Friday, January 20, 2012

நான் ரசித்த நாடகம்.... ’கீசகவதம்’(கொஞ்சம் லேட்டான விமர்சனம்)



புராணக் கதைகளை இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு, அவற்றில் சில பகுதிகளை நவீன நாடகமாக்கி மேடையேற்றுவதில் வெற்றி கண்டவர், கூத்துப்பட்டறை நா.முத்துசாமி. அவரது குழுவில் பயிற்சி பெற்று தற்போது டி விருக்‌ஷா என்ற குழுவை நடத்தி வரும் ஸ்ரீதேவி சமீபத்தில் அரங்கேற்றிய நாடகம் ’கீசக வதம்’.

நா.முத்துசாமி எழுதிய நாடக வடிவத்திற்கு முழு வடிவம் கொடுத்து அரங்கப் பொருட்களில் ஒன்றான மாமரம் ஒன்றை மையமாகப் பயன்படுத்தி நவீன நாடக அம்சங்களையும் சேர்த்து, முழுக் கதையையும் நகர்த்திச் சென்ற விதம் புதுமை. ஒரு வருடத்தில் நிகழக்கூடிய கதை சம்பவங்களை ஒன்றரை மணி நேரத்தில் சொல்லி பார்வையாளர்களை அசத்திய நடிகர்களிடம் கடுமையான பயிற்சியும், உழைப்பும் தெரிந்தது.

பாண்டவர்கள் 13 ஆண்டு வனவாசத்தில் கடைசி ஆண்டில் அஞ்ஞாத வாசம் எனப்படும் அடையாளம் தெரியாமல் மறைந்து வாழும் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். விராட நாட்டு மன்னரிடம் வந்து கூத்தாடிகளாக அறிமுகப்படுத்திக் கொண்டு, வெவ்வேறு வேலைகளில் அமர்கிறார்கள். விராட மன்னனின் மைத்துனன கீசகன் வருணனையே கட்டுப்படுத்தும் சூரன். அவனுக்கு சைரேந்திரி என்ற பெயரில் வந்திருக்கும் திரௌபதியின்மேல் மோகம். தன்னை அடைய முயற்சிக்கும் அவனிடமிருந்து காக்கும்படி – சமையற்காரனாக வாழும் – பீமனிடம் அவள் கேட்க, அவன் கீசகனை தந்திரமாக வரவழைத்து வதம் செய்கிறான்.

பாஞ்சாலியாக நடித்த வைசாலி தெலுங்குப் பெண். அவருக்கு தமிழில் நீளமான வசனங்களைக் கொடுத்து நடிக்க வைத்த இயக்குனர் ஸ்ரீதேவியின் துணிச்சலைப் பாராட்டத்தான் வேண்டும். தருமராக வந்த பிரதீப், கீசகனாக வந்த ராம்குமார், கீசகனின் சகோதரி மற்றும் பீமனாக இருவேறு வேடங்களில் வந்த சுல்தான் போன்றவர்கள், ஏற்கனவே நாடகத் துறையிலிருந்து திரையில் ஜொலித்துக்கொண்டிருப்பவர்களைப் போல் (பசுபதி, விமல், வித்தார்த், விஜய சேதுபதி) எதிர்காலத்தில் திரை நட்சத்திரங்களாக ஜொலிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

தருமராக வந்த பிரதீப் கலை சார்ந்த பெண்களை தொடர்ந்து இந்தச் சமூகம் ஏன் கேவலமாகவே பார்க்கிறது என்பதைக் கண்டித்துப் பாடும் பாடல், உண்மை கலந்த வேதனை.

Monday, March 14, 2011

காணாமல் போன கனவு.... தனுஷ்கோடி - ஒரு நேரடி ரிப்போர்ட்




தனுஷ்கோடியின் அவல நிலைகுறித்து நான் எழுதிய நேரடி ரிப்போர்ட் இது - புதிய தலைமுறை வார இதழில் கவர் ஸ்டோரியாக சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது...



‘பாழடைந்து கிடக்கிறது; ஆனாலும் பயங்கர அழகு.. ஆள் நடமாட்டம் இல்லை.ஆனாலும் உயிர்ப்போடு இருக்கிறது. திகில். ஆனால் பரவசம். எல்லாவற்றையும் விட இந்தியாவின் விளம்பில் நின்று கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே ‘ஜிவ்’வென்று இருக்கிறது.’

-சில ஆண்டுகளுக்கு முன் தனுஷ்கோடிக்கு வந்து போன வெள்ளைக்காரர் ஒருவர் எழுதிய வரிகள் இவை. இன்றைக்கும் அந்தக் கடலோர நகருக்குப் பொருந்தும் வரிகள்தான். ஆனால் அந்த அழகிற்குப் பின்னால் ஒளிந்து கிடக்கிறது ஒரு சோகம். அது-

47 வருடங்களாக அரசுகளால் கைவிடப்பட்டு அநாதையாய் நிற்கும் சோகம்.

ஒரு காலத்தில் தினம் இலங்கையிலிருந்து நூற்றுக் கணக்கான பேர் இந்தியாவில் வந்து இறங்கிய இடம்.. சென்னையிலிருந்து இந்தோ-சிலோன் போட் மெயில் மூலமாக வரும் பயணிகள், ரயிலிலிருந்து இறங்கி கப்பல் மூலம் தலைமன்னார் செல்வதற்காக ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்ட தளம் அது. இராமாயணத்திலும் சங்க இலக்கியத்திலும்பேசப்படும் இடம். வங்க கடலும் இந்துமாக் கடலும் இணையும் புள்ளி.
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த ஊர், 47 ஆண்டுகளுக்கு முன் ஒரு நள்ளிரவில் கடலின் சீற்றத்தால் காணாமல் போனது. 1964 டிசம்பர் 22, செவ்வாய் இரவு வீசிய பெரும் புயல், தனுஷ்கோடியில் வாழ்ந்த ஆயிரக்கணக்கானவர்களை பலி கொண்டதோடு அந்தக் கிராமத்தையே உருத்தெரியாமல் ஆக்கிப் போனது. அன்று, ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் ஸ்டேஷன், சுங்க வரி அலுவலகம், தபால் நிலையம், பள்ளிக்கூடம், இந்துக் கோயில்கள், தேவாலயங்கள், கடைத்தெரு என 500 மீனவக் குடும்பங்கள் உட்பட பல்வேறு இனத்தவருமாக கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வசித்த ஊர் எனப் பரபரப்பாக இயங்கிய தனுஷ்கோடி, இன்று ‘வாழத் தகுதியற்ற பகுதி’

சரி புயல் காரணமாக மக்கள் வாழத் தகுதியற்ற இடமாகவே அது ஆகிவிட்ட்தாகவே இருக்கட்டும். அப்படி ஆகிவிட்டால் அதைப் புதுப்பிக்கும் கடமை அரசுக்குக் கிடையாதா? 2006ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரமைக்கப்பட்டு, புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு அவை இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டன. ஆனால், 1964ல் கிட்டத்தட்ட சுனாமி போல ராட்சத அலைகளால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி மட்டும் இன்னும் ஒரு சாலை கூட சரி செய்யப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது ஏன்?

இதற்கு தெளிவாக விடை சொல்பவர்கள் யாரும் இல்லை. நிறைய ஊகங்கள்தான் விடையாகத் தரப்படுகின்றன. தனுஷ்கோடியிலிருந்து இலங்கை 15 கீ.மீ.தான். கிழக்குக் கடற்கரையோரம் இலங்கைக்கு நெருக்கமாக உள்ள வேதாரண்யம், கோடிக்கரை, நாகப்பட்டினம் போன்ற பகுதிகள் தமிழ்நாட்டின் நிலப்பகுதியோடு இணைந்த பகுதியாக உள்ளன. அங்கே பாதுகாப்பை, கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதும், கண்காணிப்பதும் அதிகம் சிரமான விஷய்ம் அல்ல. ஆனால் தனுஷ்கோடி தீவு. இலங்கையில் உள்நாட்டுப் போர் இருந்த சூழலில் தனுஷ்கோடி மீண்டும் உயிர்த்தெழுவதை பாதுகாப்புக் காரணங்களுக்காக அரசுகள் விரும்பவில்லை எனச் சொல்லப்படுகிறது.

இது குறித்துப் பேச இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகினோம். தனுஷ்கோடியின் மறுசீரமைப்பு குறித்துப் பேச வேண்டும் என்றதுமே, "அது குறித்த முந்தைய தகவல்களை சேகரித்து விட்டு அழைக்கிறோம்" என்று அவரது உதவியாளர் நமது தொடர்பு எண்ணை வாங்கி வைத்துக்கொண்டார். ஆனால், அவரிடமிருந்து அழைப்பு வராததால் மீண்டும் நாமே தொடர்பு கொண்டபோதும் விரைவில் அழைப்பதாகவே பதில் வந்தது.

அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. ஹசன் அலியை தொடர்பு கொண்டபோது, "நான் இப்போது சட்டமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருக்கிறேன். இராமேஸ்வரத்தை பெருநகரமாக ஆக்கச் சொல்லி சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்திருக்கிறேன். அதைத் தொடர்ந்து தனுஷ்கோடிக்கும் வழி பிறக்கும்" என்றார் சுருக்கமாக

ஆனால் இப்போது உள்ள ஆட்சியின் கடைசி சட்டமன்றத் தொடரும் முடிந்து விட்ட்து. இனித் தேர்தல் முடிந்து புதிய சட்டமன்றம் அமைந்த பிறகு குரல் எழுந்தால்தான் உண்டு.
"பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில் ரயில்வே துறை அமைச்சராக இருந்த நிதிஷ்குமாரை தனுஷ்கோடிக்கே வரவழைத்து, அதன் அவலத்தைப் பார்வையிட வைத்தேன். அவரும் ரயில்வே துறை அதிகாரிகளை அழைத்து, தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து அமைக்க எவ்வளவு செலவாகும் என்று திட்டமிடச் சொன்னார். அவர்களும் 40 கோடி ரூபாய்க்கு ஓர் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார்கள். ஆனால், ஆட்சி மாற்றம் காரணமாக அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. சேது சமுத்திரத் திட்டம் மூலம் இதுவரை 600 கோடி ரூபாய் வரை கடலில் வீணடித்திருக்கும் இந்த அரசு, வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஊருக்கு ஒரு சாலை கூடப் போட முன்வரவில்லை " என்கிறார் பி.ஜே.பி.யின் தேசியப் பொதுக்குழு உறுப்பினரான இராமேஸ்வரத்தைச் சேர்ந்த கே.முரளிதரன்.

வாழத் தகுதியற்ற ஊர் என அரசாங்கம் அறிவித்து விட்டாலும், இன்றைக்கும் தனுஷ்கோடியிலும் அதனைச் சுற்றி இருக்கும் கடற்கரை கிராமங்களிலும் சுமார் 600 மீனவக் குடும்பங்கள், தாம் வாழ்ந்த அந்தக் கடற்கரை மண்ணை விட்டுப் பிரிய மனமில்லாமல் இன்றைக்கும் அங்கேயே மீன் பிடித்துப் பிழைக்கிறார்கள். (தனுஷ்கோடியைச் சுற்றியுள்ள பகுதியில் மீன் வளம் அதிகம். கடலின் நீர்மட்டம் குறையும் போது முழங்கால் அலவு நீரில் இறங்கி வெறும் கையாலேயே மீன் பிடிக்கலாம்!). ஓலைகளால் வேயப்பட்ட குடிசைகளில் தங்கி. மணலைத் தோண்டி சின்னச் சின்ன கிணறுகளை அவர்களே ஏற்படுத்திக் கொண்டு அதிலிருந்து கிடைக்கும் குடிநீரையே பருகி வாழ்கிறார்கள். மின்சாரம் அறவே கிடையாது. ஊருக்குள் ஒரே யொரு டீக்கடை இருக்கிறது. அனைவரது வீட்டிலும் இருக்கும் ஃபிளாஸ்கில் டீ வாங்கி வைத்துக் கொண்டு அவ்வப்போது அதைப் பருகுகிறார்கள். காய்கறிக்கடை வசதியெல்லாம் இல்லாததால் தினமும் விற்பனைக்காகப் பிடிக்கும் மீன்களில் ஒருசிலதான் அவர்களின் தினசரி சமையல்.

