Tuesday, November 10, 2009

ஒரு நெகிழ்வான இசை நிகழ்ச்சி!





























ஒரு கிராமத்தின் தாய்க்கு இரண்டு ஆண்பிள்ளைகள். இருவருக்குமே படிப்பில் ஆர்வம் இல்லை! மூத்தவனுக்கு கதை கவிதை, பத்திரிகைகளில் ஈடுபாடு. இளையவனுக்கோ கால்பந்தாட்டத்தில் கவனம். பள்ளி நாட்களின்போது நடந்தவொரு போட்டியில் அவனது கால் எழும்பு முறிந்துபோக, இரண்டுமாதம் ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருக்கவேண்டிய நிலை. அவனைப் பார்க்கவந்த ஒரு நண்பன், வழியில் யதேச்சையாக வாங்கிய ஒரு புல்லாங்குழலை அவனது கையில் கொடுத்துவிட்டு ‘’ஆஸ்பத்திரியில் போரடித்துப் போயிருப்பாய்; சும்மா இதை ஊதிக் கொண்டு இரு’’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். அப்போதுதான் அவனுக்கும் அந்தப் புல்லாங்குழல் மீது எதோ ஒரு ஆர்வம் பிறந்திருக்கிறது.
அடுத்த நாளிலிருந்து அதை வாசித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறான். முதலில் காற்றுதான் வந்திருக்கிறது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சினிமா பாடல்களை வாசிக்க, அதன் துளைகளுக்குள் இருந்த ரகசியம் வெகுசீக்கிரத்திலேயே பிடிபட்டிருக்கிறது. ஆஸ்பத்திரியிலேயே அந்த புல்லாங்குழலை விட்டுவிட்டு வராமல் கையோடு எடுத்துவந்திருக்கிறான் அந்த இளையவன். நண்பர்கள் முன்னிலையில் சினிமாப் பாடல்களை வாசித்துக் காட்டி, அதன் மூலம் அவனுக்குக் கிடைத்த பாராட்டுதல்கள் அவனைக் கொண்டுபோய் நிறுத்திய இடம் கோயம்புத்தூரில் இயங்கிக் கொண்டிருந்த சேரன் இன்னிகைக் குழுவின் மேடையில். அங்கிருந்து திண்டுக்கல் அங்கிங்கு இசைக்குழு... அந்த காலகட்டத்தில் இசையை முறைப்படி கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறான்.
அவனது இசை ஆர்வம் மேலும் மேலும் அதிகரிக்க அடுத்து சென்னை பயணம். கே.ஜே.ஜேசுதாஸின் இசைக் கச்சேரிகளில் வாசிக்கிற அளவுக்கு அவனது இசைப்புலமையை வளர்த்துக் கொண்டிருந்திருக்கிறான். அங்கிருந்து சினிமா பாடல்களுக்கு வாசிக்க வேண்டும் என்கிற கனவை நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள், தேவாவின் சகோதரர்களான சபேஷ்-முரளி. தேவாவின் அனைத்துப் பாடல்களிலும் நீங்கள் இந்த இளையவனின் புல்லாங்குழல் இசையைக் கேட்டிருக்கலாம். வெறும் புல்லாங்குழலிலே பல வருடங்கள் புழங்கிய அவனுக்கு மேற்கத்திய இசைக் கருவியான சாக்ஸஃபோனை வாசிக்க வேண்டும் என்கிற காதலால் அதையும் வாங்கி கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறான். இப்போது பிரபல இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜிடம் அந்த இனிய கருவியை வாசித்துக் கொண்டிருப்பதும் இவனே. இவனுக்குள் மிக நீண்ட நாட்களால் ஒரு ஆசை. இசைக் கடல் மெல்லிசை மன்னரின் சூப்பர்ஹிட் பாடல்களை அந்த சாக்ஸஃபோன் கருவியில் வாசிக்க வேண்டும் என்பதுதான். அவனது ஆசையைக் கேள்விப்பட்டு கைகொடுக்க முன்வந்தார் ஒரு தொழிலதிபர். அவரது பெயர் தேவய்யா.
அதே மெல்லிசை மன்னரின் முன்னிலையில் பிரபல இயக்குனர் கே.எஸ். ரவிகுமார் அந்த இசை நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க கடந்த ஆறாம் தேதி இரவு சுமார் மூன்று மணி நேரம் காமராஜர் அரங்கமே இசை மழையில் நனைந்தது. பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான சுதாங்கன், இயக்குனர் ஆதவன், இளவட்டம் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.கே.ராஜராஜா, பாடலாசிரியர் காமகோடியன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசிய இந்த இசை நிகழ்வு, மிக விரைவிலேயே பிரபல சேனல் ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளது. அதோடு இந்த இசை நிகழ்ச்சி, டிவிடியாகவும் ஆடியோ சிடியாகவும் விற்பனைக்கு வரவிருக்கிறது.
இதிலே மிக ஒரு குழந்தையின் மனதோடு, குதூகலமாகக் கலந்து கொண்ட மெல்லிசை மன்னருக்கு இந்த இசை நிகழ்ச்சியை வடிவமைத்து தயாரித்த தேவய்யா, ஒரு வைர மோதிரத்தை மேடையிலேயே அனைவரது முன்னிலையிலும் தன் www.megagigashows.com நிறுவனத்தின் சார்பில் பரிசளித்த காட்சி அருமை!
அதுசரி, இதில் ஆரம்பத்தில் சொன்ன கதை, கவிதை, பத்திரிகைகளில் ஆர்வம் கொண்டிருந்த மூத்தவன் என்ன ஆனான்? இளையவனுக்கு முன்னரே சென்னைக்கு வந்து, அவனது ஆர்வத்தால் சில பத்திரிகைகளில் பணிபுரிந்திருக்கிறான். இந்தியா டுடே தமிழ்ப்பதிப்பில் இணையாசிரியராக பணியாற்றிய அவன் பின்னர் கே.எஸ்.ரவிகுமாரின் தசாவதாரம் உட்பட பல படங்களுக்கு திரைக்கதை உதவியாளனாக பணியாற்றி வருகிறான். பத்திரிகையிலும் அவனுக்கு ஆர்வம் என்பதால் தற்போது வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கும் ’புதிய தலைமுறை’ இளைஞர் வார இதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றுகிறான்.
சென்னையில் கலை, சினிமா, இசை, பத்திரிகை என, இன்று பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சகோதரர்களுக்கு, தங்களைப் பெற்றெடுத்து வளர்த்த அன்னையை கெளரவப்படுத்த வேண்டும் என்பது நீண்ட நாளைய ஆசை. அதற்கு இந்த இசை மேடை ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித்தர, 83 வயதான அந்தத் தாயை ( திருமதி ஷண்முகம் அம்மாள் முத்திருளாண்டி) மேடைக்கு வரவழைத்து எம்.எஸ்.வி, கே.எஸ்.ரவிகுமார் முன்னிலையில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி கெளரவப்படுத்தி இருக்கிறார்கள், இந்தச் சகோதரர்கள்!
ஒரே மேடையில் தன் இரு மகன்களும் சேர்ந்து தன்னைச் சிறப்பித்த காட்சியைக் கண்டு அந்த அன்னையின் மனம் கொண்ட மகிழ்ச்சியை நீங்கள் இங்கே இருக்கும் புகைப்படங்களில் பார்க்கலாம்.
எல்லாம் சரி. யார் இந்த அபூர்வ சகோதரர்கள்?
இந்த உண்மைக்கதையில் மூத்தவன் யாரோ....?
சாட்சாத் இதே கல்யாண்குமாராகிய நான்தான்!
இளையவன்...?
என் உடன்பிறந்த சகோதரன், இசைக்கலைஞன் எஸ். நாதன்.!
எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை தங்களின் அன்னையை கெளரவப்படுத்தும் அரிய சந்தர்ப்பம்.
எங்களுக்கு அமைந்தது அந்த அன்னையின் ஆசியால்தான்!
ஆகவே என்றும் அன்னையை மதிப்போம்....அவர்தம் காலடியைத் துதிப்போம்! சரியா?
---------------------------

