Thursday, August 16, 2012

மரங்களே என் மகன்கள்....

சத்தியமங்கலம் என்றதும் உங்களுக்குச் சட்டென நினைவுக்கு வருவது சந்தன மரக் கடத்தல் புகழ் வீரப்பனாகத்தான் இருக்கும். இனிமேல் அந்த பிம்பத்தைத் தயவுசெய்து அழித்துவிடுங்கள். இனி சத்தியமங்கலம் என்றதும் யாருக்கும் நினைவுக்கு வரப்போவது, இந்த அய்யாசாமியாகத்தான் இருக்கும். உலகம் முழுக்க அந்த ஊருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தைத் துடைக்கிற காரியமொன்றை, இந்த மனுஷர் சத்தமில்லாமல் செய்திருக்கிறார் என்பதுதான், ‘மரங்களின் மகாத்மா’ விருதைப் பெற்றிருக்கும் இந்த அய்யாசாமியின் சாதனை!

சத்தியமங்கலத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வேட்டுவன்புதூர் கிராமம். மொத்தம் 250 வீடுகள். அதன் மக்கள் தொகையோ ஆயிரம் மட்டுமே. ஆனால், அதில் ‘ஆயிரத்தில் ஒருவரான’ அய்யாசாமிக்கு வயது 76. ஆனாலும் மனதளவில் இளைஞராகவே இருக்கிறார்.

அப்படி என்ன இவர் பெரிதாகச் சாதித்து விட்டார்?

அவர் சாதனையைப் பார்ப்பதற்கு முன்னால் அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பைப் பார்த்து விடுவோமா?

தன் ஐம்பத்தோரு வயது வரையிலும் அய்யாசாமிக்கு, ‘பள்ளிக்கூடம்’ என்கிற ஒற்றை வார்த்தையைக்கூட எழுதவோ படிக்கவோ தெரியாது. பார்த்து வந்த தொழில் ஆடுமேய்ப்பதுதான். ஒருகாலத்தில் சொந்தமாக நாற்பது ஆடுகள் அவரிடம் இருந்தன. பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த அவரது மகளின் திருமணச் செலவுகளுக்காக அவை அனைத்தையுமே விற்க வேண்டிய சூழ்நிலை. இப்போது அய்யாசாமி ஒரு விவசாயக்கூலி. பகலில் சூரியனும் இரவில் மண்ணெண்ணை விளக்கும் மட்டுமே, வெளிச்சம் தரும் ஒரே ஒரு சின்னக் குடிசை வீடுதான் இப்போதைக்கு மிச்சம். மிகச் சமீபத்தில்தான், மழைத்தொல்லை காரணமாக, சுமார் 100 ஓடுகளைக் கொண்ட ஓட்டுவீடாக அது உருமாறியிருக்கிறது. கூடவே அவரது துணைவியான 65 வயது கருப்பாத்தா.
பத்துவரிப் பாராவில் முடிந்து போகிறது அய்யாசாமியின் பயோடேட்டா. ஆனால் அவரது சக்திமிக்க சாதனை, நாளைய சரித்திரத்தில் இடம்பெறப் போவது உறுதி. அதற்கு முன்னே, அவரது ஃப்ளாஷ்பேக் சம்பவம் ஒன்றை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்ப்போமா?
அது 1984ம் வருடம்.

அப்போது அய்யாசாமிக்கு ஐம்பத்தோரு வயது. படிக்கத் தெரியாது என்றாலும், டீக்கடைக்குப் போய் அன்றைய நாளிதழை அடுத்தவர்களைவிட்டு வாசிக்க வைத்து, நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்திருக்கிறார். ‘ஆடுமேய்க்கிற ஆள்தானே’ என்று அந்தப் ‘பெருசை’ யாரும் அலட்சியம் செய்யாமல், அந்த ஊர் இளைஞர்கள் அவருக்குச் செய்திகளை வாசித்துக் காட்டியது மட்டுமில்லாமல், மெல்ல மெல்ல அவருக்குப் படிக்கவும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நாளடைவில், பேப்பரில் வரும் செய்திகளை எழுத்துக் கூட்டிப் படித்துப் புரிந்து கொள்கிற அளவுக்குத் தேறிவிட்டார்.
இரவு நேரங்களில் பக்கத்து வீட்டு நெசவுத் தொழிலாளியான ரங்கசாமியின் ரேடியோவில், கோவை வானொலி ஒலிபரப்புகிற செய்தி மற்றும் நிகழ்ச்சிகளைக் கேட்பது வாடிக்கை. செய்தி கேட்காமல் தூங்கப் போனதே இல்லை. அப்படியொருநாள் அவர் கேட்ட நிகழ்ச்சிதான், அவர் மனதில் ஒரு உறுதிமொழியை ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறது.

“நமது நாட்டில் நீர்வளம் மிகவும் குறைந்து கொண்டே போகிறது. மழை பொய்த்துப் போக ஆரம்பித்திருக்கிறது. இனிமேல் விவசாயம் என்பதும், பயிர் அறுவடை என்பதும் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. பூமி, நாளுக்கு நாள் சூடாகிக் கொண்டே போவதால், மரங்கள் அதிகமான அளவில் தேவைப்படுகின்றன. அவைகளால்தான் நமக்கு மழை பெய்யும் வாய்ப்பு அதிகம். ஆகவே நாம் அனைவரும் ஒரு இந்தியராக நமது நாட்டை எதிர்காலத்தில் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே ஆளுக்கு ஒரு மரமாவது வளர்ப்பதை நம் கடமைகளில் ஒன்று என்பதை உறுதிமொழியாக ஏற்றுக் கொள்வோம்” என்பதே அந்த நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்ட உரை. (சுமார் 25 வருடங்களுக்குமுன், அந்த வானொலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவரின் பெயர் முருகானந்தம் என்பதைக்கூட அய்யாசாமி இந்த வயதிலும் நினைவுகூர்கிறார்!)

அந்த நிமிடமே தன் மனதிற்குள் மரம் வளர்க்கும் உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட அய்யாசாமி, அடுத்த நாள் காலையில் செய்த முதல் விஷயம், கிராமத்தைச் சுற்றியிருக்கும் வேப்பமரங்களின் கீழ் சிதறிக் கிடக்கும் அதன் விதைகளையும் சேகரித்து, ஊருக்கு ஒதுக்குப்புறமான - இவர் ஆடுமேய்க்கும் இடமான - காட்டோடையில் ஆரம்பித்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் மாதேஸ்வரன் மலை அடிவாரம் வரை, இருமருங்கிலும் தக்க இடைவெளிவிட்டு விதைத்திருக்கிறார். நாளடைவில், அந்தப் புறம்போக்கு நிலத்தில் இவர் விதைத்தவைகளில் செடியாக வளர்ந்து நின்றவைகளின் எண்ணிக்கை மட்டும் மூவாயிரத்தைத் தொட்டிருக்கிறது!

அவைகளுக்குப் பொறுமையாக முள்வேலியிட்டு ஆடு, மாடுகள் மேய்ந்து விடாதபடி மிகக் கவனமாகப் பாதுகாத்து வளர்த்திருக்கிறார் அய்யாசாமி. தான் வளர்க்கும் ஆடுகளின் எச்சங்களையே சேகரித்து, அந்தச் செடிகளுக்கு உரமாகவும் இட்டு வந்திருக்கிறார். கண்முன்னே அவைகள் மளமளவென்று வளர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த அய்யாசாமிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. சில வருடங்களில் அந்தச் செடிகள் மரங்களாக மாறியிருக்கின்றன. தனக்கு ஒரு ஆண்குழந்தை இல்லையே என்கிற வருத்தம் நீண்ட நாள் அய்யாசாமியின் மனதை உறுத்திக் கொண்டேயிருந்திருக்கிறது. ஒருகட்டத்தில் அதைப் பற்றி கவலை கொள்ளாமல், தான் விதையிட்டு உரமிட்டு வளர்த்த மரங்களையே தனது மகன்களாகப் பாவித்து, மேலும் கவனமாக அவைகளைப் பராமரித்திருக்கிறார்.
இன்று அத்தனை மரங்களும் ஓங்கி உயர்ந்து வளர்ந்து, அந்த வேட்டுவன் புதூரையே ஒரு பசுஞ்சோலையாக மாற்றி அமைத்திருக்கும் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கின்றன அந்த மரங்கள்.