‘வாழத் தகுதி இல்லாத ஊர்’ என அறிவித்திருக்கும் அரசாங்கம் இந்த ஊரில் ஒரு நடுத்தரப் பள்ளியை நடத்திக் கொண்டிருக்கிறது என்பது ஒரு இனிய ஆச்சரியம். அங்கே 73 மாணவர்கள் பயில்கிறார்கள். ஒரு தலைமை ஆசிரியை, இரண்டு ஆசிரியைகள், ஒரு சத்துணவு அமைப்பாளர் இதற்காக நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். பஸ் வசதி இல்லாத காரணத்தால் அந்த ஆசிரியைகள் தினசரி ஏழு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு ஆபத்தான வேன் பயணத்தின் மூலமாகத்தான் வந்து போவதாக வேதனையோடு தெரிவிக்கிறார்கள். தங்கள் பெயரையோ, புகைப்படத்தையோ வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அந்த ஆசிரியர்கள் தாங்கள் படும் சிரமங்களைப் பற்றிச் சொன்னார்கள்,

"இங்க டிரான்ஸ்ஃபர் ஆகி வந்த பிறகுதான், இந்த ஸ்கூலுக்கு வந்துபோக பஸ் கிடையாதுன்னு தெரிஞ்சுது. சுற்றுலாப் பயணிகள் வரும் வேன்லதான் நாங்களும் தினசரி வர்றோம். எங்களிடம் சில டிரைவர்கள் பத்து இருபது மட்டும் வாங்கிக்குவாங்க. சில பேரு இலவசமா இறக்கி விடுவாங்க. சில நாட்கள்ல, பயணிகள் கூட்டம் சேரலைன்னு வேனை எடுக்க மாட்டாங்க. அப்ப நாங்க இந்த மணல் பாதை வழியா தனியா நடந்தே வந்துட்டு, சாயந்திரம் நடந்தே போவோம். பல நாட்கள் தினசரி பதினான்கு கிலோ மீட்டர் வரை நடந்திருக்கோம். மழை நாட்களில் மிகவும் சிரமம். ஆனால், குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கிறோம் என்கிற மன நிறைவு ஒன்றுதான் எங்களுக்குக் கிடைக்கும் நிம்மதி" என்கிறார்கள் சோர்ந்துபோன குரலில்.

தங்க நாற்கரச் சாலைகள் இந்தியா நெடுக நீண்டு கிடைக்கின்றன. ஆனால் இந்தத் தீவிற்குக் கடற்கரை மணலின் ஊடாகச் செல்லும் ஒரு ஒற்றையடிப்பாதைதான் சாலை. முகுந்தராயர் சத்திரம் என்னும் இடம் வரை பஸ்ஸிலோ காரிலோ வந்து, அங்கிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனுஷ்கோடிக்கு வேனில்தான் பயணிக்க வேண்டும். வட நாட்டிலிருந்து புனிதப் பயணம் வருபவர்களுக்காகவும், சுற்றுலாப் பயணிகளுக்காகவும் சுமார் ஐம்பது பழைய வேன்கள் முகுந்தராயர் சத்திரத்தில் காத்திருக்கின்றன. ஓர் ஆளுக்கு கட்டணம் எண்பது ரூபாய். பத்து பேர் மட்டுமே அமரக் கூடிய அந்த வேன்களில் சுமார் முப்பது பேர் வரை ஏற்றிக் கொள்கிறார்கள். அந்த வேன் டிரைவர்களில் முக்கால்வாசிப் பேர், இருபதை தொட்டிருக்கும் இளைஞர்கள். அவர்களிடம் ஆட்டோ ஓட்டுவதற்கான ‘பேட்ச்’ மட்டுமே இருக்கிறது. ‘நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான ஹெவி லைசேன்ஸ் அநேகம்பேரிடம் கிடையாது’ என்பதை ஒப்புக் கொள்கிறார் ஒரு மூத்த டிரைவர்.

ஒத்தையடிப் பாதையாக, கடற்கரை மணலில் புதைந்தபடியே வளைந்து வளைந்து, குலுங்கியபடியே செல்லும் ஆபத்தான அந்தப் பயணத்தில் எந்நேரமும் அந்த வேன் கவிழ்ந்து விடும் என்கிற உணர்வு ஏற்படுகிறது. இப்படி தினசரி ஐநூறு பயணிகளாவது தனுஷ்கோடிக்கு வந்து போகிறார்கள். விடுமுறை நாள்களில் இந்த எண்ணிக்கை இரண்டு மூன்று மடங்காகிறது. ஐயப்ப சீசனின்போது கூட்டம் இன்னும் அதிகரிக்குமாம்.

"இராமயணத்தைப் படித்து முடித்ததும் அது நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில்தான் தனுஷ்கோடி வந்தேன். ஆனால், ஆபத்தான இந்த வேன் பயணம் தற்கொலைக்கு சமம் என்பதால் ஏழு கிலோ மீட்டர் தூரம் நடந்தே போய் வந்தேன். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு உங்கள் அரசாங்கம் போக்குவரத்து வசதிகள் செய்யாதது ஏன்?" என்று கேள்வி கேட்கிறார் போலந்து நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணியான ரசே.

"புயல் வந்தன்னைக்கு தன் குடும்பத்தோட அடுத்தவங்க புள்ளை குட்டிகளையும் தலைமேல தூக்கி வச்சுக்கிட்டு நீந்தி கரை சேர்த்திருக்காரு எங்கப்பா. அதனாலேயே அவருக்கு ‘ நீச்சல்’ காளினு பேரு.. நான் எவ்வளவோ வற்புறுத்திக் கூப்பிட்டும் இந்த தனுஷ்கோடிய விட்டு கடைசிவரைக்கும் வெளியே வரமாட்டேன்னு பிடிவாதமா இருந்து போன வருஷம்தான் செத்துப் போனாரு. ‘மறுபடியும் தனுஷ்கோடிக்கு உயிர் வரும்டா’ன்னு நம்பிக்கையோட சொல்லிக்கிட்டிருந்தவரு, போன வருஷம்தான், தொண்ணூத்தி ரெண்டு வயசுல உசுர விட்டுட்டாரு. அவரு சொன்னமாதிரி இந்த தனுஷ்கோடிக்கு ஒரு ரோடு போடச் சொல்லி பல அதிகாரிகளச் சந்திச்சு மனு கொடுத்துக்கிட்டே இருக்கேன்" என்கிறார் தனுஷ்கோடியைச் சேர்ந்த டி.எம்.இ. படித்த மீனவரான காளி. நம்புராஜன்.

அந்த மக்கள் கேட்பதெல்லாம் ஒரு சாலை. ஆனால் 47 வருடங்களாக அது அவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் வாழத் தகுதி இல்லாத அந்த ஊர் இப்போதும் அரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தனுஷ்கோடியில் சினிமாப்படம் எடுக்க விரும்புவர்களிடம் அரசு ஒரு நாளைக்கு மூவாயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது.

தனுஷ்கோடியை மீண்டும் சீரமைக்க என்ன செய்ய வேண்டும்? அப்படிச் செய்வதனால் என்ன பயன்?

" ரோடு வசதி தனுஷ்கோடிக்கு வந்துட்டா, பக்தர்கள் கூட்டமும் சுற்றுலா பயணிகளும் பெருமளவில் வர வாய்ப்பிருக்கு. அதன்மூலம் அரசுக்கும் இங்குள்ள மக்களுக்கும் வருமானம் பெருகும்" என்கிறார் இராமேஸ்வரத்தில் டூரிஸ்ட் கைடாக பணியாற்றும் மாரிப்பிச்சை. 64ம் வருடத்திய புயலின்போது, தனுஷ்கோடி துறைமுகத்தில் போர்ட்டராக இருந்த இவரின் தாத்தாவால் தப்பிப் பிழைத்தவர் இவர்.

"தமிழக அரசு, சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூலம் தனுஷ்கோடியை புதுப்பித்து, ஓர் அழகான கடற்கரை கிராமமாக இதை உருவாக்கலாம். பக்தர்கள் தங்க லாட்ஜ்கள், வெளிநாட்டவர்களுக்கு ரிசார்ட்ச் என்று அமைத்தால் இந்தியாவிலேயே மிகச் சிறப்பான வரலாற்றுச் சின்னமாகவும், சுற்றுலா ஸ்தலமாகவும் தனுஷ்கோடி பிரபலமடைய வாய்ப்பிருக்கிறது" என்று யோசனை தெரிவிக்கிறார் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளரான வி.துரைசிங்கம்.

ஆனால் இளைஞரும், இராமநாதபுரத்தைச் சேர்ந்த வலைப்பதிவருமான முகவைத் தமிழன் என்கிற ரெய்சுதீன் சொல்லும் யோசனை இவற்றையெல்லாம் விட ஆக்கபூர்வமானது. "இலங்கையின் நல்லுறவை விரும்பும் இந்திய அரசு, தனுஷ்கோடியை மறுசீரமைத்து கப்பல் போக்குவரத்தை துவக்கலாம். அதன் மூலமாக இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை இந்த மாவட்டத்தின் நரிப்பையூரில் அமைத்ததைப் போலவே, தனுஷ்கோடியிலும் அமைத்தால் இராமேஸ்வரம் உட்பட அந்தப் பகுதி மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும்.” என்னும் முகவைத் தமிழன் சினிமாக்காரர்ர்கள் மீது சீறுகிறார்.

“தனுஷ்கோடியை சினிமாக்காரர்கள் படப்பிடிப்பிற்காகப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும். ‘விஷுவல் பியூட்டி’ என்ற காரணத்திற்காக அங்கே பாடல் காட்சிகளைப் படமாக்கும்போது, இடிந்து போன சர்ச் மற்றும் கட்டிடங்களின் மீது குரூப் டான்சர்களை ஏற்றி ஆட வைப்பது மிகவும் கொடுமையானது. ஆயிரக்கணக்கானவர்கள் செத்து மடிந்து அந்த மண்ணில் புதைந்து போயிருக்கும்போது அதன் மேலே இப்படி ஆட விட்டுப் படம் பிடிப்பது வேதனைக்குரியது" என்கிறார் முகவைத் தமிழன்

இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு நீச்சல் காளி ஊடகங்களிடம் தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். தனுஷ்கோடியின் தெற்கு மூலையில் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. அவர் சிறுவனாக இருந்த காலத்தில் அதன் முன் உள்ள திடலில்தான் அவர் விளையாடிக் கொண்டிருப்பார். 1964 புயலின் போது ராட்சச அலைகள் தனுஷ்கோடியைத் தின்ற போது, அந்தப் பிள்ளையார் கோயிலும் கடலுக்கடியில் மூழ்கிப் போனது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் அந்தப் பிள்ளையார்கோயிலின் உச்சி வெளியே தெரிய ஆரம்பித்த்திருப்பதாகவும் அதைத் தான் கண்ணால் கண்டதாகவும் காளி தெரிவித்தார்.

“கடல் பின் வாங்குகிறது. இனி மெல்ல மெல்ல பழைய தனுஷ்கோடி நமக்குக் கிடைத்துவிடும்” என்று அவர் மிக மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருந்தார்.
தனுஷ்கோடி மீண்டு விட வேண்டும் என்ற ஒரு கிழவனுடைய உள்மனதின் ஆசையாக, கனவின் பிரதிபலிப்பாகக் கூட அது இருந்திருக்கலாம். ஆனால் அரசு மனது வைத்தால் இப்போதும் கூட தனுஷ்கோடியை சீரமைத்து உயிர்ப்பிக்கலாம்.

மனது வைக்குமா? அல்லது வெறும் கனவாகவே போய்விடுமா?

