Sunday, April 11, 2010
ஏ.ஆர்.ரஹ்மானின் பிரத்யேகப் பேட்டி
கடந்த பதினெட்டு வருடங்களாகத் தன் இசையால் மக்களின் மனதை ஆக்கிரமித்திருப்பவர் இசையமைப்பாளர். ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கார் பரிசை அவர் வென்றபோது ஒரு தமிழராக ஒவ்வொருவரையும் பெருமையடையச் செய்தவர். இந்தப் பெருமைகளின் பட்டியலில் அண்மையில் வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதும், சர்வதேச அளவில் வழங்கப்படுகிற ‘கிராமி’ விருதும் இணைந்து கொள்கின்றன.
வாழ்வின் அடித்தளத்திலிருந்து ஆரம்பித்து, ஆரவாரம் இல்லாமல் அடுத்தடுத்து சாதனைகளைக் குவித்துக் கொண்டு போகும் ஏ.ஆர்.ரஹ்மானின் வெற்றியின் ரகசியம்தான் என்ன? உழைப்பா? கற்பனைத் திறனா? தொழில்நுட்ப அறிவா? மனம் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். அந்த மனதைப் படம் பிடித்து உங்களோடு பகிர்ந்து கொள்ள முடிந்தால்?
’’புதிய தலைமுறை பத்திரிகையில் இப்போது நான் அஸிஸ்டண்ட் எடிட்டராக இணைந்திருக்கிறேன். அந்தப் பத்திரிகைக்கு ஒரு நேரடி ஸ்பெஷல் பேட்டி வேண்டும்’’ என்று ரஹ்மானுக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தேன். சில நாட்களிலேயே திடீரென ஒருநாள் பதில் அனுப்பியிருந்தார்.
’இன்று மாலை ஐந்து மணிக்கு ஓக்கேவா?’
என்று அந்த மெயிலில் என்னைக் கேட்டிருந்தார். உடனே ஓக்கே சொன்னேன். அடுத்த சில மணித்துளிகளில் அவரது தனி உதவியாளர் திரு.முகமத் ஃபைஸ் என்னை செல்லில் அழைத்து ’’மாலை ஐந்து மணிக்கு சார் உங்களை வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறார்’’ என்று சந்திப்பை உறுதி செய்தார். அந்த இனிய மாலை வேளையில் ரஹ்மானோடு அந்த இனிய சந்திப்பு நிகழ்ந்தது. என்னோடு வந்திருந்த புதிய தலைமுறையின் உதவி ஆசிரியர்களான யுவகிருஷ்ணா, கவின்மலர், அதிஷா, புகைப்படக் கலைஞர் அறிவழகன் ஆகியோரை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். இன்முகத்தோடு கைகுலுக்கி அவர்களை அமரச் சொன்னார். நலம் விசாரித்தலுக்குப் பிறகு நேர்காணல் துவங்கியது. எங்களின் கேள்விகளுக்கு எந்தவித குழப்பமோ தடுமாற்றமோ இல்லாமல் சரளமான பதில்கள் . புன்னகையோடு வந்து விழுந்து கொண்டிருந்தன.
இதோ அவரது பிரத்யேகப் பேட்டி துவங்குகிறது.....
’
கேள்வி: ஆஸ்கார் வாங்கிய மேடையில் அன்பு, வெறுப்பு இரண்டில் அன்பின் வழியைத் தேர்ந்தெடுத்ததாக நீங்கள் கூறினீர்கள். வலி நிறைந்த வார்த்தைகளாக அவை தோன்றின. அதற்கு அடிப்படைக் காரணம் என்ன?
ரஹ்மான்: எல்லோருக்கும் வாழ்க்கையில் இரண்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். இப்படியும் போகலாம். அப்படியும் போகலாம். எந்த விஷயமுமே எளிதில் கிடைத்துவிடாது. பல சர்ச்சைகளைக் கடந்து முன்னேற வேண்டியிருக்கிறது. போட்டிகள் நிறைந்த உலகம் இது. மீடியாவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஏனெனில், நிறையப் பேர் நம்மை எரிச்சல்படுத்த முயல்வார்கள். அவர்களுக்கு காரசாரமாகப் பதில் சொல்வது ஒரு வழி. அமைதியாய், நிதானமாய் பதில் சொல்வது இன்னோர் வழி. நான் இந்த இன்னோர் வழியைத் தேர்ந்தெடுத்தேன். இது எல்லா விஷயத்திற்கும் பொருந்தும்.
கேள்வி: உங்களுடைய அந்த ஆஸ்கார் பேச்சு, உங்கள் வயதைத் தாண்டிய முதிர்ச்சியோடு இருந்தது. இந்த முதிர்ச்சியை நீங்கள் எப்படிப் பெற்றீர்கள்?
ரஹ்மான்: சின்ன வயதிலேயே எனக்கு ஏற்பட்ட இழப்புகள் காரணமாக இந்த முதிர்ச்சி வந்திருக்கலாம். சின்னப்பையனாக இருந்தபோதே ஸ்டுடியோவில் வேலைக்குச் சென்று விட்டேன். அங்கே வாழ்க்கையைக் கற்றுக்கொண்டேன். மரணத்தை நினைவுகூர்வதேகூட உங்களுக்கு முதிர்ச்சியைக் கொடுக்கும். நேற்று ஒரு ஆவணப்படம் பார்த்தேன். பதினாறாவது நூற்றாண்டில் வாழ்ந்த தெரசா என்கிற கிறிஸ்துவப் புனிதர் பற்றிய படம் அது. வாழ்க்கை என்பது விலை மலிவான விடுதியில் ஓர் இரவைக் கழிப்பதற்கு சமம் என்கிறது அந்தப்படம். வாழ்க்கை அந்தளவு தற்காலிகமானதுதான். இதை நான் சிறுவயதிலேயே உணர்ந்துவிட்டதாலோ என்னவோ, ஒருவேளை நான் முதிர்ச்சியோடு இருக்கலாம்.
கேள்வி: மிகவும் கீழேயிருந்து உயரத்திற்குச் சென்றிருக்கிறீர்கள். உங்களைப் பொறுத்தவரை இந்த உயரத்திற்குச் சென்றதற்கான ஃபார்முலா என்ன?
