Sunday, June 21, 2009

என்னைப் பற்றி மாலன்…


’அம்ருதா’ என்கிற இலக்கிய இணையப் பத்திரிக்கையில்
திரு. மாலன் அவர்கள் பத்திரிக்கையாளர்கள் பற்றி தன்னுடைய பார்வையில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில், நான் அவருக்கு அறிமுகமான நாளில் ஆரம்பித்து என் பத்திரிக்கை உலக வாழ்க்கையை ஒரு ஃப்ளாஷ்பேக்காக அவர் விவரித்திருப்பது என்னை சந்தோஷம் கொள்ளச் செய்தது. நன்றி: திரு.மாலன் அவர்களுக்கு.

அவரது கட்டுரை இதோ உங்களுக்காக...

அறியப்படாத ராட்சசர்கள்!
-மாலன்

அது ஒரு வித்தியாசமான விழா. அரசியல் கூட்டங்கள் போல், ஒரு முச்சந்தியில், சாலை மீது நான்கடி உயரத்துக்கு, நறுக்கப்பட்ட சவுக்குக் கம்பாங்கள் மேல் பலகைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட மேடை. மேடையின் மூன்று புறங்களும் திறந்து கிடக்க முதுகுப்புறம் மாத்திரம் தென்னை ஓலையால் மூடப்பட்டிருந்தது, மேடை மீதிருந்த கூரையைத் தாங்கிப் பிடித்த கம்பங்கள் மீது ஒலிப்பெருக்கிகள் கட்டப்பட்டிருந்தன. பாலகுமாரனின் முதல் நாவலுக்காக கோவையில் நடத்தப்பட்ட விழா. மேடையில் சில பேச்சாளர்களோடு நானும் அமர்ந்திருந்தேன்.

மளமளவென்று வீதி நிறைந்து கொண்டிருந்தது. அன்றைக்கே பாலா வெகுஜன வாசகர்களின் அபிமானம் பெற்ற நட்சத்திரம்தான். தமிழக மேடைகளில் முக்கியமான அல்லது பிரபல பேச்சாளர் கடைசியில் பேசுவது வழக்கம். நான் அன்று பிரபல பேச்சாளன் இல்லை. ஆரம்பத்திலேயே என் முறை வந்தது. பேசிவிட்டு வந்து அமர்ந்து கூட்டத்தையும் பேசுபவர்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
மேடைக்குப் பின்புறமிருந்து ‘’சார்.. சார்..’’ என்று ஒரு குரல் கேட்டது. ரகசியமான அடங்கிய குரல்தான் என்றாலும், மேடையில் அமர்ந்திருந்தவர்களின் கவனத்தைத் திருப்புமளவு உரத்துத்தான் இருந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். மேடைக்குப் பின்னிருந்த ஓலைகளை நெகிழ்த்திக் கொண்டு ஒரு இளைஞரின் முகம் தெரிந்தது. நான் நெருங்கிச் சென்று
‘’ என்ன?’’ என்றேன், தணிந்த குரலில். கூட்டத்தில் முன்னேறி வரும்போது கசங்கிவிடக்கூடாது எனக் கவனமாகத் தன் சட்டைக்குள் பொதிந்து எடுத்து வந்திருந்த ஒரு பொட்டலத்தை நீட்டினார். புத்தகம் போலொன்று ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்தது. ‘’என்ன? ‘’ என்றேன் நான் மறுபடியும். அவர், ‘’ பாருங்க’’ என்றார் சுருக்கமாக. எங்கள் உரையாடல் மேடையில் இருந்தவர்களின் கவனத்தைத் திசை திருப்புவதாக இருந்திருக்க வேண்டும். மேடையில் அமர்ந்திருந்த சாவி திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் புத்தகத்தை வாங்கிக் கொண்டு என் நாற்காலிக்கு வந்து பிரித்தேன். கையெழுத்துப் பத்திரிக்கை!

நான் கையெழுத்துப் பத்திரிக்கையில் துவங்கியவன். எனவே எனக்கு அதன் மீது இயல்பான ஓர் ஈர்ப்பு உண்டு. ஊற்றுப் பேனா கொண்டு கறுப்பு மசியில் குண்டு குண்டாக எழுதப்பட்ட பக்கங்கள். ( அன்று நுண்முனைப் பேனாக்கள் அறிமுகமாகியிருக்கவில்லை.) அக்கறையும் கவனமும் செலுத்தித் தயாரிக்கப்பட்ட இதழ்.

அதிலிருந்த படைப்புகள் அப்படி அற்புதமானவை அல்ல. ஆனால் அவை அநேகமாக ஆரம்ப நிலை எழுத்துக்கள். ஆனால் அந்த இதழில் ஒரு இதழியல் பார்வை இருந்தது. (Journalistic sence). அதன் பின்னிருந்த உழைப்பு என்னைத் தொட்டது. அந்த இளைஞர், கூட்டம் நடந்த நகரைச் சேர்ந்தவர் இல்லை. அதிலிருந்து 100-150 கி.மீ தள்ளியிருந்த ஒரு சிற்றூரிலிருந்து இதற்காகவே வந்திருந்தார். கிராமப்புற நடுத்தர வர்க்கக் குடும்பம் என்பது அவரது பணிவிலும் உடுப்பிலும் தெரிந்தது.

நெகிழ்த்திய அந்த ஓலைக்குப் பின்னிருந்த அந்த இளைஞர், இதழைப் புரட்டும் என் முக பாவங்களைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். கையெழுத்துப் பத்திரிக்கைகள் நூலகப் புத்தங்களைப் போல, எவ்வளவு நன்றாக இருந்தாலும் நாம் உரிமை கொண்டாட முடியாது. திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். க்டைசியில் சில தாள்களை வெள்ளையாக விட்டுவிடுவது கையெழுத்துப் பத்திரிக்கைகளின் இலக்கணம். வாசிப்பவர்கள் கருத்துக்களை எழுத அந்த இடம். வலைப்பதிவர்களின் வார்த்தையில் சொல்வதானால் அது பின்னூட்டப் பெட்டி. அன்று அந்த இதழை முழுதும் படிக்கவில்லை என்றாலும் முடிந்தவரை படித்தேன். என் கருத்துக்களைச் சுருக்கமாக எழுதி, காத்துக் கொண்டிருந்த இளைஞரிடம் கொடுத்தேன்.

எழுத்தின் மீதிருந்த தாகமும் பத்திரிக்கையாளனாக ஆகிவிட வேண்டும் என்ற ஆவலும் அந்த இளைஞரின் பின்னிருந்து உந்திக் கொண்டிருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர் பின்னால் விரும்பியபடியே ஒரு பத்திரிக்கையாளராக மலர்ந்தார். ‘திசைகள்’ குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். ’திசைகள்’ நின்று போனபோது ’ஜூனியர் விகட’னில் ஒரு தொடர் எழுதினார். ’கணையாழி’ இதழ்களை நான் சில காலம் எடிட் செய்து வந்தேன். அப்போதும் அதற்குப் பங்களித்தார். நான் இந்தியா டுடேவில் பொறுப்பேற்றபோதும் அதில் இணைந்து கொண்டார். கு.ப.ரா., தி.ஜானகிராமனில் ஆரம்பித்து நேற்றைக்கு எழுத வந்த ஹைகூ கவிஞன் வரை எல்லோரையும் வாசித்தவர். சிறைவாசிகளிலிருந்து அரசியல் முதலைகள் வரை பலரின் வாழ்க்கையை வரிவரியாக அறிந்தவர். காத்திரமாக எழுதக்கூடியவரும்தான்.

ஆனால், அந்த விஸ்வாமித்திரரின் தவத்தை சினிமா என்ற மேனகை கலைத்தது. பத்திரிக்கை என்ற மோகினியைப் பாதியிலேயே கைவிட்டுவிட்டு அவர் சினிமா என்ற மாய வலைக்குள் மாட்டிக் கொண்டார். கனவுகளோடு வந்தவரை காகித உலகத்தின் கடுமையான யதார்த்தங்கள் வேறு திசைக்கு விரட்டி அடித்தன.

