Wednesday, October 31, 2012

ராஜா ராஜாதான் - 2ராஜா சாரின் பாடல்கள் உலகம் முழுக்க கோடிக்கணக்கான இதயங்களில் பதிந்து போயிருப்பதில் ஆச்சர்யமில்லை. அதே போல அவரது பின்னணி இசைக்கும் மாபெரும் மகத்துவம் இருக்கிறது. பலபேர் அதை அவ்வளவு உன்னிப்பாக ரசித்திருக்க மாட்டார்கள். அல்லது அதற்கான சூழ்நிலை அமையாமல் இருந்திருக்கலாம். அவரது சில படங்களின் பின்னணி இசையின் போது ஒரு உதவி இயக்குனராக அருகிலிருந்து பார்த்துப் பார்த்து ரசித்தவன் என்கிற முறையில் அந்த அனுபவங்களை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பரவசம் கொள்கிறேன்.

நூறாவது நாள் படப்பிடிப்பு மொத்தமே 18 நாட்கள்தான் நடந்தது. டப்பிங், டபுள் பாசிட்டிவ் எல்லாம் ரெடி. ராஜா சாரின் பின்னணி இசை நாளுக்காக எல்லோரும் காத்திருக்கிறோம். ஆனால் யாரும் எதிர்பாராதவண்ணம் அவருக்கு வயிற்றில் எதோ சிறு பிரச்னை காரணமாக விஜயா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைக்கிறது. காரணம் ரிலீஸ் தேதி குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தார் தயாரிப்பாளர். வித்தியாச படமென்று தனக்கு பெயர் வரும் என்று காத்திருக்கிறார் இயக்குனர் மணிவண்ணன். ஒரு குழப்பம் நிலவுகிறது.

அதே குழப்பத்தோடு அடுத்த நாள் ஆஸ்பத்திரியில் போய் அவரை சந்திக்கிறோம் நானும் இயக்குனரும். ’’நல்லா ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்காங்க. டிஸ்சார்ஜ் ஆக ஒரு வாரமாவது ஆகும். அதுனால உன் படத்துக்கு அமரை (கங்கை அமரன்) வைச்சு ரீ-ரீக்கார்டிங்கை முடிச்சுக்க’’ என்கிறார் ராஜா. இயக்குனர் முகத்தில் கவலை ரேகை. அதில் அவருக்கு உடன்பாடில்லை என்பதை அவரது முகம் காட்டிக் கொடுத்தது.

’’என்னய்யா யோசிக்கிற?’’ இது ராஜா

’’இல்ல. உங்க ரீ-ரீக்கார்டிங்காகவே சில இடங்களை ஷூட் பண்ணியிருக்கேன். நீங்க பண்ணா அந்தப் படத்தோட ரேஞ்சே வேற மாதிரி இருக்கும்... ஆனா படத்தோட ரிலீஸ் தேதி வேற ஃபிக்ஸ் ஆகிடுச்சு. அதான் ஒரே குழப்பமா இருக்கு.....’’ –இது மணிவண்ணன்

’’சரிய்யா ஒண்ணு பண்ணு. அதை வீடியோல காப்பி பண்ணிட்டு வா. இங்க ஒரு டிவி டெக் ஏற்பாடு பண்ணு. நான் படத்தை அதுல பாத்துட்டு நோட்ஸ் மட்டும் எழுதிக் கொடுக்கிறேன். அதை வச்சு அமர் ரீ-ரீக்கார்டிங்கை முடிச்சிடுவான்...’’ என்கிறார் ராஜா.

இயக்குனர் முகத்தில் அப்படியொரு வெளிச்சம். அவருடைய ரீ-ரீக்கார்டிங் இல்லாமல் படம் தொய்ந்து போகும் என்ற வருத்தமுடன் வந்தவருக்கு ராஜா விருந்து வைத்தே அனுப்பி விட்டதாக நான் உணர்ந்தேன்.

