Sunday, July 26, 2009

நன்றி தோழிகளே... நண்பர்களே...

தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட புரட்சிதான் இந்த இணையம் என்று சொல்ல வேண்டும். ஒரு புதிய கண்டுபிடிப்பை எந்தெந்த வழிகளில் பயன்படுத்த வேண்டும் என்பதில் தமிழர்களுக்கு இருக்கிற ஆர்வமும் ஈடுபாடும் மற்ற மொழி பேசுபவர்களிடம் குறைவுதான் என்பதே என் கருத்து.

கணினி, மின்னஞ்சல், தமிழ் சாப்ட்வேரைத் தொடர்ந்து பிறந்த குழந்தைகள்தான் இணைய தளங்களும், இணையப் பக்கங்களும், வலைப்பூக்களும்! இந்த இனிய குழந்தைகளைப் பயன்படுத்தி தமிழ் நெஞ்சங்கள் தங்களின் கருத்துப் பரிமாற்றங்களை மிகச் சிறப்பாகவே செய்து வருகிறார்கள்.

நான் வலைப்பக்கத்திற்கு அறிமுகமான போது அதன் வீரியம் பற்றி அதிகம் அறியாதிருந்தேன். இங்கே சில நண்பர்களைப் பற்றியும் சில தோழிகள் பற்றியும் நான் நன்றியோடு சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

மதுமிதா....

வலைப்பக்கத்தைப் பற்றியும், அதன் வட்டத்தைப் பற்றியும், அதன் பயன்பாடுகளைப் பற்றியும், அதன் வடிவமைப்பு பற்றியும் எனக்கு மிகப் பொறுமையாக செல்போன் வாயிலாகவே கற்றுத் தந்தவர் தோழி கவிதாயினி மதுமிதா. வலைப்பூக்களின் பதிவர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் இவர். அன்பு, மென்மையான அணுகுமுறை, எழுத்தில் ஒரு நேர்மை இவைகளை இன்றைக்கும் கடைபிடிப்பவர்.

தமிழச்சி....

அதன்பிறகு இதே வலைப்பக்கத்தின் மூலமாக தமிழச்சியுடன் ஏற்பட்டது சினேகம். ஆரம்பத்தில் எங்களுக்குள்ளும் ஏகப்பட்ட சண்டைகள்!! ஆனால் இனிய சினேகிதி. துணிச்சலான, அதே நேரம் அறிவு பூர்வமான அவரது எழுத்துக்கள் என்னை பெரிதும் கவர்ந்தன. ஈரோட்டில் பிறந்த ஈவேரா பெரியாருக்கு, ஐரோப்பாவில் இன்றைக்கும் ஒரு இயக்கத்தையே நடத்தி வரும் பெண்மணி. தமிழ்நாட்டில்கூட இல்லாத அளவுக்கு பெரியாருக்காக ஒரு வலைத்தளத்தையே உருவாக்கி அவரது படைப்புகளை தினமும், தானே அதில் பதிவு செய்வதை ஒரு கடமையாகவே செய்து வருபவர். எனக்கு இவர் அறிமுகமாவதற்கு முன்னர், இணையத்தில் பலவிதமான சர்ச்சைகளுக்கு ஆளாவர் என்றாலும் அவரது புரட்சிகரமான செயல்களுக்காக நான் அவருக்கு என் வணக்கத்தைச் செலுத்திக் கொள்கிறேன். இணையத்தில் ஏற்படும் சில குழப்பங்களுக்குத் தீர்வு சொல்லும் ஒரு நல்ல தோழியாக இன்றும் இருக்கிறார். அவரது நட்பு என்றும் தொடரும்.

சிவகுமார்...

பிரபல டிராக்டர் கம்பெனியான tafe வின் சென்னை ரீஜெனல் மானேஜர் இவர். பழகுவதற்கு இனிய நண்பர். இவரும் எனக்கு இணையத்தின் மூலமாகவே நண்பர் ஆனவர். ஆனால் இப்போது எனது குடும்ப நண்பர். ஏற்கனவே இருபது வருடம் பழகியது போல் எங்களின் நட்பு இன்றைக்கும் இனிதே தொடர்கிறது.

ஏ.ஆர்.கே.ராஜராஜா...

இவரும் இணையத்தில் பிரபலமானவர்தான். தமிழ்ராஜா என்கிற பெயரில் உலா வருபவர். உற்சாகத்தின் ஊற்றாக செயல்படுபவர். இளவட்டம் என்கிற படத்தின் இயக்குனர். தமிழில் டப்பிங் செய்யப்பட்ட சுமார் 200 தெலுங்குப் படங்களுக்கு தமிழின் வசனகர்த்தா. இவரோடு பேசிக் கொண்டிருந்தால் ஊமைகூட பாடகன் ஆகிவிடுவான் என்பது எனது கணிப்பு.

வெங்கட் தாயுமானவன்...