அவரையும் அவரைப் போன்ற எண்ணற்ற இளைஞர்களையும் பத்திரிக்கை உலகம் பறிகொடுத்ததற்கு நம் ஊடகங்களில் அன்றிருந்த இயக்கவியலும் ஒரு காரணம் என்பது என் அபிப்பிராயம். அரசு, பத்திரிக்கைத் தொழிலாளர்களுக்கு அறிவித்திருந்த சம்பள விகிதங்கள் அன்று தமிழ்ப்பத்திரிகைகளில் அமல்படுத்தப்பட்டிருக்கவில்லை. ( இன்று நிலைமை மாறியிருக்கிறது. இளைஞர்கள் பலர் இதழியல் துறைக்கு – அதிலும்- தொலைக்காட்சிகளுக்கு வந்திருக்கிறார்கள்) அதனால் பத்திரிக்கையில் வேலை செய்தால் ஒருவன் தன் பெயரை அச்சிலே பார்க்கலாமே தவிர கையிலே காசைப் பார்க்க முடியாது. நாளிதழ் துணை ஆசிரியனுக்கு பெயரைப் பார்க்கிற பாக்கியம்கூடக் கிடைக்காது. ஒன்றிரண்டு பெரும் பத்திரிக்கைகளைத் தவிர மற்றவை இலக்கியப் பத்திரிகையானாலும் சரி, உயிர்தரிக்கவே போராடிக் கொண்டிருந்தன. அவை அளித்த சொற்பத் தொகையில் ஒருவன் சென்னையில் ஜீவித்திருப்பதே அதிசயம்தான். அதிலும் குடும்பத்தோடு வாழ அவன் பற்றாக்குறை பட்ஜெட்டை நிர்வகிக்கத் தெரிந்த பொருளாதார மேதையாக இருந்திருக்க வேண்டும். பத்திரிக்கைகாரனை வாங்கிவிடலாம் என்ற மதர்ப்பைப் பணப்பைகளுக்குத் தருவது அவனது பற்றாக்குறைப் பொருளாதாரம்தான்.

ஆனால், பொருளாதார நிர்பந்தங்கள் மட்டுமே அந்த இளைஞரைக் கோடம்பாக்கம் பக்கம் அனுப்பி வைத்தன எனச் சொல்வது அத்தனை சரியல்ல. அடி நிலையில் இருக்கும் ஒரு பத்திரிகையாளனுக்கு அன்று பத்திரிகைகளுக்குள்ளும் வாசகர் மத்தியிலும் பெரிய அளவில் அங்கீகாரங்கள் கிடைத்து விடவில்லை. அவர்களது அறிவும் திறமையும் அந்த அச்சுப் பரப்பிற்கு அவசியம் தேவைப்பட்டன. ஆனல் அந்த அறிவின் விலாசங்கள் அறியப்பட்டதேயில்லை.

நாளிதழ் ஆசிரியனாக இருந்தபோது நான் கவனித்திருக்கிறேன். டெலிபிரிண்டர்கள் துடித்துத் துப்பும் செய்திகளை உடனுக்குடன் மொழிபெயர்த்து பத்தி பிரித்துத் தலைப்பிட்டு, அச்சுக்கனுப்பிப் பத்திரிக்கையில் ஏற்ற வேண்டும். எந்தப் பத்திரிக்கை ஆசிரியனாலும் நிறுத்தி வைக்க முடியாத எந்திரங்கள் கடிகாரமும் அச்சியந்திரமும். எனவே உதவி ஆசிரியர்கள் சட்டையில் தீப்பிடித்தது போல உள்ளூர ஒரு பரபரப்பில் இயங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஆசிரியர் சாவி, பலசரக்குக் கடைக்காரருக்குப் பைத்தியம் பிடித்தது போல எனக் கெடு நாளின் ( பத்திரிக்கைக்காரர்கள் பாஷையில் சொன்னால் ‘இஷ்யூ’ முடிகிற நாள்) பரபரப்பைச் சொல்வார். அத்தனை பரபரப்பிலும் நிதானம் தவறாத ஓர் உயிரினம் ’துணை ஆசிரியர்கள்’ என அழைக்கப்படும் சப்-எடிட்டர்கள்.

’’ இந்தச் செய்தியை வாசகர்கள் புரிந்து கொள்ள எளிதாக இது தொடர்புடைய முன்னர் வந்த செய்தியை சுருக்கு ’ஒரு ரீகால்’ சேர்த்துக் கொள்ளுங்கள்’’ என்று நான் சொல்லும் யோசனைகளை மறுப்பின்றி ஏற்றுக் கொண்டு அச்சுக்குப் போகும் அவசரத்திலும் நினைவிலிருந்த செய்தியை தவறில்லாமல் பெயர்த்தெழுதிய கெட்டிக்காரர்கள் உண்டு. ஆனால், சராசரித் தமிழ் வாசகனுக்கு ஒரு மூன்றாந்தர எழுத்தாளனின் பெயர் தெரிந்திருக்கும் அளவிற்கு, இந்த ஞானவான்களின் நிழல்கூட தெரியாது. ஒரு தொலைக்காட்சித் தொடர் துணை நடிகையின் முகம் தெரிந்த அளவிற்குக் கூட இந்த ஜாம்பவான்களின் பெயர் தெரியாது. கவனம் பெறவும் வழியில்லை; காசும் அதிகமில்லை என்றால், ஏன் இதில் இவர்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என நீங்கள் கேட்பது எளிது.

பலமாடிக் கட்டிடங்கள் எழும்பிக் கொண்டிருக்கும் ஒரு பரபரப்பான வீதியில் பக்கத்து மர நிழலில் அமர்ந்து செருப்புத் தைக்கும் உழைப்பாளியை நீங்கள் என்றைக்காவது பார்த்திருக்கலாம். அவனுக்கு செருப்பு ரிப்பேர் செய்கிற வேலையில் அதிகம் போனால் ஒரு நாளைக்கு 50 ரூபாய் கிடைக்கலாம். ஆனால், அந்தக் கட்டிட வேலையில் தட்டுத் தூக்கப்போனால் அதைவிட இருமடங்கு கிடைக்கும். அது அவனுக்கும் தெரியும். ஆனாலும் அந்த வேலைக்குப் போக மாட்டான். ஏனெனில், அவன் மனம் செருப்புத் தைக்கும் கலையிலேயே விழுந்து கிடக்கிறது.

இது ஒரு வகையான மன முதிர்ச்சி. என்னைக் கேட்டால் பத்திரிகையாளன் என்பவன் எழுத்தாளனை விட பரிணாம வளர்ச்சியில் பல படிகள் மேலானவன். பல எழுத்தாளர்களுக்கு முகம் உண்டு. ஆனால் பல பத்திரிக்கையாளர்களுக்கு முகம் கிடையாது. ஆனால் கூர்த்த பார்வை உண்டு.

மலரை விடக் கனி முதிர்ந்தது. ஆனால், தலையில் வைத்துக் கொண்டாடப் பெண்கள் மலருக்குத்தானே மாலையிடுகிறார்கள். பசு இனம், பறவைகளைவிடப் பரிணாம வளர்ச்சியில் மேலானவை. ஆனால் ‘பாழாய்ப் போனதை‘ பசுவிற்கும், பழங்களை பறவைகளுக்கும் பரிமாறுகிற உலகம் நம்முடையது. மாணிக்கக்கல் இல்லாமல் வாழ்நாள் முழுதும் கழித்துவிட முடியும். ஆனால் உப்புக் கல் இல்லாமல் ஒருவேளைச் சோறு இறங்காது. ஆனல் மாணிக்கக் கல்லுக்குத்தான் மகுடத்தில் இடம்.

நாளைக்கு நாளிதழைப் பிரிக்கும் போதேனும் இந்த முகமறியாத நண்பர்களை அரைநொடிப் பொழுதேனும் நினைத்துப் பாருங்கள். அப்போது அந்த வரிகளுக்கு அர்த்தம் கிடைக்கும்!
----

Thursday, February 26, 2009

ஏ.ஆர்.ரஹ்மானும் நானும்!




