Monday, March 14, 2011

காணாமல் போன கனவு.... தனுஷ்கோடி - ஒரு நேரடி ரிப்போர்ட்
தனுஷ்கோடியின் அவல நிலைகுறித்து நான் எழுதிய நேரடி ரிப்போர்ட் இது - புதிய தலைமுறை வார இதழில் கவர் ஸ்டோரியாக சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது...‘பாழடைந்து கிடக்கிறது; ஆனாலும் பயங்கர அழகு.. ஆள் நடமாட்டம் இல்லை.ஆனாலும் உயிர்ப்போடு இருக்கிறது. திகில். ஆனால் பரவசம். எல்லாவற்றையும் விட இந்தியாவின் விளம்பில் நின்று கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே ‘ஜிவ்’வென்று இருக்கிறது.’

-சில ஆண்டுகளுக்கு முன் தனுஷ்கோடிக்கு வந்து போன வெள்ளைக்காரர் ஒருவர் எழுதிய வரிகள் இவை. இன்றைக்கும் அந்தக் கடலோர நகருக்குப் பொருந்தும் வரிகள்தான். ஆனால் அந்த அழகிற்குப் பின்னால் ஒளிந்து கிடக்கிறது ஒரு சோகம். அது-

47 வருடங்களாக அரசுகளால் கைவிடப்பட்டு அநாதையாய் நிற்கும் சோகம்.

ஒரு காலத்தில் தினம் இலங்கையிலிருந்து நூற்றுக் கணக்கான பேர் இந்தியாவில் வந்து இறங்கிய இடம்.. சென்னையிலிருந்து இந்தோ-சிலோன் போட் மெயில் மூலமாக வரும் பயணிகள், ரயிலிலிருந்து இறங்கி கப்பல் மூலம் தலைமன்னார் செல்வதற்காக ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்ட தளம் அது. இராமாயணத்திலும் சங்க இலக்கியத்திலும்பேசப்படும் இடம். வங்க கடலும் இந்துமாக் கடலும் இணையும் புள்ளி.
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த ஊர், 47 ஆண்டுகளுக்கு முன் ஒரு நள்ளிரவில் கடலின் சீற்றத்தால் காணாமல் போனது. 1964 டிசம்பர் 22, செவ்வாய் இரவு வீசிய பெரும் புயல், தனுஷ்கோடியில் வாழ்ந்த ஆயிரக்கணக்கானவர்களை பலி கொண்டதோடு அந்தக் கிராமத்தையே உருத்தெரியாமல் ஆக்கிப் போனது. அன்று, ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் ஸ்டேஷன், சுங்க வரி அலுவலகம், தபால் நிலையம், பள்ளிக்கூடம், இந்துக் கோயில்கள், தேவாலயங்கள், கடைத்தெரு என 500 மீனவக் குடும்பங்கள் உட்பட பல்வேறு இனத்தவருமாக கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வசித்த ஊர் எனப் பரபரப்பாக இயங்கிய தனுஷ்கோடி, இன்று ‘வாழத் தகுதியற்ற பகுதி’

சரி புயல் காரணமாக மக்கள் வாழத் தகுதியற்ற இடமாகவே அது ஆகிவிட்ட்தாகவே இருக்கட்டும். அப்படி ஆகிவிட்டால் அதைப் புதுப்பிக்கும் கடமை அரசுக்குக் கிடையாதா? 2006ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரமைக்கப்பட்டு, புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு அவை இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டன. ஆனால், 1964ல் கிட்டத்தட்ட சுனாமி போல ராட்சத அலைகளால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி மட்டும் இன்னும் ஒரு சாலை கூட சரி செய்யப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது ஏன்?