“இந்த உலகத்துல ஒரு அப்பனுக்கு ஆம்பளப் புள்ளைங்க ஒண்ணுலேர்ந்து பத்துப் பேரு இருப்பாங்க, இல்லீங்களா தம்பீ? ஆனா மூவாயிரம் ஆம்புளப் புள்ளைங்க எனக்குச் சொந்த மகன்களா, எங்கண்ணு முன்னாடி கம்பீரமா வளர்ந்து நிக்கிறானுங்க.... இதவிட எனக்கு வேற சொத்து சொகம் எதுவும் வேணாஞ்சாமி..... இது ஒண்ணே எனக்குப் போதுங்கண்ணு... “ என்று கோவைத் தமிழில் பேசி நம்மை நெகிழ வைக்கிறார் அய்யாசாமி!
உண்மைதான். இந்த அப்பாவி அய்யாசாமியின் இன்றைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அவர் குடியிருக்கும் ஓட்டு வீடு; ஈரோடு ஜூனியர் சேம்பியன் என்ற அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றில் எம்.எஸ்.உதயமூர்த்தியால் வழங்கப்பட்ட ‘மரங்களின் மகாத்மா’ என்கிற பட்டத்தோடு கூடிய ஒரு ஷீல்டு; ஈரோடு சித்தார்த்தா மெட்ரிக் பள்ளியிலிருந்து கொடுத்த கண்ணாடி பிரேமிட்ட ஒரு வாழ்த்து மடல். இவரது செய்தி ஆர்வத்திற்குப் பரிசாக, குழந்தைசாமி என்கிற உள்ளூர் நண்பரால் வழங்கப்பட்ட ஒரு சிறிய டிரான்சிஸ்டர். கூடவே சில நிகழ்ச்சிகளில் அவருக்குப் போர்த்தப்பட்ட எட்டு சால்வைகள். அந்தச் சால்வைகளைப் பற்றி, அய்யாசாமி மிகவும் விட்டேத்தியாகச் சொல்கிறார்,
“அந்தப் பட்டுத் துணிங்கதான் எனக்கும் எம்பொஞ்சாதிக்கும் குளிர்காலத்தில போத்திக்க ஒபயோகமா இருக்குதுங்க தம்பி...”

காந்தியின் நினைவாக தன் வாழ்நாளில் சட்டையே அணியாத அய்யாசாமியின் ஒரே வருத்தம் என்ன தெரியுமா? இரண்டு வருடங்களுக்கு முன் அவர் வெளியூர் போயிருந்தபோது, சில சமூக விரோதிகள், அவர் மகன்களாக கருதி வளர்த்த சில மரங்களை இரவோடு இரவாக, வேரோடு வெட்டி எடுத்துச் சென்றதுதான். ஊருக்குத் திரும்பிய அவர் துடித்துப் போய் ஈரோடு கலெக்டரிடம் ஓடோடிப் போய் புகார் மனு அளித்திருக்கிறார். ஆனால் அதற்கு எந்தவித நடவடிக்கையும் இதுவரை இல்லையென ஆதங்கப்படும் அய்யாசாமி, அந்த புகார் மனுவிற்கான ரசீதைப் பத்திரமாக வைத்திருந்து நம்மிடமும் ஆதங்கமாகக் காட்டுகிறார். ஆனாலும் தனக்குத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவராக,
“ஆயிரம் சந்தன மரங்களை வெட்டிச் சாய்ச்ச வீரப்பனைதான் இந்தப் பேப்பர்காரங்க மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதுனாங்க, டி.வி. பொட்டிக்காரங்களும் கதை கதையா சொல்லிப் படமா எடுத்துக் காட்டுனாங்க. இதுல நம்ம சொல்றது எப்படிங்க சாமி எடுபடும்?”

ஒரு பசுமைப் புரட்சியையே நிகழ்த்தியிருக்கும் அய்யாசாமியின் இந்த ஆதங்கமிக்கக் கேள்வியில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.. அவரது மனைவியிடமும் பக்கத்து வீட்டுக்காரரிடமும் இவர் தன் கடைசி ஆசையாக, ‘நான் இறந்துவிட்டால் சுடுகாட்டில் புதைத்துவிடக் கூடாது. என் மூவாயிரம் மகன்களுக்கு நடுவே ஒரு இடத்தில் குழிதோண்டித்தான் புதைக்க வேண்டும்’ என்பதுதானாம்.

சமீபகாலமாக, அய்யாசாமியை வறுமை வலுவிழந்தவராக ஆக்கிக் கொண்டிருக்கிறது. மாதாமாதம் வந்து கொண்டிருந்த முதியோர் உதவித்தொகையான நானூறு ரூபாய்கூட, கடந்த ஐந்து மாதங்களாக வரவில்லையாம். அதற்கு மணியகாரரிடமும், தாசில்தாரிடமும் தினசரி நடந்து கொண்டிருப்பதாக வேதனையோடு சொல்லும் அய்யாசாமி, அந்தக் கஷ்ட ஜீவனத்திலும் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னர், கோவை வானொலி மூலம், தான் எடுத்துக் கொண்ட உறுதிமொழி வாசகங்களை இன்னமும் நினைவில் வைத்துக் கொண்டு, நம் அனைவரிடமும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார்:

“எதோ என்னால முடிஞ்சது, எப்படியோ கஷ்டப்பட்டு மூவாயிரம் மரங்கள தனி ஆளா வளர்த்துட்டேன். ஆனா நீங்க எல்லாரும், இந்த நாட்டுல எதாவது ஒரு இடத்துலயாவது ஒரே ஒரு மரம் வளர்ப்போம்னு உறுதிமொழி எடுத்துக்குவீங்களா?”

அய்யாசாமியின் இந்த ‘ஒரே ஒரு’ கேள்விக்கு நம்மில் எத்தனை பேரிடம் ‘ஆம்’ என்கிற பதில் இருக்கிறது?



Friday, June 22, 2012

இந்திய சினிமாவுக்கு வயசு நூறு.

இது குறித்து இந்தியாவில் சினிமாவின் பயணம் குறித்து, ஏழாவது மனிதன் படத்தின் இயக்குனரும் தற்போது பிரசாத் திரைப்படக் கல்லூரியின் முதல்வருமான ஹரிஹரன் அவர்கள் புதிய தலைமுறைக்காக எனக்கு அளித்த பேட்டி இது. அவரது வெளிப்படையான துணிச்சலான பல கருத்துக்களுக்காக இதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.








அரசாங்கத்திற்கு சினிமா மீது காழ்ப்புணர்ச்சி


-கே.ஹரிஹரன்


ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் சினிமா வருவதற்கு முன்னரே கார், விமானம், வானுயர்ந்த கட்டிடங்கள், டிராஃபிக் ஜாம், மின்சார விளக்குகளால் ஜொலிக்கும் நகரங்கள், ஆட்டோமேடிக் எலிவேட்டர்ஸ், ஏன் கொக்கோகோலா கூட அங்கே வந்தாயிற்று. ஆனால் இந்தியாவிற்குள் சினிமா வரும்போது மின்சாரமே கிடையாது. பங்களாக்கள், கார்கள், விமானம் போன்ற அதிநவீன கண்டுபிடிப்புகள் எல்லாவற்றையும் சினிமாதான் முதன்முதலில் நம் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. புதுமை என்கிற விஷயத்தையே சினிமா மூலம்தான் நாம் அறிந்து கொண்டோம். அதன்பிறகுதான் அதில் காட்டப்பட்ட அனைத்தையும் ஒவ்வொன்றாக நேரில் பார்த்தோம்.


இந்தியாவைப் பொருத்தவரை ஸ்கூல், காலேஜ், யுனிவர்சிட்டி போன்றவைகள் சொல்லித்தர முடியாத பல விஷயங்களை அவைகளுக்கு முன்பாகவே சினிமாதான் நமக்குக் கற்றுக் கொடுத்தது. அப்போது இங்கே ஒரு கிராமத்தில் இருப்பவனுக்கு பியானோ, சாக்ஸபோன் போன்ற இசைக்கருவிகளைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் படங்களில் ராஜ்கபூரும், சிவாஜி கணேசனும் அதை அருமையாக வாசிப்பார்கள். இப்படியெல்லாம் வாத்திய கருவிகள் இருக்கின்றன என்பதை அப்போதே சினிமாதான் சொல்லி பிரமிப்பூட்டியது. முதலாளித்துவத்தை இங்கே சினிமாதான் முதன் முதலில் அறிமுகப்படுத்தியது. பலவிதமான பொருட்களின் நுகர்வுமயத்தையும் அதுதான் நமக்கு உணர்த்தியது. உணவு, உடை, பாடல் என்று பல துறைகளிலும் புதுப்புது விஷயங்களை சினிமாதான் இந்தியாவிற்கே காட்சிப்படுத்தியது.