து ஒரு ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுது. எனது நண்பரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனனிடமிருந்து போனில் ஒரு அழைப்பு. ‘நேரில் சந்திக்கலாமா?’


மாலை ஐந்து மணியளவில் எங்களது அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது நான் ‘இந்தியா டுடே’ தமிழ் பதிப்பில் உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன். சினிமா செய்திகளுக்கான பொறுப்பும் எனதே. அப்போது ராஜீவ்மேனன், படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வதோடு விளம்பரப் படங்களுக்கே அதிகமாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது விளம்பர ஜிங்கிள்ஸ்களுக்கு இசையமைக்கும் ஒரு இளைஞரைப் பற்றி சொன்னார். ‘’பெயர் திலீப். பிரமாதமான இசை ஞானம். நவீன இசைக்கருவிகளைக் கையாள்வதில் அவரிடம் மிகப்பெரிய திறமை ஒளிந்திருக்கிறது’’ இது மட்டுமல்ல. அவரது ஜிங்கிள்ஸ்களைக் கேட்டுவிட்டு மணி சார் அடுத்த படத்துக்கு அவரைத்தான் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தவுள்ளார் என்ற செய்தியையும் சொன்னார்.


அட! புதுச்செய்தியாக இருக்கிறதே என்று அந்த இளைஞனை ராஜீவ்மேனனே எடுத்த ஒரு புகைப்படத்தையும் வாங்கிக் கொண்டேன்.

அடுத்த நாள் காலை. அவர் கொடுத்த திலீப்பின் தொலைபேசி எண்ணுக்கு அழைக்கிறேன். எதிர்முனையில் திலீப். நான் என்னை அறிமுகம் செய்து கொண்டு நேரில் சந்திக்க வேண்டும் என்கிறேன். உடனே பரபரப்பான திலீப் அவசரமாக மறுக்கிறார்.

‘’இல்லை சார்... இப்ப எதுவும் பேட்டியெல்லாம் வேண்டாம். மணி சார் எதுவும் சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கார்...’’

‘’ படத்தைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம். உங்களைப் பற்றி சொல்லுங்கள். மணிரத்னம் அறிமுகப்படுத்தும் இசையமைப்பாளர் பற்றிய தகவலை முதன்முதலில் இந்தியா டுடேவில் வரவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ‘’ என்று சொன்னதோடு ராஜீவ்மேனனிடமிருந்து உங்களின் போட்டோவைக்கூட வாங்கிவிட்டேன் என்று சொன்னதும்தான் ஒருவழியாக சமாதானமடைந்து சந்திக்க ஒப்புக் கொண்டார்.

மாலை நான்கு மணிக்கு அவரது இல்லத்தில் அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது. பள்ளி மாணவனாகவும் இல்லாமல் கல்லூரி இளைஞனாகவும் இல்லாமல் நடுத்தரமான – கூச்சம் கலந்த சிரித்த முகம். அவருடன் அவரது தாயும் சகோதரியும். எனக்காகத் தெருமுனையில் இருக்கும் பேக்கரியில் வாங்கி வைத்திருந்த கேக்கும் மிக்ஸரையும் எனக்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னார், அவரது அம்மா. கூடவே காபியும் வந்தது.

பின்னர் நானும் திலீப்பும் பேச ஆரம்பித்தோம். அவரது அப்பா சேகர் பற்றி, அவரது மறைவுக்குப் பிறகு இசையே முழு நேரத் தொழிலானதுபற்றி, குடும்பப் பின்னணி, சமீபத்தில் இஸ்லாம் மதத்தில் மாறி தன் பெயரை அல்லா ரக்கா ரஹ்மான் ( அல்லாவின் ஆசீர்வாதம் பெற்ற ரஹ்மான் – அதுவே சுருக்கமாக ஏ.ஆர். ரஹ்மான் ) என்று மாற்றிக் கொண்டதைப் பற்றி – மணிரத்னம் படத்தில் கிடைத்த வாய்ப்பு ஆண்டவன் அருளியது என்றும் சொன்னவர், பல நாள் பழகிய நண்பரைப் போல என்னை அவரது ஒலிப்பதிவு கூடத்திற்குள் அழைத்துப் போய் இதுவரை பதிவாகியிருந்த இரண்டு பாடல்களை எனக்குப் போட்டுக் காட்டினார்.

அதில் ஒன்று சின்னச் சின்ன ஆசை. அதை எனக்காக மறுபடி ஒருமுறை ஒலிக்கச் செய்யுங்கள் என்றேன். நான் ஒன்ஸ்மோர் கேட்டதில் பெருமகிழ்ச்சியடைந்த ரஹ்மான் இரண்டாவது முறை மறுபடி அந்தப் பாடலை ஒலிக்க வைத்தார். ‘’இந்த ஒரு பாடலில் நீங்கள் புகழ்பெறப்போவது உறுதி’’ என்று பாராட்டியதோடு எனது வாழ்த்துக்களையும் தெரியப்படுத்தினேன். மணி சார் தவிர பட சம்பந்தமான கலைஞர்களே கூட இன்னும் இந்தப்பாடல்களைக் கேட்கவில்லை. உங்களுக்குத்தான் போட்டுக் காட்டியிருக்கிறேன். உங்களின் இந்தப் பாராட்டும் வாழ்த்தும் எனக்கு புதிய தெம்பைக் கொடுத்திருக்கிறது...’’ என்று நெகிழ்ச்சியானவர் தன் வீட்டு வாசல்வரை வந்து என்னை வழியனுப்பி வைத்தார்.

ஒருவாரம் ஓடிப்போயிற்று. ஒரு இரவு நேரம் வீட்டின் தொலைபேசி ஒலித்தது. எடுத்துப் பேசினால் எதிர்முனையில் ரஹ்மானின் அம்மா.

‘’தம்பி... உங்க பத்திரிக்கைல தம்பியோட போட்டோ எப்ப வருது தம்பி? ‘’

அந்தத் தாயின் குரலில் இருந்த ஆர்வத்தை என்னால் உணர முடிந்தது.

‘’இன்னும் இரண்டு நாளில் புத்தகம் வரும் அம்மா. கடைக்கு வருவதற்கு முன்னால் நானே உங்கள் வீட்டுக்கு வந்து தருகிறேன்’’ என்று சொன்னேன். அலுவலகத்திலிருந்து என் வீட்டிற்குச் செல்லும் வழியில்தான் அவர்கள் வீடு இருந்த காரணத்தால் புத்தகம் ரெடியானதும் ஐந்து காப்பிகளை எடுத்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்குப் போனேன்.

ஆளுக்கொரு புத்தகமாக, அவசர அவசரமாக அவரது அம்மாவும் சகோதரியும் ரஹ்மானின் போட்டோவுடன் கூடிய செய்தி இருந்த பக்கத்தைப் பார்த்துவிட்டு ஒருவருக்கொருவர் கலங்கிய கண்களுடன் தங்களின் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்ட அந்தக் காட்சி, இன்னமும் என் மனசில் ஒரு புகைப்படமாய் பதிந்து கிடக்கிறது. ஆனால், தன் புகைப்படம் முதன்முதலாக - அதிலும் இந்தியா டுடே என்கிற புகழ் பெற்ற பத்திரிக்கையில் வந்திருக்கிறதே என்கிற மகிழ்ச்சியைக்கூட மிக நிதானமாக ஏற்றுக் கொண்டார் ரஹ்மான். மெலிதான ஒரு புன்னகை. ‘’ ரொம்ப தேங்க்ஸ் சார்’’ என்று சுருக்கமாக தன் சந்தோஷத்தை வெளிககாட்டிக் கொண்டார் மிக அமைதியாக. அவரது அடக்கமான தன்மை அப்போதே அவருக்குள் குடிகொண்டிருக்கிறது.

