Monday, July 20, 2009

பாடமாக்க வேண்டிய ஒரு நூல்!


திருமண விழாக்களுக்குப் போனாலோ, நண்பர்களின் பிறந்தநாள் என்றாலோ புத்தகங்களை அன்பளிப்பாக அளிப்பதையே நான் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். இனி என் வாழ்நாளில் இந்த ஒரே ஒரு புத்தகத்தை மட்டுமே அடுத்தவர்களுக்கு வழங்குவதென்று முடிவு செய்து விட்டேன்.

அந்த சுயசரித புத்தகத்தின் பெயர் ‘நான் வித்யா’ – எழுதியவர் ‘லிவிங் ஸ்மைல்’ வித்யா. கிழக்குப் பதிப்பகம் இதை வெளியிட்டிருகிறது. இன்றைக்கு அந்தப் பெண்ணுக்கு வயது இருபத்தியேழு. இந்த மிகக் குறைந்த வயதில் தன்னுடைய வாழ்க்கைச் சரித நூலை இதற்கு முன்னால் இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயேகூட யாருமே எழுதியிருக்க வாய்ப்பில்லை.

அந்தப் புத்தகம் வெளிவந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் சமீபத்தில்தான் அதைப் படிப்பதற்கு எனக்கு வாய்ப்பு அமைந்தது. உலுக்கி எடுத்துவிட்டது அவரது வாழ்க்கை...

ஒரு நாவலைப் போல அவரது சிறுவயதில் துவங்கும் காட்சிகள் மெல்ல மெல்ல விரிகின்றன. ஐந்து பெண் பிள்ளைகளுக்குப் பிறகு பிறந்த ஆண் குழந்தை அவர். அப்போது அவர் பெயர் சரவணன். அன்பான அம்மா, கண்டிப்பான அப்பா, பாசமான சகோதரிகள், படிப்பின் மீது அவருக்கு இருந்த ஆர்வம்...அவருக்குள் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்த பெண்மையின் அழகியல் உணர்வுகள், அதை உரிமையோடும் ஆசையோடும் தக்க வைத்துக் கொள்ள அவர் சந்தித்த அவமானங்கள், தன் மீது திணிக்கப்பட்டிருக்கும் ஆண் என்கிற அடையாளத்தை அகற்றுவதற்காக அவர் பட்ட இன்னல்கள், அதில் கிடைத்த வெற்றி, சந்தோஷம் அனைத்தையும் தாண்டி அந்த மூன்றாம்பால் இனத்தின் மீது இவருக்கு இருக்கும் சமூக அக்கறை.....

இத்தனை போராட்டங்களுக்குமிடையில் அவருக்கு அமைந்த நண்பர்கள் வட்டம் அன்பால் மட்டுமே பின்னப்பட்டிருப்பது அவருக்கு அமைந்த அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது உள்மன உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவருக்கு உதவிய நூற்றுக்கணககான உள்ளங்களை வித்யா இந்த நூலில் அழகாக அறிமுகம் செய்திருக்கிறார். கதையில் வரும் பாத்திரங்களைப் போல இந்த நிஜமாந்தர்கள் நெஞ்சில் இடம்பிடித்து விடுகிறார்கள்.

பால் வியாபாரியான இளங்கோவில் ஆரம்பிக்கிறது அந்த அன்பு மனிதர்களின் பட்டியல். செந்தில், வெங்கடேஷ், கார்த்தி, ஜான், விஜி, ராமர், முருகன், நாடகக்கலைஞர் முருகபூபதி, செல்வம், ரேவதி, ரத்னவேல், பாபு, சிநேகா, கடலை விற்கும் சுரேஷ், கரகாட்ட ஷாலினி, பூஜா, ஆயிஷா என்று தொடங்கி மதுரை கோபி, கண்ணன், மலைச்சாமி, ராஜன், அமுதன், விஜயா ஆண்ட்டி, அசோக், ஆனந்த்குமார், உதயகுமார், தேம்பாவணி, ராமர்பாண்டி, மஞ்சுமதி, சுரேஷ்குமார், முத்துராம், பழனி, கமலபாக்கியம், முத்தமிழ்ச்செல்வி, நேரு, சிவராஜ், பாலபாரதி, செழியன், இலங்கை நந்தினி, சுயம் அறக்ட்டளையின் முத்துராமன் – உமா என்று இவர் சந்தித்த அந்த நல்லமனசுக்காரர்களின் பட்டியல் நீள்கிறது. வித்யாவிற்கு மனதார உதவிகளை செய்த இந்த இதயங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

வித்யா, தன்னை ஒரு பெண்ணாக அறிவித்துக் கொள்ள அரசாங்கத்தோடு நிகழ்த்திய போராட்ட அனுபவங்கள் கொடுமையானவை. விலங்குகளுக்காக ஒரு தனி வாரியத்தையே அமைத்து அவைகள் திரைப்படங்களில் கொடுமைப் படுத்தபடுகின்றனவா என்பதை அறிய ஒரு குழுவை அமைத்திருக்கிறது அரசு. சம்பந்தப்பட்ட திரைபபட கலைஞர்களுக்கும் பல சிரமங்களைத் தருகிற அரசு அதிகாரிகள், வித்யா போன்ற திருநங்கைகளும் தங்களைப் போலவே ஆறு அறிவு கொண்ட மனித உயிர்கள்தான் என்பதை எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறார்கள்?