ரஹ்மான்: என்னுடைய ஃபார்முலா என்று எடுத்துக்கொண்டால், நான் சூஃபியிஸத்திற்கு மாறிய பிறகு என் ஒட்டுமொத்த வாழ்க்கையே மாறிப்போனது. அதன் தத்துவங்களின்பால் நான் ஈர்க்கப்பட்டேன். அதற்குப்பிறகு என் குடும்பத்தை முக்கியமாகச் சொல்ல வேண்டும். என் அம்மா, சகோதரிகள், மனைவி, குழந்தைகள் இப்படி ஒவ்வொருவரும் என்னுடைய முன்னேற்றத்தில் பங்காற்றியிருக்கிறார்கள். குடும்பம் அமைதியானதாக இருந்தால்தான் உங்களால் நிம்மதியாக வேலை செய்ய முடியும். அவர்கள் என்னை ஊக்குவிக்கிறார்கள். நான் பணிக்குச் செல்லும்போது அவர்கள் எனக்கு ஆதரவளிக்கிறார்கள். நான் இப்போதிருக்கும் நிலைக்கு என் குடும்பம்தான் மிக முக்கியக் காரணம் என்று நான் சொல்வேன். அவர்கள் எனக்குத் தொல்லை கொடுத்தால், என்னால் எந்த வேலையையும் செய்ய முடியாது போயிருக்கும்.
கேள்வி: சூஃபியிஸம் உங்கள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகச் சொன்னீர்கள். நீங்கள் சின்ன வயதிலேயே இசைத் துறைக்கு வந்து விட்டீர்கள். அதன்பிறகுதான் மதம் மாறியிருக்கிறீர்கள். என்ன காரணம்?
ரஹ்மான்: அறிஞர்களும் சிந்தனையாளர்களும் சொல்வதுபோல மனித மனதில் எப்போதும் உண்மைக்கான தேடல் இருந்துகொண்டே இருக்கும். நாம் எங்கே கீழே சாய்ந்தாலும் அங்கே ஏதோ உண்மை இருக்கிறதென்று தேடிக்கொண்டே இருப்போம். அது காந்தம்போல. ஆன்மீகத்திற்கு அப்படி ஒரு கவர்ந்திழுக்கும் தன்மை உண்டு. எந்த வழி என்பது வேண்டுமானால் வேறுபடலாம். பௌத்தமாக இருக்கலாம், இந்து மதமாக இருக்கலாம், சூஃபியிஸமாக இருக்கலாம். ஏன், நாத்திகமாகக்கூட இருக்கலாம். ஆனால், ஏதோ ஒரு வழியில் மனிதன் போயாக வேண்டும். எனக்கும் என் குடும்பத்திற்கும் ஆசீர்வதிக்கப்பட்டது சூஃபியிஸமாக இருந்தது. அதுதான் காரணம்.
கேள்வி: ஆன்மீகம் உங்கள் வெற்றிக்குப் பயன்பட்டதா?
ரஹ்மான்: முக்கியமாக நாம் எடுக்கும் முட்டாள்தனமான முடிவுகள் எல்லாமே பாதுகாப்பின்மையால் வருவதுதான். நேற்றுகூட எனக்கு ஓர் எஸ்.எம்.எஸ். வந்தது: ‘நீங்கள் ஆபீஸ் போவதற்கு தயாராய் இருக்கிறீர்கள். அந்தச் சமயத்தில் உங்கள் மகள், உங்கள் மீது காபியைக் கொட்டி விடுகிறாள். கொட்டியது கொட்டியதுதான். அதை, இல்லை என்று செய்ய முடியாது. அந்தச் சமயத்தில் கோபத்தை மட்டுப்படுத்திக் கொண்டு, ‘அடுத்த முறை பார்த்து வேலை செய். கொட்டாமல் பார்த்துக்கொள்’ என்று சொல்லலாம் அல்லது கோபத்தோடு பளாரென்று ஓர் அடி அடித்துவிட்டு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி, லேட்டானதற்கு பரபரப்பாகி, ஒன்றுமில்லாத விஷயத்திற்கு நேரத்தையும் சக்தியையும் வீணாக்கலாம். அந்த மாதிரி சமயங்களில் என்ன செய்வீர்கள்? நமக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. ஒன்று, மன்னிக்கும் வாய்ப்பு. இரண்டு, பிரச்சினை செய்வது. இதுமாதிரி ஒவ்வொரு சூழலுக்கும் தேர்வுகள் பல இருக்கும். வெவ்வேறு சூழல்களிலும் பொறுமையாக யோசித்து முடிவெடுக்க ஒரு வாய்ப்பு இருக்கும். ஒரு மரணம் நிகழ்கிறதென்றால், அதை வைத்து மேலும் மரணங்களின் எண்ணிக்கையைப் பெரிதாக்குவதுபோல பிரச்சினையை மேலும் பெரிதாக்க வாய்ப்புகள் அமைகின்றன. இப்படி எந்த வாய்ப்பை பயன்படுத்துவது என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது. நடந்த விஷயத்தை விட்டுவிட்டு பாஸிட்டிவ்வாகப் போகலாமா அல்லது அதை மேலும் நெகடிவாக்கலாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நாம்தான். இதுமாதிரி அமைதியாக யோசித்து முடிவெடுக்க எனக்கு ஆன்மீகம் கைகொடுக்கிறது. இசைக்கும் அது உதவுகிறது.
கேள்வி: உங்களுடைய திரைப்பட இசையல்லாத ‘வந்தே மாதரம்’, ‘ப்ரே ஃபார் மீ பிரதர்’ போன்ற தனி ஆல்பங்களை எடுத்துக்கொண்டால் ஒரு குறிப்பிட்ட கருத்தைச் சொல்பவையாக இருக்கின்றன. தேசியம், அமைதி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இந்த உணர்வுகள் எல்லாம் உங்களிடம் முன்பிருந்தே இருக்கிறதா அல்லது இசைத்துறைக்கு வந்தபின் ஆல்பத்திற்கான தீம் என்ற வகையில் மட்டும் இவற்றை தேர்வு செய்தீர்களா?
ரஹ்மான்: முன்பிருந்தே ஈடுபாடு இருந்தது. எல்லா கலைஞர்களுக்கும் அதுமாதிரி ஆசைகள் இருக்கும். ஆனால், சரியாகச் செய்ய வேண்டும். நல்ல டீம் அமைய வேண்டும். நேரம் வேண்டும். அதற்கேற்றாற்போல், இறைவன் நம்மை வெற்றியடையச் செய்யவேண்டும். நிறையப் பேர் முயற்சித்திருக்கிறார்கள். சில முயற்சிகள் வெளிவராமலேயேகூட போயிருக்கின்றன. சில முயற்சிகள் ரொம்ப நாள் கழித்து மெதுவாக வெளிவந்திருக்கின்றன. ‘ப்ரே ஃபார் மீ பிரதர்’ ஒரு வருடம் கழித்துதான் வீடியோவே பண்ணினோம். ‘வந்தே மாதரம்’ பரத்பாலாவோடு செய்தேன். அவருடைய அப்பா ஒரு தேச விடுதலைப் போராட்ட வீரர். நாங்கள் ஒன்றாக இணைந்தபோது இப்படிச் செய்யலாமே என்கிற எண்ணம் வந்தது. நிச்சயமாக இது ஒரு டீம்வொர்க். நான் மட்டும் காரணமில்லை.