Tuesday, October 20, 2009

மிஸ். தீபிகாவின் துணிச்சல்!







சமீபத்தில் ஒரு துணிச்சலான கல்லூரி மாணவியைச் சந்தித்தேன். அவரைப் பற்றிய செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். படித்துப் பாருங்கள்….



சென்னை எத்திராஜ் கல்லூரியின் வாசல். மாணவிகள் ஆட்டோக்களிலும் கார்களிலும் ஸ்கூட்டிகளிலும் வந்து இறங்கி தங்கள் வகுப்பு நோக்கிப் போகிறார்கள். ஸ்டைலாக சுசுகி பைக்கில் வந்து இறங்குகிறார் ஒரு மாணவி.
பத்தொன்பது வயதான தீபிகா, அந்தக் கல்லூரியில் டூரிஸம் அண்ட் மானேஜ்மெண்ட் பிரிவில் இரண்டாம் ஆண்டு மாணவி. படிப்பில் மட்டும் தன் கவனத்தைச் செலுத்தாமல் பல்வேறு விதமான திறமைகளை வளர்ந்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். அவரது ஆர்வங்கள் பட்டியலிட்டால் அதன் எண்ணிக்கை நீண்டு கொண்டேயிருக்கிறது. அதில் ஒன்றுதான் பைக் ஓட்டுவது. கல்லூரிக்கு மட்டுமல்ல, ஷாப்பிங் போவது, தோழிகளின் வீட்டுக்குப் போவது எல்லாவற்றிற்கும் இவர் உபயோகப்படுத்துவது இந்த பைக்கைத்தான். இரண்டு வருஷமாக பைக் ஒட்டி ரொம்ப போரடித்து விட்டதால், அடுத்த மாதம் ஆண்களே ஓட்டத் தயங்குகிற புல்லட்டை வாங்கவிருப்பதாகச் சொல்லிச் சிரிக்கிறார் தீபிகா.
சின்ன வயதிலிருந்தே செல்லப்பிராணிகள் மீது அலாதி ப்ரியம் கொண்டவர் தீபிகா. நாய்க்குட்டியில் ஆரம்பித்த அந்த ஆர்வம் அணில், கொக்கு, மீன்கள், வெளிநாட்டுப் பறவைகள் என்று நீண்டு, இப்போது படமெடுத்தாடும் பாம்பில் வந்து நிற்கிறது!
பாம்பா?
அதிர்ச்சியாய் கேட்பவர்களுக்கு கூலாக பதில் சொல்கிறார் தீபிகா.
‘’ நாய்க்குட்டி, அணில் மாதிரி அதுவும் ஒரு பிராணிதான். தேவையில்லாம அதை ஒரு விரோதியப் பாக்குற மாதிரி நாம நடந்துக்குறோம். அது நம்மைப் பார்த்து பயந்து போய்தான் தப்பிச்சு ஒளியறத்துக்காக ஓடுது. அதத் துரத்தி அடிக்க முயலும்போதுதான் அது நம்மைத் திருப்பித் தாக்குது. அதுனால அதையும் சாஃப்ட்டா ஹேண்டில் பண்ணா அது நம்மகூட ஃப்ரெண்ட்லியா இருக்கும்’’ என்று தன் விளக்கத்தை சொல்கிறார். பாம்புகள் மீது இவர் கொண்டிருக்கும் அன்பு, இவரின் அப்பா திருநாவுக்கரசுவோடு இணைந்து ஒரு இயக்கத்தையே ஆரம்பிக்கும் நிலைக்குப் போயிருக்கிறது. கூடிய விரைவில் அதற்கான விழிப்புணர்ச்சி முகாம்களையும் நடத்தத் திட்டமிட்டிருக்கும் தீபிகா, பாம்புகளைப் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுகிற அளவுக்கு அதைப் பற்றி தகவல்களைக் ’கொட்டிக்’ கொண்டேயிருக்கிறார்.
இதுவரை தண்ணிப்பாம்பு, பச்சைப்பாம்பு, சாரையில் வெள்ளை சாரை, மஞ்சள் சாரை, கட்டுவிரியன், கோதும நாகம், மஞ்சள் நாகம் என்று பலவகைப் பாம்புகளையும் துணிச்சலாக கையில் பிடித்து வருடிக் கொடுத்திருக்கும் தீபிகாவிற்கு கேரளக் காடுகளில் வாழும் ராஜநாகத்தை பிடித்துப் பார்க்கவேண்டும் என்பது லேட்டஸ்ட் ஆசை. கல்லூரிப் படிப்பு முடிந்ததும் அதுவும் நிறைவேறிவிடும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். கேரளக் காடுகளிலிருந்து உணவுக்காக கர்நாடக விவசாயக் கிராமங்கள்வரை போய் திரும்புகிற அந்த ராஜநாகங்கள், மிகவேகமாகப் போய்வரும் தகவலையும் ஆதாரப்பூர்வமாக சேகரித்து வைத்திருக்கிறார் தீபிகா.