நன்றி: புதிய தலைமுறை

Friday, June 25, 2010

விஜய்க்கு கதை சொன்ன கதை!



இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் திரைக்கதை விவாதக் குழுவில் பணியாற்றுகிறபோது, அப்போது தயாரிப்பில் இருக்கும் படத்தைத் தவிர்த்து அனைவரிடமும் வேறு எதாவது ஒரு கதை சொல்லச் சொல்லிக் கேட்பதை வழக்கமாக்கி இருந்தார். அப்படியொரு நாளில் என்னிடம் இருந்த ஒரு இரட்டை வேடக் கதையின் சுருக்கத்தை அவரிடம் சுமார் முப்பது நிமிடத்தில் சொல்லி முடித்தேன். ’லைன் வித்தியாசமா இருக்கே... முழு திரைக்கதையோடு நாளை உதவி இயக்குனர்களையும் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா?’ என்று கேட்டார்.
அடுத்த நாள் இயக்குனர், அவரது முன்னாள் உதவி இயக்குனரும் இந்நாள் நகைச்சுவை நடிகருமான ரமேஷ் கிருஷ்ணா, மற்றும் சில உதவி இயக்குனர்கள் இருக்க அந்தக் கதையை ஒவ்வொரு சீனாக சுமார் இரண்டு மணி நேரம் சொல்லி முடித்தேன். கதையில் ஒருசில திருத்தஙகளைச் சொன்ன இயக்குனர் ’இது விஜய்க்கு சரியா இருக்கும். இன்னும் கொஞ்சம் டெலவப் பண்ணுங்க’ என்று சொல்லி விட்டார். அப்போது அவர் விஜயோடு இணைந்து ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த ப்ராஜெக்ட் தள்ளிப் போனது. அதனால் எனது அந்த இரட்டை வேடக் கதை அப்படியே ஃபைல் அளவிலேயே இருந்தது.
அதன்பின்னர் அழகிய தமிழ்மகன் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து அது வெற்றிகரமாக போகாததால் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதையே தவிர்த்து வந்தார். சமீபத்தில் விஜய்க்கு நெருக்கமான உதவி இயக்குனர் ஒருவரைச் சந்தித்தபோது எனது இரட்டை வேடக் கதையை அவரிடம் சொன்னேன். கேட்ட அவரோ மிகுந்த உற்சாகத்தோடு, ‘இது விஜய் சாருக்கு சூப்பரா இருக்கும். அவரையே கதை கேட்கச் சொல்றேன்’ என்று சொல்லிச் சென்றார். சொன்னபடியே விஜய் பிறந்த நாளான ஜூன் 22 அன்று விஜயைச் சந்தித்த அந்த உதவி இயக்குனர் என்னிடமுள்ள கதை பற்றி சொல்லி இருக்கிறார். இரண்டு நாளில் ஒரு அலைபேசி அழைப்பு.
‘’ விஜய் சார் வீட்டுலேர்ந்து ராஜேந்திரன் பேசுறேன். சார் உங்களை கதை சொல்றதுக்காக 25 வெள்ளி காலை பதினோரு மணிக்கு அவரோட நீலாங்கரை வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கார்’’
அதே நாள் அதே நேரத்திற்கு சற்று முன்னதாகவே ஆஜரானேன். ராஜேந்திரன் வரவேற்று அந்த பங்களாவிலேயே ஒட்டிக் கொண்டிருந்த இன்னொரு பகுதியான அலுவலக அறையில் அமர வைத்தார்.
விஜயோடு அவரது ரசிகர்கள் எடுத்துக் கொண்ட படங்களை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் விஜய் வீட்டில் அவர் ஜாக்கிஷானின் ரசிகராக அவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பெரிதாக சுவற்றில் மாட்டியிருந்ததைப் பார்த்தபோது ஒவ்வொரு நடிகனுக்குள்ளும் ஒரு ரசிகன் இருக்கிறான் என்பது தெரிந்தது. சரியாகப் பதினோரு மணிக்கு கேஷுவல் டிரஸில் உள்ளே வந்த விஜய் ’ஹலோ சார்’ என்று கைகுலுக்கி எதிரே அமர்ந்தார். என்னைப் பற்றி விசாரித்தார். நான் பணி புரிந்த படங்கள் பற்றியும் கே.எஸ்.ரவிகுமார் அவர்களின் திரைக்கதை விவாதங்களில் கலந்து கொண்டது குறித்தும் நான் சொன்னதைக் கேட்டுக் கொண்டு,
’இந்தக் கதைய ரவிகுமார் கேட்டிருக்காரா?’ என்று கேட்டார். நான் முன்னர் நடந்த விஷயத்தைச் சொல்லி அப்போது ஏனோ உங்களுடன் சந்திப்பு நிகழவில்லை என்பதைச் சொன்னேன்.
’நீங்க ரெடின்னா ஆரம்பிக்கலாம்’ என்று சொன்னவர், ‘என் wife உங்க கதைய கேட்கலாமா, if u don’t mind ‘ என்று கேட்டார். ‘தாராளமாக வரச் சொல்லுங்கள்’ என்றேன். உடனே தன் செல்போனில் மனைவியை அழைத்து ’வாம்மா’ என்றார். சற்று நேரத்தில் விஜய் துணைவி அங்கே வர அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். கூடவே அவர்களது வாரிசும்.
இடது புற ஷோபாவில் அவரது துணைவியும் மகனும் இருக்க மேஜையின் எதிர்புறத்தில் விஜய் இருக்க நான் கதை சொல்ல ஆரம்பித்தேன்.
அவரிடம் கதை சொல்ல அனுப்பிய அந்த உதவி இயக்குனர் ஏற்கனவே ஒரு விஷயத்தைச் சொல்லியிருந்தார்.
‘ விஜய் சார் கதை கேட்கும்போது அவரது முகத்தில் எந்தவித ரீயாக்‌ஷனும் இருக்காது. நகைச்சுவை காட்சிகளில்கூட சிரிக்க மாட்டார். அதுனால நீங்க அப்செட் ஆகிடாதீங்க.’
அப்படித்தான் இருந்தார். ஆனால் அவரது துணைவியார் முகத்தில் சில இடங்களில் ரீயாக்‌ஷன், சிரிப்பைக் காண முடிந்தது. அவரது மகன் முகத்திலோ ஒருசில நகைச்சுவை காட்சிகளைச் சொல்லும்போது (தன் அப்பாவையும் அம்மாவையும் பார்த்துக் கொண்டே) பாதி சிரிப்பை பார்க்க முடிந்தது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருபது நிமிஷங்களில் அந்த இரட்டை வேடக் கதையைச் சொல்லி முடித்தேன்.
’சரிம்மா நீங்க உள்ள இருங்க’ என்று அவர்களை உள்ளே அனுப்பி விட்டு என் பக்கம் திரும்பினார் விஜய்.
கதை பற்றிய கருத்துக்களைக்கூட உடனே வெளிப்படுத்த மாட்டார் என்றும் அந்த உதவி இயக்குனர் முன்னரே சொல்லியிருந்த்தால் நானும் அதை எதிர்பார்க்காமல் விடைபெறவா என்றேன்.
’ஓக்கே சார்.. நான் தொடர்பு கொள்கிறேன்’ என்றார்.
’இதே மாதிரி சிங்கிள் ஹீரோ கமர்ஷியல் சப்ஜெக்ட் ஒண்ணு இருக்கு. உங்களுக்கு சரியா இருக்கும். டைட்டில் அக்பர்’ என்றேன்.
’இன்னொரு நாள் அதையும் கேட்டுர்றேன்’ என்று வழியனுப்பி வைத்தார் விஜய்.
அவர் தரப்பிலிருந்து அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்....
சினிமாவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். விஜயிடமிருந்து அழைப்பு வராமலும் போகலாம். இல்லை எனது அந்த இரட்டை வேடக் கதையில் விஜய் நடிக்கும் அறிவிப்பும் வரலாம்.
இரண்டையும் நிறைவோடு ஏற்றுக் கொள்வதுதான் நான்.
-----------

Sunday, April 11, 2010

ஏ.ஆர்.ரஹ்மானின் பிரத்யேகப் பேட்டி






கடந்த பதினெட்டு வருடங்களாகத் தன் இசையால் மக்களின் மனதை ஆக்கிரமித்திருப்பவர் இசையமைப்பாளர். ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கார் பரிசை அவர் வென்றபோது ஒரு தமிழராக ஒவ்வொருவரையும் பெருமையடையச் செய்தவர். இந்தப் பெருமைகளின் பட்டியலில் அண்மையில் வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதும், சர்வதேச அளவில் வழங்கப்படுகிற ‘கிராமி’ விருதும் இணைந்து கொள்கின்றன.
வாழ்வின் அடித்தளத்திலிருந்து ஆரம்பித்து, ஆரவாரம் இல்லாமல் அடுத்தடுத்து சாதனைகளைக் குவித்துக் கொண்டு போகும் ஏ.ஆர்.ரஹ்மானின் வெற்றியின் ரகசியம்தான் என்ன? உழைப்பா? கற்பனைத் திறனா? தொழில்நுட்ப அறிவா? மனம் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். அந்த மனதைப் படம் பிடித்து உங்களோடு பகிர்ந்து கொள்ள முடிந்தால்?
’’புதிய தலைமுறை பத்திரிகையில் இப்போது நான் அஸிஸ்டண்ட் எடிட்டராக இணைந்திருக்கிறேன். அந்தப் பத்திரிகைக்கு ஒரு நேரடி ஸ்பெஷல் பேட்டி வேண்டும்’’ என்று ரஹ்மானுக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தேன். சில நாட்களிலேயே திடீரென ஒருநாள் பதில் அனுப்பியிருந்தார்.
’இன்று மாலை ஐந்து மணிக்கு ஓக்கேவா?’
என்று அந்த மெயிலில் என்னைக் கேட்டிருந்தார். உடனே ஓக்கே சொன்னேன். அடுத்த சில மணித்துளிகளில் அவரது தனி உதவியாளர் திரு.முகமத் ஃபைஸ் என்னை செல்லில் அழைத்து ’’மாலை ஐந்து மணிக்கு சார் உங்களை வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறார்’’ என்று சந்திப்பை உறுதி செய்தார். அந்த இனிய மாலை வேளையில் ரஹ்மானோடு அந்த இனிய சந்திப்பு நிகழ்ந்தது. என்னோடு வந்திருந்த புதிய தலைமுறையின் உதவி ஆசிரியர்களான யுவகிருஷ்ணா, கவின்மலர், அதிஷா, புகைப்படக் கலைஞர் அறிவழகன் ஆகியோரை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். இன்முகத்தோடு கைகுலுக்கி அவர்களை அமரச் சொன்னார். நலம் விசாரித்தலுக்குப் பிறகு நேர்காணல் துவங்கியது. எங்களின் கேள்விகளுக்கு எந்தவித குழப்பமோ தடுமாற்றமோ இல்லாமல் சரளமான பதில்கள் . புன்னகையோடு வந்து விழுந்து கொண்டிருந்தன.
இதோ அவரது பிரத்யேகப் பேட்டி துவங்குகிறது.....


கேள்வி: ஆஸ்கார் வாங்கிய மேடையில் அன்பு, வெறுப்பு இரண்டில் அன்பின் வழியைத் தேர்ந்தெடுத்ததாக நீங்கள் கூறினீர்கள். வலி நிறைந்த வார்த்தைகளாக அவை தோன்றின. அதற்கு அடிப்படைக் காரணம் என்ன?

ரஹ்மான்: எல்லோருக்கும் வாழ்க்கையில் இரண்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். இப்படியும் போகலாம். அப்படியும் போகலாம். எந்த விஷயமுமே எளிதில் கிடைத்துவிடாது. பல சர்ச்சைகளைக் கடந்து முன்னேற வேண்டியிருக்கிறது. போட்டிகள் நிறைந்த உலகம் இது. மீடியாவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஏனெனில், நிறையப் பேர் நம்மை எரிச்சல்படுத்த முயல்வார்கள். அவர்களுக்கு காரசாரமாகப் பதில் சொல்வது ஒரு வழி. அமைதியாய், நிதானமாய் பதில் சொல்வது இன்னோர் வழி. நான் இந்த இன்னோர் வழியைத் தேர்ந்தெடுத்தேன். இது எல்லா விஷயத்திற்கும் பொருந்தும்.