என்னுடைய ‘அப்பாவுக்கு ஒரு இமெயில்’ சிறுகதையை இணையத்தில் படித்துவிட்டு அறிமுகமான உதவி இயக்குனர். ஆனால் அவருக்கு கேன்ஸர் இருப்பதையே போகிற போக்கில் என்னோடு பகிர்ந்து கொண்டவர். பதறிப் போன நான் அவரைப் பற்றிய தகவல்களை செல்போன் மூலமாகவே சேகரித்து அதை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டேன். அதன் பிறகு அது ஆனந்த விகடனிலும் வெளியானது. நம்பிக்கையான இளைஞர். அவரது வெற்றிக்காக பிரார்த்தனைகளுடன் காத்திருக்கிறேன்...

நர்சிம்....

இதே வெங்கட் தாயுமானவனின் சோகக்கதையைப் படித்துவிட்டு அவரது சிகிச்சைக்கான முழுச் செலவையும் தானும், தான் பதவி வகிக்கிற ஒரு பன்னாட்டு நிறுவனமும் ஏற்றுக் கொள்ளும் என்று உடனே அறிவித்த அன்பு நண்பர். இவரையும் நான் இதுவரை சந்திக்கவேயில்லை. ஆனால் ஓடோடி வந்து உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிற அவரது நல்ல மனசுக்காகவே அவரை எனது இனிய நண்பராக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இணையத்தின் மூலமாக இப்படி நூறு நர்சிம்கள் நம் அனைவருக்கும் நண்பர்களாக அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம்.

என். கணேசன்....

அய்யா கணேசன் அவர்களை எனது நண்பர் என்று விளித்துக் கொள்ளக் கூடாது. மிகப்பெரியவர் அவர். பொள்ளாச்சியில் பிறந்து வளர்ந்த இவர், இன்றைக்கு அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆய்வு மையத்தில் உயர் பதவி வகிப்பவர். என் இணைய எழுத்துக்களைப் படித்துவிட்டு என்னை உற்சாகப்படுத்தியவர்.. தமிழ்மணம் வலைத்தளத்தின் மிக முக்கிய பொறுப்பாளரும் ஆவார். அவருக்கு எனது நன்றிகள்.

இப்படி இணையம் என்கிற ஒரு தொடர்பு சாதனத்தின் மூலமாக பல நூறு உள்ளங்களின் அன்பை, நட்பை, ஆசீர்வாதத்தை நான் பெற்றிருப்பதில் மிகவும் மகிழ்கிறேன். இது மென்மேலும் வளரும் வளரும் வளரும் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

வாழ்க நட்பு, வளர்க அன்பு. சரியா?
----

8 comments:

Osai Chella said...

அருமையான கட்டுரை. முடிந்தால் அந்த அந்த பதிவரின் பக்கத்துக்கு லின்க் குடுக்கவும்!

அன்புடன்
ஓசை செல்லா

tamilraja said...

கல்யாண்ஜி அவர்களுக்கு நட்பு வட்டம் மிகப்பெரியது.
நட்பை மதிக்கும் கல்யாண்ஜி வாழ்க !
வாழ்க !!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்க நட்பு, வளர்க அன்பு. சரியா?


மிகவும் சரியே.

ஷண்முகப்ரியன் said...

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்க நட்பு, வளர்க அன்பு. சரியா?


மிகவும் சரியே.//

என்ன ஒரு ஒற்றுமை!இதே கருத்துரையை நான் பதிவிட வேண்டுமெனெ நினைத்து வந்தால்,என்னை முந்திக் கொண்டார் இந்த அம்மையார்!

நல்லவர்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி,கல்யாண்.

ஸ்வாதி said...

வாழ்த்துகள்! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அத்தனை பேரிலும் வெங்கட் தாயுமானவன் அவர்கள் எனக்கும் பரிச்சயமானவர்; அருமையான கவிதைகளுக்கும் ஆன்மீக கருத்துகளுக்கும் பெட்டகமாக விளங்குபவர். எங்கள் தமிழ் பிரவாகம் குழுமத்தில் நிரைய எழுதியிருக்கிறார். அவர் வெகுவிரைவில் குணமாகி மீண்டும் எம்மிடையில் தனது கவிதைகளுடன் நடமாடுவார் என்று நானும் உறுதியாக நம்புகிறேன்.

அன்புடன்
சுவாதி

butterfly Surya said...

நட்பு வாழவும் அன்பு வளரவும் வாழ்த்துகள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

Cable சங்கர் said...

அருமையான பதிவு

ரப்பர் பூக்கள் (ரா.இளங்கோவன்) said...

நண்பர்களைப் பற்றி அழகாக சொல்லியுள்ளீர்கள் ஐயா.... உங்களின் நட்பு வட்டாரத்தில்...இந்த இளங்கோவனையும் சீக்கிரமாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்..ஐயா

நட்புடன்
இளங்கோவன்