Tuesday, July 7, 2009

நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு நிஜக்கதை!

‘‘ தொடர்பு எல்லைக்கப்பால்...! ’’

வெங்கட் தாயுமானவன், சொந்த ஊரான காவேரிப்பட்டணத்திலிருந்து சென்னைப்பட்டிணத்திற்கு சினிமா கனவுகளோடு ஓடிவந்து, கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஓடிப்போய் விட்டன. உதவி இயக்குனராக சில வருடங்கள், அதில் வேலை இல்லாதபோது பகுதி நேர பத்திரிக்கையாளராக சில வருடங்கள், தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக சில மாதங்கள் என தன் கனவுகளுக்குத் தீனி போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்!

கதை, கவிதைகளையும் இவர் விட்டு வைக்கவில்லை. இணையத்தில் வரும் யூத் விகடனில் இவரது கவிதைகளை அடிக்கடி பார்க்க முடியும். ‘நினைப்பதெல்லாம் நடந்து விடும்’ என்ற தலைப்பில் சுயமுன்னேற்ற சிந்தனைகளைக் கொண்டு அறிவாலயம் வெளியிட்ட ஒரு நூலுக்கு ஆசிரியரும், இந்த தாயுமானவன்தான்!

அதுமட்டுமல்ல, சினிமாவில் இயக்குனராக ஜெயிக்க வேண்டும் என்கிற கனவு, இதோ இன்னும் சில நாட்களில் பலித்துவிடும் என்ற நம்பிக்கையோடு, தன் முதல் படத்திற்கான திரைக்கதை, வசனம் எழுதும் பணியில், தன் வீட்டிலேயே பரபரப்பாக இருக்கிறார் என்பது சந்தோஷமான விஷயம்! அவருக்கு உதவியாக கூடவே அவரது மனைவியும், ப்ளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்குப் போகத் தயாராக இருக்கிற அவரது மகனும்!

ஆனால் இவரைப் பற்றிய ஒரு அதிர்ச்சித் தகவல் காத்திருக்கிறது.

ஆம்; இப்போது நாற்பத்தி மூன்று வயதாகும் இந்த வெங்கட் தாயுமானவனுக்கு மருத்துவர்கள் நிர்ணயித்திருக்கிற ஆயுள் நீட்டிப்பு, இன்னும் ஆறுமாச காலம் மட்டுமே!

‘’ ஆமாங்க. ஆறு மாசத்துக்குகப்பறம் என்னோட செல்போனில ரிங்க் டோனோ, என் குரலோ பதிலாகக் கிடைக்காது. அதுக்குப் பதிலா, நான் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக யாரோ முகம் தெரியாத ஒரு பெண்ணின் குரல் மட்டுமே கேட்கும். அந்த வாசகங்களுக்கு உண்மையான அர்த்தக்காரனாக நான் ஆகியிருப்பேன்’’ என்கிறார் எந்தவித மரண பயமும் இல்லாமல் சிரித்தபடியே!

கேட்கிற நமக்குத்தான் மனசு கனத்துப் போகிறது.

அப்படி என்னதான் ஆனது இந்த தாயுமானவனுக்கு?

இரண்டு வருடங்களுக்குமுன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவரின் வலது காதுக்கு அருகில் லேசாக வலி ஏற்பட்டிருக்கிறது. அதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு அடுத்த நாள் வேலையில் மும்முரமாய் இருந்திருக்கிறார். இரவு, வலியின் தன்மை கூடியிருக்கிறது. மறுநாள் காலை, எதோ காது சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருக்கலாம் என்று அதற்கான ஒரு சிறப்பு மருத்துவரை அணுகியிருக்கிறார். அவரும் பரிசோதித்துவிட்டு வலி நிவாரணிகளைக் கொடுத்திருக்கிறார்.

வருவதும் போவதுமாக அந்த வலி இருக்க, மூன்று மாதங்கள் கழித்து ஒருநாள் குளிக்கும்போது பார்த்தால் வலித்த இடத்தில் சின்னதாய், லேசான ஒரு கட்டி!

