Thursday, October 30, 2008

எம்.ஜி.ஆரும் என் தீபாவளியும்


பள்ளி நாட்களில் பத்து நாட்களுக்கு முன்னரே தீபாவளி கொண்டாட்டம் பற்றிய பரபரப்பு ஒட்டிக் கொள்ளும். சக மாணவர்கள், தெருப்பையன்கள் எடுத்திருக்கும் தீபாவளித் துணிகள் பற்றிய பேச்சும் புத்தாடைகளை பரஸ்பரம் காட்டி மகிழ்ந்த காட்சிகளும் இன்னும் நினைவில் இருக்கிறது.

அதிகாலை எழுந்ததும் அம்மா எனக்கும் என் இளைய சகோதரனுக்கும் தலையில் எண்ணைய் வைப்பார்கள். சீகக்காய் போட்டு கண்களில் லேசான எரிச்சலுடன் குளியல் நடந்தேறும். சாமி படத்திற்கு முன் வைக்கப்பட்ட மஞ்சள் தடவிய புதுவாசனையுடன் கூடிய டவுசரையும் சட்டையையும் போட்டுக் கொள்ளும்போது உள்ளுக்குள் ஒரு பரவசம் கரைபுரண்டோடும். அப்பா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவோம். அவர்
திருநீறு பூசிவிட்டு ஆளுக்கு பத்து ரூபாயை புத்தம் புது நோட்டாகக் கொடுப்பார். அந்த நோட்டை மாற்ற மனமில்லாமல் பல நாட்களுக்கு அது மயிலிறகைப் போல நோட்டுப் புத்தகங்களில் பாதுகாக்கப்படும்.

தீபாவளி நாளில் காலையில் இட்லியும் மாமிசக் குழம்பும் அவசியமாக இடம்பெறும். இதுபோக பலவித பலகாரங்கள். எங்கள் வீட்டுப் பலகாரங்கள் போக அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களின் பலகாரங்களும் தட்டு தட்டாக வந்து கொண்டேயிருக்கும். நானும், அம்மா சொல்கிற வீடுகளுக்கெல்லாம் போய் எங்கள் வீட்டு பலகாரங்களைக் கொடுத்து வருவேன்.

இதன்பிறகு பட்டாசுகளை கொளுத்தி மகிழும் வைபவம். தீபாவளியின் உச்சக்கட்ட சந்தோஷம். மதியம் சாப்பிட்டுவிட்டு மேட்னிக் காட்சிகளுக்குக் கிளம்பி விடுவோம் நானும் தம்பியும். இருக்கிற இரண்டு தியேட்டர்களில் ஒன்றில் எம்.ஜி.ஆர் படமும் மற்றதில் சிவாஜி படமும் ரிலீஸாகி இருக்கும். எம்.ஜி.ஆர் படத்திற்கு அதிக கூட்டம் இருக்கும் என்பதால் சிவாஜி படத்திற்குத்தான் போவோம். (அடுத்தவாரத்தில் எம்.ஜி.ஆர்.படத்தையும் பார்த்துவிடுவோம்). சிவாஜியின் படத்தில் கதையோடு கூடிய செண்டிமெண்ட் காட்சிகள் அவசியம் இடம்பெற்றிருக்கும். ஒரு இடத்திலாவது அழவைத்துவிடுவார் சிவாஜி. வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் பார்த்த படத்தைப் பற்றியும் அதன் கதையையும் முடிந்தவரை சொல்லுவேன். கடைசிகாட்சியில் அழுததைச் சொன்னதும், ‘ நல்ல நாள் அதுவுமா காசைக் கொடுத்துட்டு அழுத்துட்டு வேற வர்றியா?’ என்று செல்லமாக கண்டிப்பார்கள் அம்மா. ஆனாலும் அந்த வருட தீபாவளிக்கு பார்த்த அந்தப் படமும் காட்சிகளும் குறைந்தது மூன்று மாதங்களுக்காவது மனசுக்குள் ஓடிக் கொண்டிருக்கும்.