இருபதாம் நூற்றாண்டின் கவிதை என்பது சினிமா பாடல்கள்தானே? வேறு எது இங்கே கவிதை என்று அறியப்பட்டது? பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்படாத கவிதைகளை சினிமாவில் நாம் கேட்டோம். பாடங்களில் புராணங்களை படித்து மனப்பாடம் செய்ய முடியாத பல விஷயங்களை இந்தச் சினிமாதான் மிகச் சுலபமாக நம் மனதில் பதிய வைத்தது. புராணங்களைத் தாண்டி சரித்திரம் மற்றும் சமூகப் படங்களின் தயாரிப்பில் இந்திய சினிமா பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய பல சாதனைகளைப் படைத்திருக்கிறது.
அதே புராணங்களில் இருந்த நல்ல கருத்துகள் எல்லாமே திரும்ப எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் சொல்லப்பட்டன. முருகர், ராமர் போன்ற பாத்திரங்கள் அவர்களின் சமூகப் படங்களிலும் பிரதிபலித்தன. மகாபாரதப் பின்னணி, ரஜினி நடித்த தளபதி வரை நீண்டது. திரும்பத் திரும்ப இந்த மனிதர்களுக்கு நல்லொழுக்கத்தையும் தீயவர்களின் முடிவையும் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன இந்திய சினிமாக்கள். ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு அரசு ஆற்ற வேண்டிய அத்தனை கடமைகளையும் சினிமா ஆற்றி வந்திருக்கிறது. தனியொரு மனிதனுக்கு லட்சியம், கொள்கை எல்லாம் வேண்டும் என்பதை இங்கே சினிமாதான் முதன்முதலாக அறிவுறுத்தியது. அரசியல், பொருளாதாராம், கல்வி என் பல முக்கிய நடப்புகள் குறித்த விமர்சனங்களை சினிமாதான் முதன் முதலாக துணிச்சலாக இங்கே வெளிப்படுத்தியது. வேறு எந்த கலை சார்ந்த துறையினரும் அதில் முழுமையாகப் பங்கெடுக்கவே இல்லை. சமுதாயத்தில் நடக்கும் பல தவறுகளை சினிமாக்கள் சுட்டிக் காட்டின. அது இந்திய சினிமாவிற்கு கிடைத்த வெற்றி.


ஆனால் துரதிருஷ்டவசமாக, இந்த வெற்றிதான் இந்திய அரசாங்கத்திற்கு சினிமா மீது ஒருவித காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியும் விட்டது. சினிமா என்றாலே மத்திய அரசு வெறுப்பதற்கு சினிமா மீதான அவர்களின் தவறான பார்வைதான் காரணம். எல்.வி.பிரசாத், ஏவி மெய்யப்ப செட்டியார், எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டி போன்றவர்கள் எந்தவிதமான படிப்பறிவும் இல்லாமல் சுலபமாக பணம் சம்பாதித்துவிட்டு சினிமாவில் நம்மையே விமர்சிக்கிறார்களே என்று ஆரம்பித்த அர்த்தமில்லாத கோபம், இந்த அரசாங்கத்திற்கு இருந்து கொண்டே இருக்கிறது. அது இன்றுவரை தொடர்கிறது. 1953லேயே ராஜ்ய சபா மெம்பராக இருந்த மிஸஸ் முன்ஸி என்பவர் சினிமாத்துறை ஒரு அபத்தக் குப்பையாக இருக்கிறது; ஆபாசமாக இருக்கிறது; இதைவிட மட்டமான மீடியம் கிடையாது, எனவே அதை உடனே தடை செய்ய வேண்டும் என்று சபையில் குரல் கொடுக்கிறார். அதே வருடத்தில் கேஸ்கர் என்ற ஆல் இண்டியா ரேடியோ தலைவராக இருந்தவர், சினிமா பாடல்களை ரேடியோவில் ஒலிபரப்பாவதை மூன்று வருடங்களுக்கு தடையே செய்திருக்கிறார்.


ஆனாலும் இத்தனை தடைகளையும் தாண்டி, இந்தியா ஒரு சிறந்த ஜனநாயக நாடாக இருப்பதற்கு சினிமா தன் முழு பங்களிப்பையும் செய்து வந்திருக்கிறது. இளைஞர்கள் மூலம் பல எதிர்ப்புகுரல்களை பதிவு செய்ய அது தூண்டுகோலாக இருந்திருக்கிறது. பல அரசியல் தலைவர்களை இந்த சினிமா உருவாக்கிறது


இத்தனை சிறப்புகளைக் கொண்ட இந்திய சினிமாவிற்கு சென்சார் என்கிற விஷயம்தான் மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கிறது. சினிமாவிற்குப் பின்னர் பிரபலமாகி இருக்கின்ற தினசரிகளுக்கு, வார மாத இதழ்களுக்கு, டிவி சேனல்களுக்கு, இண்டர் நெட்டுக்கு இங்கே சென்சார் கிடையாது. ஆனால் சினிமாவிற்கு மட்டும் சென்சார் என்பது ஒரு சாபக்கேடுதான். சினிமாவில் சொல்லப்படாத, சொல்ல முடியாத பல விஷயங்களை இன்றைக்கு மற்ற மீடியாக்களில் இன்று நாம் பார்க்கத்தான் செய்கிறோம். பிரிட்டிஷ்காரன் ஆண்டபோது சென்சார் இருந்ததில் நியாயம் இருக்கிறது. இந்த சுதந்திர நாட்டில் சினிமாவிற்கு மட்டும் எதற்கு சென்சார்?


அதே போல இன்னொரு கருத்தையும் இங்கே நான் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். சமீபத்தில் நான் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே பலதரப்பட்ட டெக்னாலஜி படிப்புகளும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. 1953ல் ஆரம்பிக்கப்பட்ட அங்கே, சினிமா பற்றிய படிப்பு மட்டும் இன்னும் துவங்கப்படாமலே இருக்கிறது. சிறப்பான ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங் போன்றவற்றை அங்கே சொல்லித் தரலாமே? சினிமா டெக்னிக்கை மட்டும் ஏன் அங்கே ஒதுக்க வேண்டும்?.
இன்னும் சொல்லப் போனால் இந்த சினிமா கல்வியை இங்கே பள்ளிகளிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். அங்கே செய்யுள், விளையாட்டு, ஓவியம் கற்றுத் தரப்படுகிறது. ஏன் சினிமா மொழியை கற்றுத்தர கூடாது? குளோசப், லாங் ஷாட், ஒரு கதையை எப்படி சொல்ல வேண்டும் என்கிற ஸ்டோரி போர்டு வழிமுறைகளை அங்கிருந்தே ஆரம்பிக்கலாமே? மாணவர்களிடத்தில் இதற்கு உற்சாகமான வரவேற்பு நிச்சயம் இருக்கும். காரணம் அவர்களின் பள்ளி வாழ்க்கையின் பாதி நாட்கள் சினிமாவில்தான் கழிகிறது. அதைப் பற்றிய தொழில் நுட்பத்தை அவன் ஏன் கற்றுக் கொள்ளக்கூடாது?