குடும்ப மருத்துவர் மூலம் சில பரிசோதனைகள். அவரது சந்தேகத்தின் பேரில் மேலும் சில பரிசோதனைகள் என படிப்படியாக பரிசோதனைகளில், அதன் இறுதி முடிவு சொன்னது இதுதான்:

அந்தக் கட்டி சாதாரண கட்டி இல்லை. உமிழ் நீர் சுரப்பியில் தோன்றி இருக்கும் புற்று நோய்கட்டி! பரோடிட் கான்ஸர் ( Parotid Cancer ) என்பது அதன் மருத்துவப் பெயர்!

ஏற்கனவே சாதாரணமான கட்டிக்கென எடுத்துக் கொண்ட சிகிச்சைகள் நிறுத்தப்பட்டு இப்போது அடுத்த சிகிச்சை ஆரம்பமானது, அடையார் கேன்ஸர் இன்ஸ்டிடியூட்டில்! மறுபடியும் அங்கே புற்று நோய்க்கான பலவித பரிசோதனைகள்...

‘’புற்று நோய் என்கிற அந்த வார்த்தையைக் கேட்டதும் நான் உடைந்து போனது என்னவோ நிஜம்தான். ஆனாலும் அதை ஆபரேஷன் மூலம் அகற்றி விடலாம் என்ற மருத்துவர்களின் நம்பிக்கை வார்த்தைகள் ஆறுதலைத் தந்தன.’’ என்கிறார் தாயுமானவன்.

ஆனால் அந்த ஆறுதலும் சில மாதங்களுக்குத்தான் செல்லுபடியாகி இருக்கிறது. அந்தக் கட்டி, ஆபரேஷனுக்கு ஏற்றதாக இல்லாமல் கல் போல மிகவும் கெட்டியாக இருப்பதால், அதை அறுவை சிகிச்சைக்கென இலகுவாக்க ரேடியேஷன் தெரபி நாற்பது நாட்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

வாரத்தில் ஐந்து நாட்கள் என எட்டு வாரம் அந்த சிகிச்சை தொடர்ந்திருக்கிறது. அதன் பின்னர் ஒன்றரை மாத இடைவெளிவிட்டு வரச் சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் சொன்ன அந்த ஒன்றரை மாதம் கடந்து பார்த்த பின்னரும், கட்டி அதே நிலையில்தான் கல்லாய் இருந்திருக்கிறது! இன்னும் கூடுதலாய் இரண்டு மாதங்கள் பொறுத்திருக்கச் சொல்லி அனுப்பி இருக்கிறார்கள். அப்போதும் அது அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.

மீண்டும் சீரியஸான பரிசோதனைகள். முடிவில் இதை ஆபரேஷன் செய்தால் உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிடும். அதனால் அப்படியே விட்டு விடுங்கள் என்று சொல்லி வெங்கட் தாயுமானவனுக்கான ஃபைலை மூடி அனுப்பிவிட்டிருக்கிறார்கள்.

குழம்பிய நிலையில் அதே ஆஸ்பத்திரியில் வேறு சில மருத்துவர்களை அணுகியபோது மிகவும் சிக்கலான இடத்தில் கட்டி இருப்பதால் ஆபரேஷன் தவிர்க்கப்பட்டிருக்கும் காரணத்தைச் சொல்லி இருக்கிறார்கள். அப்படியே விட்டால் என்னவாகும்?

‘வெடித்து வெளியே வரும்’ – என்பது பதிலாக வந்திருக்கிறது. மிகவும் கலங்கி நின்ற நிலையில், ஒரு தனியார் மருத்துவமனையின் பெயரைச் சொல்லி அங்கே போகச் சொல்லியிருக்கிறார்கள்.

சில நண்பர்கள் உதவியோடு அங்கேயும் போயிருக்கிறார் இவர்.

அவர்களோ இவரை பரிசோதித்துவிட்டு ‘இன்னும் ஒரு வாரத்திற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்; இல்லையேல் உயிருக்கு ஆபத்து‘ என்று அறிவித்திருக்கிறார்கள்!

எதை நம்புவது?

மேலும் குழப்பத்திற்கிடையே முகச்சீரமைப்பு நிபுணர் ஒருவரை சந்தித்து ஆலோசித்தபோதுதான் அவர் உண்மையான நிலவரத்தைத் தெளிவாக விளக்கி இருக்கிறார்.