கேள்வி: உங்களுடைய அந்த ஆஸ்கார் பேச்சு, உங்கள் வயதைத் தாண்டிய முதிர்ச்சியோடு இருந்தது. இந்த முதிர்ச்சியை நீங்கள் எப்படிப் பெற்றீர்கள்?

ரஹ்மான்: சின்ன வயதிலேயே எனக்கு ஏற்பட்ட இழப்புகள் காரணமாக இந்த முதிர்ச்சி வந்திருக்கலாம். சின்னப்பையனாக இருந்தபோதே ஸ்டுடியோவில் வேலைக்குச் சென்று விட்டேன். அங்கே வாழ்க்கையைக் கற்றுக்கொண்டேன். மரணத்தை நினைவுகூர்வதேகூட உங்களுக்கு முதிர்ச்சியைக் கொடுக்கும். நேற்று ஒரு ஆவணப்படம் பார்த்தேன். பதினாறாவது நூற்றாண்டில் வாழ்ந்த தெரசா என்கிற கிறிஸ்துவப் புனிதர் பற்றிய படம் அது. வாழ்க்கை என்பது விலை மலிவான விடுதியில் ஓர் இரவைக் கழிப்பதற்கு சமம் என்கிறது அந்தப்படம். வாழ்க்கை அந்தளவு தற்காலிகமானதுதான். இதை நான் சிறுவயதிலேயே உணர்ந்துவிட்டதாலோ என்னவோ, ஒருவேளை நான் முதிர்ச்சியோடு இருக்கலாம்.

கேள்வி: மிகவும் கீழேயிருந்து உயரத்திற்குச் சென்றிருக்கிறீர்கள். உங்களைப் பொறுத்தவரை இந்த உயரத்திற்குச் சென்றதற்கான ஃபார்முலா என்ன?

ரஹ்மான்: என்னுடைய ஃபார்முலா என்று எடுத்துக்கொண்டால், நான் சூஃபியிஸத்திற்கு மாறிய பிறகு என் ஒட்டுமொத்த வாழ்க்கையே மாறிப்போனது. அதன் தத்துவங்களின்பால் நான் ஈர்க்கப்பட்டேன். அதற்குப்பிறகு என் குடும்பத்தை முக்கியமாகச் சொல்ல வேண்டும். என் அம்மா, சகோதரிகள், மனைவி, குழந்தைகள் இப்படி ஒவ்வொருவரும் என்னுடைய முன்னேற்றத்தில் பங்காற்றியிருக்கிறார்கள். குடும்பம் அமைதியானதாக இருந்தால்தான் உங்களால் நிம்மதியாக வேலை செய்ய முடியும். அவர்கள் என்னை ஊக்குவிக்கிறார்கள். நான் பணிக்குச் செல்லும்போது அவர்கள் எனக்கு ஆதரவளிக்கிறார்கள். நான் இப்போதிருக்கும் நிலைக்கு என் குடும்பம்தான் மிக முக்கியக் காரணம் என்று நான் சொல்வேன். அவர்கள் எனக்குத் தொல்லை கொடுத்தால், என்னால் எந்த வேலையையும் செய்ய முடியாது போயிருக்கும்.

கேள்வி: சூஃபியிஸம் உங்கள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகச் சொன்னீர்கள். நீங்கள் சின்ன வயதிலேயே இசைத் துறைக்கு வந்து விட்டீர்கள். அதன்பிறகுதான் மதம் மாறியிருக்கிறீர்கள். என்ன காரணம்?

ரஹ்மான்: அறிஞர்களும் சிந்தனையாளர்களும் சொல்வதுபோல மனித மனதில் எப்போதும் உண்மைக்கான தேடல் இருந்துகொண்டே இருக்கும். நாம் எங்கே கீழே சாய்ந்தாலும் அங்கே ஏதோ உண்மை இருக்கிறதென்று தேடிக்கொண்டே இருப்போம். அது காந்தம்போல. ஆன்மீகத்திற்கு அப்படி ஒரு கவர்ந்திழுக்கும் தன்மை உண்டு. எந்த வழி என்பது வேண்டுமானால் வேறுபடலாம். பௌத்தமாக இருக்கலாம், இந்து மதமாக இருக்கலாம், சூஃபியிஸமாக இருக்கலாம். ஏன், நாத்திகமாகக்கூட இருக்கலாம். ஆனால், ஏதோ ஒரு வழியில் மனிதன் போயாக வேண்டும். எனக்கும் என் குடும்பத்திற்கும் ஆசீர்வதிக்கப்பட்டது சூஃபியிஸமாக இருந்தது. அதுதான் காரணம்.

கேள்வி: ஆன்மீகம் உங்கள் வெற்றிக்குப் பயன்பட்டதா?

ரஹ்மான்: முக்கியமாக நாம் எடுக்கும் முட்டாள்தனமான முடிவுகள் எல்லாமே பாதுகாப்பின்மையால் வருவதுதான். நேற்றுகூட எனக்கு ஓர் எஸ்.எம்.எஸ். வந்தது: ‘நீங்கள் ஆபீஸ் போவதற்கு தயாராய் இருக்கிறீர்கள். அந்தச் சமயத்தில் உங்கள் மகள், உங்கள் மீது காபியைக் கொட்டி விடுகிறாள். கொட்டியது கொட்டியதுதான். அதை, இல்லை என்று செய்ய முடியாது. அந்தச் சமயத்தில் கோபத்தை மட்டுப்படுத்திக் கொண்டு, ‘அடுத்த முறை பார்த்து வேலை செய். கொட்டாமல் பார்த்துக்கொள்’ என்று சொல்லலாம் அல்லது கோபத்தோடு பளாரென்று ஓர் அடி அடித்துவிட்டு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி, லேட்டானதற்கு பரபரப்பாகி, ஒன்றுமில்லாத விஷயத்திற்கு நேரத்தையும் சக்தியையும் வீணாக்கலாம். அந்த மாதிரி சமயங்களில் என்ன செய்வீர்கள்? நமக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. ஒன்று, மன்னிக்கும் வாய்ப்பு. இரண்டு, பிரச்சினை செய்வது. இதுமாதிரி ஒவ்வொரு சூழலுக்கும் தேர்வுகள் பல இருக்கும். வெவ்வேறு சூழல்களிலும் பொறுமையாக யோசித்து முடிவெடுக்க ஒரு வாய்ப்பு இருக்கும். ஒரு மரணம் நிகழ்கிறதென்றால், அதை வைத்து மேலும் மரணங்களின் எண்ணிக்கையைப் பெரிதாக்குவதுபோல பிரச்சினையை மேலும் பெரிதாக்க வாய்ப்புகள் அமைகின்றன. இப்படி எந்த வாய்ப்பை பயன்படுத்துவது என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது. நடந்த விஷயத்தை விட்டுவிட்டு பாஸிட்டிவ்வாகப் போகலாமா அல்லது அதை மேலும் நெகடிவாக்கலாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நாம்தான். இதுமாதிரி அமைதியாக யோசித்து முடிவெடுக்க எனக்கு ஆன்மீகம் கைகொடுக்கிறது. இசைக்கும் அது உதவுகிறது.

கேள்வி: உங்களுடைய திரைப்பட இசையல்லாத ‘வந்தே மாதரம்’, ‘ப்ரே ஃபார் மீ பிரதர்’ போன்ற தனி ஆல்பங்களை எடுத்துக்கொண்டால் ஒரு குறிப்பிட்ட கருத்தைச் சொல்பவையாக இருக்கின்றன. தேசியம், அமைதி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இந்த உணர்வுகள் எல்லாம் உங்களிடம் முன்பிருந்தே இருக்கிறதா அல்லது இசைத்துறைக்கு வந்தபின் ஆல்பத்திற்கான தீம் என்ற வகையில் மட்டும் இவற்றை தேர்வு செய்தீர்களா?

ரஹ்மான்: முன்பிருந்தே ஈடுபாடு இருந்தது. எல்லா கலைஞர்களுக்கும் அதுமாதிரி ஆசைகள் இருக்கும். ஆனால், சரியாகச் செய்ய வேண்டும். நல்ல டீம் அமைய வேண்டும். நேரம் வேண்டும். அதற்கேற்றாற்போல், இறைவன் நம்மை வெற்றியடையச் செய்யவேண்டும். நிறையப் பேர் முயற்சித்திருக்கிறார்கள். சில முயற்சிகள் வெளிவராமலேயேகூட போயிருக்கின்றன. சில முயற்சிகள் ரொம்ப நாள் கழித்து மெதுவாக வெளிவந்திருக்கின்றன. ‘ப்ரே ஃபார் மீ பிரதர்’ ஒரு வருடம் கழித்துதான் வீடியோவே பண்ணினோம். ‘வந்தே மாதரம்’ பரத்பாலாவோடு செய்தேன். அவருடைய அப்பா ஒரு தேச விடுதலைப் போராட்ட வீரர். நாங்கள் ஒன்றாக இணைந்தபோது இப்படிச் செய்யலாமே என்கிற எண்ணம் வந்தது. நிச்சயமாக இது ஒரு டீம்வொர்க். நான் மட்டும் காரணமில்லை.

கேள்வி: உங்களுடைய ‘ப்ரே ஃபார் மீ பிரதர்’ ஆல்பம் இந்தியாவிற்கு மட்டும் என்றில்லாமல், உலகளாவிய மனித குலத்திற்கான கருத்துகளைக் கொண்டிருந்தது. இதற்கான எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது?

ரஹ்மான்: கிறிஸ்துவர்களை எடுத்துக்கொண்டால் ரெட்கிராஸ், பள்ளிகள் இப்படிப் பலவற்றை நிறுவி, நல்ல விஷயங்களை செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். நாம் பழைய காலத்தில் செய்திருக்கிறோம். இப்போது பங்களிப்பு மிகவும் குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது. அதாவது, மனிதகுலத்திற்கு இந்தியாவுடைய பங்களிப்பு குறைவாக இருக்கிறது என்கிறேன். இன்னும் நிறையச் செய்திருக்கலாம். இந்த எண்ணமே எனக்கு அப்படி ஓர் ஐடியாவைக் கொடுத்தது. நாம் 1.3 பில்லியன் மக்கள் இருக்கிறோம். ஐடியாக்கள், தலைமைப்பண்பு என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. ஊழல் நிறைந்த அரசாங்கங்கள் இருக்கின்றன. ஊழல் மலிந்துபோய் விட்டது. ஆனால், இளைஞர்கள் தலைமை பதவிக்கு வந்தால் மாற்றத்தை ஏற்படுத்தலாம். கிரிக்கெட்டில் சச்சின், சாஃப்ட்வேரில் நாராயணமூர்த்திபோல வெவ்வேறு துறைகளில் ஒருசிலர் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால், நாட்டில் எல்லோருடைய கவனமும் சினிமாவில் இருக்கிறது. ஒரு சுதந்திரமான ஐடியாவை வைத்துக்கொண்டு, அந்த ஐடியாவின்மேல் நம்பிக்கை வைத்து அதை ஊக்கப்படுத்த நிச்சயமாக இங்கே ஆட்கள் இல்லை. அமெரிக்காவில் நிலைமை இப்படி இல்லை. அங்கே இந்தியர்களேகூட பெரிய பணக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால், இங்கே ஏதாவது புதிதாக முயற்சித்தால் ‘அதெல்லாம் வொர்க் அவுட் ஆகாது மச்சான்’ என்று சொல்லி விடுவார்கள். முளையிலேயே கிள்ளிப்போட்டு விடுவார்கள். ஆனால், இப்போது மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக புதிய தலைமுறை மாறிக்கொண்டு இருக்கிறது. ஒரு நல்ல நோக்கமிருந்து அதற்காகச் செயல்பட்டால், உடனே விளைவை எதிர்பார்க்கக்கூடாது. பொறுமை வேண்டும். ஐந்து வருடமோ, பத்து வருடமோ கழித்து வரலாம். அதற்கு மேலும்கூட ஆகலாம். காத்திருக்க வேண்டும். ஆனால், நம்பிக்கை வேண்டும். இப்போது கஷ்டப்பட்டால், இந்த வருஷத்தைவிட அடுத்த வருஷம் நல்லாயிருக்கலாம். அடுத்த வருஷம் கஷ்டப்பட்டால், அதற்கடுத்த வருஷம் நல்லாயிருக்கலாம் என்று நினைக்க வேண்டும். ஆனால், நாம் இப்போதே ஒரு ஐடியாவை எடுத்துக்கொண்டு நாளைக்கே அதன் விளைவை எதிர்பார்க்கிறோம். பொறுமையோடு காத்திருக்க வேண்டும்.