ரோஜா வெளியானது. ஏ.ஆர். ரஹ்மானின் படமும் செய்தியும் வராத பத்திரிக்கைகளே இல்லை. அதன் பிறகு பத்திரிக்கையாளனாக அவருடன் சில சந்திப்புகள். அப்போதெல்லாம் மற்ற பத்திரிக்கையாளர்களே வியக்கிற வண்ணம் என்னிடம் தனிப்பட்ட முறையில் வந்து பேசிக் கொண்டிருப்பார். ‘’ என்னை முதன்முதலில் பேட்டி எடுத்தவராச்சே! பேசாம இருக்க முடியுமா?’’ என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது அனைவரின் முன்னிலையிலும் வெளிப்படையாகச் சொன்ன ரஹ்மானின் அந்த அன்பான நெருக்கத்தை இன்னமும் அவர் தொலைத்துவிடவில்லை என்பதுதான் அவரை இந்த உயரத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது.

அதன் பின்னர் எட்டு வருடங்கள் ஓடி விட்டன. நான் பத்திரிக்கைத் துறையிலிருந்து விலகி சினிமா, சின்னத்திரையில் பணிபுரிய ஆரம்பித்தேன். ஒரு தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக நண்பர் திரு.பாலகிருஷ்ணனோடு சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தயாரிக்க விரும்பினேன். அது: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சிறப்புப் பேட்டி!

அப்போது ரஹ்மான் இந்தி தமிழ் என்று இசையின் உச்சத்தில் இருந்தார். சந்திப்பதற்கே ஒரு வாரம் ஆனது. நானே அதைத் தயாரித்து வழங்கவிருப்பதால் ரஹ்மானை தனிப்பட்ட முறையில் சந்தித்து அதற்கொரு நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொண்டேன். எந்தவிதமான மறுப்பும் சொல்லாமல்,

‘‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தின் ரீரிக்கார்டிங் இரண்டு நாளில் முடிந்து விடும்; அதன்பிறகு எனது ரிக்கார்டிங் ஸ்டூடியோவிலேயே பேட்டியின் ஒளிப்பதிவை வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் ‘’ என்றார்.

அது என்ன ?

‘’ என்னை நீங்கள்தான் பேட்டி காணவேண்டும். வேறு தொகுப்பாளர்களை வைத்து எடுக்கக்கூடாது’’

ஒப்புக் கொண்டேன். அடுத்த சில நாட்களில் நண்பர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவில் சுமார் ஐந்து மணி நேரங்களை எங்களுக்காக ஒதுக்கியதோடு அனைவருக்கும் மதிய உணவுக்கு தன் வீட்டிலிருந்தே பிரியாணி ஏற்பாடு செய்திருந்தார் ரஹ்மான்.

சன் தொலைக்காட்சியில் 2004 ஏப்ரல் 14ம் தேதி ஒளிபரப்பான அந்தப் பேட்டியில் ரஹ்மான் தனக்கு மிகவும் பிடித்தமான தமிழ் பாடல்களை பட்டியலிட்டு சொல்லியிருந்தார்.

இளையராஜாவின் இசையில் ஜானி படத்தில் வரும் காற்றில் எந்தன் கீதம்...

எம்எஸ்வி இசையில் உன்னை ஒன்று கேட்பேன்...

கே.வி.மகாதேவன் இசையில் சங்கராபரணத்தில் தொரகுனா இதுவந்தி சேவா..

பி.பி.சீனிவாஸ் குரலில் காலங்களில் அவள் வசந்தம்....

இப்படி அந்தப் பாடல்கள் ஏன் என்னைக் கவர்ந்தன என்கிற ரஹ்மானின் விளக்கத்தோடு அந்தப் பேட்டி அமைந்திருந்தது. அதோடு அன்றைய தினம் அவரது இசையில் வெளியாகி இருந்த அலைபாயுதே படத்தின் பாடல் காட்சிகளை பேட்டியில் சேர்ந்துக் கொள்ள மணிரத்னம் அவர்களின் ஒப்புதலையும் வாங்கிக் கொடுத்திருந்தார்.

அதோடு விடவில்லை. அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான இரவு என்னை நேரில் வரவழைத்து ‘பேட்டி மிகச் சிறப்பாக வந்திருந்தது. தேங்க்ஸ்’’ என்றார். நான்தான் உங்களுக்குச் சொல்லவேண்டும் என்று அவருக்கு நான் நன்றி சொல்லிவந்த அந்த நடுநிசி இரவையும் என்னால் மறக்கமுடியாது..

இன்றைக்கு உலகில் இருக்கும் மீடியாக்கள் அனைத்தின் பார்வையும் இரண்டு ஆஸ்கார் பரிசுகளை வென்று வந்திருக்கும் ரஹ்மானின் மீது படிந்திருக்கிறது. இந்தப் பெருமைமிகு வேளையில் அவரை முதன் முதலில் பேட்டி கண்டவன் என்கிற பெருமை, மனசுக்குள் ஒரு நிறைவைத் தருவதோடு அவரைப் பற்றிய தகவல்களை ஆயிரக்கணக்கான அவரது ரசிகர்களோடும் எனது நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் அமைந்ததில் சந்தோஷம் கொள்வதென்னவோ நிஜம்!
-------

இதே பதிவை நண்பர் ஒருவர் வீடியோ காட்சிகளுடன் தன் வலைப்பக்கத்தில் மறுபதிவை அழகாக்கி இருக்கிறார். ஒரு விசிட் அடித்துப் பாருங்களேன்: http://balhanuman.wordpress.com/2010/06/29/%E0%AE%8F-

Tuesday, December 23, 2008

பாலுமகேந்திரா பாராட்டிய கதை!

அன்பு நண்பர் கல்யாண் அவர்களுக்கு...

தாங்கள் ஆனந்த விகடனில் எழுதிய ‘அப்பாவுக்கு ஒரு
இ-மெயில் ‘ என்ற சிறுகதை படித்தேன். அந்தக்கதை என்னுள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வெளிவர பல நாட்களாயிற்று. அற்புதமான படைப்பு.

உள்ளடக்கத்தை உன்னதப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட உருவம்... அதன் இயல்புத் தன்மை... அதன் கம்பீரமான எளிமை... கதையாக்கத்தில் கையாளப்பட்டிருக்கும் உத்தி... இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து, ஓர் உன்னதமான கலைப்படைப்பைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. அப்பாவைப் பற்றிய ஆழமான உணர்வுகளை எந்தப் பிரயத்தனமுமின்றி வெகுஇயல்பாக வெளிப்படுத்த உங்களால் முடிந்திருக்கிறது.

இது ஒரு யுனிவர்சல் தீம் என்பதால் இந்தக் கதை பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படலாம்.

வாழ்த்துக்களுடன்,
பாலுமகேந்திரா

சிறுகதை: அப்பாவுக்கு ஒரு இ-மெயில் - கல்யாண்குமார்
(ஆனந்தவிகடனில் முத்திரைக்கதையாக ரூ5,000 பரிசுபெற்ற எனது சிறுகதை)

அப்பாவிடமிருந்து வாரம் தவறாமல் ஒரு தபால் கார்டு வந்துவிடும். விஷேசமான செய்திகள் ஏதுமில்லையென்றாலும் பொதுவான் நலம் விசாரிபும், ‘இப்போது உன் வேலை விஷயம் எப்படியிருக்கிறது? புதிதாக கதை எதுவும் எழுதினாயா? என்று ஒரு நல்ல நண்பனைப் போல அக்கறையான விசாரிப்புகளும் இருக்கும். அவர் மரணம்கூட என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. ஆனால் அவரிடமிருந்து இனிமேல் கடிதங்கள் வரவே வராது என்பதுதான் அவரின் இழப்பைவிடக் கொடுமையானதாக இருந்தது.

யாரிடமிருந்து கடிதம் வந்தாலும் உடனே அதற்குப் பதில் எழுதி அடுத்த தெருவிலிருக்கும் தபால் ஆபீஸுக்குப் போய் தானே தன் கையால் போஸ்ட் செய்வதில்தான் அவருக்குத் திருப்தி. அதுவும் நான் கடிதம் எழுதிவிட்டால் உடனுக்குடன் பதில் வந்துவிடும். சமயத்தில் சொல்ல வேண்டிய விஷயம் சற்றுப் பெரிதாக இருந்தால்கூட இன்லேண்ட் லெட்டரிலோ அல்லது ஒரு பேப்பரில் எழுதி, கவரில் வைத்தோ அனுப்ப மாட்டார். இரண்டு கார்டுகள் சேர்ந்தாற்போல் வரும். அதில் ஒரு கார்டில் 1 என்றும் அடுத்ததில் 2 இரண்டு என்றும் எண்ணிட்டு வட்டமடித்திருப்பார் – சிவப்பு மையால்.