சினிமா மீது எனக்கு ஆர்வம் வரக் காரணமே இப்படி பண்டிகைக் காலங்கள் மட்டுமல்லாது வாராவாரம் எதாவது ஒரு படத்தைப் பார்த்துவிட்டு அம்மாவிடமும் நண்பர்களிடமும் அந்தப் படத்தின் கதையை விளக்கமாகக் கூறுவதுதான். நண்பர்கள் வாய்பிளந்து கேட்பதைப் பார்ப்பதில் ஒருவித சந்தோஷம் கூடிக் கொண்டே போனது.

ஒருதீபாவளிக்கு சிவாஜி படம் எதுவும் ரிலீஸாகவில்லை. அதனால் கூட்டம் அதிகமிருக்கும் என்று தெரிந்தும் எம்ஜிஆர் படத்திற்கு போவதென முடிவு செய்யப்பட்டது. இத்தனைக்கும் அந்த வருட தீபாவளிக்கு எம்ஜிஆரின் புதுப்படமும் ரிலீஸாகாததால் ஏற்கனவே அந்த வருட பொங்கலுக்கு வெளியான ஒரு படத்தையே திரும்பப் போட்டிருந்தார்கள். முதல் முறை அதைப் பார்க்காததால் தீபாவளிக் கொண்டாட்டமாக அந்தப் படத்திற்குப் போவதென நானும் தம்பியும் முடிவு செய்தோம். ஆனால் எங்கள் பாடு அப்படியொரு திண்டாட்டமாகும் என்று கொஞ்சமும் நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை.

டிக்கெட் கவுண்ட்டர் முன் நிற்கிற க்யூவைப் பார்த்ததும் பயந்துதான் போனோம். ஆனாலும் தியேட்டர் வரை வந்துவிட்டு படத்தைப் பார்க்காமல் வீட்டுக்குத் திரும்ப மனசில்லை. க்யூவில் எங்களையும் இணைத்துக் கொண்டோம். டிக்கெட் கொடுக்க ஆரம்பித்ததும் க்யூவில் பலத்த சலசலப்பு. வரிசை கலைந்து போனது. கூட்டம் எங்களை நெருக்கியடித்தது. போலீஸ் லத்திகளை நெருக்கத்தில் அப்போதுதான் பார்த்தேன். நானும் தம்பியும் வேறு வேறு திசைக்குத் தள்ளப்பட்டோம். எம்.ஜி.ஆரின் முரட்டு ரசிகர்களால் நான் நசுக்கி எடுக்கப்பட்டேன். உடல் முழுக்க வேர்வை பொங்கி வழிகிறது. முன்னேறவும் முடியாமல் கூட்டத்திலிருந்து வெளிவரவும் முடியாமல் வசமாக மாட்டிக் கொண்டதை உணர்ந்து அழுகை பீறிட்டுக் கிளம்பியது.

சடாரென மறுபடி ஏற்பட்ட ஒரு நெருக்கடியில் என இடது கை முழங்கையிலிருந்து ‘டொப்’பென ஒரு சத்தம்! ஆமாம் கை ஒடிந்தே போனது. அதைப் பற்றியெல்லாம் யாருக்கும் கவலையில்லை. ஒருவழியாக கும்பல் தியேட்டருக்குள் போக, டிக்கெட் கிடைக்காத கவலையோடும் ஒடிந்த கையோடும் தியேட்டருக்கு வெளியே என் தம்பியைத் தேடுகிறேன். அவன் அங்கிருக்கும் பெட்டிக்கடையில் நின்றபடி அழுது கொண்டிருக்கிறான். பிரிந்த அண்ணன் தம்பிகள் சேரும்போது ஏற்படும் உணர்ச்சிகளை அதுவரை படத்தில் பார்த்திருந்த நாங்கள் அதை நேரில் உணர்ந்தோம்.