ஒரு அரசியல்வாதி சினிமாவில் ஹீரோக்கள் சிகரெட் பிடிப்பதால்தான் இளைஞர்கள் சிகரெட் பிடிக்கிறார்கள் என்று முட்டாள்தனமாக அறிவித்தார். உண்மையாலுமே இளைஞர்கள் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் சிகரெட்டை தடை செய்யுங்கள். அந்த அதிகாரம் இல்லாதபோது சினிமாவைக் காரணம் காட்டி தப்பித்துக் கொள்ளாதீர்கள்.
இத்தனை குறைகளை வைத்துக் கொண்டு இந்திய சினிமா நூற்றாண்டைக் கொண்டாடுவதால் யாருக்கு என்ன லாபம்? சினிமா கலைஞர்களின் புகழ்பாடி அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துதான் இந்த நூற்றாண்டின் நோக்கமா? மக்கள் இந்த சினிமாவை ஏற்கனவே கொண்டாடிக் கொண்டாடி மகிழ்ந்து போனார்கள். அதை எங்கேயே எடுத்துச் சென்று விட்டார்கள். எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு கிடைக்காத வரவேற்பா? அவர்களுக்குக் கிடைக்காத பாராட்டா? கேரளாவில் பிரேம் நஸீர் 38 வருடங்களில் 610 படங்களில் நடித்திருக்கிறார். வருடத்திற்குச் சராசரியாக 12 படங்கள். அதாவது மாதம் ஒரு படம் என்கிற விகிதத்தில் அவரது படம் வந்து கொண்டே இருந்திருக்கிறது. பிரேம் நஸீர் என்பவரது ஒரே முகத்தை 38 வருடங்களாக மூன்று தலைமுறையினர் சலிக்காமல் பார்த்திருக்கிறார்கள் என்றால் அவரது திறமை என்ன சொல்வது? இப்படி வடக்கே பலரும் இந்திய சினிமாவிற்கு எத்தனையோ சாதனைகளைச் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
இதுமாதிரி மிகச் சிறந்த எத்தனையோ கலைஞர்களை இந்த அரசாங்கம் கண்டு கொள்ளாமல் கெளரவிக்காமல் இருந்திருக்கிறது. ஆனால் கிரிக்கெட் என்ற பெயரில் சூதாட்டத்தில் பங்குபெறும், தனியார் பொருட்களை விற்பனை செய்ய, தன்னைத்தானே அந்த நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் விற்றுக் கொள்ளும், சச்சின் டெண்டுல்கருக்கு ராஜ்ய சபா எம்.பி. சீட் கொடுத்து பாரத ரத்னா விருதையும் கொடுக்கக் தயாராக இருக்கிறது, இந்த அரசாங்கம். அந்த வகையில் சினிமா கலைஞர்கள் என்ற முறையில் ரஜினியையும் கமலையும் நான் மனதார பாராட்டுகிறேன். எந்தவொரு பொருட்களுக்கும் இதுவரைக்கும் விளம்பரம் செய்ய அவர்கள் ஒப்புக் கொள்ளவே இல்லை. ‘நாங்கள் இந்த இடத்தில் இருப்பதற்கு காரணம் ஆடியன்ஸ் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை; பொருட்களுக்காக அதனை வீணடிக்க விரும்பவில்லை’ என்கிற அவர்களின் கொள்கையைப் பாராட்டியே தீர வேண்டும்.


இந்திய சினிமாவிற்கு இருக்கும் நடைமுறை சிக்கல்களை தீர்ப்பதற்கான ஒரு நேரமாகவே இந்த நூற்றாண்டை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான குரலை இங்கே நான் பதிவு செய்து விட்டேன். அது நிச்சயம் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கையும் இந்திய சினிமா எனக்குக் கொடுத்திருக்கிறது.
. சந்திப்பு: கல்யாண் குமார்






Saturday, June 16, 2012

காந்திக்கு மரியாதை

காந்தி – இந்தப் பெயரைக் கேட்டதும் பலருக்கும் தோன்றுவதெல்லாம் அவர் நமது தேசத்தந்தை; நம் நாட்டின் சுதந்திரத்திற்காக அஹிம்சை வழியில் போராடியவர்; அக்டோபர் இரண்டு அவர் பிறந்த நாள். அன்றைக்கு அனைவருக்கும் விடுமுறை கிடைக்கும் என்பது மட்டும்தான். ஆனால் அந்த மகானைப் பற்றிய பலரும் அறியாத செய்திகளோடு 120 நாடுகளுக்கும் மேலாக அவருக்கு கெளரவம் செய்யுமுகமாக வெளியிடப்பட்ட தபால் தலைகளின் சேகரிப்பையும் தனியொரு மனிதனாகச் செய்திருக்கும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ராஜேஷ் குறித்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் புதிய தலைமுறை இதழில்நான் எழுதியிருந்தேன். மத்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், இன்றும் அதே காந்தி பற்றிய சிந்தனைகளோடு, பள்ளிக் குழந்தைகளிடையே காந்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ராஜேஷ் தன் நண்பர்களுடன் இணைந்து ’காந்தி வேர்ல்டு பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளையைத் துவக்கி காந்தி குறித்த கண்காட்சிகளை தமிழகம் முழுக்க நடத்த திட்டமிட்டிருக்கிறார். சென்ற வாரம் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காந்தி குறித்தான கண்காட்சியைத் துவக்கி வைத்ததோடு, ராஜேஷையும் அவரது அறக்கட்டளையையும் மனம்விட்டு வாழ்த்திப் பேசியிருக்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ.அப்துல்கலாம். பள்ளிக்குழந்தைகளுகாக துவக்கப்பட்ட இந்த காந்தி குறித்தான கண்காட்சியைப் பற்றி கேள்விப்பட்டு குமரி அனந்தன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோர் திடீர் விசிட் அடித்து கண்காட்சியை பார்வையிட்டு வாழ்த்திச் சென்றிருக்கிறார்கள். அதன் நிறைவு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எனது அன்பான வேண்டுகோளை ஏற்று, அதில் பங்கேற்றுச் சிறப்பித்த நடிகர், சமூக சிந்தனையாளர் நண்பர் விவேக் அவர்களுக்கு என் இனிய நன்றிகளை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ராஜேஷ் அவர்களின் இந்த அறக்கட்டளை மென்மேலும் வளர்ந்து காந்தியின் புகழை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு உலகம் முழுக்க கொண்டு செல்லும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவரோடு இணைந்து செயலாற்றும் அந்த அறக்கட்டளையின் டிரஸ்ட்டி திரு. ஜி.ஷ்யாம் சுந்தர் அவர்களுக்கும் ராஜேஷின் துணைவியாரும் அதன் மானேஜிங் டிரஸ்ட்டியுமான திருமதி. ஆர்.விஜயலஷ்மி மற்றும் ராஜேஷிற்கு உதவிபுரியும் நண்பர்கள், தன்னார்வ தொண்டர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் சொல்லிக் கொள்கிறேன். நீங்களும் வாழ்த்தலாமே? ராஜேஷ் தொடர்பு எண்: 9444019030 / www.gandhiworld.in

Wednesday, February 29, 2012

ராஜா ராஜாதான்




ராஜா சார் என்று தமிழ் சினிமா உலகில் மிக மரியாதையோடு அழைக்கப்படும் இளையராஜாவின் ஒரு சில படங்களில் ஒரு உதவி இயக்குனராக எண்பதுகளில் நான் பணிபுரிந்த நாட்கள் மிக இனிமையானவை. அவரது இசைக் கோர்ப்பில் ஒரு பாடல் முழுமை பெறுவதை மிக அருகிலிருந்து அடிக்கடி பார்த்தும் கேட்டும் ரசித்தவன்.

பிரசாத் ஸ்டூடியோவில் காலை சரியாக ஆறரை மணிக்கெல்லாம் தினசரி ராஜா சாரின் வெள்ளை நிற அம்பாசிடர் கார் உள்ளே நுழையும் தும்பைப் பூவாய் அதிலிருந்து இறங்கும் அவர் தன் பிரத்யேக அறைக்குள் போய் அமர்ந்து கொள்வார். அங்கே ப்ரேம் செய்யப்பட்ட, லேமினேட் செய்யப்ப்ட்ட அவருக்குப் பிடித்தமான சில ஆன்மீகப் பெரியவர்கள் படத்தின் அருகில் ஏற்றப்பட்டிருக்கும் ஊதுபத்தி வாசனையில் அந்த அறையே ஒரு ரம்மியமான சூழ்நிலையை உணர்த்தும். அன்றைக்கு ஒரு படத்தின் ரீ ரிக்கார்டிங்கா அல்லது பாடல் பதிவா, அது யார் படம் என்ற விபரங்களை அவரது மானேஜர் கல்யாணம் மிகப் பணிவோடு அவர் அருகே வந்து நின்றபடியே சொல்வார். பாடல் என்றால் அதை யார் பாட வேண்டும் என்று கேட்டுக் கொள்வார் கல்யாணம். பாலுவைக் கூப்புடு, சுசிலாம்மாக்கு சொல்லிடு என்று ஒன்றிரண்டு வார்த்தைகளே ராஜா சாரிடமிருந்து பதிலாக வரும்.

ஏற்கனவே வந்து அந்த அறையில் தயாராக இருக்கும் அவரது இசை உதவியாளர் சுந்தர்ராஜன் அண்ணன், அன்றைய பாடல் பதிவுக்குரிய ட்யூன் அடங்கிய கேஸட்டை ஒரு குட்டி டேப் ரிக்கார்டரில் போட்டுக் காட்டுவார். அது அனேகமாக ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ராஜா சாரால் கம்போஸிங் செய்த ட்யூனாக இருக்கும். அவரது குரலில் தத்தகாரத்தில் ஒலிக்கும் அதை ஒருமுறைதான் ராஜா சார் கேட்பார். (பாடல் கம்போஸிங் நாட்கள் பற்றி பிறகு விவரிக்கிறேன்.) பின்னர் வெளியே காத்திருக்கும் அந்தப் படத்தின் இயக்குனரை வரச் சொல்லி, அந்தப் பாடலுக்கான சூழ்நிலையை சுருக்கமாக மறுபடி ஒருமுறை கேட்டுக் கொள்வார்.

பின்னர் சற்று நேரத்தில் அங்கிருந்து கிளம்பி அருகிலேயே இருக்கும் ரிக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு வருவார். ஏற்கனவே அங்கே தயாராக இருக்கும் வாத்திய கலைஞர்கள் அதுவரை பள்ளிக்கூட பிள்ளைகளைப் போல அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். ராஜா சார் உள்ளே நுழைந்ததும் அந்த அறையே சட்டென நிசப்தமாகும். அன்றைய தினம் ரிக்கார்டிங் செய்யப்பட வேண்டிய பாடலுக்கான பி.ஜி.எம். நோட்ஸை அங்கே உட்கார்ந்துதான் ஒரு அரைமணி நேரம் மட்டுமே எழுதுவார் ராஜா சார். சம்பந்தப்பட்ட வாத்திய இசைக்காரர்கள் அதைப் பார்த்து தங்களுக்கான நோட்ஸை மட்டும் எழுதிக் கொள்வார்கள். கீ போர்டு, பேஸ் கிடார், எலக்ட்டிரிக் கிடார், வயலின், தபேலா, செல்லோ, சாக்ஸஃபோன், வீணை, டிரம்ஸ், புல்லாங்குழல் இப்படி அந்தப் பாடலுக்கு எது தேவையோ அவர்கள் மட்டும் வந்திருப்பார்கள்.

வயலின் கலைஞர்கள் மட்டுமே சுமார் ஐம்பது பேர் இருப்பார்கள். அந்த ஐம்பது பேரில் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணும் இருப்பார். இப்போது காணக் கிடைக்காத லூனா என்ற இரண்டு சக்கர வாகனத்தில் ஒரு சிறுமியை நிற்க வைத்து அழைத்து வருவதைப் போல அவர் தன் வயலின் பெட்டியுடன் பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் நுழைவதை பல நாட்கள் பார்த்திருக்கிறேன். யாரிடமும் எதுவும் பேச மாட்டார். நோட்ஸை குறித்துக் கொள்வார், வாசிப்பார், ரிக்கார்டிங் முடிந்து முழுப்பாடலையும் கேட்டு ராஜா சார் ஓக்கே சொன்னதும் வயலினை அதன் பெட்டிக்கும் லாவகமாக வைத்துப் பூட்டினால் அடுத்த நிமிஷம் லூனா அதே சிறுமியோடு கிளம்பிப் போகும்.

வயலின் கலைஞர்களோடு சேர்த்து ஒரு பாடலுக்கு எண்பது பேர் வரை என்று அந்தச் சபை இசையால் நிரம்பி வழியும். நோட்ஸ் எடுத்துக் கொள்ள அரைமணி நேரம்தான் கொடுப்பார் ராஜா சார். ரிகர்சல் போலாமா என்று மைக்கில் கேட்பார். வாத்தியங்கள் வாரியாக ரிகர்சல் ஆரம்பிக்கும். முதலில் வயலின். ஐம்பது வயலின் எல்போக்களும் ஒரே மாதிரி உயர்ந்து தாழ்ந்து அன்றைய இசை மழையை ஆரம்பித்து வைக்கும். கண்ணாடி அறைக்குள் ரிக்கார்டிங் என்ஜினியர் அருகே அமர்ந்திருக்கும் ராஜா சார் அதைக் கவனமாகக் கேட்பார். சீட்டிலிருந்து எழுந்து ஒருத்தரை மட்டும் அடையாளம் காட்டி அவரை மட்டும் அந்த நோட்ஸை திரும்ப வாசிக்கச் சொல்லுவார். அவரது வாசிப்பில் எதோ ஒரு குறை இருப்பதை சுட்டிக்காட்டி நோட்ஸை சரியாகப் படித்து திருத்திக் கொள்ளச் சொல்வார். ஐம்பது வயலின்கள் எழுப்பிய இசையில் அந்த ஒரு கலைஞரின் வாசிப்பு மட்டும் தன் நோட்ஸைவிட்டு விலகிச் சென்றிருப்பதை அவர் எப்படி கண்டு பிடித்தார் என்பது வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த எனக்கு மட்டுமல்ல, அந்த வயலின் கலைஞர்களே அசந்து போகும் விஷயம்.

பின்னர் ரிதம் செக்‌ஷன் ரிகர்சல், தபேலா, ஃபேஸ் கிடார் என்று தனித்தனியாக வாசித்து ராஜா சாருக்கு திருப்தி என்றதும் அனைத்து கருவிகளுடனும் மொத்தமாக ஒரு ரிகர்சல் நடக்கும். அது முடிகிற போது நேரம் சரியாக காலை பத்து மணி ஆகியிருக்கும்.

டிபன் பிரேக்.

அரைமணி நேரத்தில் அனைவரும் திரும்பி வந்து ரிக்கார்டிங் போக தயாராக இருப்பார்கள். மறுபடி ஒரு ரிகர்சல். கீ போர்டு வாசிக்கும் ஜிஜி மானுவேலோ, புருசோத்தமனோ ராஜா சாரின் நோட்ஸ் பார்த்து கண்டக்ட் செய்ய அத்தனை வாத்தியங்களும் மூன்று நிமிஷ நேரம் உற்சாக பீறிட இசையை வெளிப்படுத்தி குதூகலிக்கும் காட்சி ஆகா. அடுத்த ஒன்றரை மணியில் மொத்த ரிகர்சலும் ஓக்கே. இனி ரிக்கார்டிங்தான். அது கூட டிராக் மூலம்தான் என்பதால் ஒவ்வொரு செக்‌ஷனாக வாசிக்க வாசிக்க பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருப்பார் என்ஜினியர். அருகிலிருந்து அதில் மாற்றமோ ஏற்றமோ சின்னச் சின்னதாய செய்து கொண்டிருப்பார் ராஜா சார். முழுசாக அந்தப் பாடல் எப்படி வரப்போகிறது என்பது அப்போதுவரை அருகிலிருந்து கேட்பவருக்கு அதுவரை தெரியாது.
அந்தப் பாடலுக்கு யார் பாட வேண்டும் என்று ஏற்கனவே ராஜா சாரால் சொல்லப்பட்டிருந்த பாடகரோ பாடகியோ உள்ள வந்து ராஜா சாருக்கு ஒரு வணக்கம் வைப்பார்கள். அப்போது மணி சரியாக பன்னிரெண்டு இருக்கும். பின்னர் வாய்ஸ் மிக்ஸிங். முதலில் டியூனுக்கான நோட்ஸ்களை பாடகர் எழுதிக் கொள்வார். அந்த இடைவெளியில் ஏறகனவே பாடலாசிரியரால் எழுதப்பட்டு வந்திருக்கும் பாடல் வரிகளை ராசா சாரிடம் கொடுப்பார் அந்தப் படத்தின் இயக்குனர். ட்யூனுக்கு வரிகள் ஒத்துப் போகிறதா என்பதை ஒருமுறை பாடிப்பார்த்துக் கொள்ளும் அவர் அதை பாடகரிடம் அனுப்பி வைக்க ட்யூனோடு அந்தப் பாடல் வரிகளையும் தங்கள் டைரியில் எழுதிக் கொள்வார் பாடகர். எஸ்.பி.பி. இதற்கென தனியாக ஒரு பெரிய டைரியே வைத்திருப்பார். அந்தப் பாடலின் வரிகளை தெலுங்கில் எழுதிக் கொள்ளும் அவர் அந்தப் படத்தின் கம்பெனி, டைட்டில், ரிக்கார்டிங் தேதி, அது தனக்கு எத்தனையாவது பாடல் என்பது உட்பட அனைத்தையும் அதில் குறித்துக் கொள்வார்.
இதெல்லாம் முடிகிற போது சுமார் ஒரு மணி ஆகியிருக்கும். பாடல் வரிகளை மட்டும் ஒருமுறை பாடச் சொல்லி கேட்கும் ராஜா சார் அதில் சில சங்கீத பாஷையில் சில அறிவுரைகளை வழங்குவார். ஒருமுறையோ இரண்டு முறையோதான் அதற்கான ரிகர்சல். உடனே டேக். ஏற்கனவே ரிக்கார்டிங் செய்யப்பட்ட பி.ஜி.எம் டிராக்கோடு பாடகரின் வாய்ஸையும் சேர்த்து ஒருமித்த ஒரு பாடலாக ஒலிக்கச் செய்வார் என்ஜினியர். அடடா அதுதான் அற்புத நிமிடங்கள்....