கேள்வி: உங்களுடைய இசையில் தமிழ் மண்ணுக்குரிய தன்மை தெரியவில்லையே? உங்கள் இசையை எந்த மொழிப் படத்திற்கும் பொருத்திக்கொள்ளலாம் போலல்லவா இருக்கிறது?

ரஹ்மான்: தமிழ் மண்ணுக்குரிய தன்மையோடு படங்கள் அமைவதைப் பொறுத்துதான் நான் செய்ய முடியும். தமிழ் நேட்டிவிட்டியோடு, ‘கருத்தம்மா’, ‘கிழக்குச் சீமையிலே’ போன்ற படங்கள் செய்தேன். அதிலும் புதிதாக ஏதாவது செய்ய முடியுமா என்று பார்த்தேன். ‘லகான்’ பண்ணும்போது குஜராத் நேட்டிவிட்டியோடுதான் செய்தேன். மேலும் மணிரத்னம், ஷங்கர் போன்றவர்களின் படங்கள் இந்தியா அனைத்துக்குமான படங்களாகவே இருந்தன. அதோடு என்னை இசையமைப்பாளராக நியமித்தால், அதே இசையைத் தெலுங்கில், இந்தியில் மார்க்கெட் பண்ணலாம் என்று தயாரிப்பாளர்கள் நினைத்து வந்தார்கள். அதனால், அப்படிச் சேர்க்கும்படியான நிர்ப்பந்தமும் அழுத்தமும் எனக்கு இருந்தன. சில படங்களில் மட்டும் அப்படி நேர்ந்தது. அதிலிருந்து வெளியே வரத்தான் நான் தனிப்பட்ட ஆல்பங்களைச் செய்ய ஆரம்பித்தேன். எனக்கான குரல்களை நான் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுதந்திரம் எனக்கு ஆல்பம் செய்யும்போது கிடைத்தது.

கேள்வி: நீங்கள் அறிமுகப்படுத்திய நிறையப் பாடகர்கள் தமிழ் உச்சரிப்பைக் கொலை செய்தார்கள். உங்களுக்குப்பின்தான் அப்படிப்பட்ட பாடல்கள் நிறைய வந்தன என்கிற குற்றச்சாட்டு இருக்கிறதே?

ரஹ்மான்: ஆரம்பத்தில் அப்படி இருந்தது, உண்மைதான். ஆனால், அதுபோன்ற குரல்கள் என்னுடைய தேர்வு மட்டும் அல்ல. ஷங்கரிடம் நான் ஒரு பாடகரைச் சொல்வேன். ‘இல்லை வேண்டாம், புதுக்குரல் வேண்டும்’ என்பார். முதன் முதலில் ‘காதலன்’ படத்தில் உதித் நாராயணன் பாடினார். அது ஷங்கருடைய யோசனைதான். ‘அமீர்கானுக்கு ஒருத்தர் பாடுவாரே, அவரைப் போடலாமா?’ என்றார். ‘சரி! போடலாம்!’ என்று நானும் ஒத்துக்கொண்டேன். அந்தப் பாவத்தை நாங்கள் இரண்டு பேரும் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால், இதில் ஒரு விஷயம் இருக்கிறது. வேற்று மொழிக்காரர்கள் தமிழில் பாடுவது புதிதில்லை. டி.எம்.எஸ்.சின் தாய்மொழி தமிழ் இல்லை. ஆனால், தமிழ்ப் பாடல்களுக்கு அவர் எவ்வளவோ பங்களிப்பு செய்திருக்கிறார். எஸ்.பி.பி., ஜேசுதாஸ், பி.சுசீலா, ஜானகி, சித்ரா இவர்கள் யாருக்குமே தாய்மொழி தமிழ் இல்லை. ஆனால், அவர்கள் யாரும் தமிழைக் கொலை செய்யவில்லை. பயபக்தியோடு தமிழைக் கற்றுக்கொண்டு சரியாய் பாடுகிறோமா என்று ஒவ்வொரு முறையும் பரிசோதித்துவிட்டுத்தான் பாடுகிறார்கள். ஆனால், ஒரு மொழியைப் பாட வாய்ப்பு வரும்போது அந்தப் பாடகருக்கு அந்த மொழி உச்சரிப்பை கற்றுக்கொண்டு பாட வேண்டிய பொறுப்பு இருக்கிறது. நான் உருதுமொழியில் பாடவேண்டும் என்பதற்காக இரண்டு வருடங்கள் உருது கற்றுக்கொண்டேன். அதன்பிறகுதான் பாடினேன்.

கேள்வி: சினிமாவைத்தாண்டி உங்களுடைய இசை பங்களித்திருக்கிறது. நீங்கள் இசையை ஒரு கலை வடிவமாகப் பார்க்கிறீர்களா அல்லது மெசேஜ் சொல்லும் ஒரு வடிவமாகப் பார்க்கிறீர்களா?

ரஹ்மான்: முடிந்தவரை அதில் வாய்ப்பிருந்தால் மெசேஜ் கொடுக்கலாம். அதற்காக, வேண்டுமென்றே மெசேஜ் கொடுக்கிறேன் என்று சொல்லி, ஒரு நல்ல கலை வடிவத்தை கெடுக்கவும் கூடாது. மக்களுக்கு போரடித்துவிடக்கூடாது. ஒரு திரைப்படத்தைப் பார்க்க வருபவர்கள், குதூகலமாகப் பொழுதைக் கழிக்க வேண்டும் என்று வருகிறார்கள். சில சமயம் அதிகமாக மெசேஜ் சொன்னால், படம் போரடித்து விடும். அப்படித்தான் மக்களின் மனநிலை இருக்கிறது. ஸ்லம்டாக் மில்லினியரில் கூட ‘உண்மை வெல்லும்’ என்ற மெசேஜ் இருக்கும். குரானில் வருவதுபோல ‘உன்னால் தாங்க முடியாத துன்பத்தைக் கடவுள் உனக்கு தரப்போவதே இல்லை’ என்பதுதான் உண்மை. எத்தனை துன்பங்கள் வந்தாலும் அத்தனையையும் தாங்கிக்கொண்டு மீண்டு வரத்தான் வேண்டும். ஒருவன் மிகவும் கஷ்டப்பட்டால், பின்னாளில் அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அர்த்தம். அந்த நம்பிக்கை இருக்க வேண்டும்.

கேள்வி: ‘கல்லூரி சென்று பயிலாத நான் இன்று இந்தக் கல்லூரி மாணவர்களோடு இணைந்து பட்டம் பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று லண்டன் டிரினிடி கல்லூரியில் கௌரவ ஃபெல்லோஷிப் பட்டம் பெறும்போது சொன்னீர்கள். கல்லூரிக்குச் செல்லவில்லையென்ற ஏக்கம் உங்களுக்கிருக்கிறதா?

ரஹ்மான்: நிறைய ஏக்கம் இருந்தது. ஆனால், வாழ்க்கை எனும் வட்டத்தில் சுற்றி நிற்கிற இந்தச் சமயத்தில் இப்போது நாங்களே கல்லூரி நடத்துகிறோம். பள்ளிக்குச் சென்று கற்பது ஒரு விஷயம் என்றால், நிஜ வாழ்க்கையில் கற்பது இன்னோர் விஷயம். நிஜ வாழ்க்கையில் கற்றுக்கொள்வதற்கு ஆயத்தப்படுத்தும் இடமாகப் பள்ளி இருக்க வேண்டும். நிறையப் பேர் வேறு ஒரு துறைக்குச் செல்ல வேண்டும் என்று விருப்பப்படுவார்கள். ஆனால், பெற்றோர் கல்வி கற்கச் சொல்வார்கள். ஆனால், என் விஷயத்தில் நேரெதிராக நடந்தது. நான் வேறு துறைக்குச் செல்ல நினைத்தேன். அம்மாவின் விருப்பம், நான் இசைத் துறையில் கால் பதிக்க வேண்டும் என்பதாக இருந்தது. அம்மாவின் வழிகாட்டுதல் எனக்கு உதவியாய் இருந்தது.

கேள்வி: 23 வயதிலிருந்து 18 வருடங்களாக வாழ்க்கையில் ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள். கல்லூரி வாழ்க்கை தவிர, வேறு எதையாவது இழந்துவிட்டதாக உணர்ந்ததுண்டா?

ரஹ்மான்: இழந்ததாகச் சொல்ல முடியாது. அப்படி உணர்ந்ததில்லை இசைத் துறையில் இருக்கும்போது அதுவே ஓர் இன்பம்தான். எல்லோருக்கும் பிடித்த ஒரு கலை வடிவத்தை நாம் செய்கிறோம் எனும்போது அதுவே ஓர் ஆசீர்வாதம்தான். அதற்காகப் புகார் தெரிவிப்பதைவிட இறைவனிடம் நன்றி தெரிவிக்கவே விரும்புகிறேன்.

கேள்வி: உங்கள் நண்பர்கள், பொழுது@பாக்கு?

ரஹ்மான்: துரதிர்ஷ்டவசமாக நெருக்கமான நண்பர்களே யாரும் எனக்கு இல்லாமல் போய்விட்டார்கள். ஒருநாள் ஓய்வெடுத்துக்கொண்டு நண்பர்களோடு வெளியே போவதற்கெல்லாம் நேரமே இல்லாமல் போய் விட்டது. முக்கியமாக, என்னுடன் பணி புரிபவர்கள்தான் என் நண்பர்கள். வெளிநாடுகளுக்குச் சென்றால், என்னுடைய ஏஜெண்ட்டுகள்தான் என்னுடைய நண்பர்களாக இருப்பார்கள். அவர்களுடன் உணவருந்தப் போவதுண்டு. ஆனால், அவர்களும் பிசினஸ்தான் பேசுவார்கள். அதனால், குடும்பத்தோடு இருப்பதைத்தான் நான் அதிகமாக விரும்புகிறேன். இப்போது ஆஸ்கார் கமிட்டியில் இருப்பதால், ஆஸ்கார் படங்கள் நிறையப் பார்க்கிறேன். தியேட்டருக்கு வந்து மக்கள் பார்க்கும் முன்னமே ஓசியில் நான் பார்த்து விடுகிறேன். 30 படங்கள் கையில் இருக்கிறது பார்க்க. அதனால், பொழுது போக்குவதற்கு என்று நேரம் அமைவதில்லை.

கேள்வி: ஆஸ்கார் வாங்கியபோது தமிழில் ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்று சொன்னீர்கள். நீங்கள் வழக்கமாகச் சொல்லும் வாக்கியம் என்பதால் அதைச் சொன்னீர்களா அல்லது தமிழில் பேசவேண்டும் என நினைத்துச் சொன்னீர்களா?

ரஹ்மான்: அங்கேயும் சொல்லவேண்டும் என்று தோன்றியது, சொன்னேன். ‘நீ தமிழில் பேசுவாயா என்று காத்துக்கொண்டிருந்தேன். நல்லவேளை, அப்படியே பேசினாய். என் நம்பிக்கை மோசம் போகவில்லை’ என்று என் சகோதரி ரெகானாகூடச் சொன்னார்.