காதுக்கு அருகே வளர்ந்த அந்த புற்று நோய்க்கட்டி, கழுத்து வழியாக மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்பினை பின்னிப் பிணைந்து உள்ளது. அறுவை சிகிச்சையின் போது அந்த நரம்பு தொந்தரவு செய்யப்பட்டால், அது மூளையை பெருமளவில் பாதித்து ரத்தப்போக்கை அதிகரித்து அனைத்து உறுப்புகளையும் செயல் இழக்கச் செய்து விடும். பிறகு மரணத்திற்கான வாய்ப்பு மிக மிக அதிகம் என்பதால் அறுவை சிகிச்சை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதுதான் அவரது அந்த விளக்கம்.

சரி இதற்கான சிசிக்கைதான் என்ன?

மருத்துவர்களின் அறிவுரைப்படி வலி தெரியாமல் இருப்பதற்கு மருந்து மாத்திரைகளும், அந்த கட்டி என்கிற குட்டி பிசாசுவின் மூலம் நோயின் தன்மை உடம்பின் மற்ற இடங்களுக்குப் பரவாமல் இருப்பதற்கு சில மாத்திரைகளும் எழுதித் தரப்பட்டிருக்கிறது. ஆனாலும், கூடவே உயிருக்கு உத்திரவாதம் இன்னும் ஆறு மாசம்தான் என்பது இன்றைய நிலை!

உயிரைத் தக்கவைத்துக் கொள்ள, ஆங்கில மருந்துகளோடு மாற்றுமுறை சிகிச்சைகளையும் பார்த்திருக்கிறார் வெங்கட் தாயுமானவன். இப்படி அனைத்து மருந்து மாத்திரைகளோடு சத்தான உணவுகளையும் சாப்பிடும் வகையில் அவரின் ஒருநாள் செலவுக்கு மட்டுமே சுமார் எழுநூறு ரூபாய் தேவைப்பட்டிருக்கிறது! அதற்கு நிதி நிலைமை கைகொடுக்காததால்,

‘’எல்லா மருந்து மாத்திரைகளையும் தூக்கிப் போட்டுட்டு, வலியை அனுபவிச்சுட வேண்டியதுதான்னு முடிவு பண்ணிட்டேன். இருக்கவே இருக்கார் கடவுள்! அவருகிட்ட பொறுப்பை ஒப்படைச்சுட்டேன். ஆனா அதுக்காக சோர்ந்து போய் ஒரு நோயாளியா மூலைல முடங்கிக் கிடக்காம, என்னோட சினிமா கதைல கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன்.... ரெண்டு வருஷமா சிகிச்சைக்கும் மருந்துக்கும் நடுவுல அலைஞ்சதுல, அப்படி இப்படின்னு இப்பதான் ஒரு ப்ரொடியூஸர் கதையை ஓக்கே பண்ணியிருக்காரு. கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து மூணு மாசமா கதையை மெருகேத்துனதுல வலி பெருசா தெரியலை....’’

என்று சொல்லிமுடித்த தாயுமானவன் ஒரு சின்ன இடைவெளிவிட்டு, மெலிதாய் ஒரு பெருமூச்சோடு மேலும் பேசுகிறார்...

‘’ஆனா இப்ப கொஞ்ச நாளா, முகத்தின் வலது பக்கத்தை அசைக்கறது சிரமமா இருக்கு. எதோ ஒரு தடை இடைஞ்சலா இருக்கு. வலது கண்ணை மூட முடியாத நிலையும் சமீபமா ஏற்பட்டிருக்கு...’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் தாயுமானவனின் காது அருகே இருந்த அந்த அழிச்சாட்டியமான கட்டி, இப்போது உடைந்து புண்ணான நிலையில் இருக்கிறது!

அடுத்து எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்கிற அந்த ரகசியக் கோட்டைக் கடந்து, தாயுமானவன் தனது லட்சியக் கனவின் வெற்றி முகடைத் தொட வேண்டும் என்பதுதான் நமது பிரார்த்தனையாய் இருக்கிறது! கூடவே உங்களது பிரார்த்தனைகளும் மருத்துவக் கூற்றுகளை புறந்தள்ளி, அவரின் ஆயுளை நீட்டிக்கச் செய்யும் பாலமாக அமையட்டும்!