கேள்வி: உங்களுடைய ‘ப்ரே ஃபார் மீ பிரதர்’ ஆல்பம் இந்தியாவிற்கு மட்டும் என்றில்லாமல், உலகளாவிய மனித குலத்திற்கான கருத்துகளைக் கொண்டிருந்தது. இதற்கான எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது?
ரஹ்மான்: கிறிஸ்துவர்களை எடுத்துக்கொண்டால் ரெட்கிராஸ், பள்ளிகள் இப்படிப் பலவற்றை நிறுவி, நல்ல விஷயங்களை செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். நாம் பழைய காலத்தில் செய்திருக்கிறோம். இப்போது பங்களிப்பு மிகவும் குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது. அதாவது, மனிதகுலத்திற்கு இந்தியாவுடைய பங்களிப்பு குறைவாக இருக்கிறது என்கிறேன். இன்னும் நிறையச் செய்திருக்கலாம். இந்த எண்ணமே எனக்கு அப்படி ஓர் ஐடியாவைக் கொடுத்தது. நாம் 1.3 பில்லியன் மக்கள் இருக்கிறோம். ஐடியாக்கள், தலைமைப்பண்பு என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. ஊழல் நிறைந்த அரசாங்கங்கள் இருக்கின்றன. ஊழல் மலிந்துபோய் விட்டது. ஆனால், இளைஞர்கள் தலைமை பதவிக்கு வந்தால் மாற்றத்தை ஏற்படுத்தலாம். கிரிக்கெட்டில் சச்சின், சாஃப்ட்வேரில் நாராயணமூர்த்திபோல வெவ்வேறு துறைகளில் ஒருசிலர் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால், நாட்டில் எல்லோருடைய கவனமும் சினிமாவில் இருக்கிறது. ஒரு சுதந்திரமான ஐடியாவை வைத்துக்கொண்டு, அந்த ஐடியாவின்மேல் நம்பிக்கை வைத்து அதை ஊக்கப்படுத்த நிச்சயமாக இங்கே ஆட்கள் இல்லை. அமெரிக்காவில் நிலைமை இப்படி இல்லை. அங்கே இந்தியர்களேகூட பெரிய பணக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால், இங்கே ஏதாவது புதிதாக முயற்சித்தால் ‘அதெல்லாம் வொர்க் அவுட் ஆகாது மச்சான்’ என்று சொல்லி விடுவார்கள். முளையிலேயே கிள்ளிப்போட்டு விடுவார்கள். ஆனால், இப்போது மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக புதிய தலைமுறை மாறிக்கொண்டு இருக்கிறது. ஒரு நல்ல நோக்கமிருந்து அதற்காகச் செயல்பட்டால், உடனே விளைவை எதிர்பார்க்கக்கூடாது. பொறுமை வேண்டும். ஐந்து வருடமோ, பத்து வருடமோ கழித்து வரலாம். அதற்கு மேலும்கூட ஆகலாம். காத்திருக்க வேண்டும். ஆனால், நம்பிக்கை வேண்டும். இப்போது கஷ்டப்பட்டால், இந்த வருஷத்தைவிட அடுத்த வருஷம் நல்லாயிருக்கலாம். அடுத்த வருஷம் கஷ்டப்பட்டால், அதற்கடுத்த வருஷம் நல்லாயிருக்கலாம் என்று நினைக்க வேண்டும். ஆனால், நாம் இப்போதே ஒரு ஐடியாவை எடுத்துக்கொண்டு நாளைக்கே அதன் விளைவை எதிர்பார்க்கிறோம். பொறுமையோடு காத்திருக்க வேண்டும்.
கேள்வி: உங்களுடைய இசையில் தமிழ் மண்ணுக்குரிய தன்மை தெரியவில்லையே? உங்கள் இசையை எந்த மொழிப் படத்திற்கும் பொருத்திக்கொள்ளலாம் போலல்லவா இருக்கிறது?
ரஹ்மான்: தமிழ் மண்ணுக்குரிய தன்மையோடு படங்கள் அமைவதைப் பொறுத்துதான் நான் செய்ய முடியும். தமிழ் நேட்டிவிட்டியோடு, ‘கருத்தம்மா’, ‘கிழக்குச் சீமையிலே’ போன்ற படங்கள் செய்தேன். அதிலும் புதிதாக ஏதாவது செய்ய முடியுமா என்று பார்த்தேன். ‘லகான்’ பண்ணும்போது குஜராத் நேட்டிவிட்டியோடுதான் செய்தேன். மேலும் மணிரத்னம், ஷங்கர் போன்றவர்களின் படங்கள் இந்தியா அனைத்துக்குமான படங்களாகவே இருந்தன. அதோடு என்னை இசையமைப்பாளராக நியமித்தால், அதே இசையைத் தெலுங்கில், இந்தியில் மார்க்கெட் பண்ணலாம் என்று தயாரிப்பாளர்கள் நினைத்து வந்தார்கள். அதனால், அப்படிச் சேர்க்கும்படியான நிர்ப்பந்தமும் அழுத்தமும் எனக்கு இருந்தன. சில படங்களில் மட்டும் அப்படி நேர்ந்தது. அதிலிருந்து வெளியே வரத்தான் நான் தனிப்பட்ட ஆல்பங்களைச் செய்ய ஆரம்பித்தேன். எனக்கான குரல்களை நான் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுதந்திரம் எனக்கு ஆல்பம் செய்யும்போது கிடைத்தது.
கேள்வி: நீங்கள் அறிமுகப்படுத்திய நிறையப் பாடகர்கள் தமிழ் உச்சரிப்பைக் கொலை செய்தார்கள். உங்களுக்குப்பின்தான் அப்படிப்பட்ட பாடல்கள் நிறைய வந்தன என்கிற குற்றச்சாட்டு இருக்கிறதே?