சட்டப்படி பாம்புகளை தனிப்பட்ட முறையில் வளர்க்கக் கூடாது. அதனால் வீடுகளில் பிடிபடும்போதும் வேறு எங்காவது அடிபட்ட பாம்புகளை மட்டுமே எடுத்துவந்து அதற்கு சரியான சிகிச்சைகளை அளித்துவிட்டு சிலநாள் கழித்து அடையாறில் உள்ள அரசு பாம்புப் பண்ணையிலோ அல்லது எதாவது காட்டுப் பகுதியிலோ விட்டு விடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறாராம் இவர். பாம்புப் பண்ணை அதிகாரிகளும் இவரது ஆர்வத்தைப் புரிந்து கொண்டு பாம்புகள் பற்றிய அரிய தகவல்களை இவருக்கு தந்து உதவுவதை நன்றியோடு நினைவு கூர்கிறார்.
அதுசரி, இத்தனை வருட அனுபவத்தில் தீபிகா பாம்பிடம் எத்தனை கடி வாங்கியிருப்பார்?
’’ அதுதான் இல்லை. ஒருமுறை கூட நான் கடி வாங்கியதில்லை. எல்லா பாய்ஸும் (பாம்பை இப்படித்தான் செல்லமாக அழைக்கிறார்) எங்கிட்ட அன்பாத்தான் பழகுவாங்க. சாரைப் பாம்பு பல்லு மட்டும் ஆக்‌ஷா பிளேடு மாதிரி இருக்கும். அதுக்கு இரை போடும்போது ஒருசில சமயம் அந்த பல்லு என்னோட தோளுல படும். அப்ப அந்த இடத்துல மட்டும் லேசா வீங்கும். ஆனா அதுக்கு ஆந்திராவுலேர்ந்து வாங்கி வைச்சிருக்கற ஒரு நாட்டு மருந்து என் கைவசம் இருக்கு. உடனே அதை அப்ளை பண்ணிடுவேன். அரைமணி நேரத்துல சரியாகிடும்.’’ என்று சொல்லிச் சிரிக்கும் தீபிகாவுக்குப் பாம்புகளைப் பிடிக்கக் கற்றுக் கொடுத்தவர் ஸ்டாலின் பெர்னாண்டஸ்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் சுமார் 42 வருடங்களாக பாம்புகளோடு பரிச்சயம் உள்ளவர். பலவீடுகளில் இவரால் இதுவரை பிடிபட்ட பாம்புகளின் எண்ணிக்கை சுமார் ஆயிரம் இருக்கும் என்கிறார் இவர். தீபிகாவைப் பற்றி என்ன சொல்கிறார் இவர்?
’’ அந்தப் பொண்ணோட துணைச்சலை பாராட்டியே தீரணும். ரொம்ப நாளா தொடர்ந்து கேட்டுகிட்டே இருந்துச்சு. அவங்க ஆர்வத்தைப் பார்த்துட்டுதான் பாம்புகளை எப்படி கையாள்றதுங்கற டெக்னிக்கை மட்டும் ஆறு மாசம் சொல்லிக் கொடுத்தேன். அந்தப் பொண்ணும் பிடிபடுற பாம்புகளுக்கு சிகிச்சை அளிச்சு காடுல்கள்ல கொண்டு போய் விடறாங்க. இந்தத் துறையில நிறைய ஆர்வம் இருக்கறதால இதுல எதாவது சாதிப்பாங்க’’ என்று சர்டிபிகேட் தருகிறார்.
தீபிகாவின் அப்பா ஒரு குத்துச்சண்டை வீரர். அதனால் பாக்ஸிங் கலையையும் விட்டு வைக்கவில்லை தீபிகா. தற்காப்புக்காக முறைப்படி அதைக் கற்று வைத்திருக்கும் இவருக்கு ஆயில் பெயிண்டிங் வரைவதில் மிகப்பெரிய ஆர்வம். அதிலும் அரச இலைகளில் இவர் வரையும் ஓவியங்கள் நண்பர்களிடையே மிகவும் பிரபலம். ரங்கோலி வரையும் போட்டிகளில் பல பரிசுகளை வென்றிருக்கும் தீபிகாவின் இந்த தசாவதார டேலண்ட்களால் கல்லூரியில் இவருக்கு ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ் பட்டாளம்.
பட்டம் பெற்றதும் அடுத்த கனவு தீபிகாவுக்கு ஐ.எஃப்.எஸ் தேர்வு எழுதி உயர் வனத்துறை அதிகாரியாக செயலாற்றுவதுதானாம்.‘’ எதிர்காலத்தில் காடுகளையும் அதில் வாழும் உயிரினங்களையும் நான் தீவிரமாக காதலிக்கப் போகிறேன்’’ என்று சீரியஸாகச் சொல்கிறார் இந்தக் காடுகளின் காதலி.
- இந்த கல்லூரி மாணவியின் துணிச்சலை நீங்களும் பாராட்ட நினைத்தால் அவரது மெயில் ஐ.டி.க்கே ஒரு நாலு வார்த்தை தட்டிவிடுங்கள் நண்பர்களே!
deepika.devi1@gmail.com
-------------------

Friday, October 9, 2009

தமிழில் பேசும் உங்கள் கணினி!