பிரார்த்தனைகளுக்கு இணையான வலிமை வேறு எதற்கும் இல்லை. அவைகள் ஒருபோதும் வீணாவதுமில்லை என்கிற நம்பிக்கை, நம்மில் பலருக்கும் இருக்கிறதுதானே?
- கல்யாண்குமார்

-இந்தப் பதிவை நான் எழுதிவிட்டு அவரது ஆயுள் நீட்டிப்புக்காக உங்களின் ஒருவனாகப் பிரார்த்தனை செய்தேன். ஆனால் அத்தனை பேரின் பிரார்த்தனைகளையும் புறந்தள்ளிய காலம், அந்த அன்பு இளைஞனை அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே காலனின் கையில் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்ததுதான் வேதனையான ஒன்று!

ஆனால் அந்த வெங்கட் தாயுமானவனின் நம்பிக்கையான வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன...

--------------------------------------------------------------------------

23 comments:

முனைவர் அண்ணாகண்ணன் said...

நிலைமை, இவ்வளவு தீவிரமாகிவிட்டதா? நல்ல உள்ளம் படைத்த நண்பர் வெங்கட் தாயுமானவன், எப்படியாவது நலம் பெற வேண்டும் என விரும்புகிறேன்.

துளசி கோபால் said...

வருத்தமாக இருக்கின்றது.

நலம் பெற எங்கள் பிரார்த்தனைகள்.

நா. கணேசன் said...

எல்லா கூகுள் குழுக்களுக்கும் அனுப்புகிறேன்.

பிரார்த்தனைகளுடன்,
நா. கணேசன்

M.Rishan Shareef said...

எனது அன்புக்குரிய நண்பர் இவர். விரைவில் குணம்பெறுவார்..நம்பிக்கை எனக்கு இருக்கிறது..!

நட்புடன் ஜமால் said...

‘’ ஆமாங்க. ஆறு மாசத்துக்குகப்பறம் என்னோட செல்போனில ரிங்க் டோனோ, என் குரலோ பதிலாகக் கிடைக்காது. அதுக்குப் பதிலா, நான் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக யாரோ முகம் தெரியாத ஒரு பெண்ணின் குரல் மட்டுமே கேட்கும். அந்த வாசகங்களுக்கு உண்மையான அர்த்தக்காரனாக நான் ஆகியிருப்பேன்’’\\



அதிர்ச்சியாகத்தான் இருக்கின்றது, எவ்வளவு அழகாக எதார்த்தை எதிர் கொளிகிறார், அவருக்காக எமது பிரார்த்தனையும் ....

meenamuthu said...

மனம் கனத்துவிட்டது.. எதுவும் நம் கையில் இல்லை இறைவன் நல் வழி காண்பிப்பான்.வெங்கட்தாயுமானவர் பூரண நலம்பெற பிரார்த்திக்கின்றேன்.

VSK said...

Parotid cancer: treatment and results.
Roberson DW, Chu FW, Yarington CT.
Department of Otolaryngology-Head and Neck Surgery, Virginia Mason Clinic, Seattle, Washington 98102.
The records of 74 consecutive patients with primary parotid malignancy were reviewed. The age and sex incidence was comparable to that described in previous studies; we observed a high incidence of adenocarcinoma not reported by other investigators. Stage at the time of examination and histologic grade of tumor were independent statistically significant predictors of clinical outcome. Long survival with low grade disease and late recurrence were common. Radiation therapy has been shown to increase survival in a number of studies; however, it had no demonstrable benefit in our series. Parotid cancer should be managed aggressively and early surgery is indicated for all parotid neoplasms. Neck dissection is indicated for clinically positive nodes and high grade cancers; radiation therapy is indicated for high grade cancers and residual disease.
PMID: 8313862 [PubMed - indexed for MEDLINE]

Mortality/Morbidity
Depending on the histologic type and tumor grade, the morbidity and mortality can vary greatly. Some benign tumors can be aggressive locally and recur following their removal. Morbidity is proportional to the degree of invasion at the time of detection.
Some malignant tumors are slow growing with high 5-year survival rates in patients. Poor prognostic signs are the following: (1) high-grade tumor, (2) lymph node or distant metastasis at diagnosis, (3) facial nerve paralysis, (4) skin involvement, (5) high tumor stage, (6) deep lobe involvement, and (7) recurrent tumor.
Pain does not indicate that a neoplasm is malignant; however, in patients with known malignancy, pain is a poor prognostic sign.
http://www.advancedonc.com/salivary-glands.htm

ஏ.சுகுமாரன் said...