காலை ஏழு மணிக்கு கருத்தரித்த ராஜா சாரின் இசை அறிவு மதியம் இரண்டு மணிக்கெல்லாம் ஒரு குழந்தையை பாடல் வடிவில் காற்றில் தவழ விடும் நேர்த்தியும் வேகமும் பிரம்மிக்க வைக்கும் அதிசயம். இப்படி எத்தனையோ ஹிட் பாடல்களை அவர் வடித்தெடுத்த வேளைகளில் உடனிருந்து பார்த்து ரசித்த நான், அந்த இசை மேதையோடு பணிபுரிந்த சில படங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்....

நூறாவது நாள், இளமைக் காலங்கள், உதய கீதம், உன்னை நான் சந்தித்தேன், நினைவே ஒரு சங்கீதம், கீதாஞ்சலி, இங்கேயும் ஒரு கங்கை, மனிதனின் மறுபக்கம், உனக்காகவே வாழ்கிறேன்......

ராஜாவைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். சொல்லிக் கொண்டே இருப்பேன்....

Friday, January 20, 2012

நான் ரசித்த நாடகம்.... ’கீசகவதம்’(கொஞ்சம் லேட்டான விமர்சனம்)



புராணக் கதைகளை இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு, அவற்றில் சில பகுதிகளை நவீன நாடகமாக்கி மேடையேற்றுவதில் வெற்றி கண்டவர், கூத்துப்பட்டறை நா.முத்துசாமி. அவரது குழுவில் பயிற்சி பெற்று தற்போது டி விருக்‌ஷா என்ற குழுவை நடத்தி வரும் ஸ்ரீதேவி சமீபத்தில் அரங்கேற்றிய நாடகம் ’கீசக வதம்’.

நா.முத்துசாமி எழுதிய நாடக வடிவத்திற்கு முழு வடிவம் கொடுத்து அரங்கப் பொருட்களில் ஒன்றான மாமரம் ஒன்றை மையமாகப் பயன்படுத்தி நவீன நாடக அம்சங்களையும் சேர்த்து, முழுக் கதையையும் நகர்த்திச் சென்ற விதம் புதுமை. ஒரு வருடத்தில் நிகழக்கூடிய கதை சம்பவங்களை ஒன்றரை மணி நேரத்தில் சொல்லி பார்வையாளர்களை அசத்திய நடிகர்களிடம் கடுமையான பயிற்சியும், உழைப்பும் தெரிந்தது.

பாண்டவர்கள் 13 ஆண்டு வனவாசத்தில் கடைசி ஆண்டில் அஞ்ஞாத வாசம் எனப்படும் அடையாளம் தெரியாமல் மறைந்து வாழும் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். விராட நாட்டு மன்னரிடம் வந்து கூத்தாடிகளாக அறிமுகப்படுத்திக் கொண்டு, வெவ்வேறு வேலைகளில் அமர்கிறார்கள். விராட மன்னனின் மைத்துனன கீசகன் வருணனையே கட்டுப்படுத்தும் சூரன். அவனுக்கு சைரேந்திரி என்ற பெயரில் வந்திருக்கும் திரௌபதியின்மேல் மோகம். தன்னை அடைய முயற்சிக்கும் அவனிடமிருந்து காக்கும்படி – சமையற்காரனாக வாழும் – பீமனிடம் அவள் கேட்க, அவன் கீசகனை தந்திரமாக வரவழைத்து வதம் செய்கிறான்.

பாஞ்சாலியாக நடித்த வைசாலி தெலுங்குப் பெண். அவருக்கு தமிழில் நீளமான வசனங்களைக் கொடுத்து நடிக்க வைத்த இயக்குனர் ஸ்ரீதேவியின் துணிச்சலைப் பாராட்டத்தான் வேண்டும். தருமராக வந்த பிரதீப், கீசகனாக வந்த ராம்குமார், கீசகனின் சகோதரி மற்றும் பீமனாக இருவேறு வேடங்களில் வந்த சுல்தான் போன்றவர்கள், ஏற்கனவே நாடகத் துறையிலிருந்து திரையில் ஜொலித்துக்கொண்டிருப்பவர்களைப் போல் (பசுபதி, விமல், வித்தார்த், விஜய சேதுபதி) எதிர்காலத்தில் திரை நட்சத்திரங்களாக ஜொலிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

தருமராக வந்த பிரதீப் கலை சார்ந்த பெண்களை தொடர்ந்து இந்தச் சமூகம் ஏன் கேவலமாகவே பார்க்கிறது என்பதைக் கண்டித்துப் பாடும் பாடல், உண்மை கலந்த வேதனை.

Monday, March 14, 2011

காணாமல் போன கனவு.... தனுஷ்கோடி - ஒரு நேரடி ரிப்போர்ட்




தனுஷ்கோடியின் அவல நிலைகுறித்து நான் எழுதிய நேரடி ரிப்போர்ட் இது - புதிய தலைமுறை வார இதழில் கவர் ஸ்டோரியாக சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது...



‘பாழடைந்து கிடக்கிறது; ஆனாலும் பயங்கர அழகு.. ஆள் நடமாட்டம் இல்லை.ஆனாலும் உயிர்ப்போடு இருக்கிறது. திகில். ஆனால் பரவசம். எல்லாவற்றையும் விட இந்தியாவின் விளம்பில் நின்று கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே ‘ஜிவ்’வென்று இருக்கிறது.’

-சில ஆண்டுகளுக்கு முன் தனுஷ்கோடிக்கு வந்து போன வெள்ளைக்காரர் ஒருவர் எழுதிய வரிகள் இவை. இன்றைக்கும் அந்தக் கடலோர நகருக்குப் பொருந்தும் வரிகள்தான். ஆனால் அந்த அழகிற்குப் பின்னால் ஒளிந்து கிடக்கிறது ஒரு சோகம். அது-

47 வருடங்களாக அரசுகளால் கைவிடப்பட்டு அநாதையாய் நிற்கும் சோகம்.

ஒரு காலத்தில் தினம் இலங்கையிலிருந்து நூற்றுக் கணக்கான பேர் இந்தியாவில் வந்து இறங்கிய இடம்.. சென்னையிலிருந்து இந்தோ-சிலோன் போட் மெயில் மூலமாக வரும் பயணிகள், ரயிலிலிருந்து இறங்கி கப்பல் மூலம் தலைமன்னார் செல்வதற்காக ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்ட தளம் அது. இராமாயணத்திலும் சங்க இலக்கியத்திலும்பேசப்படும் இடம். வங்க கடலும் இந்துமாக் கடலும் இணையும் புள்ளி.
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த ஊர், 47 ஆண்டுகளுக்கு முன் ஒரு நள்ளிரவில் கடலின் சீற்றத்தால் காணாமல் போனது. 1964 டிசம்பர் 22, செவ்வாய் இரவு வீசிய பெரும் புயல், தனுஷ்கோடியில் வாழ்ந்த ஆயிரக்கணக்கானவர்களை பலி கொண்டதோடு அந்தக் கிராமத்தையே உருத்தெரியாமல் ஆக்கிப் போனது. அன்று, ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் ஸ்டேஷன், சுங்க வரி அலுவலகம், தபால் நிலையம், பள்ளிக்கூடம், இந்துக் கோயில்கள், தேவாலயங்கள், கடைத்தெரு என 500 மீனவக் குடும்பங்கள் உட்பட பல்வேறு இனத்தவருமாக கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வசித்த ஊர் எனப் பரபரப்பாக இயங்கிய தனுஷ்கோடி, இன்று ‘வாழத் தகுதியற்ற பகுதி’

சரி புயல் காரணமாக மக்கள் வாழத் தகுதியற்ற இடமாகவே அது ஆகிவிட்ட்தாகவே இருக்கட்டும். அப்படி ஆகிவிட்டால் அதைப் புதுப்பிக்கும் கடமை அரசுக்குக் கிடையாதா? 2006ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரமைக்கப்பட்டு, புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு அவை இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டன. ஆனால், 1964ல் கிட்டத்தட்ட சுனாமி போல ராட்சத அலைகளால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி மட்டும் இன்னும் ஒரு சாலை கூட சரி செய்யப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது ஏன்?