கேள்வி: உங்கள் தந்தையைப் பற்றிச் சொல்லுங்களேன்?

ரஹ்மான்: அப்பா எனக்கும் என் குடும்பத்திற்கும் நல்ல இன்ஸ்பிரேஷன். சின்ன வயதில் அவரைச் சந்தித்ததே மிகவும் குறைவு. ஏழெட்டு இடத்தில் ஒரே சமயத்தில் பணியாற்றியிருக்கிறார். அப்படித்தான் அவருடைய உடல்நலம் கெட்டது. அவர் இறந்த பிறகு, நான் கீ போர்டு வாசிக்க ஸ்டுடியோவுக்குச் சென்ற போது அப்பாவைப் பற்றி நல்ல விஷயங்கள்தான் கேள்விப்பட்டேன். எம்.ஜி.ஆர். படத்தில் சொல்வதுபோல் அவருடன் பணியாற்றியவர்கள் அவரைப் பற்றி புகழ்ந்து சொல்வார்கள். ‘எங்கள் குடும்பம் அவரால்தான் நன்றாக இருக்கிறது’, ‘எங்கள் குழந்தைகளை அவர்தான் படிக்க வைத்தார்’, ‘வேலை போட்டுக் கொடுத்தார்’ என்று சொல்வார்கள் எல்லோரும். அதுமாதிரி ஒரு நல்ல அப்பாவிற்குப் பிறந்தது பெரிய விஷயம். அவரைவிட நல்லது செய்ய வேண்டும் என்று எனக்கே ஓர் அளவுகோல் வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என் அப்பா. அவருடைய இசை எனக்கு மிகவும் பிடிக்கும். கேட்டுக்கொண்டே இருப்பேன். அவர்தான் 74ல் முதன்முதலில் இந்தியாவில் சின்தஸைசர் வாங்கியவர். முதன்முதலாக இந்தியாவிலிருந்து ஒருவர் வாங்குவதால் ஜப்பானில் அவருக்கு ஃபிளைட் டிக்கெட்டை இலவசமாகக் கொடுத்து அவரை அனுப்பியிருக்கிறது அந்தக் கம்பெனி. இப்போது இசையுலகை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது சின்தஸைசர்தான்.

கேள்வி: உங்கள் ரசிகர்களின் ஒரே குறை, தமிழில் இப்போது படமே நீங்கள் பண்ணுவதில்லையே என்பதுதான். ஹாலிவுட் பக்கம் பிஸியானதாலா?

ரஹ்மான்: தமிழில் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி படம் இல்லையென்றால், படம் ஃபிளாப் ஆகிறது. படத்திற்குப் பதிலாக ஆல்பம் பண்ணலாம். படம் பண்ணும்போது என்னாகிறதென்றால், பாட்டு நன்றாக போட்டுக்கொடுத்துவிட்டு ஒரு எதிர்பார்ப்பையும் கிளறி விட்டுவிட்டபின் தியேட்டருக்கு வந்து பார்த்துவிட்டு திட்டிவிட்டுப் போகிறார்கள். ‘ஏன் இந்தாளு இந்தப்படத்துக்கு மியூசிக் போட ஒத்துக்கிட்டாரு, இவனை நம்பி படம் பார்க்க வந்தால், இது என்ன இப்படி இருக்கு?’ என்று கேட்கிறார்கள். அப்படியல்லாமல், இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் படம் கிடைத்தால் கண்டிப்பாகத் தமிழில் படம் பண்ணுவேன். நான் பட்ஜெட் பற்றிப் பேசவில்லை. ஐடியா பற்றிப் பேசுகிறேன். நூறு கோடியில்தான் படம் பண்ண வேண்டும் என்றில்லை. ஒரு கோடியிலும் இருக்கலாம். பத்து லட்சத்திலும் இருக்கலாம். ஆனால், புதிதாகப் பார்வையாளர்களுக்கு ஏதாவது வேண்டும். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கு பயங்கர எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், அது மெச்சூர்ட் டீம். நன்றாக வரும் என நினைக்கிறேன்.

கேள்வி: படங்களுக்குப் பணியாற்றும்போது இரவுகளில்தான் நீங்கள் பணியாற்றுவீர்கள். ‘பாம்பே ட்ரீம்ஸ்’ போன்ற நாடகங்களுக்கு எப்படி நீங்கள் பணியாற்றினீர்கள்? ஒத்திகைக்கு மற்ற எல்லோரோடும் இணைந்து பணியாற்ற வேண்டும். நாடகத்திற்கு இசையமைப்பதற்கும், திரைப்படத்திற்கு இசையமைப்பதற்கும் என்ன வேறுபாட்டை உணர்கிறீர்கள்?

ரஹ்மான்: சினிமாவைவிட நாடகத்திற்கு வெளிநாடுகளில் மதிப்பு அதிகம். பெரிய பெரிய ஹாலிவுட் நடிகர்கள் எல்லாம் இலவசமாக வந்து நடித்துக் கொடுக்கிறார்கள். அப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெரிய விஷயம். இரண்டு நாடகங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். அதில் கற்றுக்கொண்டது நிறைய. இப்போது எனக்கு அந்த அனுபவம் கைகொடுக்கிறது. நாடகத்தில் பணியாற்றிவிட்டு சினிமாவுக்கு வரும்போது இன்னும் திறமை கூடும். இந்தியாவிலும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை உண்டு. எதிர்காலத்தில் வாய்ப்பிருக்கும் என நினைக்கிறேன். எங்கள் இசைப்பள்ளியில் மாணவர்கள் வெளிவரும்போது அதற்கான வாய்ப்பு இருக்கும்.

கேள்வி: உங்கள் மியூஸிக் ஸ்கூல் பற்றி சொல்லுங்களேன்?

ரஹ்மான்: இந்தியாவில் அதுமாதிரி ஸ்கூல் இல்லை. சில இருக்கின்றன. ஆனால், ரிசல்ட் சரியாக இல்லை. சீனி, செல்வக்குமார் போன்ற என்னுடைய நிறைய நணபர்கள் ஊக்கப்படுத்தினார்கள். நம் ஊரிலேயே நமக்கு ஒரு ஆர்க்கெஸ்ட்ரா இல்லை. என் அப்பா காலத்து ஆட்கள்தான் இன்னமும் வாசிக்கிறார்கள். இளைய தலைமுறை இசை கற்றுக்கொண்டு வரவேண்டுமென்றால், அவர்களை ஊக்கப்படுத்துவது அவசியம். வெளிநாடுகளில் அரசாங்கமே இத்தகைய கல்லூரிகளை நடத்துகின்றன. நம் ஊரில் கர்நாடக சங்கீதத்திற்கெல்லாம் அரசாங்கமே கல்லூரிகள் வைத்திருக்கின்றது. ஆனால், மேற்கத்திய இசைக்கு, இந்துஸ்தானி இசைக்கு இல்லை. அதனால், நாம் ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியது. 200 மாணவர்கள் பயில்கிறார்கள். இரண்டாண்டு டிப்ளமோ வகுப்புகள் நடக்கின்றன. இது மூலம் நிறைய இளம் இசைக் கலைஞர்கள் வெளிவர வாய்ப்பிருக்கிறது.

கேள்வி: கீ-போர்ட் ஆர்ட்டிஸ்டாக இருந்த ரஹ்மானுக்கும், ஆஸ்கார்வரை சென்று வந்த இசையமைப்பாளர் ரஹ்மானுக்கும் என்ன வித்தியாசம்?

ரஹ்மான்: அப்படியெல்லாம் நான் வித்தியாசம் பார்ப்பதேயில்லை. இசையில் ஓர் உள்ளார்ந்த சுயம் பிரதிபலிக்கும். இது எல்லா கலைகளுக்கும் பொருந்தும். நம் நல்லது கெட்டது எல்லாமே கலையில் பிரதிபலிக்கும். என்ன உள்ளே போகிறதோ அதுதான் பிரதிபலிக்கும். அதன்படிதான் எனக்கும் நடக்கிறது.

கேள்வி: புதிதாக வரும் இளையதலைமுறை இசைத் துறையினருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

ரஹ்மான்: முன்புபோல யாரும் சாதுவாக இல்லை. இன்டர்நெட் மூலம் புதிதாக அறிமுகமாகும் அத்தனையையும் தெரிந்து வைத்துக் கொள்கிறார்கள். புத்திசாலிகளாக இருக்கிறார்கள். இந்தியாதான் இளைஞர்களை அதிகம் கொண்ட நாடு. இது நல்ல விஷயம். வருங்காலம் நன்றாக இருக்கும். கவிக்கோ சொன்னது மாதிரி ஒவ்வொரு விதைக்கும் தெரியும், அது என்ன செடியாகப் போகிறதென்று. அதுபோல நாம் யார் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். ரோஜாச்செடி மல்லிகைப்பூ பூக்க நினைத்தால் முடியாது. அதுபோல நாம் யார் என்பதையும் நமக்குள் என்ன இருக்கிறது என்பதையும் ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும். அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். வேறொருவர் ஸ்டைலைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு நமக்கான தனிப்பட்ட ஸ்டைலை தேடிக் கொள்ள வேண்டும். இது இசைக் கலைஞருக்கும், பாடகருக்கும் கூடப் பொருந்தும்.

நன்றி: புதிய தலைமுறை வார இதழ்

Tuesday, November 10, 2009

ஒரு நெகிழ்வான இசை நிகழ்ச்சி!





























ஒரு கிராமத்தின் தாய்க்கு இரண்டு ஆண்பிள்ளைகள். இருவருக்குமே படிப்பில் ஆர்வம் இல்லை! மூத்தவனுக்கு கதை கவிதை, பத்திரிகைகளில் ஈடுபாடு. இளையவனுக்கோ கால்பந்தாட்டத்தில் கவனம். பள்ளி நாட்களின்போது நடந்தவொரு போட்டியில் அவனது கால் எலும்பு முறிந்துபோக, இரண்டுமாதம் ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருக்கவேண்டிய நிலை. அவனைப் பார்க்கவந்த ஒரு நண்பன், வழியில் யதேச்சையாக வாங்கிய ஒரு புல்லாங்குழலை அவனது கையில் கொடுத்துவிட்டு ‘’ஆஸ்பத்திரியில் போரடித்துப் போயிருப்பாய்; சும்மா இதை ஊதிக் கொண்டு இரு’’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். அப்போதுதான் அவனுக்கும் அந்தப் புல்லாங்குழல் மீது எதோ ஒரு ஆர்வம் பிறந்திருக்கிறது.

அடுத்த நாளிலிருந்து அதை வாசித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறான். முதலில் காற்றுதான் வந்திருக்கிறது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சினிமா பாடல்களை வாசிக்க, அதன் துளைகளுக்குள் இருந்த ரகசியம் வெகுசீக்கிரத்திலேயே பிடிபட்டிருக்கிறது. ஆஸ்பத்திரியிலேயே அந்த புல்லாங்குழலை விட்டுவிட்டு வராமல் கையோடு எடுத்துவந்திருக்கிறான் அந்த இளையவன். நண்பர்கள் முன்னிலையில் சினிமாப் பாடல்களை வாசித்துக் காட்டி, அதன் மூலம் அவனுக்குக் கிடைத்த பாராட்டுதல்கள் அவனைக் கொண்டுபோய் நிறுத்திய இடம் கோயம்புத்தூரில் இயங்கிக் கொண்டிருந்த சேரன் இன்னிகைக் குழுவின் மேடையில். அங்கிருந்து திண்டுக்கல் அங்கிங்கு இசைக்குழு... அந்த காலகட்டத்தில் இசையை முறைப்படி கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறான்.