இதற்கு தெளிவாக விடை சொல்பவர்கள் யாரும் இல்லை. நிறைய ஊகங்கள்தான் விடையாகத் தரப்படுகின்றன. தனுஷ்கோடியிலிருந்து இலங்கை 15 கீ.மீ.தான். கிழக்குக் கடற்கரையோரம் இலங்கைக்கு நெருக்கமாக உள்ள வேதாரண்யம், கோடிக்கரை, நாகப்பட்டினம் போன்ற பகுதிகள் தமிழ்நாட்டின் நிலப்பகுதியோடு இணைந்த பகுதியாக உள்ளன. அங்கே பாதுகாப்பை, கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதும், கண்காணிப்பதும் அதிகம் சிரமான விஷய்ம் அல்ல. ஆனால் தனுஷ்கோடி தீவு. இலங்கையில் உள்நாட்டுப் போர் இருந்த சூழலில் தனுஷ்கோடி மீண்டும் உயிர்த்தெழுவதை பாதுகாப்புக் காரணங்களுக்காக அரசுகள் விரும்பவில்லை எனச் சொல்லப்படுகிறது.

இது குறித்துப் பேச இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகினோம். தனுஷ்கோடியின் மறுசீரமைப்பு குறித்துப் பேச வேண்டும் என்றதுமே, "அது குறித்த முந்தைய தகவல்களை சேகரித்து விட்டு அழைக்கிறோம்" என்று அவரது உதவியாளர் நமது தொடர்பு எண்ணை வாங்கி வைத்துக்கொண்டார். ஆனால், அவரிடமிருந்து அழைப்பு வராததால் மீண்டும் நாமே தொடர்பு கொண்டபோதும் விரைவில் அழைப்பதாகவே பதில் வந்தது.

அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. ஹசன் அலியை தொடர்பு கொண்டபோது, "நான் இப்போது சட்டமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருக்கிறேன். இராமேஸ்வரத்தை பெருநகரமாக ஆக்கச் சொல்லி சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்திருக்கிறேன். அதைத் தொடர்ந்து தனுஷ்கோடிக்கும் வழி பிறக்கும்" என்றார் சுருக்கமாக

ஆனால் இப்போது உள்ள ஆட்சியின் கடைசி சட்டமன்றத் தொடரும் முடிந்து விட்ட்து. இனித் தேர்தல் முடிந்து புதிய சட்டமன்றம் அமைந்த பிறகு குரல் எழுந்தால்தான் உண்டு.
"பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில் ரயில்வே துறை அமைச்சராக இருந்த நிதிஷ்குமாரை தனுஷ்கோடிக்கே வரவழைத்து, அதன் அவலத்தைப் பார்வையிட வைத்தேன். அவரும் ரயில்வே துறை அதிகாரிகளை அழைத்து, தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து அமைக்க எவ்வளவு செலவாகும் என்று திட்டமிடச் சொன்னார். அவர்களும் 40 கோடி ரூபாய்க்கு ஓர் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார்கள். ஆனால், ஆட்சி மாற்றம் காரணமாக அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. சேது சமுத்திரத் திட்டம் மூலம் இதுவரை 600 கோடி ரூபாய் வரை கடலில் வீணடித்திருக்கும் இந்த அரசு, வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஊருக்கு ஒரு சாலை கூடப் போட முன்வரவில்லை " என்கிறார் பி.ஜே.பி.யின் தேசியப் பொதுக்குழு உறுப்பினரான இராமேஸ்வரத்தைச் சேர்ந்த கே.முரளிதரன்.