கை ஒடிந்த விஷயத்தை அவனுக்குச் சொன்னதும் அவனுக்கு மேலும் அழுகை. என்ன செய்வது என்று தெரியவில்லை. வீக்கம் நிமிடத்திற்கு நிமிடம் கூடிக் கொண்டே போனது. தியேட்டர் க்யூவில் நின்று கை ஒடிந்து போனது என்று சொன்னால் அப்பாவிடம் திட்டு வாங்க வேண்டியிருக்கும். ஆகவே சைக்கிளில் போகும்போது ஏற்பட்ட விபத்தால் கை ஒடிந்து போனதாக ஒரு கற்பனைக் காட்சியை சொல்ல முடிவு செய்தோம். தம்பி சைக்கிளை ஓட்ட நான் பின்னால் அமர்ந்து கொண்டேன். வீட்டுக்குப் போனதும் விஷயத்தைச் சொன்னதும் வீடே களேபரம் ஆனது.

அடுத்த சில மணி நேரத்தில் நான் ஆஸ்பத்திரியில்! கையில் மாவுக்கட்டு! அம்மா ஒருபுறம் புலம்பிக் கொண்டிருக்க அப்பா கோபமாகத் திட்டிக் கொண்டிருக்கிறார். தீபாவளி நாளன்று என்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த எம்.ஜி.ஆரை மனசுக்குள் திட்டிக் கொண்டிருந்தாலும் படத்தை பார்க்க முடியாத கவலை என்னை வாட்டிக் கொண்டிருந்தது. ஒருமாத சிகிச்சைக்குப் பின் கையில் ஒரு சின்னத் தழும்போடு கை பழைய நிலைக்குத் திரும்பியது. தமிழ் சினிமாவிற்காக அந்த வயதிலேயே வீரத்தழும்பைப் பெற்றவன் என்று என் சக சினிமாக் கலைஞர்களிடம் நான் வேடிக்கையாகச் சொல்லிக் கொள்வதுண்டு.

ஒவ்வொரு வருட தீபாவளிக்கும் எனது ஃப்ளாஷ்பேக் காட்சியாக இந்த கை ஒடிந்த காட்சி வந்து சின்னதாய் ஒரு சிரிப்பு என் உதட்டோரம் தோன்றி மறையும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் என் கை ஒடிந்ததற்கும் நான் பார்க்கப் போன படத்தின் தலைப்பிற்கும் யதேச்சையாக ஒரு ஒற்றுமை இருந்தது. அதைச் சொன்னால் உங்களுக்கும் சிரிப்பு வரும். படத்தின் பெயர் என்ன தெரியுமா?

அன்னமிட்ட ‘கை’!

------------------------------------------------------------------------------------------------
நன்றி: இந்த எனது படைப்பை வெளியிட்ட தமிழ்.சிபி ஆசிரியர்
திரு. அண்ணா கண்ணன் அவர்களுக்கு. http://tamil.sify.com/diwali/diwali2008

4 comments:

Bleachingpowder said...

//காலையில் இட்லியும் மாமிசக் குழம்பும் அவசியமாக இடம்பெறும்//

கறி குழம்புன்னு சொல்லுங்க சார், மாமிச குழம்புன்னா படிக்கவே பயமா இருக்கு :))

Anonymous said...

சின்ன வயதிலேயே சினிமா மேல் இத்தனை காதலா!
கை முறிவிற்கு பொய் சொன்னதை பார்க்கும் போதே உங்கள் கற்பனாதிறன் பற்றி புரிந்துகொள்ள முடியுகின்றது.

tamilraja said...

தமிழ் சினிமாவில் கருத்தும் ,சிந்தனையும்
பொறுப்பும்,இன்னும் எல்லாமுமாய் நிறைந்த கலைஞர்களில்
என் உயிர் கல்யான் ஜி முதல்வர்!

தங்கராசா ஜீவராஜ் said...

////ஒவ்வொரு வருட தீபாவளிக்கும் எனது ஃப்ளாஷ்பேக் காட்சியாக இந்த கை ஒடிந்த காட்சி வந்து சின்னதாய் ஒரு சிரிப்பு என் உதட்டோரம் தோன்றி மறையும்.////
உண்மைதான் உங்கள் பதிவை வாசிக்கையில் எங்களுக்கும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை...