Monday, April 28, 2008

இன்றைய பல்லவி


ஒரு மாணவனின் கனவு இது!


சார்ஜர் இல்லாத செல்போன் வேண்டும்

டார்ச்சர் இல்லாத காதலி வேண்டும்

டீச்சர் இல்லாத ஹைஸ்கூல் வேண்டும்

மார்ச்சுவரி காணாத மரணம் வேண்டும்


இது எப்படி இருக்கு?

உதயம்: பர்த்ருஹரியின் சுபாஷிதம் - தமிழில் மதுமிதா

உதயம்: பர்த்ருஹரியின் சுபாஷிதம் - தமிழில் மதுமிதா madhumithaa.blogspot.com

Sunday, April 27, 2008

பர்த்ருஹரியின் சுபாஷிதம் - தமிழில் மதுமிதா

டக்கே வாழ்ந்த மகாகவி பர்த்ருஹரி. தமிழில் காவியங்கள் படைத்த பலரின் பலத்தோடு இருக்கிறது இவரது படைப்புகள். சமஸ்க்ருதத்தில் வந்த இவரது முன்னூறு கவிதைகளை அழகு தமிழில் அற்புதமாக வடித்திருக்கிறார் மதுமிதா. ஒரு புத்தகத்தை படித்து முடித்த பின் வேறு எந்த புத்தகத்தையும் படிக்க சில மாதங்களுக்கு மனசு ஒப்பாது. அந்த வகையில் சேருகிறது சுபாஷிதம்.
கனமான விஷயங்கள் எளிய தமிழில் நம்மை பாதித்து பதிந்து விடுகிறது. நீதி சதகம், சிருங்கார சதகம், வைராக்கிய சதகம் என்று திருக்குறளைப் போல மூன்று பகுதிகளாக உள்ள இதில் பல கவிதைகள் மனசை அள்ளுகின்றன.

நன்னடத்தையால்
தந்தையை மகிழ்விப்பவனே
மகன்!

கணவனின்
நலம் விரும்புபவளே
மனைவி!

ஆபத்திலும் சுகத்திலும்
ஒரே மாதிரியான
நட்புடன் இருப்பவனே
நண்பன்!
இம்மூவரையும் இவ்வுலகில்
புண்ணியம் செய்தவர்களே
பெறுகிறார்கள்!

என்று நீதி சாதகத்தில் ஒரு கவிதையிலும்

முதலில் வேண்டாமென விலகியும்
பின்
தோன்றிய விருப்பினால்
நாணத்துடன் நழுவியும்
பின்பு
தைரியமாய்
பிறகு
காதலுடன் அச்சமில்லாமல் ஆர்வமாக ஈடுபட
காதல் விளையாட்டில்
இரண்டறக் கலந்து
இன்பம் துய்ப்பது

குலப்பெண்ணிற்கு உரியது!

என்று சிருங்கார சதகத்திலும்

பிரம்மாண்ட உலகம்
குழப்பாது
யோகியை!
சிறு மீனின் துள்ளலால்
கலங்காது கடல்.

என்று வைராக்கிய சதகத்திலும் - மூன்றே மூன்று கவிதைகளில் அவரின் தனித்தன்மை தெளிவாகிறது அல்லவா?

வெளியீடு சந்தியா பதிப்பகம் சென்னை.


இன்றைய கவிதை


இன்றைய கவிதை


நீ தொட்டுத் தந்த ரோஜா வாசம்

அறையில் வீசுதடி! - நீ

விட்டுச் சென்ற கூந்தல் வாசம்

அதனை மீறுதடி!

Friday, April 25, 2008

பதினாறு வயதினிலே - ஒரு ப்ளாஷ்பேக்

யக்குனர் பாரதிராஜா 'மயில்' என்ற அந்த ஒரு கதைக்காக பாடுபட்டதையே ஒரு படமாக எடுக்கலாம். அதன் ஸ்க்ரிப்ட்டை எழுதி முடித்து திரைப்பட வளர்ச்சிக் கழகத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால் கதை சரியில்லை என்று ரிஜெக்ட் செய்து விட்டார்கள். அதன் பிறகு சில திரைப்பட நண்பர்கள் மூலமாக தயாரிப்பாளர் ராஜ்கன்னுவை சந்தித்து அதே கதையை அவரிடம் சொன்னபோது அவருக்கு அது ரொம்ப பிடித்துப் போனது. உடனே ஹீரோ தேர்வு. பாரதிராஜாவின் மனதில் இருந்த ஹீரோ யார் தெரியுமா?

நாகேஷ்!

கருப்பு வெள்ளையில் நாகேஷை ஹீரோவாக நடிக்கவைக்கும் முயற்சியில் ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கின. ஆனால் கதை விவாதத்தில் இந்தக் கதைக்கு சிவக்குமார் நன்றாக இருப்பார் என முடிவானது. அவரைப் போய் பார்த்தபோது அவர் ரொம்ப பிசி. ஆனாலும் கதை நன்றாக இருப்பதாக சொல்லி நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் சம்பளம் ஐம்பதாயிரம் என்றதும் தயாரிப்பாளர் யோசிக்க ஆரம்பித்தார்.