வாழத் தகுதியற்ற ஊர் என அரசாங்கம் அறிவித்து விட்டாலும், இன்றைக்கும் தனுஷ்கோடியிலும் அதனைச் சுற்றி இருக்கும் கடற்கரை கிராமங்களிலும் சுமார் 600 மீனவக் குடும்பங்கள், தாம் வாழ்ந்த அந்தக் கடற்கரை மண்ணை விட்டுப் பிரிய மனமில்லாமல் இன்றைக்கும் அங்கேயே மீன் பிடித்துப் பிழைக்கிறார்கள். (தனுஷ்கோடியைச் சுற்றியுள்ள பகுதியில் மீன் வளம் அதிகம். கடலின் நீர்மட்டம் குறையும் போது முழங்கால் அலவு நீரில் இறங்கி வெறும் கையாலேயே மீன் பிடிக்கலாம்!). ஓலைகளால் வேயப்பட்ட குடிசைகளில் தங்கி. மணலைத் தோண்டி சின்னச் சின்ன கிணறுகளை அவர்களே ஏற்படுத்திக் கொண்டு அதிலிருந்து கிடைக்கும் குடிநீரையே பருகி வாழ்கிறார்கள். மின்சாரம் அறவே கிடையாது. ஊருக்குள் ஒரே யொரு டீக்கடை இருக்கிறது. அனைவரது வீட்டிலும் இருக்கும் ஃபிளாஸ்கில் டீ வாங்கி வைத்துக் கொண்டு அவ்வப்போது அதைப் பருகுகிறார்கள். காய்கறிக்கடை வசதியெல்லாம் இல்லாததால் தினமும் விற்பனைக்காகப் பிடிக்கும் மீன்களில் ஒருசிலதான் அவர்களின் தினசரி சமையல்.

‘வாழத் தகுதி இல்லாத ஊர்’ என அறிவித்திருக்கும் அரசாங்கம் இந்த ஊரில் ஒரு நடுத்தரப் பள்ளியை நடத்திக் கொண்டிருக்கிறது என்பது ஒரு இனிய ஆச்சரியம். அங்கே 73 மாணவர்கள் பயில்கிறார்கள். ஒரு தலைமை ஆசிரியை, இரண்டு ஆசிரியைகள், ஒரு சத்துணவு அமைப்பாளர் இதற்காக நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். பஸ் வசதி இல்லாத காரணத்தால் அந்த ஆசிரியைகள் தினசரி ஏழு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு ஆபத்தான வேன் பயணத்தின் மூலமாகத்தான் வந்து போவதாக வேதனையோடு தெரிவிக்கிறார்கள். தங்கள் பெயரையோ, புகைப்படத்தையோ வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அந்த ஆசிரியர்கள் தாங்கள் படும் சிரமங்களைப் பற்றிச் சொன்னார்கள்,

"இங்க டிரான்ஸ்ஃபர் ஆகி வந்த பிறகுதான், இந்த ஸ்கூலுக்கு வந்துபோக பஸ் கிடையாதுன்னு தெரிஞ்சுது. சுற்றுலாப் பயணிகள் வரும் வேன்லதான் நாங்களும் தினசரி வர்றோம். எங்களிடம் சில டிரைவர்கள் பத்து இருபது மட்டும் வாங்கிக்குவாங்க. சில பேரு இலவசமா இறக்கி விடுவாங்க. சில நாட்கள்ல, பயணிகள் கூட்டம் சேரலைன்னு வேனை எடுக்க மாட்டாங்க. அப்ப நாங்க இந்த மணல் பாதை வழியா தனியா நடந்தே வந்துட்டு, சாயந்திரம் நடந்தே போவோம். பல நாட்கள் தினசரி பதினான்கு கிலோ மீட்டர் வரை நடந்திருக்கோம். மழை நாட்களில் மிகவும் சிரமம். ஆனால், குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கிறோம் என்கிற மன நிறைவு ஒன்றுதான் எங்களுக்குக் கிடைக்கும் நிம்மதி" என்கிறார்கள் சோர்ந்துபோன குரலில்.