அவனது இசை ஆர்வம் மேலும் மேலும் அதிகரிக்க அடுத்து சென்னை பயணம். கே.ஜே.ஜேசுதாஸின் இசைக் கச்சேரிகளில் வாசிக்கிற அளவுக்கு அவனது இசைப்புலமையை வளர்த்துக் கொண்டிருந்திருக்கிறான். அங்கிருந்து சினிமா பாடல்களுக்கு வாசிக்க வேண்டும் என்கிற கனவை நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள், தேவாவின் சகோதரர்களான சபேஷ்-முரளி. தேவாவின் அனைத்துப் பாடல்களிலும் நீங்கள் இந்த இளையவனின் புல்லாங்குழல் இசையைக் கேட்டிருக்கலாம். வெறும் புல்லாங்குழலிலே பல வருடங்கள் புழங்கிய அவனுக்கு மேற்கத்திய இசைக் கருவியான சாக்ஸஃபோனை வாசிக்க வேண்டும் என்கிற காதலால் அதையும் வாங்கி கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறான். இப்போது பிரபல இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜிடம் அந்த இனிய கருவியை வாசித்துக் கொண்டிருப்பதும் இவனே.

இவனுக்குள் மிக நீண்ட நாட்களால் ஒரு ஆசை. இசைக் கடல் மெல்லிசை மன்னரின் சூப்பர்ஹிட் பாடல்களை அந்த சாக்ஸஃபோன் கருவியில் வாசிக்க வேண்டும் என்பதுதான். அவனது ஆசையைக் கேள்விப்பட்டு கைகொடுக்க முன்வந்தார் ஒரு தொழிலதிபர். அவரது பெயர் தேவய்யா.

அதே மெல்லிசை மன்னரின் முன்னிலையில் பிரபல இயக்குனர் கே.எஸ். ரவிகுமார் அந்த இசை நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க கடந்த ஆறாம் தேதி இரவு சுமார் மூன்று மணி நேரம் காமராஜர் அரங்கமே இசை மழையில் நனைந்தது. பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான சுதாங்கன், இயக்குனர் ஆதவன், இளவட்டம் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.கே.ராஜராஜா, பாடலாசிரியர் காமகோடியன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசிய இந்த இசை நிகழ்வு, மிக விரைவிலேயே பிரபல சேனல் ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளது. அதோடு இந்த இசை நிகழ்ச்சி, டிவிடியாகவும் ஆடியோ சிடியாகவும் விற்பனைக்கு வரவிருக்கிறது.

இதிலே மிக ஒரு குழந்தையின் மனதோடு, குதூகலமாகக் கலந்து கொண்ட மெல்லிசை மன்னருக்கு இந்த இசை நிகழ்ச்சியை வடிவமைத்து தயாரித்த தேவய்யா, ஒரு வைர மோதிரத்தை மேடையிலேயே அனைவரது முன்னிலையிலும் தன் www.megagigashows.com நிறுவனத்தின் சார்பில் பரிசளித்த காட்சி அருமை!

அதுசரி, இதில் ஆரம்பத்தில் சொன்ன கதை, கவிதை, பத்திரிகைகளில் ஆர்வம் கொண்டிருந்த மூத்தவன் என்ன ஆனான்? இளையவனுக்கு முன்னரே சென்னைக்கு வந்து, அவனது ஆர்வத்தால் சில பத்திரிகைகளில் பணிபுரிந்திருக்கிறான். இந்தியா டுடே தமிழ்ப்பதிப்பில் இணையாசிரியராக பணியாற்றிய அவன் பின்னர் கே.எஸ்.ரவிகுமாரின் தசாவதாரம் உட்பட பல படங்களுக்கு திரைக்கதை உதவியாளனாக பணியாற்றி வருகிறான். பத்திரிகையிலும் அவனுக்கு ஆர்வம் என்பதால் தற்போது வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கும் ’புதிய தலைமுறை’ இளைஞர் வார இதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றுகிறான்.

சென்னையில் கலை, சினிமா, இசை, பத்திரிகை என, இன்று பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சகோதரர்களுக்கு, தங்களைப் பெற்றெடுத்து வளர்த்த அன்னையை கெளரவப்படுத்த வேண்டும் என்பது நீண்ட நாளைய ஆசை. அதற்கு இந்த இசை மேடை ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித்தர, 83 வயதான அந்தத் தாயை ( திருமதி ஷண்முகம் அம்மாள் முத்திருளாண்டி) மேடைக்கு வரவழைத்து எம்.எஸ்.வி, கே.எஸ்.ரவிகுமார் முன்னிலையில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி கெளரவப்படுத்தி இருக்கிறார்கள், இந்தச் சகோதரர்கள்!

ஒரே மேடையில் தன் இரு மகன்களும் சேர்ந்து தன்னைச் சிறப்பித்த காட்சியைக் கண்டு அந்த அன்னையின் மனம் கொண்ட மகிழ்ச்சியை நீங்கள் இங்கே இருக்கும் புகைப்படங்களில் பார்க்கலாம்.

எல்லாம் சரி. யார் இந்த அபூர்வ சகோதரர்கள்?

இந்த உண்மைக்கதையில் மூத்தவன் யாரோ....?

சாட்சாத் இதே கல்யாண்குமாராகிய நான்தான்!

இளையவன்...?

என் உடன்பிறந்த சகோதரன், இசைக்கலைஞன் நாதன்.!

எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை தங்களின் அன்னையை கெளரவப்படுத்தும் அரிய சந்தர்ப்பம்.

எங்களுக்கு அமைந்தது அந்த அன்னையின் ஆசியால்தான்!

ஆகவே என்றும் அன்னையை மதிப்போம்....அவர்தம் காலடியைத் துதிப்போம்! சரியா?
---------------------------

Tuesday, October 20, 2009

மிஸ். தீபிகாவின் துணிச்சல்!







சமீபத்தில் ஒரு துணிச்சலான கல்லூரி மாணவியைச் சந்தித்தேன். அவரைப் பற்றிய செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். படித்துப் பாருங்கள்….



சென்னை எத்திராஜ் கல்லூரியின் வாசல். மாணவிகள் ஆட்டோக்களிலும் கார்களிலும் ஸ்கூட்டிகளிலும் வந்து இறங்கி தங்கள் வகுப்பு நோக்கிப் போகிறார்கள். ஸ்டைலாக சுசுகி பைக்கில் வந்து இறங்குகிறார் ஒரு மாணவி.
பத்தொன்பது வயதான தீபிகா, அந்தக் கல்லூரியில் டூரிஸம் அண்ட் மானேஜ்மெண்ட் பிரிவில் இரண்டாம் ஆண்டு மாணவி. படிப்பில் மட்டும் தன் கவனத்தைச் செலுத்தாமல் பல்வேறு விதமான திறமைகளை வளர்ந்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். அவரது ஆர்வங்கள் பட்டியலிட்டால் அதன் எண்ணிக்கை நீண்டு கொண்டேயிருக்கிறது. அதில் ஒன்றுதான் பைக் ஓட்டுவது. கல்லூரிக்கு மட்டுமல்ல, ஷாப்பிங் போவது, தோழிகளின் வீட்டுக்குப் போவது எல்லாவற்றிற்கும் இவர் உபயோகப்படுத்துவது இந்த பைக்கைத்தான். இரண்டு வருஷமாக பைக் ஒட்டி ரொம்ப போரடித்து விட்டதால், அடுத்த மாதம் ஆண்களே ஓட்டத் தயங்குகிற புல்லட்டை வாங்கவிருப்பதாகச் சொல்லிச் சிரிக்கிறார் தீபிகா.
சின்ன வயதிலிருந்தே செல்லப்பிராணிகள் மீது அலாதி ப்ரியம் கொண்டவர் தீபிகா. நாய்க்குட்டியில் ஆரம்பித்த அந்த ஆர்வம் அணில், கொக்கு, மீன்கள், வெளிநாட்டுப் பறவைகள் என்று நீண்டு, இப்போது படமெடுத்தாடும் பாம்பில் வந்து நிற்கிறது!
பாம்பா?
அதிர்ச்சியாய் கேட்பவர்களுக்கு கூலாக பதில் சொல்கிறார் தீபிகா.
‘’ நாய்க்குட்டி, அணில் மாதிரி அதுவும் ஒரு பிராணிதான். தேவையில்லாம அதை ஒரு விரோதியப் பாக்குற மாதிரி நாம நடந்துக்குறோம். அது நம்மைப் பார்த்து பயந்து போய்தான் தப்பிச்சு ஒளியறத்துக்காக ஓடுது. அதத் துரத்தி அடிக்க முயலும்போதுதான் அது நம்மைத் திருப்பித் தாக்குது. அதுனால அதையும் சாஃப்ட்டா ஹேண்டில் பண்ணா அது நம்மகூட ஃப்ரெண்ட்லியா இருக்கும்’’ என்று தன் விளக்கத்தை சொல்கிறார். பாம்புகள் மீது இவர் கொண்டிருக்கும் அன்பு, இவரின் அப்பா திருநாவுக்கரசுவோடு இணைந்து ஒரு இயக்கத்தையே ஆரம்பிக்கும் நிலைக்குப் போயிருக்கிறது. கூடிய விரைவில் அதற்கான விழிப்புணர்ச்சி முகாம்களையும் நடத்தத் திட்டமிட்டிருக்கும் தீபிகா, பாம்புகளைப் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுகிற அளவுக்கு அதைப் பற்றி தகவல்களைக் ’கொட்டிக்’ கொண்டேயிருக்கிறார்.
இதுவரை தண்ணிப்பாம்பு, பச்சைப்பாம்பு, சாரையில் வெள்ளை சாரை, மஞ்சள் சாரை, கட்டுவிரியன், கோதும நாகம், மஞ்சள் நாகம் என்று பலவகைப் பாம்புகளையும் துணிச்சலாக கையில் பிடித்து வருடிக் கொடுத்திருக்கும் தீபிகாவிற்கு கேரளக் காடுகளில் வாழும் ராஜநாகத்தை பிடித்துப் பார்க்கவேண்டும் என்பது லேட்டஸ்ட் ஆசை. கல்லூரிப் படிப்பு முடிந்ததும் அதுவும் நிறைவேறிவிடும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். கேரளக் காடுகளிலிருந்து உணவுக்காக கர்நாடக விவசாயக் கிராமங்கள்வரை போய் திரும்புகிற அந்த ராஜநாகங்கள், மிகவேகமாகப் போய்வரும் தகவலையும் ஆதாரப்பூர்வமாக சேகரித்து வைத்திருக்கிறார் தீபிகா.
சட்டப்படி பாம்புகளை தனிப்பட்ட முறையில் வளர்க்கக் கூடாது. அதனால் வீடுகளில் பிடிபடும்போதும் வேறு எங்காவது அடிபட்ட பாம்புகளை மட்டுமே எடுத்துவந்து அதற்கு சரியான சிகிச்சைகளை அளித்துவிட்டு சிலநாள் கழித்து அடையாறில் உள்ள அரசு பாம்புப் பண்ணையிலோ அல்லது எதாவது காட்டுப் பகுதியிலோ விட்டு விடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறாராம் இவர். பாம்புப் பண்ணை அதிகாரிகளும் இவரது ஆர்வத்தைப் புரிந்து கொண்டு பாம்புகள் பற்றிய அரிய தகவல்களை இவருக்கு தந்து உதவுவதை நன்றியோடு நினைவு கூர்கிறார்.
அதுசரி, இத்தனை வருட அனுபவத்தில் தீபிகா பாம்பிடம் எத்தனை கடி வாங்கியிருப்பார்?
’’ அதுதான் இல்லை. ஒருமுறை கூட நான் கடி வாங்கியதில்லை. எல்லா பாய்ஸும் (பாம்பை இப்படித்தான் செல்லமாக அழைக்கிறார்) எங்கிட்ட அன்பாத்தான் பழகுவாங்க. சாரைப் பாம்பு பல்லு மட்டும் ஆக்‌ஷா பிளேடு மாதிரி இருக்கும். அதுக்கு இரை போடும்போது ஒருசில சமயம் அந்த பல்லு என்னோட தோளுல படும். அப்ப அந்த இடத்துல மட்டும் லேசா வீங்கும். ஆனா அதுக்கு ஆந்திராவுலேர்ந்து வாங்கி வைச்சிருக்கற ஒரு நாட்டு மருந்து என் கைவசம் இருக்கு. உடனே அதை அப்ளை பண்ணிடுவேன். அரைமணி நேரத்துல சரியாகிடும்.’’ என்று சொல்லிச் சிரிக்கும் தீபிகாவுக்குப் பாம்புகளைப் பிடிக்கக் கற்றுக் கொடுத்தவர் ஸ்டாலின் பெர்னாண்டஸ்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் சுமார் 42 வருடங்களாக பாம்புகளோடு பரிச்சயம் உள்ளவர். பலவீடுகளில் இவரால் இதுவரை பிடிபட்ட பாம்புகளின் எண்ணிக்கை சுமார் ஆயிரம் இருக்கும் என்கிறார் இவர். தீபிகாவைப் பற்றி என்ன சொல்கிறார் இவர்?
’’ அந்தப் பொண்ணோட துணைச்சலை பாராட்டியே தீரணும். ரொம்ப நாளா தொடர்ந்து கேட்டுகிட்டே இருந்துச்சு. அவங்க ஆர்வத்தைப் பார்த்துட்டுதான் பாம்புகளை எப்படி கையாள்றதுங்கற டெக்னிக்கை மட்டும் ஆறு மாசம் சொல்லிக் கொடுத்தேன். அந்தப் பொண்ணும் பிடிபடுற பாம்புகளுக்கு சிகிச்சை அளிச்சு காடுல்கள்ல கொண்டு போய் விடறாங்க. இந்தத் துறையில நிறைய ஆர்வம் இருக்கறதால இதுல எதாவது சாதிப்பாங்க’’ என்று சர்டிபிகேட் தருகிறார்.
தீபிகாவின் அப்பா ஒரு குத்துச்சண்டை வீரர். அதனால் பாக்ஸிங் கலையையும் விட்டு வைக்கவில்லை தீபிகா. தற்காப்புக்காக முறைப்படி அதைக் கற்று வைத்திருக்கும் இவருக்கு ஆயில் பெயிண்டிங் வரைவதில் மிகப்பெரிய ஆர்வம். அதிலும் அரச இலைகளில் இவர் வரையும் ஓவியங்கள் நண்பர்களிடையே மிகவும் பிரபலம். ரங்கோலி வரையும் போட்டிகளில் பல பரிசுகளை வென்றிருக்கும் தீபிகாவின் இந்த தசாவதார டேலண்ட்களால் கல்லூரியில் இவருக்கு ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ் பட்டாளம்.
பட்டம் பெற்றதும் அடுத்த கனவு தீபிகாவுக்கு ஐ.எஃப்.எஸ் தேர்வு எழுதி உயர் வனத்துறை அதிகாரியாக செயலாற்றுவதுதானாம்.‘’ எதிர்காலத்தில் காடுகளையும் அதில் வாழும் உயிரினங்களையும் நான் தீவிரமாக காதலிக்கப் போகிறேன்’’ என்று சீரியஸாகச் சொல்கிறார் இந்தக் காடுகளின் காதலி.
- இந்த கல்லூரி மாணவியின் துணிச்சலை நீங்களும் பாராட்ட நினைத்தால் அவரது மெயில் ஐ.டி.க்கே ஒரு நாலு வார்த்தை தட்டிவிடுங்கள் நண்பர்களே!
deepika.devi1@gmail.com
-------------------