ரஹ்மான்: ஆரம்பத்தில் அப்படி இருந்தது, உண்மைதான். ஆனால், அதுபோன்ற குரல்கள் என்னுடைய தேர்வு மட்டும் அல்ல. ஷங்கரிடம் நான் ஒரு பாடகரைச் சொல்வேன். ‘இல்லை வேண்டாம், புதுக்குரல் வேண்டும்’ என்பார். முதன் முதலில் ‘காதலன்’ படத்தில் உதித் நாராயணன் பாடினார். அது ஷங்கருடைய யோசனைதான். ‘அமீர்கானுக்கு ஒருத்தர் பாடுவாரே, அவரைப் போடலாமா?’ என்றார். ‘சரி! போடலாம்!’ என்று நானும் ஒத்துக்கொண்டேன். அந்தப் பாவத்தை நாங்கள் இரண்டு பேரும் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால், இதில் ஒரு விஷயம் இருக்கிறது. வேற்று மொழிக்காரர்கள் தமிழில் பாடுவது புதிதில்லை. டி.எம்.எஸ்.சின் தாய்மொழி தமிழ் இல்லை. ஆனால், தமிழ்ப் பாடல்களுக்கு அவர் எவ்வளவோ பங்களிப்பு செய்திருக்கிறார். எஸ்.பி.பி., ஜேசுதாஸ், பி.சுசீலா, ஜானகி, சித்ரா இவர்கள் யாருக்குமே தாய்மொழி தமிழ் இல்லை. ஆனால், அவர்கள் யாரும் தமிழைக் கொலை செய்யவில்லை. பயபக்தியோடு தமிழைக் கற்றுக்கொண்டு சரியாய் பாடுகிறோமா என்று ஒவ்வொரு முறையும் பரிசோதித்துவிட்டுத்தான் பாடுகிறார்கள். ஆனால், ஒரு மொழியைப் பாட வாய்ப்பு வரும்போது அந்தப் பாடகருக்கு அந்த மொழி உச்சரிப்பை கற்றுக்கொண்டு பாட வேண்டிய பொறுப்பு இருக்கிறது. நான் உருதுமொழியில் பாடவேண்டும் என்பதற்காக இரண்டு வருடங்கள் உருது கற்றுக்கொண்டேன். அதன்பிறகுதான் பாடினேன்.
கேள்வி: சினிமாவைத்தாண்டி உங்களுடைய இசை பங்களித்திருக்கிறது. நீங்கள் இசையை ஒரு கலை வடிவமாகப் பார்க்கிறீர்களா அல்லது மெசேஜ் சொல்லும் ஒரு வடிவமாகப் பார்க்கிறீர்களா?
ரஹ்மான்: முடிந்தவரை அதில் வாய்ப்பிருந்தால் மெசேஜ் கொடுக்கலாம். அதற்காக, வேண்டுமென்றே மெசேஜ் கொடுக்கிறேன் என்று சொல்லி, ஒரு நல்ல கலை வடிவத்தை கெடுக்கவும் கூடாது. மக்களுக்கு போரடித்துவிடக்கூடாது. ஒரு திரைப்படத்தைப் பார்க்க வருபவர்கள், குதூகலமாகப் பொழுதைக் கழிக்க வேண்டும் என்று வருகிறார்கள். சில சமயம் அதிகமாக மெசேஜ் சொன்னால், படம் போரடித்து விடும். அப்படித்தான் மக்களின் மனநிலை இருக்கிறது. ஸ்லம்டாக் மில்லினியரில் கூட ‘உண்மை வெல்லும்’ என்ற மெசேஜ் இருக்கும். குரானில் வருவதுபோல ‘உன்னால் தாங்க முடியாத துன்பத்தைக் கடவுள் உனக்கு தரப்போவதே இல்லை’ என்பதுதான் உண்மை. எத்தனை துன்பங்கள் வந்தாலும் அத்தனையையும் தாங்கிக்கொண்டு மீண்டு வரத்தான் வேண்டும். ஒருவன் மிகவும் கஷ்டப்பட்டால், பின்னாளில் அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அர்த்தம். அந்த நம்பிக்கை இருக்க வேண்டும்.
கேள்வி: ‘கல்லூரி சென்று பயிலாத நான் இன்று இந்தக் கல்லூரி மாணவர்களோடு இணைந்து பட்டம் பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று லண்டன் டிரினிடி கல்லூரியில் கௌரவ ஃபெல்லோஷிப் பட்டம் பெறும்போது சொன்னீர்கள். கல்லூரிக்குச் செல்லவில்லையென்ற ஏக்கம் உங்களுக்கிருக்கிறதா?
ரஹ்மான்: நிறைய ஏக்கம் இருந்தது. ஆனால், வாழ்க்கை எனும் வட்டத்தில் சுற்றி நிற்கிற இந்தச் சமயத்தில் இப்போது நாங்களே கல்லூரி நடத்துகிறோம். பள்ளிக்குச் சென்று கற்பது ஒரு விஷயம் என்றால், நிஜ வாழ்க்கையில் கற்பது இன்னோர் விஷயம். நிஜ வாழ்க்கையில் கற்றுக்கொள்வதற்கு ஆயத்தப்படுத்தும் இடமாகப் பள்ளி இருக்க வேண்டும். நிறையப் பேர் வேறு ஒரு துறைக்குச் செல்ல வேண்டும் என்று விருப்பப்படுவார்கள். ஆனால், பெற்றோர் கல்வி கற்கச் சொல்வார்கள். ஆனால், என் விஷயத்தில் நேரெதிராக நடந்தது. நான் வேறு துறைக்குச் செல்ல நினைத்தேன். அம்மாவின் விருப்பம், நான் இசைத் துறையில் கால் பதிக்க வேண்டும் என்பதாக இருந்தது. அம்மாவின் வழிகாட்டுதல் எனக்கு உதவியாய் இருந்தது.
கேள்வி: 23 வயதிலிருந்து 18 வருடங்களாக வாழ்க்கையில் ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள். கல்லூரி வாழ்க்கை தவிர, வேறு எதையாவது இழந்துவிட்டதாக உணர்ந்ததுண்டா?
ரஹ்மான்: இழந்ததாகச் சொல்ல முடியாது. அப்படி உணர்ந்ததில்லை இசைத் துறையில் இருக்கும்போது அதுவே ஓர் இன்பம்தான். எல்லோருக்கும் பிடித்த ஒரு கலை வடிவத்தை நாம் செய்கிறோம் எனும்போது அதுவே ஓர் ஆசீர்வாதம்தான். அதற்காகப் புகார் தெரிவிப்பதைவிட இறைவனிடம் நன்றி தெரிவிக்கவே விரும்புகிறேன்.