எப்போதுமே அப்பாவிடம் நிறைய கார்டுகள் இருக்கும். நான் எட்டாவது படிக்கிறபோதே என்னைவிட்டு சில கடிதங்களை எழுதச் சொல்வார். அவர் சொல்லச் சொல்ல நான் எழுத வேண்டும். விஷயமிருக்கிறதோ இல்லையோ, ‘உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு அப்பப்ப ஒரு நாலுவரி எழுதிப் போடறதுல என்னாகிடபோவுது’ என்பார். நான்கூட ஒருநாள் அவரைக் கிண்டலடித்திருக்கிறேன்...’’இப்படி அடிக்கடி கடிதம் எழுதறதால, என்ன பெருசா எழுதியிருக்கப் போறார்னு படிக்காமலே குப்பைக் கூடையிலே போட்டுடப் போறாங்க..’’ என்று!

‘’ அப்படி என்மேல மதிப்பு மரியாதை இல்லாத பயலுகளுக்கெல்லாம் நான் லெட்டர் போட்டதேயில்லை..’’ என்பார்.

நிஜம்தான். அப்பா இறந்தபோதுதான் அதை நான் உணர்ந்தேன். அவரின் மரணம் பற்றி துக்கம் விசாரிக்க ஒரு மாதம் கழித்து வந்தவர்கள்கூட அவர் போடும் கடிதங்கள் பற்றி சிலாகித்துப் பேசி ‘’ இனி யார் எங்களையெல்லாம் அக்கறையாய் விசாரித்து லெட்டர் போடப்போறாங்க..?’’ என்று ஆத்மார்த்தமாக வருத்தப்பட்டுக் கொண்டது என்னை மிகவும் சங்கடப்படுத்தியது. அன்றைக்கு அப்பாவிடம் அப்படிக் கிண்டலாக பேசியிருக்கக் கூடாதோ என்று தோன்றியது. அவர் எழுதிய கடிதங்களைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பதாக சிலர் சொன்னபோதுதான் அதுவரை உள்ளுக்குள்ளேயே அழுது கொண்டு இருந்த அம்மாகூட பெருங்குரலெடுத்து அழுது தீர்த்தாள்.

சென்னைக்கு வந்தபுதிதில் ஒரு இலக்கியப் பத்திரிக்கையில் நூற்றைம்பது ரூபாய் சம்பளத்தில் வேலையில் இருந்தபோது அப்பா எழுதிய கார்டுகள் மட்டும் சுமார் முன்னூறைத் தொடும். ‘உன்னுடைய கதை வந்த ‘கணையாழி’ புத்தகம் இங்கே பஸ் ஸ்டாண்ட் கடையிலேகூட கிடைக்கவில்லை. முடிந்தால் தபாலில் அனுப்பி வை. புக்போஸ்டில் அனுப்பினால் போதும். அதிகம் சிரமம் எடுத்துக் கொள்ளாதே’ என்கிற அவரது கடித வரிகள் இன்னும் மனசிலிருக்கின்றன.

பள்ளி நாட்கள் முடிந்து கதை கவிதை என்கிற பெயரில் ஒரு குயர் நோட்டுகளைத் தீர்த்துக் கொண்டிருந்த நாட்கள். பக்கத்துவீட்டு ஜெயாதான் கவிதையின் மையநாயகி. கடைசிவரை அவள் என்னைக் கண்டுகொள்ளவேயில்லை என்பது தனியொரு சோகக்கதை! அதைவிடக் கொடுமை என்னவென்றால், என்மீது ஒரு மரியாதை ஏற்படவும் என் தனித்துவத்தைக் காட்டவும் ஒருநாள் ‘கண்ணதாசன் கவிதைகள்’ புத்தகத்தை அவளிடம் படிக்கக் கொடுத்தேன். படித்துவிட்டு அதில் சில காதல் கவிதைகளில் நான் அடிக்கோடிட்டு இருப்பதைப் புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக எனக்குப் பதில் கொடுப்பாள் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா? புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தவள், ‘’படிக்க எதாவது கதைப்புத்தகம் கொடுப்பீங்கன்னு பாத்தா, எதோ செய்யுள் புத்தகத்தைக் கொடுத்திருக்கீங்களே?’’ என்றாள்.

இதுவே ஒரு ஆரம்பக்கட்ட கவிஞனுக்கு மரண அடியாக இருந்தது. என் ப்ரிய நாயகி இப்படி ஒரு ஞான சூன்யமாக இருப்பாள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அந்த சோகத்திலேயே பல கவிதைகளை எழுதிக் குவித்தேன். கவிதைகளைத் தொடர்ந்து சிறுகதைகள். எப்படியோ ஒரு எழுத்தாளன் உருவாகிவிட்ட தீர்மானத்தோடு அந்த சோகத்திலும் ஒருவித திமிர் சேர்ந்து, சக நண்பர்களிடம் அவர்களுக்குப் புரியாத சில உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரபல எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லி அசர வைத்தேன். அவர்கள் என்னைப் பிரமிப்போடு பார்ப்பதில் உள்ளூர ஒரு சந்தோஷம். ஒருவித மமதை கலந்து ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்த நாட்கள் அவை. கையெழுத்துப் பத்திரிக்கையும், தினசரி பேப்பர்களின் ஞாயிறு பதிப்புகளில் அவ்வப்போது வெளிவரும் கவிதைகளும் கொஞ்சம் தெம்பூட்டிக் கொண்டிருந்தன.

கல்லூரிப் போக விருப்பம் இல்லை என்று சொன்னதும் அப்பா எந்த அதிர்ச்சியும் காட்டவில்லை. ‘’பிறகு?’’ என்றார். சென்னைக்குப் போய் எதாவது பத்திரிக்கை ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்து நிறைய கதை கட்டுரையெல்லாம் எழுதணும் என்று நான் சொன்னதும் எதிர்ப்பு சொல்லாமல் ஆமோதித்தார். அம்மாதான் பலத்த எதிர்ப்பைக் காட்டினாள். ‘’ஆசைப்படறான். போயிட்டுதான் வரட்டுமே, என்ன ஆகிடப்போகுது? நாளைக்கு உன் புள்ள ஒரு எழுத்தாளனா, பத்திரிக்கை ஆசிரியனா வந்து பிரபலமான உனக்குத்தானே பெருமை?’’என்று அம்மாவை சரிக்கட்டினார். ரயிலுக்கும் ரூம் எடுத்துத் தங்கவும், இரண்டு மாத செலவுக்கும் என்று ஒரு கணிசமான பணமும் அனுப்பிய அப்பா வேறு யாருக்குமே அமைந்திருக்க மாட்டார்கள்.

தினசரிகளில் வெளிவந்திருந்த ஒரு சில கவிதைகள்தான் அப்போதைக்கு எனக்கு சகலவிதமான சர்டிபிகேட்டுகள்! அங்கேயிங்கே அல்லாடி கடைசியில் நடையாய் நடந்த காரணத்துக்காக ‘கணையாழி’ என்ற ஒரு சிறுபத்திரிக்கையில் பரிதாபப்பட்டு எனக்கு வேலை போட்டுக் கொடுத்தார்கள். வந்திருக்கிற கதைகளையெல்லாம் படித்து அதன் கதைச்சுருக்கத்தை ஒரு சின்ன பேப்பரில் எழுதி அதை டெல்லியில் எதோ ஒரு ஆங்கிலப்பத்திரிக்கையில் பெரிய பொறுப்பிலிருந்த கணையாழியின் ஆசிரியருக்கு தபாலில் அனுப்ப வேண்டும். அவர் அதிலிருந்து சில கதைகளை அந்த மாத இதழுக்குத் தேர்வு செய்து அனுப்பி வைப்பார். மொத்த வேலையும் ஒரு வாரத்தில் முடிந்து விடும். ஒருசில நேரங்களில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறைதான் புத்தகம் வெளிவரும்!