Tuesday, August 18, 2009

’’எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன்..’’


அப்போது நான் ’தாய்’ வார இதழில் உதவி ஆசிரியர். எம்.ஜி.ஆர். அவர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை அது. அவரது வளர்ப்பு மகன் அப்புவின் நிர்வாகத்தில் இயங்கிக் கொண்டிருந்த்து. அப்போது எம்.ஜி.ஆர்தான் தமிழகத்தின் முதல்வர். அது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த வேளை. எனக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது அந்த நாள். ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ஒரு திங்கட்கிழமை. அன்றைக்கு வழக்கத்தைவிடவும் கொஞ்சம் சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு வந்துவிட்டேன். ஆசிரியர் வலம்புரி ஜான் அறையிலிருந்த டெலிபோன் ஒலித்ததும், அவர் வரத் தாமதம் ஆகும் என்பதால் நான் போய் எடுத்துப் பேசினேன்.
எதிர்முனையிலிருந்து ஒரு குரல் –
’’ நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன்...ஆசிரியர் இருக்கிறாரா?’’
அந்த நொடி எனக்குள் லேசான அதிர்ச்சி. சுதாரித்துக் கொண்டு பதில் சொன்னேன்.
’’ இன்னும் வரலை சார்....’’
’’ நீங்க யார் பேசறது?’’
‘’ நான் உதவி ஆசிரியர், கல்யாண்குமார்’’
’’சரி, கடந்த பொங்கல் தாய் சிறப்பு இதழில் எத்தனை அரசு விளம்பரங்கள் வந்தன என்று உங்களுக்குத் தெரியுமா?’’ என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.
என்னிடம் அதற்கான பதில் இல்லை. காரணம் நான் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவன். விளம்பர சம்பந்தமான விபரங்களை நான் அறிய வாய்ப்பில்லை. ஆனாலும் சுதாரித்துக் கொண்டு,
’’ ஒரு ஐந்து நிமிடம் எனக்கு நேரம் தந்தால் அதுபற்றி முழுவிபரங்களையும் விளம்பர மானேஜர் பத்மானாபனிடம் கேட்டுச் சொல்லிவிடுகிறேன்.. அவர் ஏற்கனவே வந்து விட்டார்..’’ என்றேன்.
‘’இல்லை ஆசிரியர் வந்ததும் என்னை அந்த விபரங்களோடு தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். நன்றி. வணக்கம்.’’ என்று நான் பதில் வணக்கம் சொல்லுமுன்னே போனை வைத்துவிட்டார்.
ஓ! திரையில் பார்த்துப் பிரமித்த ஒரு மனிதரிடம் போனில் பேசிவிட்டோம்! பிரமிப்பாகத்தான் இருந்தது எனக்கு அந்த வாரம் முழுக்க!
சற்று நேரத்தில் ஆசிரியர் வந்ததும் விபரத்தைச் சொன்னேன். அவரும் உடனடியாக அவர் கேட்ட விபரங்களை சேகரித்துக் கொண்டு திரும்ப எம்.ஜி.ஆரிடம் பேசினார்.
விஷயம் இத்தோடு முடிந்துவிடவில்லை. மறுநாள் அலுவலகம் வந்த ஆசிரியர் இன்னொரு புது விஷயத்தைச் சொன்னார்.
முதல் நாள் என்னோடு பேசுவதற்கு முன் எம்.ஜி.ஆர்., ஆசிரியர் வலம்புரி ஜானின் வீட்டுக்குப் போன் செய்திருக்கிறார். ஆனால் அப்போதுதான் ஆசிரியர், அலுவலகத்திற்குக் கிளம்பி இருக்கிறார். அப்போது அவரது குடும்பம் வெளியூர் போயிருந்தபடியால் வீட்டில் இருந்த பதின்மூன்று வயது வேலைக்காரச் சிறுமிதான் போனை எடுத்துப் பேசியிருக்கிறாள்.
அவளுக்கும் எம்.ஜி.ஆருக்குமான உரையாடல் இப்படி நிகழ்ந்திருக்கிறது:
‘’ ஹலோ.. யாருங்க பேசறது?’’ இது வேலைக்காரச் சிறுமி.
‘’ நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன். வலம்புரி ஜானிடம் பேசவேண்டும்’’
அவர் எப்போது, யாருடன் பேசினாலும் தன் முழுப்பெயரையும் சொல்லித்தான் பேசுவாராம். அதனால் பேசுவது எம்.ஜி.ஆர் என்பது தெரியாமலே அந்த வேலைக்காரச் சிறுமி பதில் சொல்லியிருக்கிறாள்!
‘’அய்யா இப்பதான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனாங்க’’
‘’ நீங்க யார் பேசறது?’’
‘’ நா இங்க வேலைபாக்குற பொண்ணு. அம்மா, அக்காவெல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க.’’
‘’உங்க பேரு என்ன?’’
’’லச்சுமி’’
‘’எந்த ஊரு?’’
’’தூத்துக்குடி பக்கத்துல வள்ளியூர் ‘’
’’இங்க வேலைக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?’’
’’மூணு வருஷமா இங்கதான் இருக்கேன்’’
‘’அப்படியா? என்ன சம்பளம் கொடுக்குறாங்க?’’
‘’அதெல்லாம் எனக்குத் தெரியாது. மாசாமாசம் ஊருக்கு அப்பாவுக்கு அனுப்பிடுவாங்க. எனக்கு சாப்பாடு போட்டு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்க்கு துணி எடுத்துக் கொடுத்துருவாங்க.’’
’’ உன்னை நல்லா வச்சுக்கறாங்களா? சாப்பாடெல்லாம் நல்லா இருக்கா?’’
’’ம்ம்ம்... நல்லா இருக்கும்.. அய்யாவுக்கு தினம் கறிச்சோறு செய்வாங்க. எனக்கும் கொடுப்பாங்க’’
‘’சினிமாவுக்கெல்லாம் கூட்டிட்டுப் போவாங்களா?’’
’’ஆமா. லீவு நாள்ல எல்லாரும் போவாங்க. என்னையும் கூட்டிட்டுப் போவாங்க..’’
‘’உனக்கு அய்யாவைப் புடிக்குமா, அம்மாவப் புடிக்குமா?’’
’’ரெண்டு பேரையுமே புடிக்கும். அய்யா எதாவது கடைக்கு அனுப்பினா மிச்சக் காசை என்னையே வச்சுக்கச் சொல்லுவாரு. சேர்த்துவைக்கிறேன்.’’
’’எப்ப ஊருக்குப் போகப்போற?’’
‘’ எங்க அப்பா வந்து கூட்டிட்டுப் போவாரு. இப்பதான் பொங்கலுக்குப் போயிட்டு வந்தேன். இனி தீபாவளிக்குப் போவேன். புதுத்துணியெல்லாம் அம்மா எடுத்துக் கொடுப்பாங்க..’’
‘’சரி, அய்யா வந்ததும் நான் பேசுனதாச் சொல்லு’’
‘’உங்க பேரு என்ன சொன்னீங்க?’’
‘’எம்.ஜி..ராமச்சந்திரன்’’
’’மறுபடி சொல்லுங்க....’’
‘’எம்.ஜி.ராமச்சந்திரன்’’
அப்போதும்கூட தான் எம்.ஜி.ஆர் என்பதை அவர் சொல்லிக் கொள்ளவேயில்லை!
இரவு வீட்டுக்குத் திரும்பிய ஆசிரியரிடம் அந்த வேலைக்காரச் சிறுமி இந்த போன் விபரத்தைச் சொல்லியிருக்கிறாள். அத்தனை நேரம் உன்னிடம் பேசிக் கொண்டிருந்தது, எம்.ஜி.ஆர் என்ற விபரத்தை ஆசிரியர் அவளிடம் சொன்னபோது அதை அவள் முழுசாய் நம்பவில்லை. எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் அவளுக்குத் தெரியாததால், ‘அவரு எம்.ஜி.ஆருன்னு சொல்லவேயில்லையே.. எதோ ராமச்சந்திரன்ன்னுதானே சொன்னார், அய்யா பொய் சொல்கிறார்’ என்றுதான் நினைத்திருக்கிறாள். ஆனால் அடுத்தமுறை வலம்புரி ஜான், எம்.ஜி.ஆரைச் சந்திக்கப் போனபோது அந்தச் சிறுமி பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவளிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டிருக்கிறார்.
அவ்வளவு பணமும் தனக்குத்தான், அதுவும் எம்.ஜி.ஆரே கொடுத்துவிட்டிருக்கிறார் என்று அறிந்தபோதுதான், சில நாட்களுக்கு முன் தன்னோடு பேசியது சாட்சாத் எம்.ஜி.ஆரேதான் என்பதை அவள் நம்பியிருக்கிறாள்.!
---------------------