தங்க நாற்கரச் சாலைகள் இந்தியா நெடுக நீண்டு கிடைக்கின்றன. ஆனால் இந்தத் தீவிற்குக் கடற்கரை மணலின் ஊடாகச் செல்லும் ஒரு ஒற்றையடிப்பாதைதான் சாலை. முகுந்தராயர் சத்திரம் என்னும் இடம் வரை பஸ்ஸிலோ காரிலோ வந்து, அங்கிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனுஷ்கோடிக்கு வேனில்தான் பயணிக்க வேண்டும். வட நாட்டிலிருந்து புனிதப் பயணம் வருபவர்களுக்காகவும், சுற்றுலாப் பயணிகளுக்காகவும் சுமார் ஐம்பது பழைய வேன்கள் முகுந்தராயர் சத்திரத்தில் காத்திருக்கின்றன. ஓர் ஆளுக்கு கட்டணம் எண்பது ரூபாய். பத்து பேர் மட்டுமே அமரக் கூடிய அந்த வேன்களில் சுமார் முப்பது பேர் வரை ஏற்றிக் கொள்கிறார்கள். அந்த வேன் டிரைவர்களில் முக்கால்வாசிப் பேர், இருபதை தொட்டிருக்கும் இளைஞர்கள். அவர்களிடம் ஆட்டோ ஓட்டுவதற்கான ‘பேட்ச்’ மட்டுமே இருக்கிறது. ‘நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான ஹெவி லைசேன்ஸ் அநேகம்பேரிடம் கிடையாது’ என்பதை ஒப்புக் கொள்கிறார் ஒரு மூத்த டிரைவர்.

ஒத்தையடிப் பாதையாக, கடற்கரை மணலில் புதைந்தபடியே வளைந்து வளைந்து, குலுங்கியபடியே செல்லும் ஆபத்தான அந்தப் பயணத்தில் எந்நேரமும் அந்த வேன் கவிழ்ந்து விடும் என்கிற உணர்வு ஏற்படுகிறது. இப்படி தினசரி ஐநூறு பயணிகளாவது தனுஷ்கோடிக்கு வந்து போகிறார்கள். விடுமுறை நாள்களில் இந்த எண்ணிக்கை இரண்டு மூன்று மடங்காகிறது. ஐயப்ப சீசனின்போது கூட்டம் இன்னும் அதிகரிக்குமாம்.

"இராமயணத்தைப் படித்து முடித்ததும் அது நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில்தான் தனுஷ்கோடி வந்தேன். ஆனால், ஆபத்தான இந்த வேன் பயணம் தற்கொலைக்கு சமம் என்பதால் ஏழு கிலோ மீட்டர் தூரம் நடந்தே போய் வந்தேன். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு உங்கள் அரசாங்கம் போக்குவரத்து வசதிகள் செய்யாதது ஏன்?" என்று கேள்வி கேட்கிறார் போலந்து நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணியான ரசே.

"புயல் வந்தன்னைக்கு தன் குடும்பத்தோட அடுத்தவங்க புள்ளை குட்டிகளையும் தலைமேல தூக்கி வச்சுக்கிட்டு நீந்தி கரை சேர்த்திருக்காரு எங்கப்பா. அதனாலேயே அவருக்கு ‘ நீச்சல்’ காளினு பேரு.. நான் எவ்வளவோ வற்புறுத்திக் கூப்பிட்டும் இந்த தனுஷ்கோடிய விட்டு கடைசிவரைக்கும் வெளியே வரமாட்டேன்னு பிடிவாதமா இருந்து போன வருஷம்தான் செத்துப் போனாரு. ‘மறுபடியும் தனுஷ்கோடிக்கு உயிர் வரும்டா’ன்னு நம்பிக்கையோட சொல்லிக்கிட்டிருந்தவரு, போன வருஷம்தான், தொண்ணூத்தி ரெண்டு வயசுல உசுர விட்டுட்டாரு. அவரு சொன்னமாதிரி இந்த தனுஷ்கோடிக்கு ஒரு ரோடு போடச் சொல்லி பல அதிகாரிகளச் சந்திச்சு மனு கொடுத்துக்கிட்டே இருக்கேன்" என்கிறார் தனுஷ்கோடியைச் சேர்ந்த டி.எம்.இ. படித்த மீனவரான காளி. நம்புராஜன்.

அந்த மக்கள் கேட்பதெல்லாம் ஒரு சாலை. ஆனால் 47 வருடங்களாக அது அவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் வாழத் தகுதி இல்லாத அந்த ஊர் இப்போதும் அரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தனுஷ்கோடியில் சினிமாப்படம் எடுக்க விரும்புவர்களிடம் அரசு ஒரு நாளைக்கு மூவாயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது.