ஒருமுறை டெல்லியிலிருந்து வந்திருந்த ஆசிரியரிடம் நான் எழுதிய ஒரு சிறுகதையைத் தயங்கியபடியே நீட்டினேன். வாங்கியவர் உடனே படித்துப் பார்த்துவிட்டு ‘’ நல்லாதானிருக்கு, இந்தமாத சிறுகதைகள்ல சேத்துக்கப்பா...’’ என்று கொடுத்துவிட்டுப் போய்விட்டார். எனக்கு ஜென்ம சாபல்யம் கிடைத்துவிட்டதாக உணர்ந்தேன். உடனே அப்பாவுக்குத்தான் அந்தச் சந்தோஷத்தைத் தெரிவித்தேன். பிறகு கதை வந்த கணையாழி அங்கே கிடைக்கவில்லை என்பதால் அவர் கேட்டிருந்தபடி தபாலில் அனுப்பி வைத்தேன். படித்துவிட்டு அவர் கருத்தையும் அடுத்த கார்டில் தெரிவித்திருந்தார். அதோடு பின்குறிப்பாக ‘உன் கதையை அம்மாவுக்கும் படித்துக் காண்பித்தேன். அவளுக்கும் பிடித்திருந்தது’ என்று எழுதியிருந்தார். அந்தக் காட்சியை நான் மனசில் கொண்டுவந்து பார்த்தேன். சுகமாக இருந்தது.

பத்துவருடப் போராட்டத்திற்குப் பிறகு பிரபல வாரப் பத்திரிக்கை ஒன்றில் சினிமா பகுதி ஆசிரியராக உயர்ந்த நிலை. நல்ல சம்பளம். கல்யாணம், குழந்தைகள், ஆபீஸ் பிஸி என்று ஓடிக் கொண்டிருந்தேன். பத்திரிக்கையில் சினிமா பொறுப்பு என்பதால் எல்லா திரை நட்சத்திரங்கள், இயக்குனர்களின் நேரடித் தொடர்பும் நல்ல மதிப்பும் எனக்குக் கிடைத்திருந்தது. அப்பாவையும் அம்மாவையும் இங்கே கூட்டிக் கொண்டுவந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஆசை. எத்தனையோமுறை கேட்டுப் பார்த்தும் அப்பா அசைந்து கொடுக்கவில்லை. மூன்று மாதத்திற்கு ஒருமுறை சென்னைக்கு வருவார்கள்; ஒருவாரம் இருப்பார்கள். கிளம்பிவிடுவார்கள். ஆனாலும் அவர்கள் அருகில் இல்லாத குறையை அப்பாவின் கடிதங்கள் பூரணமாகத் தீர்த்துவிடும். நேரடி ஒளிபரப்பு போல அவரது கடிதங்கள் குடும்பம் மற்றும் ஊர் செய்திகளை தெரியப்படுத்திவிடும்.

இதனிடையே கடைசி தங்கையின் திருமண ஏற்பாடுகள் நடந்தன. திருமண வரவேற்பை சென்னையில் வைத்துக் கொள்ளலாமே என்று அப்பாவிடம் கேட்டிருந்தேன். முதலில் ‘எதற்கு உனக்குச் சிரமம்?’ என்று மறுத்தவர் பின்னர் ஒருவழியாகச் சம்மதித்தார். ஆறு குழந்தைகளுக்கும் சிறப்பாக திருமணம் நடத்தியவருக்கும் ஏழாவதாக அந்தச் சிரமத்தில் நானும் கொஞ்சம் பங்கு கொள்ளலாமே என்றுதான் வரவேற்புக்கு ஏற்பாடு செய்தேன்.

இங்கே ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலில் தங்கையின் திருமண வரவேற்பு சிறப்பாக நடந்தது. சுமார் அறுபது எழுபது நடிக நடிகைகள், டைரக்டர்கள், காமிராமேன்கள், இசையமைப்பாளர்கள் என்று முக்கிய புள்ளிகள் அனைவருமே நேரில் வந்து நிஜமான நட்பை கெளரவப்படுத்தியிருந்தார்கள். சக ஊழியர்கள், மற்ற பத்திரிக்கை நண்பர்கள் என்று நான் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே ரிசப்சன் களை கட்டியிருந்தது.

ஊரிலிருந்து வந்திருந்தவர்களும் தங்கை கணவருக்கும் ரொம்ப சந்தோஷம். தன் அபிமான நட்சத்திரங்களெல்லாம் அண்ணனோடு இவ்வளவு நெருக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று தங்கைக்கும் ஏக மகிழ்ச்சி. எல்லாம் சிறப்பாக முடிந்து ஊருக்குக் கிளம்புகிறபோதுகூட அப்பா எதுவும் சொல்லவில்லை. நான்கூட அவருக்கு இந்த ஆடம்பரமெல்லாம் பிடிக்காமல் இருந்திருக்கும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் ஊருக்குப் போனதும் மனசு நெகிழ்ந்துபோய் மூன்று கார்டுகளில் அப்பா எழுதியிருந்த விஷயம்தான் எனக்குக் கிடைத்த ஜனாதிபதி விருது!

‘தனி ஆளாய் சென்னைக்குப் போய் நீ கஷ்டப்பட்ட போதெல்லாம் ஒருபக்கம் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறேன். உன்னை மேல படிக்க வச்சு ஒரு ந் அல்ல உத்தியோகம் வாங்கிக் கொடுக்காம இப்படி அநாதை மாதிரி ஐநூறு மைலுக்கப்பால் அனுப்பி வைச்சிருக்கேனே நான் ஒரு நல்ல தகப்பனாயில்லையோன்னு பல நாள் தூக்கமில்லாம தவிச்சிருக்கேன். ஆனா நீ உன் சொந்த முயற்சியில இவ்வளவு தூரம் முன்னேறி , ஒரு நல்ல வேலையையும் நீயா தேடிக்கிட்டதுகூட எனக்குப் பெருசா படல. அதுக்கும்மேல, நீ கூப்பிடேங்கற காரணத்துக்காக இருநூறு ஜனம், பட்டணத்துல அவங்க பரபரப்பான வேலைக்கு நடுவுல உனக்காக நேர்ல வந்திருந்து மனசு ஒப்பி சந்தோஷத்தைப் பகிர்ந்திட்டு கைகுலுக்கி வாழ்த்திட்டுப் போனதைப் பார்த்தப்பதான் என் மனசே நிறைவாச்சு. நீ காசு பணம் சேர்த்து வைக்கலியேன்னு நான் உன்னைக் குறை சொல்லமாட்டேன். மனுஷங்களை சேர்த்து வெச்சிருக்கியே அது போதும். ஆண்டவன் காப்பாத்துறானோ இல்லையோ, அந்த அன்பு உன்னக் காப்பாத்தும்..’

படித்ததும் அழுதேவிட்டேன். எவ்வளவு துல்லியமாகக் கவனித்து எழுதியிருக்கிறார்! அதுதான் அவரிடமிருந்து வந்த கடைசி கடிதமும்கூட. அதன்பிறகு பக்கவாதாம் வந்து ஆஸ்பத்திரியில் சேர்ந்திருப்பதாகத் தந்திதான் வந்தது. குடும்பத்தோடு அவசர கதியில் ரயில் பிடித்து ஊர் போய்ச் சேர்ந்தபிறகு எனக்காகவே காத்திருந்த மாதிரி என்னை அருகில் அழைத்து ‘லெட்டர் கிடைச்சுதா?’ என்று ஜாடையிலேயே கேட்டார். அதன்பிறகு மூன்று நாள் அவஸ்தைக்குப் பிறகு அடங்கிப் போனார்.