அடுத்த நாள் அவசர அவசரமாக முழுப்படமும் ஒரு வீடியோ கேஸட்டில் பதிவு செய்யப்படுகிறது. அப்போதெல்லாம் டிவிடி, சிடி, பென் டிரைவ் எல்லாம் கிடையாது. ஆஸ்பத்திரியில் ராஜா சாரின் அறையில் ஒரு டிவியும் வீடியோ டெக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சற்றே சோர்வாக இருந்தாலும் ராஜா சார் ஸ்டூடியோவில் இருக்கிற அதே சிரத்தையோடு முழுப்படத்தையும் பார்க்கிறார். படம் முடிந்ததும், மெல்ல சிரித்தபடியே,

‘’நல்லா பண்ணியிருக்கியா... நாளைக்கு வந்து நோட்ஸ் வாங்கிட்டுப் போ’’ என்று வழியனுப்பி வைக்கிறார்.

ராஜா சார் எழுதிய நோட்ஸ்களை அவரது இசைக் குழுவினர் வாசிக்கிறார்கள்- கங்கை அமரன் மேற்பார்வையில். அந்த இரண்டு நாட்களும் ராஜா சார்தான் அங்கே இல்லையே தவிர அவரது இசைக் கோடுகள், திரையில் பரபரவென படத்தின் பின்னணி இசையாக பதிவாகிக் கொண்டே இருக்கின்றன. பின்னணி இசையில்லாமல் தொழில் நிமித்தம் பலமுறை அந்தப் படத்தைப் பார்த்த எனக்கு, ஒவ்வொரு ரீலையும் ராஜா சாரின் பின்னணி இசையோடு பார்க்கிறபோது பிரமிப்பின் உச்சிக்கே போய் வந்தேன்.

படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுதல்களோடு நூறு நாளையும் தாண்டி ஓடியது. அந்தப் படத்தின் வெற்றியை முன்கூட்டியே உணர்ந்ததால்தான்தான் ஆஸ்பத்திரியில் இருந்தாலும் அங்கிருந்தே நோட்ஸ் எழுதிக் கொடுக்க அவருக்கு தோன்றி இருக்கிறது. நடிகர்கள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் உட்பட ஒரு படத்தின் அனைத்து கலைஞர்களுக்கும் ஐம்பது மார்க் என்றால், ராஜா சார் ஒருவர் மட்டுமே தனி ஆளாக மீதி ஐம்பது மார்க்கை பகிர்ந்து கொண்ட படங்கள் அநேகம்.

இதைப் போல இன்னும் சில படங்களின் பின்னணி இசைக் கோர்ப்பிலும் நான் இருந்திருக்கிறேன். ராஜா சார் முதல் நாள் படத்தைப் பார்ப்பார். அடுத்த நாள் அவரது சென்டிமெண்ட்டாக ஐந்தாவது ரீலுக்கு பின்னணி இசையை ஆரம்பிப்பார். ஒரு நாளைக்கு நான்கு ரீல் வரை அது தொடரும். மூன்றாவது நாள் முழுப்படமும் ரெடியாகிவிடும்.

திரையில் எந்தவித இசையும் இல்லாமல் ஒரு நாடகம் போல இருக்கும் காட்சிகள், அவரது இசையில் ஒவ்வொரு ரீலாக உயிர் பெறும் அதிசயம், அந்தக் கலைக்கூடத்தில் நிகழும். சம்பந்தப்பட்ட இயக்குனர்களே மிக ஆனந்தமாக ராஜா சாரின் பின்னணி இசை நிகழ்வை ஒருவித பெருமிதத்தோடும் பிரமிப்போடும் நிறைவான முகபாவங்களோடு ரசிப்பதை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

இப்படி எத்தனையோ ஹிட் படங்களின் இசைக் கோர்ப்பை உடனிருந்து பார்த்து ரசித்த நான், அந்த இசை மேதையோடு பணிபுரிந்த சில படங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்….

கோபுரங்கள் சாய்வதில்லை, நூறாவது நாள், இளமைக் காலங்கள், உதய கீதம், உன்னை நான் சந்தித்தேன், நினைவே ஒரு சங்கீதம், கீதாஞ்சலி, இங்கேயும் ஒரு கங்கை, மனிதனின் மறுபக்கம், உனக்காகவே வாழ்கிறேன்……

ராஜாவைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். சொல்லிக் கொண்டே இருப்பேன்…


>