தனுஷ்கோடியை மீண்டும் சீரமைக்க என்ன செய்ய வேண்டும்? அப்படிச் செய்வதனால் என்ன பயன்?

" ரோடு வசதி தனுஷ்கோடிக்கு வந்துட்டா, பக்தர்கள் கூட்டமும் சுற்றுலா பயணிகளும் பெருமளவில் வர வாய்ப்பிருக்கு. அதன்மூலம் அரசுக்கும் இங்குள்ள மக்களுக்கும் வருமானம் பெருகும்" என்கிறார் இராமேஸ்வரத்தில் டூரிஸ்ட் கைடாக பணியாற்றும் மாரிப்பிச்சை. 64ம் வருடத்திய புயலின்போது, தனுஷ்கோடி துறைமுகத்தில் போர்ட்டராக இருந்த இவரின் தாத்தாவால் தப்பிப் பிழைத்தவர் இவர்.

"தமிழக அரசு, சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூலம் தனுஷ்கோடியை புதுப்பித்து, ஓர் அழகான கடற்கரை கிராமமாக இதை உருவாக்கலாம். பக்தர்கள் தங்க லாட்ஜ்கள், வெளிநாட்டவர்களுக்கு ரிசார்ட்ச் என்று அமைத்தால் இந்தியாவிலேயே மிகச் சிறப்பான வரலாற்றுச் சின்னமாகவும், சுற்றுலா ஸ்தலமாகவும் தனுஷ்கோடி பிரபலமடைய வாய்ப்பிருக்கிறது" என்று யோசனை தெரிவிக்கிறார் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளரான வி.துரைசிங்கம்.

ஆனால் இளைஞரும், இராமநாதபுரத்தைச் சேர்ந்த வலைப்பதிவருமான முகவைத் தமிழன் என்கிற ரெய்சுதீன் சொல்லும் யோசனை இவற்றையெல்லாம் விட ஆக்கபூர்வமானது. "இலங்கையின் நல்லுறவை விரும்பும் இந்திய அரசு, தனுஷ்கோடியை மறுசீரமைத்து கப்பல் போக்குவரத்தை துவக்கலாம். அதன் மூலமாக இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை இந்த மாவட்டத்தின் நரிப்பையூரில் அமைத்ததைப் போலவே, தனுஷ்கோடியிலும் அமைத்தால் இராமேஸ்வரம் உட்பட அந்தப் பகுதி மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும்.” என்னும் முகவைத் தமிழன் சினிமாக்காரர்ர்கள் மீது சீறுகிறார்.

“தனுஷ்கோடியை சினிமாக்காரர்கள் படப்பிடிப்பிற்காகப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும். ‘விஷுவல் பியூட்டி’ என்ற காரணத்திற்காக அங்கே பாடல் காட்சிகளைப் படமாக்கும்போது, இடிந்து போன சர்ச் மற்றும் கட்டிடங்களின் மீது குரூப் டான்சர்களை ஏற்றி ஆட வைப்பது மிகவும் கொடுமையானது. ஆயிரக்கணக்கானவர்கள் செத்து மடிந்து அந்த மண்ணில் புதைந்து போயிருக்கும்போது அதன் மேலே இப்படி ஆட விட்டுப் படம் பிடிப்பது வேதனைக்குரியது" என்கிறார் முகவைத் தமிழன்

இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு நீச்சல் காளி ஊடகங்களிடம் தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். தனுஷ்கோடியின் தெற்கு மூலையில் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. அவர் சிறுவனாக இருந்த காலத்தில் அதன் முன் உள்ள திடலில்தான் அவர் விளையாடிக் கொண்டிருப்பார். 1964 புயலின் போது ராட்சச அலைகள் தனுஷ்கோடியைத் தின்ற போது, அந்தப் பிள்ளையார் கோயிலும் கடலுக்கடியில் மூழ்கிப் போனது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் அந்தப் பிள்ளையார்கோயிலின் உச்சி வெளியே தெரிய ஆரம்பித்த்திருப்பதாகவும் அதைத் தான் கண்ணால் கண்டதாகவும் காளி தெரிவித்தார்.

