Thursday, February 26, 2009

ஏ.ஆர்.ரஹ்மானும் நானும்!




து ஒரு ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுது. எனது நண்பரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனனிடமிருந்து போனில் ஒரு அழைப்பு. ‘நேரில் சந்திக்கலாமா?’


மாலை ஐந்து மணியளவில் எங்களது அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது நான் ‘இந்தியா டுடே’ தமிழ் பதிப்பில் உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன். சினிமா செய்திகளுக்கான பொறுப்பும் எனதே. அப்போது ராஜீவ்மேனன், படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வதோடு விளம்பரப் படங்களுக்கே அதிகமாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது விளம்பர ஜிங்கிள்ஸ்களுக்கு இசையமைக்கும் ஒரு இளைஞரைப் பற்றி சொன்னார். ‘’பெயர் திலீப். பிரமாதமான இசை ஞானம். நவீன இசைக்கருவிகளைக் கையாள்வதில் அவரிடம் மிகப்பெரிய திறமை ஒளிந்திருக்கிறது’’ இது மட்டுமல்ல. அவரது ஜிங்கிள்ஸ்களைக் கேட்டுவிட்டு மணி சார் அடுத்த படத்துக்கு அவரைத்தான் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தவுள்ளார் என்ற செய்தியையும் சொன்னார்.


அட! புதுச்செய்தியாக இருக்கிறதே என்று அந்த இளைஞனை ராஜீவ்மேனனே எடுத்த ஒரு புகைப்படத்தையும் வாங்கிக் கொண்டேன்.

அடுத்த நாள் காலை. அவர் கொடுத்த திலீப்பின் தொலைபேசி எண்ணுக்கு அழைக்கிறேன். எதிர்முனையில் திலீப். நான் என்னை அறிமுகம் செய்து கொண்டு நேரில் சந்திக்க வேண்டும் என்கிறேன். உடனே பரபரப்பான திலீப் அவசரமாக மறுக்கிறார்.

‘’இல்லை சார்... இப்ப எதுவும் பேட்டியெல்லாம் வேண்டாம். மணி சார் எதுவும் சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கார்...’’

‘’ படத்தைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம். உங்களைப் பற்றி சொல்லுங்கள். மணிரத்னம் அறிமுகப்படுத்தும் இசையமைப்பாளர் பற்றிய தகவலை முதன்முதலில் இந்தியா டுடேவில் வரவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ‘’ என்று சொன்னதோடு ராஜீவ்மேனனிடமிருந்து உங்களின் போட்டோவைக்கூட வாங்கிவிட்டேன் என்று சொன்னதும்தான் ஒருவழியாக சமாதானமடைந்து சந்திக்க ஒப்புக் கொண்டார்.

மாலை நான்கு மணிக்கு அவரது இல்லத்தில் அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது. பள்ளி மாணவனாகவும் இல்லாமல் கல்லூரி இளைஞனாகவும் இல்லாமல் நடுத்தரமான – கூச்சம் கலந்த சிரித்த முகம். அவருடன் அவரது தாயும் சகோதரியும். எனக்காகத் தெருமுனையில் இருக்கும் பேக்கரியில் வாங்கி வைத்திருந்த கேக்கும் மிக்ஸரையும் எனக்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னார், அவரது அம்மா. கூடவே காபியும் வந்தது.

பின்னர் நானும் திலீப்பும் பேச ஆரம்பித்தோம். அவரது அப்பா சேகர் பற்றி, அவரது மறைவுக்குப் பிறகு இசையே முழு நேரத் தொழிலானதுபற்றி, குடும்பப் பின்னணி, சமீபத்தில் இஸ்லாம் மதத்தில் மாறி தன் பெயரை அல்லா ரக்கா ரஹ்மான் ( அல்லாவின் ஆசீர்வாதம் பெற்ற ரஹ்மான் – அதுவே சுருக்கமாக ஏ.ஆர். ரஹ்மான் ) என்று மாற்றிக் கொண்டதைப் பற்றி – மணிரத்னம் படத்தில் கிடைத்த வாய்ப்பு ஆண்டவன் அருளியது என்றும் சொன்னவர், பல நாள் பழகிய நண்பரைப் போல என்னை அவரது ஒலிப்பதிவு கூடத்திற்குள் அழைத்துப் போய் இதுவரை பதிவாகியிருந்த இரண்டு பாடல்களை எனக்குப் போட்டுக் காட்டினார்.

