதிப்பும் எனக்குக் கிடைத்திருந்தது. அப்பாவையும் அம்மாவையும் இங்கே கூட்டிக் கொண்டுவந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஆசை. எத்தனையோமுறை கேட்டுப் பார்த்தும் அப்பா அசைந்து கொடுக்கவில்லை. மூன்று மாதத்திற்கு ஒருமுறை சென்னைக்கு வருவார்கள்; ஒருவாரம் இருப்பார்கள். கிளம்பிவிடுவார்கள். ஆனாலும் அவர்கள் அருகில் இல்லாத குறையை அப்பாவின் கடிதங்கள் பூரணமாகத் தீர்த்துவிடும். நேரடி ஒளிபரப்பு போல அவரது கடிதங்கள் குடும்பம் மற்றும் ஊர் செய்திகளை தெரியப்படுத்திவிடும்.

இதனிடையே கடைசி தங்கையின் திருமண ஏற்பாடுகள் நடந்தன. திருமண வரவேற்பை சென்னையில் வைத்துக் கொள்ளலாமே என்று அப்பாவிடம் கேட்டிருந்தேன். முதலில் ‘எதற்கு உனக்குச் சிரமம்?’ என்று மறுத்தவர் பின்னர் ஒருவழியாகச் சம்மதித்தார். ஆறு குழந்தைகளுக்கும் சிறப்பாக திருமணம் நடத்தியவருக்கும் ஏழாவதாக அந்தச் சிரமத்தில் நானும் கொஞ்சம் பங்கு கொள்ளலாமே என்றுதான் வரவேற்புக்கு ஏற்பாடு செய்தேன்.

இங்கே ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலில் தங்கையின் திருமண வரவேற்பு சிறப்பாக நடந்தது. சுமார் அறுபது எழுபது நடிக நடிகைகள், டைரக்டர்கள், காமிராமேன்கள், இசையமைப்பாளர்கள் என்று முக்கிய புள்ளிகள் அனைவருமே நேரில் வந்து நிஜமான நட்பை கெளரவப்படுத்தியிருந்தார்கள். சக ஊழியர்கள், மற்ற பத்திரிக்கை நண்பர்கள் என்று நான் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே ரிசப்சன் களை கட்டியிருந்தது.

ஊரிலிருந்து வந்திருந்தவர்களும் தங்கை கணவருக்கும் ரொம்ப சந்தோஷம். தன் அபிமான நட்சத்திரங்களெல்லாம் அண்ணனோடு இவ்வளவு நெருக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று தங்கைக்கும் ஏக மகிழ்ச்சி. எல்லாம் சிறப்பாக முடிந்து ஊருக்குக் கிளம்புகிறபோதுகூட அப்பா எதுவும் சொல்லவில்லை. நான்கூட அவருக்கு இந்த ஆடம்பரமெல்லாம் பிடிக்காமல் இருந்திருக்கும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் ஊருக்குப் போனதும் மனசு நெகிழ்ந்துபோய் மூன்று கார்டுகளில் அப்பா எழுதியிருந்த விஷயம்தான் எனக்குக் கிடைத்த ஜனாதிபதி விருது!

‘தனி ஆளாய் சென்னைக்குப் போய் நீ கஷ்டப்பட்ட போதெல்லாம் ஒருபக்கம் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறேன். உன்னை மேல படிக்க வச்சு ஒரு ந் அல்ல உத்தியோகம் வாங்கிக் கொடுக்காம இப்படி அநாதை மாதிரி ஐநூறு மைலுக்கப்பால் அனுப்பி வைச்சிருக்கேனே நான் ஒரு நல்ல தகப்பனாயில்லையோன்னு பல நாள் தூக்கமில்லாம தவிச்சிருக்கேன். ஆனா நீ உன் சொந்த முயற்சியில இவ்வளவு தூரம் முன்னேறி , ஒரு நல்ல வேலையையும் நீயா தேடிக்கிட்டதுகூட எனக்குப் பெருசா படல. அதுக்கும்மேல, நீ கூப்பிடேங்கற காரணத்துக்காக இருநூறு ஜனம், பட்டணத்துல அவங்க பரபரப்பான வேலைக்கு நடுவுல உனக்காக நேர்ல வந்திருந்து மனசு ஒப்பி சந்தோஷத்தைப் பகிர்ந்திட்டு கைகுலுக்கி வாழ்த்திட்டுப் போனதைப் பார்த்தப்பதான் என் மனசே நிறைவாச்சு. நீ காசு பணம் சேர்த்து வைக்கலியேன்னு நான் உன்னைக் குறை சொல்லமாட்டேன். மனுஷங்களை சேர்த்து வெச்சிருக்கியே அது போதும். ஆண்டவன் காப்பாத்துறானோ இல்லையோ, அந்த அன்பு உன்னக் காப்பாத்தும்..’