கேள்வி: உங்கள் நண்பர்கள், பொழுது@பாக்கு?
ரஹ்மான்: துரதிர்ஷ்டவசமாக நெருக்கமான நண்பர்களே யாரும் எனக்கு இல்லாமல் போய்விட்டார்கள். ஒருநாள் ஓய்வெடுத்துக்கொண்டு நண்பர்களோடு வெளியே போவதற்கெல்லாம் நேரமே இல்லாமல் போய் விட்டது. முக்கியமாக, என்னுடன் பணி புரிபவர்கள்தான் என் நண்பர்கள். வெளிநாடுகளுக்குச் சென்றால், என்னுடைய ஏஜெண்ட்டுகள்தான் என்னுடைய நண்பர்களாக இருப்பார்கள். அவர்களுடன் உணவருந்தப் போவதுண்டு. ஆனால், அவர்களும் பிசினஸ்தான் பேசுவார்கள். அதனால், குடும்பத்தோடு இருப்பதைத்தான் நான் அதிகமாக விரும்புகிறேன். இப்போது ஆஸ்கார் கமிட்டியில் இருப்பதால், ஆஸ்கார் படங்கள் நிறையப் பார்க்கிறேன். தியேட்டருக்கு வந்து மக்கள் பார்க்கும் முன்னமே ஓசியில் நான் பார்த்து விடுகிறேன். 30 படங்கள் கையில் இருக்கிறது பார்க்க. அதனால், பொழுது போக்குவதற்கு என்று நேரம் அமைவதில்லை.
கேள்வி: ஆஸ்கார் வாங்கியபோது தமிழில் ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்று சொன்னீர்கள். நீங்கள் வழக்கமாகச் சொல்லும் வாக்கியம் என்பதால் அதைச் சொன்னீர்களா அல்லது தமிழில் பேசவேண்டும் என நினைத்துச் சொன்னீர்களா?
ரஹ்மான்: அங்கேயும் சொல்லவேண்டும் என்று தோன்றியது, சொன்னேன். ‘நீ தமிழில் பேசுவாயா என்று காத்துக்கொண்டிருந்தேன். நல்லவேளை, அப்படியே பேசினாய். என் நம்பிக்கை மோசம் போகவில்லை’ என்று என் சகோதரி ரெகானாகூடச் சொன்னார்.
கேள்வி: உங்கள் தந்தையைப் பற்றிச் சொல்லுங்களேன்?
ரஹ்மான்: அப்பா எனக்கும் என் குடும்பத்திற்கும் நல்ல இன்ஸ்பிரேஷன். சின்ன வயதில் அவரைச் சந்தித்ததே மிகவும் குறைவு. ஏழெட்டு இடத்தில் ஒரே சமயத்தில் பணியாற்றியிருக்கிறார். அப்படித்தான் அவருடைய உடல்நலம் கெட்டது. அவர் இறந்த பிறகு, நான் கீ போர்டு வாசிக்க ஸ்டுடியோவுக்குச் சென்ற போது அப்பாவைப் பற்றி நல்ல விஷயங்கள்தான் கேள்விப்பட்டேன். எம்.ஜி.ஆர். படத்தில் சொல்வதுபோல் அவருடன் பணியாற்றியவர்கள் அவரைப் பற்றி புகழ்ந்து சொல்வார்கள். ‘எங்கள் குடும்பம் அவரால்தான் நன்றாக இருக்கிறது’, ‘எங்கள் குழந்தைகளை அவர்தான் படிக்க வைத்தார்’, ‘வேலை போட்டுக் கொடுத்தார்’ என்று சொல்வார்கள் எல்லோரும். அதுமாதிரி ஒரு நல்ல அப்பாவிற்குப் பிறந்தது பெரிய விஷயம். அவரைவிட நல்லது செய்ய வேண்டும் என்று எனக்கே ஓர் அளவுகோல் வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என் அப்பா. அவருடைய இசை எனக்கு மிகவும் பிடிக்கும். கேட்டுக்கொண்டே இருப்பேன். அவர்தான் 74ல் முதன்முதலில் இந்தியாவில் சின்தஸைசர் வாங்கியவர். முதன்முதலாக இந்தியாவிலிருந்து ஒருவர் வாங்குவதால் ஜப்பானில் அவருக்கு ஃபிளைட் டிக்கெட்டை இலவசமாகக் கொடுத்து அவரை அனுப்பியிருக்கிறது அந்தக் கம்பெனி. இப்போது இசையுலகை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது சின்தஸைசர்தான்.
கேள்வி: உங்கள் ரசிகர்களின் ஒரே குறை, தமிழில் இப்போது படமே நீங்கள் பண்ணுவதில்லையே என்பதுதான். ஹாலிவுட் பக்கம் பிஸியானதாலா?
ரஹ்மான்: தமிழில் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி படம் இல்லையென்றால், படம் ஃபிளாப் ஆகிறது. படத்திற்குப் பதிலாக ஆல்பம் பண்ணலாம். படம் பண்ணும்போது என்னாகிறதென்றால், பாட்டு நன்றாக போட்டுக்கொடுத்துவிட்டு ஒரு எதிர்பார்ப்பையும் கிளறி விட்டுவிட்டபின் தியேட்டருக்கு வந்து பார்த்துவிட்டு திட்டிவிட்டுப் போகிறார்கள். ‘ஏன் இந்தாளு இந்தப்படத்துக்கு மியூசிக் போட ஒத்துக்கிட்டாரு, இவனை நம்பி படம் பார்க்க வந்தால், இது என்ன இப்படி இருக்கு?’ என்று கேட்கிறார்கள். அப்படியல்லாமல், இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் படம் கிடைத்தால் கண்டிப்பாகத் தமிழில் படம் பண்ணுவேன். நான் பட்ஜெட் பற்றிப் பேசவில்லை. ஐடியா பற்றிப் பேசுகிறேன். நூறு கோடியில்தான் படம் பண்ண வேண்டும் என்றில்லை. ஒரு கோடியிலும் இருக்கலாம். பத்து லட்சத்திலும் இருக்கலாம். ஆனால், புதிதாகப் பார்வையாளர்களுக்கு ஏதாவது வேண்டும். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கு பயங்கர எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், அது மெச்சூர்ட் டீம். நன்றாக வரும் என நினைக்கிறேன்.