அதில் ஒன்று சின்னச் சின்ன ஆசை. அதை எனக்காக மறுபடி ஒருமுறை ஒலிக்கச் செய்யுங்கள் என்றேன். நான் ஒன்ஸ்மோர் கேட்டதில் பெருமகிழ்ச்சியடைந்த ரஹ்மான் இரண்டாவது முறை மறுபடி அந்தப் பாடலை ஒலிக்க வைத்தார். ‘’இந்த ஒரு பாடலில் நீங்கள் புகழ்பெறப்போவது உறுதி’’ என்று பாராட்டியதோடு எனது வாழ்த்துக்களையும் தெரியப்படுத்தினேன். மணி சார் தவிர பட சம்பந்தமான கலைஞர்களே கூட இன்னும் இந்தப்பாடல்களைக் கேட்கவில்லை. உங்களுக்குத்தான் போட்டுக் காட்டியிருக்கிறேன். உங்களின் இந்தப் பாராட்டும் வாழ்த்தும் எனக்கு புதிய தெம்பைக் கொடுத்திருக்கிறது...’’ என்று நெகிழ்ச்சியானவர் தன் வீட்டு வாசல்வரை வந்து என்னை வழியனுப்பி வைத்தார்.

ஒருவாரம் ஓடிப்போயிற்று. ஒரு இரவு நேரம் வீட்டின் தொலைபேசி ஒலித்தது. எடுத்துப் பேசினால் எதிர்முனையில் ரஹ்மானின் அம்மா.

‘’தம்பி... உங்க பத்திரிக்கைல தம்பியோட போட்டோ எப்ப வருது தம்பி? ‘’

அந்தத் தாயின் குரலில் இருந்த ஆர்வத்தை என்னால் உணர முடிந்தது.

‘’இன்னும் இரண்டு நாளில் புத்தகம் வரும் அம்மா. கடைக்கு வருவதற்கு முன்னால் நானே உங்கள் வீட்டுக்கு வந்து தருகிறேன்’’ என்று சொன்னேன். அலுவலகத்திலிருந்து என் வீட்டிற்குச் செல்லும் வழியில்தான் அவர்கள் வீடு இருந்த காரணத்தால் புத்தகம் ரெடியானதும் ஐந்து காப்பிகளை எடுத்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்குப் போனேன்.

ஆளுக்கொரு புத்தகமாக, அவசர அவசரமாக அவரது அம்மாவும் சகோதரியும் ரஹ்மானின் போட்டோவுடன் கூடிய செய்தி இருந்த பக்கத்தைப் பார்த்துவிட்டு ஒருவருக்கொருவர் கலங்கிய கண்களுடன் தங்களின் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்ட அந்தக் காட்சி, இன்னமும் என் மனசில் ஒரு புகைப்படமாய் பதிந்து கிடக்கிறது. ஆனால், தன் புகைப்படம் முதன்முதலாக - அதிலும் இந்தியா டுடே என்கிற புகழ் பெற்ற பத்திரிக்கையில் வந்திருக்கிறதே என்கிற மகிழ்ச்சியைக்கூட மிக நிதானமாக ஏற்றுக் கொண்டார் ரஹ்மான். மெலிதான ஒரு புன்னகை. ‘’ ரொம்ப தேங்க்ஸ் சார்’’ என்று சுருக்கமாக தன் சந்தோஷத்தை வெளிககாட்டிக் கொண்டார் மிக அமைதியாக. அவரது அடக்கமான தன்மை அப்போதே அவருக்குள் குடிகொண்டிருக்கிறது.