புதிய தலைமுறை வார இதழில் ’தமிழ் பேசும் கணினி’ என்றொரு புதிய கண்டுபிடிப்பின் அறிமுகக் கட்டுரையைப் படிக்காதவர்களுக்கு இங்கே அதை நான் அறிமுகம் செய்து வைப்பதில் அகமகிழ்கிறேன்.
உங்கள் கணினி, தமிழ் பேச வேண்டுமா?
நீங்கள் தமிழில் (யுனிகோடில்) அதில் வார்த்தைகளை உள்ளிட்டால் நீங்கள் அடித்த வார்த்தைகளை ஒலியாக உங்கள் கணினி திருப்பிச் சொல்கிறது! ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆனால் அது உண்மை!
இந்த அரிய சாப்ட்வேரை கண்டுபிடித்திருப்பவர் பெங்களூரில் இயங்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனப் பேராசிரியர் ஏ.ஜி.ராமகிருஷ்ணனும் அவரது கில்லாடி சீடர் குழுவும்தான்!
தமிழரான இவரது இந்த அரிய கண்டுபிடிப்பு, எதிர்காலத்தில் பல உருமாற்றங்களைக் கொண்டு ஒவ்வொரு தமிழருக்கும் மிக உபயோகமாக இருக்கப்போகிறது என்பதை மட்டும் இப்போதே என்னால் உணர முடிகிறது.

நீங்களும் இதை முயற்சித்துப் பாருங்கள். கூடவே அந்த அறிவான தமிழனை அன்போடு வாழ்த்தி ஒரு மடலிடுங்களேன்.
தமிழ் பேசும் கணினிக்கான இணைப்புக்கு: http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/
திரு ஏஜிஆருக்கு வாழ்த்துச் சொல்ல ( கூடவே உங்களின்சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள!) –
agrkrish@gmail.com
நன்றி நண்பர்களே, உங்கள் கணினி, தமிழ் பேசிய அனுபவத்தை என்னோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
------

Sunday, October 4, 2009

இஸ்லாமியப் பின்னணியில் ஒரு நாவல்


கீரனூர் ஜாகிர்ராஜவின் மூன்றாவது நாவலான ’துருக்கித் தொப்பி’ ஒரு அச்சு அசலான கிராமத்துத் தமிழ் முஸ்லீம் வாழ்க்கையைச் சித்தரிப்பதில் வெற்றி கண்டிருக்கிறது. தனது முந்தைய நாவல்களான மீன்காரத் தெரு, கருத்த லெப்பை இரண்டிலும் தன் சமூகத்தில் நிலவும் வர்க்க பேதங்கள், முரண்கள் இவற்றை ஒருவித உக்கிரத்துடன் பதிவு செய்த ஜாகிர்ராஜா இந்த நாவலில் சற்று விசாலமாக ’எட்டுக்கல் பதிச்ச வீடு’ என்னும் பாரம்பரியப் பெருமைமிக்க முஸ்லீம் குடும்பத்தையும் அதன் படிப்படியான வீழ்ச்சியையும் கதை நிகழும் அந்த காலகட்டத்தின் அரசியல் பின்புலம் சார்ந்து, படிப்பவர்கள் மனதில் ஒரு ஈரானியப் படத்தை பார்த்த அனுபவத்தைத் தருகிறார்.

கலை உணர்வும், கேளிக்கை நாட்டமும் கொண்ட கே.பி.ஷே, ஆளுமைமிக்க அவர் மனைவி பட்டம்மாள், அரசியல் ஆர்வத்தோடு அலையும் மகன் அத்தாவுல்லா, ஆசாபாசங்களை மறைக்கத் தெரியாத மருமகள் நூர்ஜஹான், சுதந்திர மனப்பான்மையுள்ள பேரன் ரஹமத்துல்லா, சம்பந்தி குட்டிலெவை என்று நாவல் நெடுகிலும் வித்தியாசமான பாத்திரங்கள்.

நூர்ஜகானுக்கும் பட்டம்மாளுக்கும் நடக்கிற போராட்டம் காலங்காலமாக குடும்ப அமைப்புகளுக்குள் நடைபெறும் மாமியார் மருமகள் அரசியலை மட்டுமல்ல, பெண் சுதந்திரத்தின் வெறொரு பரிமாணத்திற்குள்ளும் நம்மைக் கொண்டு செல்கிறது.
ரஹமத்துல்லாவின் மன உலகம் விசித்திரமானது. அல்லாவைத் தொழும் மரபில் வந்தவன் அநாயசமாக ஒரு கிறிஸ்துவ தேவாலயத்திற்குள் நுழைந்து இயேசு கிறிஸ்துவுடன் உரையாடுவது கவித்துவமான இடமாக இருக்கிறது. அத்தை மகளின் மரணத்தின்போது அவனுள் பொங்கி எழும் நெகிழ்வான மனநிலைகள், உடன் பிறந்த சகோதரன் மீது காட்டுகின்ற வன்மம், பெற்றோரின் அடக்குமுறைகளை எதிர்கொள்கிற துணிச்சல், அன்புக்கு எங்கி அலையும் தருணங்கள் என்று பல நிலைகளை இந்த நாவல் படிப்பவர்களின் கவனக் குவிப்புள்ளாக்கி இருக்கிறது.