காரியமெல்லாம் முடிந்து மறுபடி சென்னைக்கு வந்தபிறகு பல மாதங்களுக்கு அப்பாவின் இழப்பு மிகப்பெரிய சுமையாக மனசுக்குள் இருந்துக் கொண்டேயிருந்தது. அவரிடமிருந்து இனி கடிதம் வராது என்பதும் மிகப்பெரிய வேதனையாக இருந்தது. இதே யோசனையில் இருந்தபோதுதான் ஒருநாள், அப்பாவிடமிருந்துதானே இனி கடிதம் வராது; நான் அவருக்கு எழுதலாமே என்று தோன்றியது. அன்றிலிருந்து அவர் உயிரோடு இருந்தால் என்னென்ன எழுதுவேனோ அதை அப்படியே வாரந்தோறும் அவருக்கு ஒரு கடிதமாக எழுதிவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டேன். கடைசித் தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது; அதற்கு முத்திருளாண்டி என்று அவரின் பெயரையே வைத்தது; சமீபத்தில் வீட்டுக்கென்று கம்ப்யூட்டர் வாங்கியது; என் மகன் மூன்றிலிருந்து நான்காம் வகுப்புக்குப் போகவிருப்பது...இப்படிப் பல விஷயங்களை அவரிடம் கடிதம் மூலம் தெரியப்படுத்தியதில் ஒரு நிறைவு.

இங்கேதான் நவீன விஞ்ஞான வளர்ச்சி எனக்கு மிகவும் உதவியது. ஆபீஸில் ஒன்றும் வீட்டில் ஒன்றுமாக டிவியை ஓரங்கட்டிக் கொண்டு இருக்கும் கம்ப்யூட்டர் – அதன் மூலம் இண்டர்நெட் – இமெயில் – தமிழ்வழி தகவல் பரிமாற்றங்கள் என்கிற அசுர வளர்ச்சி அப்பாவுக்கும் இ-மெயில் அனுப்ப உதவுகிறது. இ-மெயிலில் அனுப்புகிற தகவல்கள் வான்வெளி வழியாகத்தான் பயணிக்கின்றன. மேலே எங்கேயோ இருக்கிற அப்பாவுக்கு நான் அனுப்புகிற இ-மெயில் நிச்சயம் சென்று சேரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம். ஆனால் அப்பாவுக்காக நான் உருவாக்கியிருக்கிற – இ-மெயில் விலாசத்திற்கு நீங்களும்கூட ஒரு மெயில் அனுப்பி வைக்கலாம் – எனது நண்பராகவோ அவரது நண்பராகவோ நீங்கள் இருக்கும் பட்சத்தில்! அப்பா நிஜமாகவே சந்தோஷப்படுவார்.

அப்பாவின் இ-மெயில் விலாசம் இதோ...

muthirulandi@anbu.paasam.com


--------------------

பாலுமகேந்திராவிடமிருந்து ஒரு கடிதம்...

அன்பு நண்பர் கல்யாண் அவர்களுக்கு...
தாங்கள் ஆனந்த விகடனில் எழுதிய ‘அப்பாவுக்கு ஒரு
இ-மெயில் ‘ என்ற சிறுகதை படித்தேன். அந்தக்கதை என்னுள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வெளிவர பல நாட்களாயிற்று. அற்புதமான படைப்பு.

உள்ளடக்கத்தை உன்னதப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட உருவம்... அதன் இயல்புத் தன்மை... அதன் கம்பீரமான எளிமை... கதையாக்கத்தில் கையாளப்பட்டிருக்கும் உத்தி... இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து, ஓர் உன்னதமான கலைப்படைப்பைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. அப்பாவைப் பற்றிய ஆழமான உணர்வுகளை எந்தப் பிரயத்தனமுமின்றி வெகுஇயல்பாக வெளிப்படுத்த உங்களால் முடிந்திருக்கிறது.

இது ஒரு யுனிவர்சல் தீம் என்பதால் இந்தக் கதை பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படலாம்.

வாழ்த்துக்களுடன்,
பாலுமகேந்திரா

Monday, November 3, 2008

எண்கணித வாழ்க்கை!


எண்களோடு
இணைக்கப்பட்டிருக்கிறது
வாழ்க்கை!
பிறந்தவுடன் கழுத்தில் கட்டப்படுகிறது,
சிலருக்கு எண்களோடு கூடிய அட்டைகள்!
பலருக்கும் குறித்துவைக்கப்படுகிறது
பிறந்த நேரமும் தேதியும்!
மூன்று சக்கர நடைவண்டி;
இரண்டு சக்கர வாகனமாகிறது!
சிலருக்கு நான்கு சக்கரங்கள்
சொந்தமாகிறது!
வசிக்கும் வீட்டுக்கும்
வழங்கப்படுகிறது ஒரு எண்!
பள்ளித்தேர்விற்கு வழங்கப்படுகிற
எண்கள் பலவகையில் தொடர்கிறது!
குற்றம் செய்தவனுக்கும்
கொடுக்கப்படுகிறது தனி எண்!
வீட்டுத் தொலைபேசி இன்று
பாட்டுத் தொகுப்போடு பாக்கெட்டில்!
அவரவர் பெயருக்குப் பின்னாலும்
பத்து இலக்க எண்கள்
பதிக்கப்பட்டிருக்கிறது,
காற்றின் அலைவரிசையில்!
எண்களோடு
இணைக்கப்பட்டிருக்கிறது
வாழ்க்கை!

Thursday, October 30, 2008

எம்.ஜி.ஆரும் என் தீபாவளியும்


பள்ளி நாட்களில் பத்து நாட்களுக்கு முன்னரே தீபாவளி கொண்டாட்டம் பற்றிய பரபரப்பு ஒட்டிக் கொள்ளும். சக மாணவர்கள், தெருப்பையன்கள் எடுத்திருக்கும் தீபாவளித் துணிகள் பற்றிய பேச்சும் புத்தாடைகளை பரஸ்பரம் காட்டி மகிழ்ந்த காட்சிகளும் இன்னும் நினைவில் இருக்கிறது.

அதிகாலை எழுந்ததும் அம்மா எனக்கும் என் இளைய சகோதரனுக்கும் தலையில் எண்ணைய் வைப்பார்கள். சீகக்காய் போட்டு கண்களில் லேசான எரிச்சலுடன் குளியல் நடந்தேறும். சாமி படத்திற்கு முன் வைக்கப்பட்ட மஞ்சள் தடவிய புதுவாசனையுடன் கூடிய டவுசரையும் சட்டையையும் போட்டுக் கொள்ளும்போது உள்ளுக்குள் ஒரு பரவசம் கரைபுரண்டோடும். அப்பா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவோம். அவர்
திருநீறு பூசிவிட்டு ஆளுக்கு பத்து ரூபாயை புத்தம் புது நோட்டாகக் கொடுப்பார். அந்த நோட்டை மாற்ற மனமில்லாமல் பல நாட்களுக்கு அது மயிலிறகைப் போல நோட்டுப் புத்தகங்களில் பாதுகாக்கப்படும்.

தீபாவளி நாளில் காலையில் இட்லியும் மாமிசக் குழம்பும் அவசியமாக இடம்பெறும். இதுபோக பலவித பலகாரங்கள். எங்கள் வீட்டுப் பலகாரங்கள் போக அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களின் பலகாரங்களும் தட்டு தட்டாக வந்து கொண்டேயிருக்கும். நானும், அம்மா சொல்கிற வீடுகளுக்கெல்லாம் போய் எங்கள் வீட்டு பலகாரங்களைக் கொடுத்து வருவேன்.