“கடல் பின் வாங்குகிறது. இனி மெல்ல மெல்ல பழைய தனுஷ்கோடி நமக்குக் கிடைத்துவிடும்” என்று அவர் மிக மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருந்தார்.
தனுஷ்கோடி மீண்டு விட வேண்டும் என்ற ஒரு கிழவனுடைய உள்மனதின் ஆசையாக, கனவின் பிரதிபலிப்பாகக் கூட அது இருந்திருக்கலாம். ஆனால் அரசு மனது வைத்தால் இப்போதும் கூட தனுஷ்கோடியை சீரமைத்து உயிர்ப்பிக்கலாம்.

மனது வைக்குமா? அல்லது வெறும் கனவாகவே போய்விடுமா?

நன்றி: புதிய தலைமுறை

15 comments:

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்ல கட்டுரை சார். இதுக்காக அதிகம் உழைச்சிருக்கீங்கன்னு தெரியுது.

EdwinaJonas said...

nice one

ஆர்.இளங்கோவன் said...

அன்பின் கல்யாண்ஜி..

கட்டுரையினை படித்தேன்.. தனுஷ்கோடியின் இன்றைய நிலையினை..அப்படியே..காட்டியிருக்கின்றீர்கள்..

பகிர்ந்தமைக்கு நன்றிகள்..

நட்புடன்
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்) சென்னை

Chitra said...

Followers Widget இணைக்கவில்லையா? தொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசிக்க வசதியாக இருக்குமே.
உங்கள் எழுத்துக்கள், அருமை. பாராட்டுக்கள்!

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

அருமை...!

frank said...

o my god.......... come back........ come back..........

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

வேதனையின் மிச்ச ஓலங்களை வேதனையோடு பதிவு செய்திருக்கிறிர்கள், செவிடர்கள் கேட்கும் திறன் பெறட்டும்!!

Hemamalini said...

அருமை.....
அலைகளின் சீற்றத்தினால் அழிந்துப் போன “த்னுஷ்கோடி” என்றிடினும், அலட்சியத்தினால் அழிந்துப் போயின மனித நேயமும்.....

kaanchan said...

அருமை.....
அலைகளின் சீற்றத்தினால் அழிந்துப் போன “த்னுஷ்கோடி” என்றிடினும், அலட்சியத்தினால் அழிந்துப் போயின மனித நேயமும்.....

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...

// ‘விஷுவல் பியூட்டி’ என்ற காரணத்திற்காக அங்கே பாடல் காட்சிகளைப் படமாக்கும்போது, இடிந்து போன சர்ச் மற்றும் கட்டிடங்களின் மீது குரூப் டான்சர்களை ஏற்றி ஆட வைப்பது மிகவும் கொடுமையானது. ஆயிரக்கணக்கானவர்கள் செத்து மடிந்து அந்த மண்ணில் புதைந்து போயிருக்கும்போது அதன் மேலே இப்படி ஆட விட்டுப் படம் பிடிப்பது வேதனைக்குரியது"// என்கிறார்
முகவைத் தமிழன்

TRUE......

அருமையான பதிவு ஐயா...

தனுஷ்கோடியின் இன்றைய நிலை
இன்னும் அவலத்தில்

//வேதனையின் மிச்ச ஓலங்களை வேதனையோடு பதிவு செய்திருக்கிறிர்கள், செவிடர்கள் கேட்கும் திறன் பெறட்டும்!!//

டயானா

vinoth kumar said...

really super..., we miss our country please recover our dhanushkodi

vinoth kumar said...

please recover our dhanushkodi

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.

kirthi said...

நல்ல கட்டுரை..தெரியாத உண்மைகள்.

kirthi said...

அருமையான பதிவு..வெளிவராத உண்மைகள்.