படித்ததும் அழுதேவிட்டேன். எவ்வளவு துல்லியமாகக் கவனித்து எழுதியிருக்கிறார்! அதுதான் அவரிடமிருந்து வந்த கடைசி கடிதமும்கூட. அதன்பிறகு பக்கவாதாம் வந்து ஆஸ்பத்திரியில் சேர்ந்திருப்பதாகத் தந்திதான் வந்தது. குடும்பத்தோடு அவசர கதியில் ரயில் பிடித்து ஊர் போய்ச் சேர்ந்தபிறகு எனக்காகவே காத்திருந்த மாதிரி என்னை அருகில் அழைத்து ‘லெட்டர் கிடைச்சுதா?’ என்று ஜாடையிலேயே கேட்டார். அதன்பிறகு மூன்று நாள் அவஸ்தைக்குப் பிறகு அடங்கிப் போனார்.

காரியமெல்லாம் முடிந்து மறுபடி சென்னைக்கு வந்தபிறகு பல மாதங்களுக்கு அப்பாவின் இழப்பு மிகப்பெரிய சுமையாக மனசுக்குள் இருந்துக் கொண்டேயிருந்தது. அவரிடமிருந்து இனி கடிதம் வராது என்பதும் மிகப்பெரிய வேதனையாக இருந்தது. இதே யோசனையில் இருந்தபோதுதான் ஒருநாள், அப்பாவிடமிருந்துதானே இனி கடிதம் வராது; நான் அவருக்கு எழுதலாமே என்று தோன்றியது. அன்றிலிருந்து அவர் உயிரோடு இருந்தால் என்னென்ன எழுதுவேனோ அதை அப்படியே வாரந்தோறும் அவருக்கு ஒரு கடிதமாக எழுதிவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டேன். கடைசித் தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது; அதற்கு முத்திருளாண்டி என்று அவரின் பெயரையே வைத்தது; சமீபத்தில் வீட்டுக்கென்று கம்ப்யூட்டர் வாங்கியது; என் மகன் மூன்றிலிருந்து நான்காம் வகுப்புக்குப் போகவிருப்பது...இப்படிப் பல விஷயங்களை அவரிடம் கடிதம் மூலம் தெரியப்படுத்தியதில் ஒரு நிறைவு.

இங்கேதான் நவீன விஞ்ஞான வளர்ச்சி எனக்கு மிகவும் உதவியது. ஆபீஸில் ஒன்றும் வீட்டில் ஒன்றுமாக டிவியை ஓரங்கட்டிக் கொண்டு இருக்கும் கம்ப்யூட்டர் – அதன் மூலம் இண்டர்நெட் – இமெயில் – தமிழ்வழி தகவல் பரிமாற்றங்கள் என்கிற அசுர வளர்ச்சி அப்பாவுக்கும் இ-மெயில் அனுப்ப உதவுகிறது. இ-மெயிலில் அனுப்புகிற தகவல்கள் வான்வெளி வழியாகத்தான் பயணிக்கின்றன. மேலே எங்கேயோ இருக்கிற அப்பாவுக்கு நான் அனுப்புகிற இ-மெயில் நிச்சயம் சென்று சேரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம். ஆனால் அப்பாவுக்காக நான் உருவாக்கியிருக்கிற – இ-மெயில் விலாசத்திற்கு நீங்களும்கூட ஒரு மெயில் அனுப்பி வைக்கலாம் – எனது நண்பராகவோ அவரது நண்பராகவோ நீங்கள் இருக்கும் பட்சத்தில்! அப்பா நிஜமாகவே சந்தோஷப்படுவார்.

அப்பாவின் இ-மெயில் விலாசம் இதோ...

muthirulandi@anbu.paasam.com


--------------------

பாலுமகேந்திராவிடமிருந்து ஒரு கடிதம்...

அன்பு நண்பர் கல்யாண் அவர்களுக்கு...
தாங்கள் ஆனந்த விகடனில் எழுதிய ‘அப்பாவுக்கு ஒரு
இ-மெயில் ‘ என்ற சிறுகதை படித்தேன். அந்தக்கதை என்னுள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வெளிவர பல நாட்களாயிற்று. அற்புதமான படைப்பு.

உள்ளடக்கத்தை உன்னதப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட உருவம்... அதன் இயல்புத் தன்மை... அதன் கம்பீரமான எளிமை... கதையாக்கத்தில் கையாளப்பட்டிருக்கும் உத்தி... இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து, ஓர் உன்னதமான கலைப்படைப்பைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. அப்பாவைப் பற்றிய ஆழமான உணர்வுகளை எந்தப் பிரயத்தனமுமின்றி வெகுஇயல்பாக வெளிப்படுத்த உங்களால் முடிந்திருக்கிறது.

இது ஒரு யுனிவர்சல் தீம் என்பதால் இந்தக் கதை பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படலாம்.

வாழ்த்துக்களுடன்,
பாலுமகேந்திரா