இதற்கு தெளிவாக விடை சொல்பவர்கள் யாரும் இல்லை. நிறைய ஊகங்கள்தான் விடையாகத் தரப்படுகின்றன. தனுஷ்கோடியிலிருந்து இலங்கை 15 கீ.மீ.தான். கிழக்குக் கடற்கரையோரம் இலங்கைக்கு நெருக்கமாக உள்ள வேதாரண்யம், கோடிக்கரை, நாகப்பட்டினம் போன்ற பகுதிகள் தமிழ்நாட்டின் நிலப்பகுதியோடு இணைந்த பகுதியாக உள்ளன. அங்கே பாதுகாப்பை, கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதும், கண்காணிப்பதும் அதிகம் சிரமான விஷய்ம் அல்ல. ஆனால் தனுஷ்கோடி தீவு. இலங்கையில் உள்நாட்டுப் போர் இருந்த சூழலில் தனுஷ்கோடி மீண்டும் உயிர்த்தெழுவதை பாதுகாப்புக் காரணங்களுக்காக அரசுகள் விரும்பவில்லை எனச் சொல்லப்படுகிறது.

இது குறித்துப் பேச இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகினோம். தனுஷ்கோடியின் மறுசீரமைப்பு குறித்துப் பேச வேண்டும் என்றதுமே, "அது குறித்த முந்தைய தகவல்களை சேகரித்து விட்டு அழைக்கிறோம்" என்று அவரது உதவியாளர் நமது தொடர்பு எண்ணை வாங்கி வைத்துக்கொண்டார். ஆனால், அவரிடமிருந்து அழைப்பு வராததால் மீண்டும் நாமே தொடர்பு கொண்டபோதும் விரைவில் அழைப்பதாகவே பதில் வந்தது.

அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. ஹசன் அலியை தொடர்பு கொண்டபோது, "நான் இப்போது சட்டமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருக்கிறேன். இராமேஸ்வரத்தை பெருநகரமாக ஆக்கச் சொல்லி சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்திருக்கிறேன். அதைத் தொடர்ந்து தனுஷ்கோடிக்கும் வழி பிறக்கும்" என்றார் சுருக்கமாக

ஆனால் இப்போது உள்ள ஆட்சியின் கடைசி சட்டமன்றத் தொடரும் முடிந்து விட்ட்து. இனித் தேர்தல் முடிந்து புதிய சட்டமன்றம் அமைந்த பிறகு குரல் எழுந்தால்தான் உண்டு.
"பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில் ரயில்வே துறை அமைச்சராக இருந்த நிதிஷ்குமாரை தனுஷ்கோடிக்கே வரவழைத்து, அதன் அவலத்தைப் பார்வையிட வைத்தேன். அவரும் ரயில்வே துறை அதிகாரிகளை அழைத்து, தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து அமைக்க எவ்வளவு செலவாகும் என்று திட்டமிடச் சொன்னார். அவர்களும் 40 கோடி ரூபாய்க்கு ஓர் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார்கள். ஆனால், ஆட்சி மாற்றம் காரணமாக அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. சேது சமுத்திரத் திட்டம் மூலம் இதுவரை 600 கோடி ரூபாய் வரை கடலில் வீணடித்திருக்கும் இந்த அரசு, வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஊருக்கு ஒரு சாலை கூடப் போட முன்வரவில்லை " என்கிறார் பி.ஜே.பி.யின் தேசியப் பொதுக்குழு உறுப்பினரான இராமேஸ்வரத்தைச் சேர்ந்த கே.முரளிதரன்.

வாழத் தகுதியற்ற ஊர் என அரசாங்கம் அறிவித்து விட்டாலும், இன்றைக்கும் தனுஷ்கோடியிலும் அதனைச் சுற்றி இருக்கும் கடற்கரை கிராமங்களிலும் சுமார் 600 மீனவக் குடும்பங்கள், தாம் வாழ்ந்த அந்தக் கடற்கரை மண்ணை விட்டுப் பிரிய மனமில்லாமல் இன்றைக்கும் அங்கேயே மீன் பிடித்துப் பிழைக்கிறார்கள். (தனுஷ்கோடியைச் சுற்றியுள்ள பகுதியில் மீன் வளம் அதிகம். கடலின் நீர்மட்டம் குறையும் போது முழங்கால் அலவு நீரில் இறங்கி வெறும் கையாலேயே மீன் பிடிக்கலாம்!). ஓலைகளால் வேயப்பட்ட குடிசைகளில் தங்கி. மணலைத் தோண்டி சின்னச் சின்ன கிணறுகளை அவர்களே ஏற்படுத்திக் கொண்டு அதிலிருந்து கிடைக்கும் குடிநீரையே பருகி வாழ்கிறார்கள். மின்சாரம் அறவே கிடையாது. ஊருக்குள் ஒரே யொரு டீக்கடை இருக்கிறது. அனைவரது வீட்டிலும் இருக்கும் ஃபிளாஸ்கில் டீ வாங்கி வைத்துக் கொண்டு அவ்வப்போது அதைப் பருகுகிறார்கள். காய்கறிக்கடை வசதியெல்லாம் இல்லாததால் தினமும் விற்பனைக்காகப் பிடிக்கும் மீன்களில் ஒருசிலதான் அவர்களின் தினசரி சமையல்.

‘வாழத் தகுதி இல்லாத ஊர்’ என அறிவித்திருக்கும் அரசாங்கம் இந்த ஊரில் ஒரு நடுத்தரப் பள்ளியை நடத்திக் கொண்டிருக்கிறது என்பது ஒரு இனிய ஆச்சரியம். அங்கே 73 மாணவர்கள் பயில்கிறார்கள். ஒரு தலைமை ஆசிரியை, இரண்டு ஆசிரியைகள், ஒரு சத்துணவு அமைப்பாளர் இதற்காக நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். பஸ் வசதி இல்லாத காரணத்தால் அந்த ஆசிரியைகள் தினசரி ஏழு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு ஆபத்தான வேன் பயணத்தின் மூலமாகத்தான் வந்து போவதாக வேதனையோடு தெரிவிக்கிறார்கள். தங்கள் பெயரையோ, புகைப்படத்தையோ வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அந்த ஆசிரியர்கள் தாங்கள் படும் சிரமங்களைப் பற்றிச் சொன்னார்கள்,

"இங்க டிரான்ஸ்ஃபர் ஆகி வந்த பிறகுதான், இந்த ஸ்கூலுக்கு வந்துபோக பஸ் கிடையாதுன்னு தெரிஞ்சுது. சுற்றுலாப் பயணிகள் வரும் வேன்லதான் நாங்களும் தினசரி வர்றோம். எங்களிடம் சில டிரைவர்கள் பத்து இருபது மட்டும் வாங்கிக்குவாங்க. சில பேரு இலவசமா இறக்கி விடுவாங்க. சில நாட்கள்ல, பயணிகள் கூட்டம் சேரலைன்னு வேனை எடுக்க மாட்டாங்க. அப்ப நாங்க இந்த மணல் பாதை வழியா தனியா நடந்தே வந்துட்டு, சாயந்திரம் நடந்தே போவோம். பல நாட்கள் தினசரி பதினான்கு கிலோ மீட்டர் வரை நடந்திருக்கோம். மழை நாட்களில் மிகவும் சிரமம். ஆனால், குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கிறோம் என்கிற மன நிறைவு ஒன்றுதான் எங்களுக்குக் கிடைக்கும் நிம்மதி" என்கிறார்கள் சோர்ந்துபோன குரலில்.

தங்க நாற்கரச் சாலைகள் இந்தியா நெடுக நீண்டு கிடைக்கின்றன. ஆனால் இந்தத் தீவிற்குக் கடற்கரை மணலின் ஊடாகச் செல்லும் ஒரு ஒற்றையடிப்பாதைதான் சாலை. முகுந்தராயர் சத்திரம் என்னும் இடம் வரை பஸ்ஸிலோ காரிலோ வந்து, அங்கிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனுஷ்கோடிக்கு வேனில்தான் பயணிக்க வேண்டும். வட நாட்டிலிருந்து புனிதப் பயணம் வருபவர்களுக்காகவும், சுற்றுலாப் பயணிகளுக்காகவும் சுமார் ஐம்பது பழைய வேன்கள் முகுந்தராயர் சத்திரத்தில் காத்திருக்கின்றன. ஓர் ஆளுக்கு கட்டணம் எண்பது ரூபாய். பத்து பேர் மட்டுமே அமரக் கூடிய அந்த வேன்களில் சுமார் முப்பது பேர் வரை ஏற்றிக் கொள்கிறார்கள். அந்த வேன் டிரைவர்களில் முக்கால்வாசிப் பேர், இருபதை தொட்டிருக்கும் இளைஞர்கள். அவர்களிடம் ஆட்டோ ஓட்டுவதற்கான ‘பேட்ச்’ மட்டுமே இருக்கிறது. ‘நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான ஹெவி லைசேன்ஸ் அநேகம்பேரிடம் கிடையாது’ என்பதை ஒப்புக் கொள்கிறார் ஒரு மூத்த டிரைவர்.