இத்தனை தீவிரமான நோய் எனத் தெரியாதே ,
நினைக்கவே வேதனையாக இருக்கிறது !
நண்பர் தாயுமானவன் விரைவில் மீண்டு வருவார் !
இறையருள் துணை நிற்கும் .
பிரார்த்திக்கும் நண்பன்
, ,ஏ சுகுமாரன்

Thiru said...

வெங்கட் தாயுமானவன் விரைவில் குணமடைந்து, அவரது கனவை நினைவாக்க ஏன் பிரார்த்தனைகள்.

cheena (சீனா) said...

அன்பின் கல்யாண் குமார்

மிக வருத்தமாக இருக்கிறது - பூரண நலம் பெற - இறைவனின் கருணை பரிபூர்ணமாக துணை இருக்க நல்வாழ்த்துகள்

தொடர்பு கொள்கிறேன்

வினோத் கெளதம் said...

மிகவும் வருத்தம் தரும் செய்தி..

Bleachingpowder said...

நிச்சயமாக பிராத்திக்கிறேன். கடவுள் ஏதேனும் ஒரு ருபத்தில் உதவி புரிய

RAMesh Kumar SS said...

வெங்கட் தாயுமானவன் அவர்கள்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்

அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்க வளமுடன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நலம் பெற பிரார்த்தனைகள்

Tech Shankar said...

very sad news

நட்புடன் ஜமால் said...

பிரார்த்தனைகளுக்கு இணையான வலிமை வேறு எதற்கும் இல்லை. அவைகள் ஒருபோதும் வீணாவதுமில்லை என்கிற நம்பிக்கை, நம்மில் பலருக்கும் இருக்கிறதுதானே?\\


எங்கள் பிரார்த்தனையும் உண்டு ...

Appaji said...

நலம் பெற பிரார்த்திகிறேன்.

நம் குழுவில் உள்ள அனைவரும் ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவருக்காக நாம் பிரார்த்தனை ( அவரவர் இடத்திலிருந்தே ) செய்வோம். இதற்கான நாள் + நேரத்தை பெரியவர்கள் யாரேனும் நிர்ணயித்தால்
சரியாக இருக்கும். நம் கூட்டு பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என நம்புகிறேன்.

ஜாபர் அலி said...

நண்பரே,

தயுமானவன் எப்படி இருக்கிறார்? சில நாட்களுக்கு முன் அவரிடம் பேசினேன்.

தங்கள் வங்கிக் கணக்கிற்குப் பணம் 8000 அனுப்பியிருந்தேன். கிடைத்ததா?

முடிந்தால் தனிமடலில் தெரிவியுங்கள்.

அன்புடன்...

marumalarchi said...

hi all please choose one time

நிகழ்காலத்தில்... said...

மிக நிச்சயமாக ஹோமியோபதி வைத்தியத்தின் மூலம் குணப்படுத்தலாம்.,

நம்பிக்கையோடு செய்யவும்,

செலவு சில நூறுகள் மட்டுமே

ஆபரேசனைத் தவிர்க்கவும்

என் இந்த கருத்தை சாதரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.,

மிக அதிமுக்கிய தகவலாக கருதி செயல்படுங்கள்.

நண்பர் நலமடைய மனதார வாழ்த்துகிறேன்.

Unknown said...

Hi
I sent a mail to you mentioning about Palliative care which is the most important care that your friend needs, I worked in a hospice first such treatment centre in Coimbatore, where treatment is free of charges including inpatient services. The Hospice name is RAKSHA -The Hospice, (GKNM Hospital) Sengadu, Coimbatore.
I also mentioned if you need more information feel free to drop a mail.Till date no response, if you have not received my mail otherwise (so why you are blaming some one who has nt responded to your mail requesting for monitary support,) if you are really interested to help your friend to be relieved from his sufferings, you will take this information as the need of the hour.
Info:
Raksha-The Hospice,
Sengadu,
Pappanaickenpalayam P.O,
Coimbatore, TN.

நாமக்கல் சிபி said...

வெங்கட் தாயுமானவன் அவர்கள்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்

அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்க வளமுடன்

அன்புடன் அருணா said...

நல்ல உள்ளம் படைத்த நண்பர் வெங்கட் தாயுமானவன், எப்படியாவது நலம் பெற வேண்டும் என விரும்புகிறேன்.