ரோஜா வெளியானது. ஏ.ஆர். ரஹ்மானின் படமும் செய்தியும் வராத பத்திரிக்கைகளே இல்லை. அதன் பிறகு பத்திரிக்கையாளனாக அவருடன் சில சந்திப்புகள். அப்போதெல்லாம் மற்ற பத்திரிக்கையாளர்களே வியக்கிற வண்ணம் என்னிடம் தனிப்பட்ட முறையில் வந்து பேசிக் கொண்டிருப்பார். ‘’ என்னை முதன்முதலில் பேட்டி எடுத்தவராச்சே! பேசாம இருக்க முடியுமா?’’ என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது அனைவரின் முன்னிலையிலும் வெளிப்படையாகச் சொன்ன ரஹ்மானின் அந்த அன்பான நெருக்கத்தை இன்னமும் அவர் தொலைத்துவிடவில்லை என்பதுதான் அவரை இந்த உயரத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது.

அதன் பின்னர் எட்டு வருடங்கள் ஓடி விட்டன. நான் பத்திரிக்கைத் துறையிலிருந்து விலகி சினிமா, சின்னத்திரையில் பணிபுரிய ஆரம்பித்தேன். ஒரு தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக நண்பர் திரு.பாலகிருஷ்ணனோடு சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தயாரிக்க விரும்பினேன். அது: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சிறப்புப் பேட்டி!

அப்போது ரஹ்மான் இந்தி தமிழ் என்று இசையின் உச்சத்தில் இருந்தார். சந்திப்பதற்கே ஒரு வாரம் ஆனது. நானே அதைத் தயாரித்து வழங்கவிருப்பதால் ரஹ்மானை தனிப்பட்ட முறையில் சந்தித்து அதற்கொரு நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொண்டேன். எந்தவிதமான மறுப்பும் சொல்லாமல்,

‘‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தின் ரீரிக்கார்டிங் இரண்டு நாளில் முடிந்து விடும்; அதன்பிறகு எனது ரிக்கார்டிங் ஸ்டூடியோவிலேயே பேட்டியின் ஒளிப்பதிவை வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் ‘’ என்றார்.

அது என்ன ?

‘’ என்னை நீங்கள்தான் பேட்டி காணவேண்டும். வேறு தொகுப்பாளர்களை வைத்து எடுக்கக்கூடாது’’

ஒப்புக் கொண்டேன். அடுத்த சில நாட்களில் நண்பர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவில் சுமார் ஐந்து மணி நேரங்களை எங்களுக்காக ஒதுக்கியதோடு அனைவருக்கும் மதிய உணவுக்கு தன் வீட்டிலிருந்தே பிரியாணி ஏற்பாடு செய்திருந்தார் ரஹ்மான்.

சன் தொலைக்காட்சியில் 2004 ஏப்ரல் 14ம் தேதி ஒளிபரப்பான அந்தப் பேட்டியில் ரஹ்மான் தனக்கு மிகவும் பிடித்தமான தமிழ் பாடல்களை பட்டியலிட்டு சொல்லியிருந்தார்.

இளையராஜாவின் இசையில் ஜானி படத்தில் வரும் காற்றில் எந்தன் கீதம்...

எம்எஸ்வி இசையில் உன்னை ஒன்று கேட்பேன்...

கே.வி.மகாதேவன் இசையில் சங்கராபரணத்தில் தொரகுனா இதுவந்தி சேவா..

பி.பி.சீனிவாஸ் குரலில் காலங்களில் அவள் வசந்தம்....

இப்படி அந்தப் பாடல்கள் ஏன் என்னைக் கவர்ந்தன என்கிற ரஹ்மானின் விளக்கத்தோடு அந்தப் பேட்டி அமைந்திருந்தது. அதோடு அன்றைய தினம் அவரது இசையில் வெளியாகி இருந்த அலைபாயுதே படத்தின் பாடல் காட்சிகளை பேட்டியில் சேர்ந்துக் கொள்ள மணிரத்னம் அவர்களின் ஒப்புதலையும் வாங்கிக் கொடுத்திருந்தார்.

அதோடு விடவில்லை. அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான இரவு என்னை நேரில் வரவழைத்து ‘பேட்டி மிகச் சிறப்பாக வந்திருந்தது. தேங்க்ஸ்’’ என்றார். நான்தான் உங்களுக்குச் சொல்லவேண்டும் என்று அவருக்கு நான் நன்றி சொல்லிவந்த அந்த நடுநிசி இரவையும் என்னால் மறக்கமுடியாது..