கேள்வி: படங்களுக்குப் பணியாற்றும்போது இரவுகளில்தான் நீங்கள் பணியாற்றுவீர்கள். ‘பாம்பே ட்ரீம்ஸ்’ போன்ற நாடகங்களுக்கு எப்படி நீங்கள் பணியாற்றினீர்கள்? ஒத்திகைக்கு மற்ற எல்லோரோடும் இணைந்து பணியாற்ற வேண்டும். நாடகத்திற்கு இசையமைப்பதற்கும், திரைப்படத்திற்கு இசையமைப்பதற்கும் என்ன வேறுபாட்டை உணர்கிறீர்கள்?
ரஹ்மான்: சினிமாவைவிட நாடகத்திற்கு வெளிநாடுகளில் மதிப்பு அதிகம். பெரிய பெரிய ஹாலிவுட் நடிகர்கள் எல்லாம் இலவசமாக வந்து நடித்துக் கொடுக்கிறார்கள். அப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெரிய விஷயம். இரண்டு நாடகங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். அதில் கற்றுக்கொண்டது நிறைய. இப்போது எனக்கு அந்த அனுபவம் கைகொடுக்கிறது. நாடகத்தில் பணியாற்றிவிட்டு சினிமாவுக்கு வரும்போது இன்னும் திறமை கூடும். இந்தியாவிலும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை உண்டு. எதிர்காலத்தில் வாய்ப்பிருக்கும் என நினைக்கிறேன். எங்கள் இசைப்பள்ளியில் மாணவர்கள் வெளிவரும்போது அதற்கான வாய்ப்பு இருக்கும்.
கேள்வி: உங்கள் மியூஸிக் ஸ்கூல் பற்றி சொல்லுங்களேன்?
ரஹ்மான்: இந்தியாவில் அதுமாதிரி ஸ்கூல் இல்லை. சில இருக்கின்றன. ஆனால், ரிசல்ட் சரியாக இல்லை. சீனி, செல்வக்குமார் போன்ற என்னுடைய நிறைய நணபர்கள் ஊக்கப்படுத்தினார்கள். நம் ஊரிலேயே நமக்கு ஒரு ஆர்க்கெஸ்ட்ரா இல்லை. என் அப்பா காலத்து ஆட்கள்தான் இன்னமும் வாசிக்கிறார்கள். இளைய தலைமுறை இசை கற்றுக்கொண்டு வரவேண்டுமென்றால், அவர்களை ஊக்கப்படுத்துவது அவசியம். வெளிநாடுகளில் அரசாங்கமே இத்தகைய கல்லூரிகளை நடத்துகின்றன. நம் ஊரில் கர்நாடக சங்கீதத்திற்கெல்லாம் அரசாங்கமே கல்லூரிகள் வைத்திருக்கின்றது. ஆனால், மேற்கத்திய இசைக்கு, இந்துஸ்தானி இசைக்கு இல்லை. அதனால், நாம் ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியது. 200 மாணவர்கள் பயில்கிறார்கள். இரண்டாண்டு டிப்ளமோ வகுப்புகள் நடக்கின்றன. இது மூலம் நிறைய இளம் இசைக் கலைஞர்கள் வெளிவர வாய்ப்பிருக்கிறது.
கேள்வி: கீ-போர்ட் ஆர்ட்டிஸ்டாக இருந்த ரஹ்மானுக்கும், ஆஸ்கார்வரை சென்று வந்த இசையமைப்பாளர் ரஹ்மானுக்கும் என்ன வித்தியாசம்?
ரஹ்மான்: அப்படியெல்லாம் நான் வித்தியாசம் பார்ப்பதேயில்லை. இசையில் ஓர் உள்ளார்ந்த சுயம் பிரதிபலிக்கும். இது எல்லா கலைகளுக்கும் பொருந்தும். நம் நல்லது கெட்டது எல்லாமே கலையில் பிரதிபலிக்கும். என்ன உள்ளே போகிறதோ அதுதான் பிரதிபலிக்கும். அதன்படிதான் எனக்கும் நடக்கிறது.
கேள்வி: புதிதாக வரும் இளையதலைமுறை இசைத் துறையினருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
ரஹ்மான்: முன்புபோல யாரும் சாதுவாக இல்லை. இன்டர்நெட் மூலம் புதிதாக அறிமுகமாகும் அத்தனையையும் தெரிந்து வைத்துக் கொள்கிறார்கள். புத்திசாலிகளாக இருக்கிறார்கள். இந்தியாதான் இளைஞர்களை அதிகம் கொண்ட நாடு. இது நல்ல விஷயம். வருங்காலம் நன்றாக இருக்கும். கவிக்கோ சொன்னது மாதிரி ஒவ்வொரு விதைக்கும் தெரியும், அது என்ன செடியாகப் போகிறதென்று. அதுபோல நாம் யார் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். ரோஜாச்செடி மல்லிகைப்பூ பூக்க நினைத்தால் முடியாது. அதுபோல நாம் யார் என்பதையும் நமக்குள் என்ன இருக்கிறது என்பதையும் ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும். அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். வேறொருவர் ஸ்டைலைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு நமக்கான தனிப்பட்ட ஸ்டைலை தேடிக் கொள்ள வேண்டும். இது இசைக் கலைஞருக்கும், பாடகருக்கும் கூடப் பொருந்தும்.
நன்றி: புதிய தலைமுறை வார இதழ்
Subscribe to:
Post Comments (Atom)
41 comments:
அருமையான பகிர்விற்கு நன்றி.
அருமையான பகிர்விற்கு நன்றி.
சார், பகிர்வுக்கு நன்றி!
என்னுடைய வலைத்தளத்தில் இப்பேட்டிக்கான சுட்டியை பகிர்ந்துகொண்டிருக்கிறேன் என்பதை தகவலுக்கு சொல்லிக் கொள்கிறேன்.
என்னவரே ஏ ஆர் ஆர்,
இன்னும் உங்கள் புது வெள்ளை மழை
என் நெஞ்சினில் பெய்து கொண்டுதான் இருக்கிறது.
உங்கள் முகம், அகம் போலவே பேட்டியும் சுகம்.
என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
என்னைக்காவது ஒரு நாள் ஆபீஸ்ல இருந்து வீட்டிற்க்கு போகும் வழியில் அவரை பார்த்தால் சூபிசம் பற்றி தெரிந்து கொள்ள ஆசை. மனுஷனுக்கு மண்டை கர்வமே வராதா இல்ல வர்ரபோதெல்லாம் மண்டைல அடிச்சு விரட்டியடிகிறாரா-ன்னு கூடவே கேட்கணும்.