வித்யாவின் இந்த நூலை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் என்பதோடு மட்டும் எனது விருப்பம் நின்றுவிடவில்லை. அது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாக வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். திருநங்கைகளின் மன உளைச்சல், அவர்கள் சந்திக்கிற அவலங்கள், அவமானங்களை அனைவரும் கல்வி மூலமாகவே அறிந்து கொண்டால் அவர்கள் மீது இந்த சமூகத்தில் இருக்கும் பார்வை சற்று விரிவடையும் என்பது எனது எண்ணம். அவர்களை கேலியாகவும் கிண்டலாகவும் மட்டுமே பார்க்கிற இந்த சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வு வரவேண்டுமானால் இந்தப் புத்தகத்த, பாடமாக அரசு அறிவிக்க வேண்டும்.

திருநங்கைகளின் வாழ்வியல் பின்னணியை வித்யா இதில் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார். பிச்சை எடுப்பது, பாலியல் தொழில் செய்வது தவிர அவர்களுக்கு எதுவுமே தெரியாது என்கிற நிகழ்வை மாற்றி அமைத்திருக்கிற வித்யாவின் மன உறுதி பாராட்டத்தக்கது. எம்.ஏ. மொழியியலில் முதுகலைப் பட்டம் பெற்று, இன்று தனக்கென ஒரு விருப்பமான இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் இந்த வித்யா,

‘’சொர்க்கம் வேண்டும் என்று நான் கேட்கவில்லை. நரகம் வேண்டாமே என்றுதான் மன்றாடுகிறேன், எனக்காகவும் என்னைப் போன்ற பிற திரு நங்கைகளுக்காகவும்.‘‘ என்று இந்த நூலை முடித்திருக்கிறார்.

வித்யாவின் எதிர்பார்ப்பு நிறைவேறுகிற காலம் வெகுதூரத்தில் இல்லை. வாழ்த்துகள் வித்யா!
-------------------

13 comments:

Unknown said...

நூல் அறிமுகம் நல்லா இருக்கு சார். விழாக்களுக்கு செல்லும்போது புத்தகங்களை பரிசாக கொடுப்பதும், இனி இந்தப் புத்தகத்தையே கொடுக்க நினைப்பதும் நல்ல முடிவு.

க. தங்கமணி பிரபு said...

மிகச்சிறந்த பதிவு! எளிமையான நடையில் வித்யா தன் சரவணன் அடையாளத்தை உள்ளும் புறமும் அகற்ற பட்ட சிரமங்களை விட அதற்கான அவருடைய மனத்திட்பம் ஆச்சர்யமானது, எண்ணியாங்கு எய்தல் எனும் வள்ளுவர் சொன்ன மாதிரி! வாழ்த்துக்கள் உங்களுக்கும், வித்யாவுக்கும்!

துளசி கோபால் said...

இப்போதான் ரெண்டு வாரம் முன்பு இந்தப் புத்தகம் வாங்கினேன். பாதி படிச்சாச்சு. மீதியும் படிச்சுட்டு விமரிசனமோ இல்லை நம்ம வித்யாவுக்கு மடலோ எழுதணுமுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்தப் புத்தகத்தை, ஒரு நண்பருக்கு பரிசாக அளிக்க எனக்கு வாய்ப்பு நேர்ந்தது. ஆனால் அந்தப் புத்தகத்தை நான் படிக்க இயலவில்லை.

நீங்கள் எழுதியிருக்கும் பதிவு புத்தகத்தை படிக்கத்தூண்டுமாறு அமைந்திருக்கிறது.
வாய்ப்பு கிடைத்தால் வாசிக்கவேண்டும்

//வித்யாவின் எதிர்பார்ப்பு நிறைவேறுகிற காலம் வெகுதூரத்தில் இல்லை. வாழ்த்துகள் வித்யா!//

உங்களோடு இணைந்து நாங்களும் வித்யாவை வாழ்த்துகிறோம்.

rahini said...

உங்களோடு இணைந்து நாங்களும் வித்யாவை வாழ்த்துகிறோம்.

மிகச்சிறந்த பதிவு

Romeoboy said...

இந்த புத்தகத்தை நான் இரண்டு வாரங்களுக்கு முன் தான் படித்தேன். முதல் பத்தியே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பற்றி எழுதி கொஞ்சம் கலங்க வைத்து விட்டார் .

எனது நண்பர்களுக்கு இந்த புத்தகத்தை படிக்க சொல்லி பரிந்துரைத்து உள்ளேன் .

நல்ல பதிவு ..

அன்புடன் அருணா said...

மிகச்சிறந்த பதிவு!நீங்கள் எழுதியிருக்கும் பதிவு புத்தகத்தை படிக்கத்தூண்டுகிறது பூங்கொத்து ..!

Majid Hussain said...

Is this book available in audio book or ebook format. How can I buy from Dubai

Joe said...

//
’சொர்க்கம் வேண்டும் என்று நான் கேட்கவில்லை. நரகம் வேண்டாமே என்றுதான் மன்றாடுகிறேன், எனக்காகவும் என்னைப் போன்ற பிற திரு நங்கைகளுக்காகவும்.‘‘ என்று இந்த நூலை முடித்திருக்கிறார்.
//
Fantastic ending note!

கல்யாண்குமார் said...

லிவிங்ஸ்மைல் வித்யாவின் இந்த புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் கீழ்கண்ட தொடர்பு சுட்டியை அழுத்தவும்.
http://www.amazon.com/I-Am-Vidya-Living-Smile/dp/8183686435/ref=sr_1_1?ie=UTF8&s=books&qid=1236156841&sr=1-1

கல்யாண்குமார் said...

லிவிங்ஸ்மைல் வித்யாவின் வலைப்பக்கம் www.livingsmile.blogspot.com

லிவிங் ஸ்மைல் said...

Thank you very much. Your post itself says that I'm always been blessed by the good heartful friends. thanks you again.

Unknown said...

I have read the book....vaadamalli ...written by su. Samudhram sir...in my school days....that changed my whole attitude about thirunangaigal.... i should read this book as well