இஸ்லாமியர் என்றாலே தொழுகை, பிரியாணி, வெளிநாட்டு சம்பாத்தியம், தீவிரவாத ஒத்துழைப்பு என்பதாக மட்டுமே கட்டமைக்கப்பட்டுள்ள பொதுப்புத்தியில் உறைந்துபோன படிமத்தை, ஜாகிர்ராஜா இந்த நாவலில் உடைத்தெறிகிறார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்களுக்கும் இந்து சமூகத்திற்கும் இறைவழிபாட்டில் மட்டுமே வேற்றுமை உள்ளதை தெளிவுபடுத்தியிருக்கிறார்.

நாவலாசிரியரின் இயல்பான நடையும், தான் சார்ந்த சமூகத்தை விமர்சிக்கையில் அவருடைய பாரபட்சமற்ற கறாரான போக்கும், நாஞ்சில் நாடன் இந்நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல ’’மிகவும் சுதந்திர வேட்கை கொண்ட எதார்த்தமான கட்டுதிட்டமான எழுத்து’’ என்னும் கருத்தை மெய்ப்பிக்கிறது.

தன் முந்தைய நாவல்களுக்கு த.மு.எ.ச. மாநில விருதுகளையும், ஏலாதி இலக்கிய விருதையும், திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்ற விருதையும் பெற்றிருக்கும் ஜாகிர்ராஜா, இந்த துருக்கித் தொப்பி நாவலுக்கும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருதையும் பெற்றிருக்கிறார்.

வித்தியாசமான கதைக்களமும், காட்சிகளை விஷுவல் படுத்துவதற்கான வாய்ப்புகளையும் கொண்ட இந்த நாவல், தமிழில் திரைப்படமாக எடுப்பதற்கான அத்தனை சாத்தியங்களையும் கொண்டிருக்கிறது. வேற்று தேசத்து வீடியோக்களில் கதை தேடிஅலையும் இளம் இயக்குனர்கள் படிக்க வேண்டிய உள் நாட்டுச் சரக்குமிக்க நாவல்களில் இதுவும் ஒன்று.

-------------------------------------------------------------------------------------------------

துருக்கித் தொப்பி (நாவல்) பக்கம்: 228, விலை: ரூ125/-
வெளியீடு: ’அகல்’, 342, டி.டி.கே.சாலை, இராயப்பேட்டை, சென்னை-14

-------------------------------------------------------------------------------------------------

Tuesday, August 18, 2009

’’எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன்..’’


அப்போது நான் ’தாய்’ வார இதழில் உதவி ஆசிரியர். எம்.ஜி.ஆர். அவர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை அது. அவரது வளர்ப்பு மகன் அப்புவின் நிர்வாகத்தில் இயங்கிக் கொண்டிருந்த்து. அப்போது எம்.ஜி.ஆர்தான் தமிழகத்தின் முதல்வர். அது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த வேளை. எனக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது அந்த நாள். ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ஒரு திங்கட்கிழமை. அன்றைக்கு வழக்கத்தைவிடவும் கொஞ்சம் சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு வந்துவிட்டேன். ஆசிரியர் வலம்புரி ஜான் அறையிலிருந்த டெலிபோன் ஒலித்ததும், அவர் வரத் தாமதம் ஆகும் என்பதால் நான் போய் எடுத்துப் பேசினேன்.
எதிர்முனையிலிருந்து ஒரு குரல் –
’’ நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன்...ஆசிரியர் இருக்கிறாரா?’’
அந்த நொடி எனக்குள் லேசான அதிர்ச்சி. சுதாரித்துக் கொண்டு பதில் சொன்னேன்.
’’ இன்னும் வரலை சார்....’’
’’ நீங்க யார் பேசறது?’’
‘’ நான் உதவி ஆசிரியர், கல்யாண்குமார்’’
’’சரி, கடந்த பொங்கல் தாய் சிறப்பு இதழில் எத்தனை அரசு விளம்பரங்கள் வந்தன என்று உங்களுக்குத் தெரியுமா?’’ என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.
என்னிடம் அதற்கான பதில் இல்லை. காரணம் நான் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவன். விளம்பர சம்பந்தமான விபரங்களை நான் அறிய வாய்ப்பில்லை. ஆனாலும் சுதாரித்துக் கொண்டு,
’’ ஒரு ஐந்து நிமிடம் எனக்கு நேரம் தந்தால் அதுபற்றி முழுவிபரங்களையும் விளம்பர மானேஜர் பத்மானாபனிடம் கேட்டுச் சொல்லிவிடுகிறேன்.. அவர் ஏற்கனவே வந்து விட்டார்..’’ என்றேன்.
‘’இல்லை ஆசிரியர் வந்ததும் என்னை அந்த விபரங்களோடு தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். நன்றி. வணக்கம்.’’ என்று நான் பதில் வணக்கம் சொல்லுமுன்னே போனை வைத்துவிட்டார்.
ஓ! திரையில் பார்த்துப் பிரமித்த ஒரு மனிதரிடம் போனில் பேசிவிட்டோம்! பிரமிப்பாகத்தான் இருந்தது எனக்கு அந்த வாரம் முழுக்க!
சற்று நேரத்தில் ஆசிரியர் வந்ததும் விபரத்தைச் சொன்னேன். அவரும் உடனடியாக அவர் கேட்ட விபரங்களை சேகரித்துக் கொண்டு திரும்ப எம்.ஜி.ஆரிடம் பேசினார்.
விஷயம் இத்தோடு முடிந்துவிடவில்லை. மறுநாள் அலுவலகம் வந்த ஆசிரியர் இன்னொரு புது விஷயத்தைச் சொன்னார்.
முதல் நாள் என்னோடு பேசுவதற்கு முன் எம்.ஜி.ஆர்., ஆசிரியர் வலம்புரி ஜானின் வீட்டுக்குப் போன் செய்திருக்கிறார். ஆனால் அப்போதுதான் ஆசிரியர், அலுவலகத்திற்குக் கிளம்பி இருக்கிறார். அப்போது அவரது குடும்பம் வெளியூர் போயிருந்தபடியால் வீட்டில் இருந்த பதின்மூன்று வயது வேலைக்காரச் சிறுமிதான் போனை எடுத்துப் பேசியிருக்கிறாள்.
அவளுக்கும் எம்.ஜி.ஆருக்குமான உரையாடல் இப்படி நிகழ்ந்திருக்கிறது:
‘’ ஹலோ.. யாருங்க பேசறது?’’ இது வேலைக்காரச் சிறுமி.
‘’ நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன். வலம்புரி ஜானிடம் பேசவேண்டும்’’
அவர் எப்போது, யாருடன் பேசினாலும் தன் முழுப்பெயரையும் சொல்லித்தான் பேசுவாராம். அதனால் பேசுவது எம்.ஜி.ஆர் என்பது தெரியாமலே அந்த வேலைக்காரச் சிறுமி பதில் சொல்லியிருக்கிறாள்!
‘’அய்யா இப்பதான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனாங்க’’
‘’ நீங்க யார் பேசறது?’’
‘’ நா இங்க வேலைபாக்குற பொண்ணு. அம்மா, அக்காவெல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க.’’
‘’உங்க பேரு என்ன?’’
’’லச்சுமி’’
‘’எந்த ஊரு?’’
’’தூத்துக்குடி பக்கத்துல வள்ளியூர் ‘’
’’இங்க வேலைக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?’’
’’மூணு வருஷமா இங்கதான் இருக்கேன்’’
‘’அப்படியா? என்ன சம்பளம் கொடுக்குறாங்க?’’
‘’அதெல்லாம் எனக்குத் தெரியாது. மாசாமாசம் ஊருக்கு அப்பாவுக்கு அனுப்பிடுவாங்க. எனக்கு சாப்பாடு போட்டு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்க்கு துணி எடுத்துக் கொடுத்துருவாங்க.’’
’’ உன்னை நல்லா வச்சுக்கறாங்களா? சாப்பாடெல்லாம் நல்லா இருக்கா?’’
’’ம்ம்ம்... நல்லா இருக்கும்.. அய்யாவுக்கு தினம் கறிச்சோறு செய்வாங்க. எனக்கும் கொடுப்பாங்க’’
‘’சினிமாவுக்கெல்லாம் கூட்டிட்டுப் போவாங்களா?’’
’’ஆமா. லீவு நாள்ல எல்லாரும் போவாங்க. என்னையும் கூட்டிட்டுப் போவாங்க..’’
‘’உனக்கு அய்யாவைப் புடிக்குமா, அம்மாவப் புடிக்குமா?’’
’’ரெண்டு பேரையுமே புடிக்கும். அய்யா எதாவது கடைக்கு அனுப்பினா மிச்சக் காசை என்னையே வச்சுக்கச் சொல்லுவாரு. சேர்த்துவைக்கிறேன்.’’
’’எப்ப ஊருக்குப் போகப்போற?’’
‘’ எங்க அப்பா வந்து கூட்டிட்டுப் போவாரு. இப்பதான் பொங்கலுக்குப் போயிட்டு வந்தேன். இனி தீபாவளிக்குப் போவேன். புதுத்துணியெல்லாம் அம்மா எடுத்துக் கொடுப்பாங்க..’’
‘’சரி, அய்யா வந்ததும் நான் பேசுனதாச் சொல்லு’’
‘’உங்க பேரு என்ன சொன்னீங்க?’’
‘’எம்.ஜி..ராமச்சந்திரன்’’
’’மறுபடி சொல்லுங்க....’’
‘’எம்.ஜி.ராமச்சந்திரன்’’
அப்போதும்கூட தான் எம்.ஜி.ஆர் என்பதை அவர் சொல்லிக் கொள்ளவேயில்லை!
இரவு வீட்டுக்குத் திரும்பிய ஆசிரியரிடம் அந்த வேலைக்காரச் சிறுமி இந்த போன் விபரத்தைச் சொல்லியிருக்கிறாள். அத்தனை நேரம் உன்னிடம் பேசிக் கொண்டிருந்தது, எம்.ஜி.ஆர் என்ற விபரத்தை ஆசிரியர் அவளிடம் சொன்னபோது அதை அவள் முழுசாய் நம்பவில்லை. எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் அவளுக்குத் தெரியாததால், ‘அவரு எம்.ஜி.ஆருன்னு சொல்லவேயில்லையே.. எதோ ராமச்சந்திரன்ன்னுதானே சொன்னார், அய்யா பொய் சொல்கிறார்’ என்றுதான் நினைத்திருக்கிறாள். ஆனால் அடுத்தமுறை வலம்புரி ஜான், எம்.ஜி.ஆரைச் சந்திக்கப் போனபோது அந்தச் சிறுமி பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவளிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டிருக்கிறார்.
அவ்வளவு பணமும் தனக்குத்தான், அதுவும் எம்.ஜி.ஆரே கொடுத்துவிட்டிருக்கிறார் என்று அறிந்தபோதுதான், சில நாட்களுக்கு முன் தன்னோடு பேசியது சாட்சாத் எம்.ஜி.ஆரேதான் என்பதை அவள் நம்பியிருக்கிறாள்.!
---------------------

Sunday, July 26, 2009

நன்றி தோழிகளே... நண்பர்களே...

தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட புரட்சிதான் இந்த இணையம் என்று சொல்ல வேண்டும். ஒரு புதிய கண்டுபிடிப்பை எந்தெந்த வழிகளில் பயன்படுத்த வேண்டும் என்பதில் தமிழர்களுக்கு இருக்கிற ஆர்வமும் ஈடுபாடும் மற்ற மொழி பேசுபவர்களிடம் குறைவுதான் என்பதே என் கருத்து.

கணினி, மின்னஞ்சல், தமிழ் சாப்ட்வேரைத் தொடர்ந்து பிறந்த குழந்தைகள்தான் இணைய தளங்களும், இணையப் பக்கங்களும், வலைப்பூக்களும்! இந்த இனிய குழந்தைகளைப் பயன்படுத்தி தமிழ் நெஞ்சங்கள் தங்களின் கருத்துப் பரிமாற்றங்களை மிகச் சிறப்பாகவே செய்து வருகிறார்கள்.

நான் வலைப்பக்கத்திற்கு அறிமுகமான போது அதன் வீரியம் பற்றி அதிகம் அறியாதிருந்தேன். இங்கே சில நண்பர்களைப் பற்றியும் சில தோழிகள் பற்றியும் நான் நன்றியோடு சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

மதுமிதா....

வலைப்பக்கத்தைப் பற்றியும், அதன் வட்டத்தைப் பற்றியும், அதன் பயன்பாடுகளைப் பற்றியும், அதன் வடிவமைப்பு பற்றியும் எனக்கு மிகப் பொறுமையாக செல்போன் வாயிலாகவே கற்றுத் தந்தவர் தோழி கவிதாயினி மதுமிதா. வலைப்பூக்களின் பதிவர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் இவர். அன்பு, மென்மையான அணுகுமுறை, எழுத்தில் ஒரு நேர்மை இவைகளை இன்றைக்கும் கடைபிடிப்பவர்.

தமிழச்சி....

அதன்பிறகு இதே வலைப்பக்கத்தின் மூலமாக தமிழச்சியுடன் ஏற்பட்டது சினேகம். ஆரம்பத்தில் எங்களுக்குள்ளும் ஏகப்பட்ட சண்டைகள்!! ஆனால் இனிய சினேகிதி. துணிச்சலான, அதே நேரம் அறிவு பூர்வமான அவரது எழுத்துக்கள் என்னை பெரிதும் கவர்ந்தன. ஈரோட்டில் பிறந்த ஈவேரா பெரியாருக்கு, ஐரோப்பாவில் இன்றைக்கும் ஒரு இயக்கத்தையே நடத்தி வரும் பெண்மணி. தமிழ்நாட்டில்கூட இல்லாத அளவுக்கு பெரியாருக்காக ஒரு வலைத்தளத்தையே உருவாக்கி அவரது படைப்புகளை தினமும், தானே அதில் பதிவு செய்வதை ஒரு கடமையாகவே செய்து வருபவர். எனக்கு இவர் அறிமுகமாவதற்கு முன்னர், இணையத்தில் பலவிதமான சர்ச்சைகளுக்கு ஆளாவர் என்றாலும் அவரது புரட்சிகரமான செயல்களுக்காக நான் அவருக்கு என் வணக்கத்தைச் செலுத்திக் கொள்கிறேன். இணையத்தில் ஏற்படும் சில குழப்பங்களுக்குத் தீர்வு சொல்லும் ஒரு நல்ல தோழியாக இன்றும் இருக்கிறார். அவரது நட்பு என்றும் தொடரும்.

சிவகுமார்...

பிரபல டிராக்டர் கம்பெனியான tafe வின் சென்னை ரீஜெனல் மானேஜர் இவர். பழகுவதற்கு இனிய நண்பர். இவரும் எனக்கு இணையத்தின் மூலமாகவே நண்பர் ஆனவர். ஆனால் இப்போது எனது குடும்ப நண்பர். ஏற்கனவே இருபது வருடம் பழகியது போல் எங்களின் நட்பு இன்றைக்கும் இனிதே தொடர்கிறது.

ஏ.ஆர்.கே.ராஜராஜா...

இவரும் இணையத்தில் பிரபலமானவர்தான். தமிழ்ராஜா என்கிற பெயரில் உலா வருபவர். உற்சாகத்தின் ஊற்றாக செயல்படுபவர். இளவட்டம் என்கிற படத்தின் இயக்குனர். தமிழில் டப்பிங் செய்யப்பட்ட சுமார் 200 தெலுங்குப் படங்களுக்கு தமிழின் வசனகர்த்தா. இவரோடு பேசிக் கொண்டிருந்தால் ஊமைகூட பாடகன் ஆகிவிடுவான் என்பது எனது கணிப்பு.

வெங்கட் தாயுமானவன்...

என்னுடைய ‘அப்பாவுக்கு ஒரு இமெயில்’ சிறுகதையை இணையத்தில் படித்துவிட்டு அறிமுகமான உதவி இயக்குனர். ஆனால் அவருக்கு கேன்ஸர் இருப்பதையே போகிற போக்கில் என்னோடு பகிர்ந்து கொண்டவர். பதறிப் போன நான் அவரைப் பற்றிய தகவல்களை செல்போன் மூலமாகவே சேகரித்து அதை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டேன். அதன் பிறகு அது ஆனந்த விகடனிலும் வெளியானது. நம்பிக்கையான இளைஞர். அவரது வெற்றிக்காக பிரார்த்தனைகளுடன் காத்திருக்கிறேன்...

நர்சிம்....

இதே வெங்கட் தாயுமானவனின் சோகக்கதையைப் படித்துவிட்டு அவரது சிகிச்சைக்கான முழுச் செலவையும் தானும், தான் பதவி வகிக்கிற ஒரு பன்னாட்டு நிறுவனமும் ஏற்றுக் கொள்ளும் என்று உடனே அறிவித்த அன்பு நண்பர். இவரையும் நான் இதுவரை சந்திக்கவேயில்லை. ஆனால் ஓடோடி வந்து உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிற அவரது நல்ல மனசுக்காகவே அவரை எனது இனிய நண்பராக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இணையத்தின் மூலமாக இப்படி நூறு நர்சிம்கள் நம் அனைவருக்கும் நண்பர்களாக அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம்.