சுவாரஸ்யமான பதிவு.....உடன் இருந்தது போன்ற உணர்வை படங்கள்
ஏற்படுத்துகின்றது...
அருமை. உள்ளத்தில் இருந்து அப்படியே வந்துருக்கும் பேச்சு.
ரெஹ்மான் சொல்வது முற்றிலும் உண்மை. என் மகள் நியூஸியில் விமன்ஸ் வொர்ல்ட் கொயரில் பாடுகின்றாள்.
இங்கே போன மாசம் வந்தபோது ஒரு இந்தியப் பாடல் ரெண்டு மூன்று வெவ்வேறு படிகளில் பாடுவதற்கு இசைஞ்சதா ஒன்னு வேணுமுன்னு சொல்லி, லக்ஷ்மண்ஸ்ருதி, முரளி ம்யூஸிக், இன்னும் ராயப்பேட்ட ஹை ரோடில் இருந்த ரெண்டு கடைகளுக்கும் போய் அலந்ததுதான் மிச்சம்:(
அப்படி ஒன்னு கிடைச்சுருந்தால் நியூஸியில் இந்தியப் பாடல் ஒன்னு முழங்கி இருக்கும்
அன்பின் கல்யாண்ஜி
அற்புதமான பேட்டி.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்..
நட்புடன் இளங்கோவன்
சென்னை.
அருமையான பேட்டையை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல....
மயிலாடுதுறை சிவா...
நல்ல காமெடியான பேட்டி. ஏ.ஆர். ரகுமான் இவ்வளவு மோசமாகப் பேசி இப்போதுதான் பார்க்கிறேன்.
//தமிழில் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி படம் இல்லையென்றால், படம் ஃபிளாப் ஆகிறது. படத்திற்குப் பதிலாக ஆல்பம் பண்ணலாம். படம் பண்ணும்போது என்னாகிறதென்றால், பாட்டு நன்றாக போட்டுக்கொடுத்துவிட்டு ஒரு எதிர்பார்ப்பையும் கிளறி விட்டுவிட்டபின் தியேட்டருக்கு வந்து பார்த்துவிட்டு திட்டிவிட்டுப் போகிறார்கள். ‘ஏன் இந்தாளு இந்தப்படத்துக்கு மியூசிக் போட ஒத்துக்கிட்டாரு, இவனை நம்பி படம் பார்க்க வந்தால், இது என்ன இப்படி இருக்கு?’ என்று கேட்கிறார்கள். அப்படியல்லாமல், இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் படம் கிடைத்தால் கண்டிப்பாகத் தமிழில் படம் பண்ணுவேன். நான் பட்ஜெட் பற்றிப் பேசவில்லை. ஐடியா பற்றிப் பேசுகிறேன். நூறு கோடியில்தான் படம் பண்ண வேண்டும் என்றில்லை. ஒரு கோடியிலும் இருக்கலாம். பத்து லட்சத்திலும் இருக்கலாம். ஆனால், புதிதாகப் பார்வையாளர்களுக்கு ஏதாவது வேண்டும். //
சரி, கேட்டுக்கிட்டோம்.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்.
பேட்டியை படுச்சவுடன் அவ்வளவு சந்தோசமா இருக்கு.
கொஞ்சம் கூட தலைக்கணம் இல்லாமல் எப்படிதான் இருக்க முடிகிறதோ ரஹ்மானால்??? மிகவும் ஆச்சிரியமானவிசயம்.
சமிப தினகரன் வசந்தத்தில் சின்மாயி பேட்டி வந்துள்ளது, அதில் ரஹ்மானைப்பற்றி "எத்தனை பெரிய சாதனையை கடந்தாலும் எதுக்குமே அலட்டிக்காத ரெம்ப அமைதியான, அடக்கமான அப்படி ஒரு ஆளுமையை நான் பார்த்ததே இல்லை" என்கிறார்.
சார், எத்துன தடவைதான் யுவகிருஷ்ணா, அதிஷா கூட்டிகிட்டு போவீங்க, எங்களுக்கும் ஒரு சான்ஸ் கொடுக்கலாம்லே??? ஹிஹி..
ரஹ்மானின் இசை மட்டுமல்ல வாழ்க்கை பற்றிய புரிதலும் ஆழ்ந்த கருத்துகளும் பிரமிக்க வைக்கிறது.
பகிர்விற்கு நன்றி கலயாண்ஜி..
நன்றி யுவா.
புதிய தலைமுறை நண்பர்களுக்கு,
ஏ. ஆர். ரஹ்மான் நேர்க்காணல் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள். ஒரு சக பத்திரிகையாளனாக என்னுடைய பாராட்டை என்னுடைய பொறாமையாகவே வெளிப்படுத்த விரும்புகிறேன். ரஹ்மானின் ரசிகன் நான். ஆனால் இன்று வரை அவருடன் நேர்க்காணல் நடத்தும் வாய்ப்பு கிடைத்ததில்லை. மேலோட்டமாக அல்லாமல், மாமூலான கேள்விகளாகவும் இல்லாமல் அவரை இன்னும் நெருக்கமாகப் புரிந்துகொள்ளத்தக்க வகையில் கேள்விகளைத் தேர்வு செய்திருக்கிறீர்கள். போலித்தனமற்ற பதில்கள் அவர் மீதான என் ரசனையை இன்னும் அதிகரிக்கின்றன.
அன்புடன்,
அ. குமரேசன்,
தீக்கதிர்.
புதிய தலைமுறை நண்பர்களுக்கு,
ஏ. ஆர். ரஹ்மான் நேர்க்காணல் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள். ஒரு சக பத்திரிகையாளனாக என்னுடைய பாராட்டை என்னுடைய பொறாமையாகவே வெளிப்படுத்த விரும்புகிறேன். ரஹ்மானின் ரசிகன் நான். ஆனால் இன்று வரை அவருடன் நேர்க்காணல் நடத்தும் வாய்ப்பு கிடைத்ததில்லை. மேலோட்டமாக அல்லாமல், மாமூலான கேள்விகளாகவும் இல்லாமல் அவரை இன்னும் நெருக்கமாகப் புரிந்துகொள்ளத்தக்க வகையில் கேள்விகளைத் தேர்வு செய்திருக்கிறீர்கள். போலித்தனமற்ற பதில்கள் அவர் மீதான என் ரசனையை இன்னும் அதிகரிக்கின்றன.
அன்புடன்,
அ. குமரேசன்,
தீக்கதிர்.
மிகவும் சிறப்பான பதிவு .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
Thank you so much for a wonderful interview. Got to know a lot about AR. Thanks.