அப்போதுதான் கமல் வளர்ந்து வரும் நடிகர். அவரை வைத்து எடுக்கலாம் என முடிவானது. ஜோடியாக ஸ்ரீதேவி . இவர்களை வைத்து கருப்பு வெள்ளை படமா என்று யோசித்த தயாரிப்பாளர் படத்தை கலரில் எடுக்க முடிவெடுத்தார். காமிராமேனாக நிவாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார் . முழுப்படத்தையும் மைசூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் படமாக்க திட்டமிட்டார் பாரதிராஜா.

வில்லனாக ரஜினி , காந்திமதி , கவுண்டமணி என்று ஒரு பட்டாளத்தையே வைத்து நாற்பது நாளில் படத்தை முடித்தார் பாரதிராஜா. மயில், என்கிற அந்தக்கதை கலைமணியின் வசனத்தில் பதினாறு வயதினிலே என்ற தலைப்பில் வெளியானது. ஆனால் இவ்வளவு பெரிய ஹிட் ஆகுமென பாரதிராஜாவே எதிர்பார்க்கவில்லையாம். குமுதம் ரிப்போர்ட்டர் தன்னை பார்க்க வந்தபோதுதான் படத்தின் வெற்றியை தான் உணர்ந்ததாக பாரதிராஜாவே சொல்கிறார்.

அந்தப் படத்தின் மூலமாக ஒரு நீண்ட இயக்குனர் வாரிசை உருவாக்கியவர் பாரதிராஜா. அதன் மூலமாக பாக்கியராஜ். அவரிடமிருந்து பார்த்திபன். அவரிடமிருந்து விக்ரமன். அவரிடமிருந்து கே. எஸ். ரவிகுமார். அவரிடமிருந்து சேரன். இப்படி நீள்கிறது அந்த இயக்குனர் வாரிசு.

தசாவதாரம் ஆடியோ வெளியீடு ஹைலைட்ஸ் !


இன்று மாலை நடந்த ஆடியோ வெளியீட்டில் நடந்த சுவராஷ்யமான சில விஷயங்கள்:


*முதல்வர் கருணாநிதி பேசுகையில் ஜாக்கி ஷானின் பிறந்த நாள், அவரது பெற்றோர்கள், வளர்த்தவர்கள் ஆகியோரைப் பற்றி குறிப்பிட்டு பேசியதை கே.எஸ்.ரவிகுமார் மொழி பெயர்த்து சொன்னதும் ஆடிப்போய் விட்டார், ஜாக்கி.

' எங்கிருந்து இத்தனை தகவல்களையும் திரட்டினார் இவர்?' என்று ஆச்சர்யம் அவரது முகத்தில்.


*அடுத்து கமலோடு ஒரு படம் செய்ய வேண்டும் என்று ஜாக்கி சொன்னதை கமல் பிடித்துக்கொண்டு, வார்த்தை தவறக் கூடாது என்று உறுதி மொழி வாங்கிக் கொண்டார்.


* ஜாக்கி பேசுவதற்கு முன்னரே, '' யார் பெயரையும் தப்பாக உச்சரித்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் '' என்று கேட்டுக் கொண்டார். அதன்படி தப்பாகவே முதல்வர் பெயர் உட்பட சில பெயர்களை உச்சரித்து கைதட்டலை பெற்றுக் கொண்டார்.


* ஜாக்கி உட்பட மம்மூட்டி., மல்லிகா ஷெராவத், அமிதாப் விஜய் என்று அரங்கமே ஜோராக இருந்தது. மல்லிகா மூலம்தான் ஜாக்கி இங்கு வந்தார் என்பது கூடுதல் தகவல். இருவரும் சேர்ந்து மித் என்ற படத்தில் நடித்தார்கள் என்பது பழைய செய்தி.


*போதுமா இன்னும் வேணுமா?



Thursday, April 24, 2008

இன்றைய இரண்டு கவிதைகள்...

ஹை-க்யூ

அரிசிக்கும்
அரசின் தொலைக்காட்சிக்கும்
க்யூ நீள்கிறது..
கூடவே
டாஸ்மார்க் கடைகளிலும்
ஏடிஎம் சென்டர்களிலும்!

அன்புத்தொல்லை

ரயில் பயணத்தை
ரசிக்கவிடாது
எவளாவது ஒருத்தி
அவளைப் போல
இருந்து தொலைக்கிறாள்!
இலவசம்!

இந்த குழந்தைச் சிரிப்பு இலவசம்!

Wednesday, April 23, 2008

கோயிலில் யானைகள் தேவையா?

இன்று ஏப்ரல் 23ல் திருச்சூரில் இருந்த கோயில் யானை மதம் பிடித்து மூன்று உயிர்களை பலிவாங்கியிருக்கிறது. இதற்குமுன்னரும் கேரளாவில் இது நடந்திருக்கிறது. யானைகளின் பராமரிப்பு சரியில்லாததே இதற்குக் காரணம்.
இப்படி மனித உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாத யானைகளை கோயில்களில் வைத்துக் கொள்வதை தடை செய்ய வேண்டும் என்பது எனது எண்ணம். இதற்கு ஆதரவாக எத்தனை பேர் இருக்கிறீர்கள்? பாவம் அதை தினமும் குளிப்பாட்டி, உணவூட்டி, கூடவேயிருந்த பாகனையும் அடித்து மிதித்துக் கொன்றிருக்கிறது அந்த யானை. இது தேவையா? யோசிப்போம். யானைகளுக்கு கோயில்களிலிருந்து விடுதலையளித்து மனித உயிர்களைக் காப்போம்.