இன்றைக்கு உலகில் இருக்கும் மீடியாக்கள் அனைத்தின் பார்வையும் இரண்டு ஆஸ்கார் பரிசுகளை வென்று வந்திருக்கும் ரஹ்மானின் மீது படிந்திருக்கிறது. இந்தப் பெருமைமிகு வேளையில் அவரை முதன் முதலில் பேட்டி கண்டவன் என்கிற பெருமை, மனசுக்குள் ஒரு நிறைவைத் தருவதோடு அவரைப் பற்றிய தகவல்களை ஆயிரக்கணக்கான அவரது ரசிகர்களோடும் எனது நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் அமைந்ததில் சந்தோஷம் கொள்வதென்னவோ நிஜம்!
-------

இதே பதிவை நண்பர் ஒருவர் வீடியோ காட்சிகளுடன் தன் வலைப்பக்கத்தில் மறுபதிவை அழகாக்கி இருக்கிறார். ஒரு விசிட் அடித்துப் பாருங்களேன்: http://balhanuman.wordpress.com/2010/06/29/%E0%AE%8F-

36 comments:

Thamiz Priyan said...

எங்களுக்கும் அதை அறியத் தந்தமைக்கு நன்றி!

பிச்சைப்பாத்திரம் said...

அன்புள்ள கல்யாண்குமார்,

நெகிழ்ச்சியான பதிவு. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. ரகுமானை முதலில் பேட்டி எடுத்தவர் மற்றும் அவருடைய திரையிசைப் பாடல் வெளிவரும் முன்னரே கேட்டவர் என்கிற வகையில் நீங்கள் அதிர்ஷ்டக்காரர்தான்.

Saravana said...

ஒரு முறை மும்பையில் அவரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பத்திரிக்கையாளர்கள் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் கேள்விகளை துளைக்க நான் அப்பராணியாய் சார் நான் உங்களை கொஞ்சம் பேட்டி எடுக்கனும் என்று சொல்ல அவர் அந்த ஆங்கிலோ ஹிந்தி கூட்டத்தில் தமிழ் கேட்டதும் அவரது உதவியாளர் நம்பரை என்னிடம் தந்து போன் பேசு ங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். அப்போது நான் ஒரு பத்திர்க்கையின் கீழ் பணிபுரிந்த காரணத்தினாலும் அந்த பத்திரிக்கைக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்திகள் கொடுக்கவேண்டி இருந்தாலும் என்னால் அவரது பேட்டியை எடுக்க முடியாமல் போய்விட்டது.

அவர் சென்ற உடன் அனைவரும் என்னை சூழ்ந்துகொண்டு என்னிடம் அவரது எண்ணை கேட்டனர்.
சமாளித்துகொண்டு எஸ்கேப் ஆனேன்

சரவணகுமரன் said...

அனுபவ பகிர்வுக்கு நன்றி... அருமை...

சாந்தி நேசக்கரம் said...

தற்பெருமை இல்லாமல் எல்லாரையும் மதிக்கும் பண்புடையவர் என்பதை தன் இளைய வயதிலேயே நீரூபித்த இசைப்புயல் இன்னும் சாதிக்க வேண்டும்.
சுசீலா ஜானகி என பழக்கப்பட்ட ரசிகர்களுக்குப் புதுப்புதுப் பாடகர்களைத் தந்த பெருமை இசைப்புயலையே சாரும்.

Anonymous said...

Kalyan, you are a lucky man..
[sorry, writting from work]

goma said...

பலநாட்கள் காத்திருக்க வைத்தாலும் காத்திருந்தது வீண்போகாத வண்ணம் அமைந்திருந்தது உங்கள் “ஏ.ஆர்.ரஹ்மானும் நானும் ‘பதிவு.
அவரது அடக்கமே அவை புகழ் உச்சிக்குக் கொண்டு சேர்ந்திருக்கிறது என்பதை நீங்களும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

நட்புடன் ஜமால் said...

பகிர்ந்தமைக்கு நன்றி.

ஜோ/Joe said...