நான் ஒரு சிறிய கமெண்ட் போட்டேன். அது வரவில்லை. ஏதேனும் தொழில்நுட்ப பிரச்சினையா அல்லது மட்டுறுத்தலா?
அருமையான பகிர்விற்கு நன்றி.
எத்தனை சாதனைகளை செய்து முடித்திருந்தாலும், அதையெல்லாம் தலைக்கு கொண்டு போகாமல், இன்னும் எளிமையாக, அமைதியாக, அடக்கமாவே இருக்கும் ரஹ்மான், அவரிடம் நாமெல்லாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.
பகிர்விற்கு நன்றி, சார்.
good one.
வணக்கம் கல்யாண்குமார்.நீங்க ரஹ்மான் கூடப் பேச எனக்குக் காத்தில பறக்கிற உற்சாகம்.
அவ்ளோ சந்தோஷம்.
என் பதிவின் பக்கம் வந்து என்றோ பதிவிட்ட இசைச் சகாப்தத்தின் பதிவைக் கண்டு என்னையும் பாராட்டி இந்தப் பதிவையும் என்னோடு பகிர்ந்துகொண்டீர்கள்.
நன்றி கல்யாண்குமார்.
உங்களுக்குப் பாராட்டு.இசையின் செல்வத்திற்க்கு இறைவன் நீண்ட ஆயுளையுன் ஆரோக்யத்தையும் கொடுக்கட்டும்.
அன்பு கல்யாண்.,
நல்ல பேட்டி.,இசை மட்டுமின்றி வாழ்க்கை பற்றி பேசியதும் இதுவே நான் அறிந்த வரையில் முதல் முறை என்று நினைக்கிறேன்..
பகிர்வுக்கு நன்றிகள்
Nice
nice
அருமையான, அழகான பகிர்வு சார்.
arumai
அருமை பகிர்வு நன்றி கல்யாண்ஜி
// அந்தப் பாவத்தை நாங்கள் இரண்டு பேரும் பகிர்ந்து கொள்கிறோம். // அதுதான் ரகுமான்...!
super sir....., en pala kelvikaluku ungal mulamaga vidai kidaithathu....
//சின்ன வயதிலேயே எனக்கு ஏற்பட்ட இழப்புகள் காரணமாக இந்த முதிர்ச்சி வந்திருக்கலாம்.//
//மரணத்தை நினைவுகூர்வதேகூட உங்களுக்கு முதிர்ச்சியைக் கொடுக்கும். //
நல்ல பயனுள்ள கருத்துக்கள் பொதிந்த நேர்க்காணல் கல்யாண்ஜி.
மேலே குறிப்பிட்டுள்ள இரு வாக்கியங்களும் அவ்வ்வ்வ்வ்வளவு உண்மை தன்மைக் கொண்டவை.
நன்றி.
ஆழமான சிந்தனை, புரிதலுடன் கூடிய நல்லதொரு நேர்காணல். வாழ்த்துக்கள் :)
குரானில் வருவதுபோல ‘உன்னால் தாங்க முடியாத துன்பத்தைக் கடவுள் உனக்கு தரப்போவதே இல்லை’ என்பதுதான் உண்மை. எத்தனை துன்பங்கள் வந்தாலும் அத்தனையையும் தாங்கிக்கொண்டு மீண்டு வரத்தான் வேண்டும். ஒருவன் மிகவும் கஷ்டப்பட்டால், பின்னாளில் அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அர்த்தம். அந்த நம்பிக்கை இருக்க வேண்டும்.matured man..thanku kalyan
GREETINGS FROM NORWAY! I MET ARR AT OSLO PLAZA HOTEL ENTRANCE SOMETIMES BACK AND CONVEY OUR KIND REGARDS FROM NORWAY TAMILS! HE WAS VERY FRIENDLY,HUMBLE,SMILING,DOWN TO EARTH PERSON! GOD BLESS HIS/FAMILY! LET HIM DO MORE TO MUSIC WORLD LIKE MICHEL JACKSON! NEW IDEAS+COURAGE+SELF-CONFIDENCE+ACTION MAKE INDIAN+TAMIL YOUTH PROGRESS!
GREETINGS FROM NORWAY! I MET ARR AT OSLO PLAZA HOTEL ENTRANCE SOMETIMES BACK AND CONVEY OUR KIND REGARDS FROM NORWAY TAMILS! HE WAS VERY FRIENDLY,HUMBLE,SMILING,DOWN TO EARTH PERSON! GOD BLESS HIM & FAMILY! LET HIM DO MORE TO MUSIC WORLD LIKE MICHEL JACKSON! NEW IDEAS+COURAGE+SELF-CONFIDENCE+ACTION MAKE INDIAN+TAMIL YOUTH PROGRESS!
திரு ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடன் பிரத்யேக பேட்டி - நண்பர் திரு கல்யாண்ஜி ஏப்ரல் 2010இல் எடுத்தது. திரு ரஹ்மான் மேல் மிகுந்த மரியாதை ஏற்பட்டிருக்கிறது. சற்று பெரிய பதிவு. நண்பர்கள் நேரம் ஒதுக்கி படித்துப் பார்க்க கேட்டுக் கொள்கிறேன். எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி திரு கல்யாண்ஜி. வாழ்த்துகள்.
அற்புதமான பேட்டி.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்..
தென்னரசன்.
குவைத்.
அவரது இசைப்போல் அமைதியாய் சில இடங்களிளும் ஆர்பரிப்பாய் சில இடங்களிளும் செல்கிறது
பகிவுக்கு நன்றி கல்யான்ஜி
அருமையான பேட்டி...அவருடைய பதில்களும் அவருக்குள்ள இருக்கிற அபரிமிதமான தெளிவையும் அற்புதமான மனிதரையும் காட்டுகின்றன....பகிர்வுக்கு நன்றி...:)
அருமையான பேட்டி...அவருடைய பதில்களும் அவருக்குள்ள இருக்கிற அபரிமிதமான தெளிவையும் அற்புதமான மனிதரையும் காட்டுகின்றன....பகிர்வுக்கு நன்றி ...:)
அருமையான கேள்விகள்...அருமையான பதில்கள்..கேள்விகள் அருமையாக இருந்தால் பெட்டியும் இனிமையாக வறு..சுருதி,லயம தப்பாமல் வந்திருகிறது பேட்டி.
அருமை..கேல்பிகள் நன்றாக இருந்தால் பதில்களும் அருமையாய் வரும்..சுருதி,லயம தப்பாத பேட்டி .அருமை.
Post a Comment