ஒத்தையடிப் பாதையாக, கடற்கரை மணலில் புதைந்தபடியே வளைந்து வளைந்து, குலுங்கியபடியே செல்லும் ஆபத்தான அந்தப் பயணத்தில் எந்நேரமும் அந்த வேன் கவிழ்ந்து விடும் என்கிற உணர்வு ஏற்படுகிறது. இப்படி தினசரி ஐநூறு பயணிகளாவது தனுஷ்கோடிக்கு வந்து போகிறார்கள். விடுமுறை நாள்களில் இந்த எண்ணிக்கை இரண்டு மூன்று மடங்காகிறது. ஐயப்ப சீசனின்போது கூட்டம் இன்னும் அதிகரிக்குமாம்.

"இராமயணத்தைப் படித்து முடித்ததும் அது நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில்தான் தனுஷ்கோடி வந்தேன். ஆனால், ஆபத்தான இந்த வேன் பயணம் தற்கொலைக்கு சமம் என்பதால் ஏழு கிலோ மீட்டர் தூரம் நடந்தே போய் வந்தேன். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு உங்கள் அரசாங்கம் போக்குவரத்து வசதிகள் செய்யாதது ஏன்?" என்று கேள்வி கேட்கிறார் போலந்து நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணியான ரசே.

"புயல் வந்தன்னைக்கு தன் குடும்பத்தோட அடுத்தவங்க புள்ளை குட்டிகளையும் தலைமேல தூக்கி வச்சுக்கிட்டு நீந்தி கரை சேர்த்திருக்காரு எங்கப்பா. அதனாலேயே அவருக்கு ‘ நீச்சல்’ காளினு பேரு.. நான் எவ்வளவோ வற்புறுத்திக் கூப்பிட்டும் இந்த தனுஷ்கோடிய விட்டு கடைசிவரைக்கும் வெளியே வரமாட்டேன்னு பிடிவாதமா இருந்து போன வருஷம்தான் செத்துப் போனாரு. ‘மறுபடியும் தனுஷ்கோடிக்கு உயிர் வரும்டா’ன்னு நம்பிக்கையோட சொல்லிக்கிட்டிருந்தவரு, போன வருஷம்தான், தொண்ணூத்தி ரெண்டு வயசுல உசுர விட்டுட்டாரு. அவரு சொன்னமாதிரி இந்த தனுஷ்கோடிக்கு ஒரு ரோடு போடச் சொல்லி பல அதிகாரிகளச் சந்திச்சு மனு கொடுத்துக்கிட்டே இருக்கேன்" என்கிறார் தனுஷ்கோடியைச் சேர்ந்த டி.எம்.இ. படித்த மீனவரான காளி. நம்புராஜன்.

அந்த மக்கள் கேட்பதெல்லாம் ஒரு சாலை. ஆனால் 47 வருடங்களாக அது அவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் வாழத் தகுதி இல்லாத அந்த ஊர் இப்போதும் அரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தனுஷ்கோடியில் சினிமாப்படம் எடுக்க விரும்புவர்களிடம் அரசு ஒரு நாளைக்கு மூவாயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது.

தனுஷ்கோடியை மீண்டும் சீரமைக்க என்ன செய்ய வேண்டும்? அப்படிச் செய்வதனால் என்ன பயன்?

" ரோடு வசதி தனுஷ்கோடிக்கு வந்துட்டா, பக்தர்கள் கூட்டமும் சுற்றுலா பயணிகளும் பெருமளவில் வர வாய்ப்பிருக்கு. அதன்மூலம் அரசுக்கும் இங்குள்ள மக்களுக்கும் வருமானம் பெருகும்" என்கிறார் இராமேஸ்வரத்தில் டூரிஸ்ட் கைடாக பணியாற்றும் மாரிப்பிச்சை. 64ம் வருடத்திய புயலின்போது, தனுஷ்கோடி துறைமுகத்தில் போர்ட்டராக இருந்த இவரின் தாத்தாவால் தப்பிப் பிழைத்தவர் இவர்.

"தமிழக அரசு, சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூலம் தனுஷ்கோடியை புதுப்பித்து, ஓர் அழகான கடற்கரை கிராமமாக இதை உருவாக்கலாம். பக்தர்கள் தங்க லாட்ஜ்கள், வெளிநாட்டவர்களுக்கு ரிசார்ட்ச் என்று அமைத்தால் இந்தியாவிலேயே மிகச் சிறப்பான வரலாற்றுச் சின்னமாகவும், சுற்றுலா ஸ்தலமாகவும் தனுஷ்கோடி பிரபலமடைய வாய்ப்பிருக்கிறது" என்று யோசனை தெரிவிக்கிறார் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளரான வி.துரைசிங்கம்.

ஆனால் இளைஞரும், இராமநாதபுரத்தைச் சேர்ந்த வலைப்பதிவருமான முகவைத் தமிழன் என்கிற ரெய்சுதீன் சொல்லும் யோசனை இவற்றையெல்லாம் விட ஆக்கபூர்வமானது. "இலங்கையின் நல்லுறவை விரும்பும் இந்திய அரசு, தனுஷ்கோடியை மறுசீரமைத்து கப்பல் போக்குவரத்தை துவக்கலாம். அதன் மூலமாக இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை இந்த மாவட்டத்தின் நரிப்பையூரில் அமைத்ததைப் போலவே, தனுஷ்கோடியிலும் அமைத்தால் இராமேஸ்வரம் உட்பட அந்தப் பகுதி மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும்.” என்னும் முகவைத் தமிழன் சினிமாக்காரர்ர்கள் மீது சீறுகிறார்.

“தனுஷ்கோடியை சினிமாக்காரர்கள் படப்பிடிப்பிற்காகப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும். ‘விஷுவல் பியூட்டி’ என்ற காரணத்திற்காக அங்கே பாடல் காட்சிகளைப் படமாக்கும்போது, இடிந்து போன சர்ச் மற்றும் கட்டிடங்களின் மீது குரூப் டான்சர்களை ஏற்றி ஆட வைப்பது மிகவும் கொடுமையானது. ஆயிரக்கணக்கானவர்கள் செத்து மடிந்து அந்த மண்ணில் புதைந்து போயிருக்கும்போது அதன் மேலே இப்படி ஆட விட்டுப் படம் பிடிப்பது வேதனைக்குரியது" என்கிறார் முகவைத் தமிழன்

இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு நீச்சல் காளி ஊடகங்களிடம் தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். தனுஷ்கோடியின் தெற்கு மூலையில் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. அவர் சிறுவனாக இருந்த காலத்தில் அதன் முன் உள்ள திடலில்தான் அவர் விளையாடிக் கொண்டிருப்பார். 1964 புயலின் போது ராட்சச அலைகள் தனுஷ்கோடியைத் தின்ற போது, அந்தப் பிள்ளையார் கோயிலும் கடலுக்கடியில் மூழ்கிப் போனது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் அந்தப் பிள்ளையார்கோயிலின் உச்சி வெளியே தெரிய ஆரம்பித்த்திருப்பதாகவும் அதைத் தான் கண்ணால் கண்டதாகவும் காளி தெரிவித்தார்.

“கடல் பின் வாங்குகிறது. இனி மெல்ல மெல்ல பழைய தனுஷ்கோடி நமக்குக் கிடைத்துவிடும்” என்று அவர் மிக மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருந்தார்.
தனுஷ்கோடி மீண்டு விட வேண்டும் என்ற ஒரு கிழவனுடைய உள்மனதின் ஆசையாக, கனவின் பிரதிபலிப்பாகக் கூட அது இருந்திருக்கலாம். ஆனால் அரசு மனது வைத்தால் இப்போதும் கூட தனுஷ்கோடியை சீரமைத்து உயிர்ப்பிக்கலாம்.

மனது வைக்குமா? அல்லது வெறும் கனவாகவே போய்விடுமா?

நன்றி: புதிய தலைமுறை