என். கணேசன்....

அய்யா கணேசன் அவர்களை எனது நண்பர் என்று விளித்துக் கொள்ளக் கூடாது. மிகப்பெரியவர் அவர். பொள்ளாச்சியில் பிறந்து வளர்ந்த இவர், இன்றைக்கு அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆய்வு மையத்தில் உயர் பதவி வகிப்பவர். என் இணைய எழுத்துக்களைப் படித்துவிட்டு என்னை உற்சாகப்படுத்தியவர்.. தமிழ்மணம் வலைத்தளத்தின் மிக முக்கிய பொறுப்பாளரும் ஆவார். அவருக்கு எனது நன்றிகள்.

இப்படி இணையம் என்கிற ஒரு தொடர்பு சாதனத்தின் மூலமாக பல நூறு உள்ளங்களின் அன்பை, நட்பை, ஆசீர்வாதத்தை நான் பெற்றிருப்பதில் மிகவும் மகிழ்கிறேன். இது மென்மேலும் வளரும் வளரும் வளரும் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

வாழ்க நட்பு, வளர்க அன்பு. சரியா?
----

Friday, July 24, 2009

கடவுளின் செல்போன் அழைப்பு!


அதிகாலை நேரம்
அரைத் தூக்கத்தில்
சிணுங்கியது செல்போன்...

பேசுவது யாரெனப்
பார்க்க விருப்பமின்றி
எடுத்துக் காதில் வைத்தேன்.

’’ஹலோ, யாரு?’’ என்றேன்

எதிர்முனையில் ஒரு புதுக்குரல்!

’‘கடவுள் பேசுகிறேன்’’
என்று பதில் வந்த்து.

’’என்னது, கடவுளா?’’

’’ஆமாம், கடவுள்தான் பேசுகிறேன்”

குழப்பத்தோடு
எண்களைப் பார்த்தேன்
0000000000
என்று அனைத்தும் பூஜ்யமாக
பத்து இலக்கங்கள்!
இது எந்த செல்போன்
நிறுவனத்தின் எண்கள்?

தூக்கம் கலைந்தது...

’’சரி இப்ப உங்களுக்கு
என்ன வேண்டும்?’’

’’ எனக்கு எதுவும் வேண்டாம்.
அவசரமாக ஒரு
நல்ல சேதியைச் சொல்லவே
உன்னை அழைத்தேன்’’

’’சொல்லுங்கள்’’

’’நீ மறுபடி பிறக்கப் போகிறாய்’’

’’என்னது?’’

எனக்குள் மேலும் குழப்பம்.

’’மறுபடி பிறக்க வேண்டுமெனில் நான்
மரணித்திருக்க வேண்டுமே?’’

‘’அதைச் சொல்லவே இந்த அழைப்பு!’’

‘’என்னது?’’

‘’ நீ இறந்து விட்டாய்’’

’’இல்லையே, உங்களோடு
பேசிக்கொண்டுதானே இருக்கிறேன்?’’

‘’இனி என்னோடு மட்டும்தான் நீ
பேசிக் கொண்டிருக்கப் போகிறாய்’’

அடக்கடவுளே,
இது என்ன கொடுமை?

’’எப்போது நான் இறந்தேன்?’’

’’சில நொடிகளுக்கு முன்னால்தான்’’

’’எழுபது வயதுவரை ஆயுள் என்று
என் ஜாகதம் கணிக்கப்பட்டிருந்ததே?
இப்போது நாற்பதுதானே ஆகிறது?’’

’’ அது என்னால் கணிக்கப்படவில்லையே!’’

’’அதுசரி, ஒருபாவமும் செய்யாமல்
எப்படி நிகழ்ந்தது என் மரணம்?
பாவத்தின் சம்பளம்தானே மரணம்?’’

’’அந்த வாசகத்தையும் நான் எழுதவில்லையே!’’

‘’சரி நான் மறுபடி
எங்கே, எப்போது, யாராய்
பிறக்கப் போகிறேன்?’’

’’அதுவும் இன்னும்
முடிவு செய்யப்படவில்லை.’’

’’ பிறகு?’’

‘’காத்திருப்போர் பட்டியலில்
உன் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது’’

’’அதுவரை நான் என்ன செய்வது?’’

‘’என்னோடு பேசிக் கொண்டிரு’’

’’உங்களுக்கு அவ்வளவு நேரமிருக்கிறதா?’’

‘’ நேரமிருக்கும்போது பேசுகிறேன்’’

’’எனக்குப் பேசவேண்டுமென தோன்றினால்?’’

’’ஒரு மிஸ்டு கால் கொடு,
நான் அழைப்பேன்.
இப்போது விடைபெறுகிறேன்’’

இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அதிகாலைக் குளிரிலும்
வியர்த்துக் கொட்டியது எனக்கு.

தூக்கம் முற்றிலும் கலைய
என் அறையை சுற்றுமுற்றும் பார்க்கிறேன்.

அது கனவும் இல்லை;
கடவுள் சொன்னது போல நான்
சாகவும் இல்லை.

பிறகு எங்கிருந்து அந்த அழைப்பு?
பேசியது யார்?

திரும்ப அதே 0000000000
எண்ணுக்கு நானே
ரீ டயல் செய்தேன்!

’ப்ளீஸ் செக் த நம்பர்’
என்று பதில் வருமென
எதிர்பார்த்தேன்.

ஆனால் -

’பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனைப் புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்’
என்ற பாடல்
காலர் ட்யூனாகக் கேட்டது!
--------------------