அருமை

ஷைலஜா said...

கல்யாண்
ரொம்ப சுவாரஸ்ய்மா இருக்கே இந்த செய்தி! புகழ்வாய்ந்த உங்களை எங்களுக்குத் தெரிஞ்சிருப்பதில் நாங்களும் பெருமைப்படறோம்!

ஷைலஜா

M.Rishan Shareef said...

ஏ.ஆர்.ரஹ்மானின் தன்னடக்கமும், நற்குணமும்தான் அவரை இந்தளவுக்கு உயர்த்தியிருக்கிறது.

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே !

ராஜா சந்திரசேகர் said...

கல்யாண் குமார்-
எனக்குள்ளும் நினைவலைகள்.எனக்கு காதி கிராப்ட் விளம்பரத்திற்கு இசை அமைத்து தந்தது,ஏசியன் பெயின்ட்ஸ்,கோரமண்டல் சிமெண்ட்(ராஜீவ் மேனன் இயக்கியவை)
இன்னும் சில விளம்பரங்களுக்கு நான் பாடல் எழுதியது,என் திருமணத்திற்கு வந்திருந்து வாழ்த்தியது என் ரகுமானைப் பற்றி நீள்கின்றன ஞாபகங்கள்.ரகுமான் இசை மட்டுமல்ல அவரும் அற்புதமானவர்தான்.

Anbu said...

நன்றி இருக்குது அண்ணா!!
நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலிதான்!

geevanathy said...

///‘’தம்பி... உங்க பத்திரிக்கைல தம்பியோட போட்டோ எப்ப வருது தம்பி? ‘’

அந்தத் தாயின் குரலில் இருந்த ஆர்வத்தை என்னால் உணர முடிந்தது.////

நெகிழ்ச்சியான பதிவு. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

///இந்தப் பெருமைமிகு வேளையில் அவரை முதன் முதலில் பேட்டி கண்டவன் என்கிற பெருமை, ///

உங்கள் நட்பு எங்களுக்கும் பெருமை....

ISR Selvakumar said...

ஏ.ஆர். இரகுமானைப் போலவே அடக்கமான, எளிமையான ஆனால் விஷயமுள்ள பதிவு.

நானும் இசைப்புயலுக்காக ஒரே ஒரு புராஜக்டில் வேலை செய்திருக்கிறேன். அதைப் பற்றி எழுதுவதை தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறேன். இனி எழுதுவேன்.

ஷாஜி said...

எங்களுக்கும் அதை அறியத் தந்தமைக்கு நன்றி!

ரகுமானை முதலில் பேட்டி எடுத்தவர் மற்றும் அவருடைய திரையிசைப் பாடல் வெளிவரும் முன்னரே கேட்டவர் என்கிற வகையில் நீங்கள் அதிர்ஷ்டக்காரர்தான்.

ரவி said...

.....ஏ.ஆர். இரகுமானைப் போலவே அடக்கமான, எளிமையான ஆனால் விஷயமுள்ள பதிவு.....

repeeettaay !!!!!

எட்வின் said...

பகிர்வுக்கு நன்றி.
நிச்சயமாகவே நீங்கள் பாக்கியசாலி தான்... ரஹ்மான் சாரின் பாடலை இசை உலகம் கேட்கும் முன் கேட்டிருக்கிறீர்களே.

//’தம்பி... உங்க பத்திரிக்கைல தம்பியோட போட்டோ எப்ப வருது தம்பி? ‘’//

ஒரு அன்னை தனது பிள்ளை அடைகிற உயர்நிலைகளை காண்பதை விட சந்தோஷம் வேறு என்ன இருக்க வேண்டும் இந்த உலகத்தில்.

ss said...

Excellent blog, I wish you for identifying and bringing our Mr.Rahman's first interview and Mr.Rahman for his simple approach for everything.

SurveySan said...

interesting read.

Kavinaya said...

அருமையான பதிவு. பகிர்தலுக்கு மிக்க நன்றி.

கானா பிரபா said...

தாமதமாகப் படித்த பேட்டி,உண்மையிலேயே உங்கள் உணர்வில் இருந்து வாசித்தேன். அருமை

Anonymous said...

மிக நெகிழ்வான பதிவு
மிக இயல்பாக உங்களை முன்னிறுத்தி விசயங்களைச் சொல்லாமல் ரஹ்மானை முன்னிறுத்தி பதிவை எழுதியதில் உங்கள் எழுத்தின் சாமர்த்தியமும் திறமையும் சிறப்பாக வெளிப்படுகிறது தாமதமாக வாசிக்க நேர்ந்தாலும் தவற் விடவில்லை என்பதில் மகிழ்ச்சி

RJ Dyena said...

வாவ் .... மிக்க மகிழ்ச்சி !..

நீங்கள் உண்மையில் ஒரு பாக்கியசாலி !

வாழ்த்துக்கள் !

ப்ரியமுடன்
டயானா

ஈழக்கதிரவன் said...

வாசித்து மகிழ்ந்தேன்.
அழகான சந்திப்பு
அமைதியான இசையமைப்பாளர்.
பாசமிகு குடும்பம்.
பண்பான உங்கள் பகிர்வு பாராட்டுக்கள்.

நேசமுடன்...
சு.பா.ஈஸ்வரதாசன்.

Unknown said...

முதல் முறையாக உங்கள் பதிவை படிக்கிறேன்.நல்ல பதிவு.அவர் இசையைப் போல ரஹ்மானும் ஒரு ரசிக்கத் தக்க மனிதர்.

Bergin said...

Thanks for sharing. It'd be great if i can get a copy of the edition with his first interview.

Lakshmichandrakanth said...

நீங்கள் A.R. ரகுமானை முதலில் பேட்டி எடுத்தவர் மற்றும் ரசிகர் - வாழ்த்துக்கள் !!!

Sivakumar said...

உங்கள் சுட்டியை என் இந்த (http://mithra11.blogspot.com/2008/04/blog-post_28.html) சுட்டில் போட்டு இன்று மறுபடியும் சமயம் கிடைத்து உங்க்ள் பதிவை படித்துக் கொண்டிருக்கிறேன். ஏஆர்ரஹ்மானுடன் உங்கள் அனுபவம் பெரிய அதிர்ஷ்டம் தான். வாழ்த்துக்கள்.

Unknown said...

<<<
அவரை முதன் முதலில் பேட்டி கண்டவன் என்கிற பெருமை, மனசுக்குள் ஒரு நிறைவைத் தருவதோடு அவரைப் பற்றிய தகவல்களை ஆயிரக்கணக்கான அவரது ரசிகர்களோடும்
>>>

முதலில் பேட்டி எடுத்தது நீங்கதானா, மிகவும் சந்தோசம்.
வாழ்த்துக்கள். :)

®theep said...

ஒவ்வொரு வரியும் மனதை விட்டு மறையாமல் இருக்க வேண்டுமே என்ற ஆதங்கம் இந்த பதிவை படிக்கும் போது இருந்தது. மிக்க நன்றி.

manjoorraja said...

மிகவும் தாமதமாக படித்தேன். இருந்தாலும் நல்லதொரு பதிவை படித்த திருப்தி. ரகுமானுடனான உங்களின் முதல் பேட்டியும் சந்திப்பும் நெகிழவைக்கிறது.

நன்றி. வாழ்த்துகள்.

இனியாள் said...

நீங்கள் முதல் முதலில் ரஹ்மானை பேட்டி கண்ட போது அவர் ஆஸ்கார் வாங்குவார் என்று அறிந்திருக்க மாட்டீர்கள் இன்று அந்த நாட்களை திரும்பி பார்ப்பது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். நல்ல பகிர்வு.

விக்னேஷ்வரி said...

Wow, Great Sir.

புருனோ Bruno said...

//சன் தொலைக்காட்சியில் 2004 ஏப்ரல் 14ம் தேதி//
8 வருடம்
அலைபாயுதே
கண்டுகொண்டேன்

என்று சேர்த்து பார்க்கும் போது இது 2000 ஏப்ரல் 14 என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்

அன்புடன்
புருனோ

kavisathish said...

நெகிழ்ச்சியாக இருந்தது உங்களின் தொகுப்பு