இதன்பிறகு பட்டாசுகளை கொளுத்தி மகிழும் வைபவம். தீபாவளியின் உச்சக்கட்ட சந்தோஷம். மதியம் சாப்பிட்டுவிட்டு மேட்னிக் காட்சிகளுக்குக் கிளம்பி விடுவோம் நானும் தம்பியும். இருக்கிற இரண்டு தியேட்டர்களில் ஒன்றில் எம்.ஜி.ஆர் படமும் மற்றதில் சிவாஜி படமும் ரிலீஸாகி இருக்கும். எம்.ஜி.ஆர் படத்திற்கு அதிக கூட்டம் இருக்கும் என்பதால் சிவாஜி படத்திற்குத்தான் போவோம். (அடுத்தவாரத்தில் எம்.ஜி.ஆர்.படத்தையும் பார்த்துவிடுவோம்). சிவாஜியின் படத்தில் கதையோடு கூடிய செண்டிமெண்ட் காட்சிகள் அவசியம் இடம்பெற்றிருக்கும். ஒரு இடத்திலாவது அழவைத்துவிடுவார் சிவாஜி. வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் பார்த்த படத்தைப் பற்றியும் அதன் கதையையும் முடிந்தவரை சொல்லுவேன். கடைசிகாட்சியில் அழுததைச் சொன்னதும், ‘ நல்ல நாள் அதுவுமா காசைக் கொடுத்துட்டு அழுத்துட்டு வேற வர்றியா?’ என்று செல்லமாக கண்டிப்பார்கள் அம்மா. ஆனாலும் அந்த வருட தீபாவளிக்கு பார்த்த அந்தப் படமும் காட்சிகளும் குறைந்தது மூன்று மாதங்களுக்காவது மனசுக்குள் ஓடிக் கொண்டிருக்கும்.

சினிமா மீது எனக்கு ஆர்வம் வரக் காரணமே இப்படி பண்டிகைக் காலங்கள் மட்டுமல்லாது வாராவாரம் எதாவது ஒரு படத்தைப் பார்த்துவிட்டு அம்மாவிடமும் நண்பர்களிடமும் அந்தப் படத்தின் கதையை விளக்கமாகக் கூறுவதுதான். நண்பர்கள் வாய்பிளந்து கேட்பதைப் பார்ப்பதில் ஒருவித சந்தோஷம் கூடிக் கொண்டே போனது.

ஒருதீபாவளிக்கு சிவாஜி படம் எதுவும் ரிலீஸாகவில்லை. அதனால் கூட்டம் அதிகமிருக்கும் என்று தெரிந்தும் எம்ஜிஆர் படத்திற்கு போவதென முடிவு செய்யப்பட்டது. இத்தனைக்கும் அந்த வருட தீபாவளிக்கு எம்ஜிஆரின் புதுப்படமும் ரிலீஸாகாததால் ஏற்கனவே அந்த வருட பொங்கலுக்கு வெளியான ஒரு படத்தையே திரும்பப் போட்டிருந்தார்கள். முதல் முறை அதைப் பார்க்காததால் தீபாவளிக் கொண்டாட்டமாக அந்தப் படத்திற்குப் போவதென நானும் தம்பியும் முடிவு செய்தோம். ஆனால் எங்கள் பாடு அப்படியொரு திண்டாட்டமாகும் என்று கொஞ்சமும் நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை.

டிக்கெட் கவுண்ட்டர் முன் நிற்கிற க்யூவைப் பார்த்ததும் பயந்துதான் போனோம். ஆனாலும் தியேட்டர் வரை வந்துவிட்டு படத்தைப் பார்க்காமல் வீட்டுக்குத் திரும்ப மனசில்லை. க்யூவில் எங்களையும் இணைத்துக் கொண்டோம். டிக்கெட் கொடுக்க ஆரம்பித்ததும் க்யூவில் பலத்த சலசலப்பு. வரிசை கலைந்து போனது. கூட்டம் எங்களை நெருக்கியடித்தது. போலீஸ் லத்திகளை நெருக்கத்தில் அப்போதுதான் பார்த்தேன். நானும் தம்பியும் வேறு வேறு திசைக்குத் தள்ளப்பட்டோம். எம்.ஜி.ஆரின் முரட்டு ரசிகர்களால் நான் நசுக்கி எடுக்கப்பட்டேன். உடல் முழுக்க வேர்வை பொங்கி வழிகிறது. முன்னேறவும் முடியாமல் கூட்டத்திலிருந்து வெளிவரவும் முடியாமல் வசமாக மாட்டிக் கொண்டதை உணர்ந்து அழுகை பீறிட்டுக் கிளம்பியது.

சடாரென மறுபடி ஏற்பட்ட ஒரு நெருக்கடியில் என இடது கை முழங்கையிலிருந்து ‘டொப்’பென ஒரு சத்தம்! ஆமாம் கை ஒடிந்தே போனது. அதைப் பற்றியெல்லாம் யாருக்கும் கவலையில்லை. ஒருவழியாக கும்பல் தியேட்டருக்குள் போக, டிக்கெட் கிடைக்காத கவலையோடும் ஒடிந்த கையோடும் தியேட்டருக்கு வெளியே என் தம்பியைத் தேடுகிறேன். அவன் அங்கிருக்கும் பெட்டிக்கடையில் நின்றபடி அழுது கொண்டிருக்கிறான். பிரிந்த அண்ணன் தம்பிகள் சேரும்போது ஏற்படும் உணர்ச்சிகளை அதுவரை படத்தில் பார்த்திருந்த நாங்கள் அதை நேரில் உணர்ந்தோம்.

கை ஒடிந்த விஷயத்தை அவனுக்குச் சொன்னதும் அவனுக்கு மேலும் அழுகை. என்ன செய்வது என்று தெரியவில்லை. வீக்கம் நிமிடத்திற்கு நிமிடம் கூடிக் கொண்டே போனது. தியேட்டர் க்யூவில் நின்று கை ஒடிந்து போனது என்று சொன்னால் அப்பாவிடம் திட்டு வாங்க வேண்டியிருக்கும். ஆகவே சைக்கிளில் போகும்போது ஏற்பட்ட விபத்தால் கை ஒடிந்து போனதாக ஒரு கற்பனைக் காட்சியை சொல்ல முடிவு செய்தோம். தம்பி சைக்கிளை ஓட்ட நான் பின்னால் அமர்ந்து கொண்டேன். வீட்டுக்குப் போனதும் விஷயத்தைச் சொன்னதும் வீடே களேபரம் ஆனது.

அடுத்த சில மணி நேரத்தில் நான் ஆஸ்பத்திரியில்! கையில் மாவுக்கட்டு! அம்மா ஒருபுறம் புலம்பிக் கொண்டிருக்க அப்பா கோபமாகத் திட்டிக் கொண்டிருக்கிறார். தீபாவளி நாளன்று என்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த எம்.ஜி.ஆரை மனசுக்குள் திட்டிக் கொண்டிருந்தாலும் படத்தை பார்க்க முடியாத கவலை என்னை வாட்டிக் கொண்டிருந்தது. ஒருமாத சிகிச்சைக்குப் பின் கையில் ஒரு சின்னத் தழும்போடு கை பழைய நிலைக்குத் திரும்பியது. தமிழ் சினிமாவிற்காக அந்த வயதிலேயே வீரத்தழும்பைப் பெற்றவன் என்று என் சக சினிமாக் கலைஞர்களிடம் நான் வேடிக்கையாகச் சொல்லிக் கொள்வதுண்டு.

ஒவ்வொரு வருட தீபாவளிக்கும் எனது ஃப்ளாஷ்பேக் காட்சியாக இந்த கை ஒடிந்த காட்சி வந்து சின்னதாய் ஒரு சிரிப்பு என் உதட்டோரம் தோன்றி மறையும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் என் கை ஒடிந்ததற்கும் நான் பார்க்கப் போன படத்தின் தலைப்பிற்கும் யதேச்சையாக ஒரு ஒற்றுமை இருந்தது. அதைச் சொன்னால் உங்களுக்கும் சிரிப்பு வரும். படத்தின் பெயர் என்ன தெரியுமா?

அன்னமிட்ட ‘கை’!

------------------------------------------------------------------------------------------------
நன்றி: இந்த எனது படைப்பை வெளியிட்ட தமிழ்.சிபி ஆசிரியர்
திரு. அண்ணா கண்ணன் அவர்களுக்கு. http://tamil.sify.com/diwali/diwali2008

Saturday, September 13, 2008

இன்றைய கவிதை

மனிதர்கள்!

மனிதர்களோடு
மனிதர்கள்
எடுத்துக்கொண்ட
புகைப்படங்களை
சக மனிதர்களிடம் காட்டி
சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள்
மனிதர்கள்!